Published:Updated:

காதலுக்கு உகந்த மலர் எது? ஜோதிடம் என்னச் சொல்கிறது? #ValentineDay

காதலுக்கு உகந்த மலர் எது? ஜோதிடம் என்னச் சொல்கிறது? #ValentineDay
காதலுக்கு உகந்த மலர் எது? ஜோதிடம் என்னச் சொல்கிறது? #ValentineDay

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். ஆனால், இந்தக் காதல் என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சியாகவும் மனநிறைவு தருவதாகவும் இருக்கிறதா என்பது கேள்விக் குறிதான். ஒருவர் காதலில் வெற்றி பெறவேண்டுமானால், அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி அமைந்திருக்கவேண்டும் என்பது பற்றி பிரபல ஜோதிடர் ஞானரதம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதை இங்கே உங்களுக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

காதல் உணர்வுகளைத் தூண்டும் கிரகம், சுக்கிரன் (venus). ஜோதிட  ரீதியாக,  ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சமாக இருந்தால், அனைவரையும் வசியம் செய்யும் சக்தி  அவருக்கு இருக்கும். சுக்கிரனுடைய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், அழகான பெண்கள், மலர்கள், நறுமணப் பொருட்கள், மலையருவி, தென்றல் காற்று, சுவைமிக்க உணவு வகைகள், மற்றும் வனப்பு மிக்க காட்சிகளைக் கண்டால் அவற்றில் லயித்துப் போய், ஒரு விநாடியாவது தங்களை அறியாமல் மயங்கிவிடுவார்கள். 

நட்பு பாராட்டும் ராசிகள்

பன்னிரண்டு ராசிகளில், பரஸ்பர நட்பு பாராட்டும் ராசிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  

முதல் பிரிவில்,மேஷம், விருச்சிகம் (ராசி அதிபதி செவ்வாய்) தனுசு, மீனம் (ராசி அதிபதி குரு), கடகம் (ராசி அதிபதி சந்திரன்),சிம்மம் (ராசி அதிபதி சூரியன்) ஆகிய ராசிகள் அடங்கும். 

இரண்டாவது பிரிவில் ரிஷபம், துலாம் (ராசி அதிபதி சுக்கிரன்) மிதுனம், கன்னி (ராசி அதிபதி புதன்), மகரம், கும்பம் (ராசி அதிபதி சனி) ஆகிய ராசிகள் அடங்கும்.

பொதுவாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு  ஆகிய ராசிக்காரர்களுக்கு காதலில் ஈடுபாடு அதிகம். இவர்களுடைய காதல் வெற்றி பெறுவதுடன், இவர்கள் மற்றவர்களின்  காதலிலும் தலையிட்டு அவர்கள் ஒன்று சேர உறுதியாக இருப்பார்கள். ஆனால், காதல் திருமணம் வெற்றி பெறுவது என்பது அவரவர்களின் சொந்த ஜாதகத்தின் பலத்தைப் பொறுத்தது. 

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் உறுதியோடு இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் பிறரிடம் அன்பு பாராட்டிக்கொண்டே இருப்பார்கள். இதனால், இவர்களுக்கு எப்போதும் நண்பர்கள் நண்பிகள் அதிகமாக இருப்பார்கள்.

காதலைத் தீர்மானிப்பதில், சுக்கிரன் (உணர்வு), சந்திரன் (மனம்), குரு (அறிவு) இந்த மூன்று கிரகங்களின் நிலை ஒருவரது ஜாதகத்தில் எப்படி உள்ளது எனப் பார்க்கவேண்டும். 

மனோகாரகனான சந்திரனை, இந்திரியங்களான நம் ஐம்புலன்களுக்கு அதிபதியான சுக்கிரன் தூண்டிவிடுகிறார். நம் மனம், புத்தியான அறிவின் மூலம் அதாவது குருவின் மூலம் அதை நெறிப்படுத்தி அறிவுறுத்துவார். 'இந்தத் துணை உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும், இந்தத் துணை உங்கள் தகுதிக்குப் பொருத்தமாக இருக்காது' என அறிவுறுத்தும். அது உயர்வாகவும் இருக்கலாம், தாழ்வாகவும் இருக்கலாம். அதேவேளையில், குரு பலமற்று இருந்தால், அதாவது நீசமாகவோ, மறைவு ஸ்தானத்திலோ இருந்தால், அங்கே குரு மவுனகுருவாகி விடுவார். 

செவ்வாய் (தைரியம்), சூரியன் (வகிக்கும் பதவி மற்றும் சமூக அந்தஸ்து) புதன் (மதிநுட்பம் மற்றும் தந்திரம்), சனி (செயல்) இந்த நான்கு கிரகங்கள் ஆட்சி, உச்சம், மறைவு, நீசம், நட்பு  நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப பலன்கள் மாறும். 

காதலில் உறுதியான  - தைரியமான நிலையை, எவர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வலிமையைத் தருபவர் செவ்வாய்.

சூரியன்  பதவி, அந்தஸ்து, அதிகாரம், ஆள்பலம் ஆகியவற்றின் வழியாக உங்கள் காதலை நிறைவேற்றிக்கொள்ள உதவும். நீங்கள் மிக உயர்ந்த அரசுப் பதவியில், கல்லூரிப் பேராசிரியர், அல்லது ஐ.டி நிறுவனங்களில் பெரிய பதவி என்று உயர்ந்த நிலையில் இருந்து, லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவராக இருக்கும்போது மிக எளிதாக உங்கள் காதல் நிறைவேறிவிடும். 

புதன், உங்கள் காதலை நிறைவேற்றிட நுட்பமான தந்திரங்களைச் செய்ய மனோகாரகனான சந்திரனை ஏவுவார்.
உங்களுடைய ஒட்டுமொத்த செயல்களுக்கும் கர்ம வினை ஆற்றுபவராக சனி பகவான் திகழ்கின்றார்.

போதாக்குறைக்கு சாய கிரகங்களான ராகு (வேகம்) கேது (ஞானம்) அமையப்பெற்றுள்ள இடங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

ராகு உங்கள் செயல்களை வேகப்படுத்தி தான் இருக்குமிடத்துக்கு ஏற்ப வெற்றியையோ, வீழ்ச்சியையோ உங்களுக்குத் தருவார்.

கேது ஸ்பீடு பிரேக்கைப் போல் நம் வேகத்தை மட்டுப்படுத்தி பாதுகாப்பான காதல் பயணத்துக்கு உதவுவதும் உண்டு.  சரியில்லாத இடத்தில் இருந்தால் உங்கள் காதல் பயணத்தில் டிராபிக் ஜாமை எற்படுத்தி தோல்வியைத் தந்து உங்களுக்கு ஞானத்தை வழங்குவதும் உண்டு. 

காதல் உணர்வுகொண்ட ராசிகள் என்று பார்க்கும்போது, சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட,  சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசிகள். அப்படியானால், இந்த ராசிக்காரர்களுக்கு  மட்டும்தான் காதல் உணர்வுகள் இருக்குமா?  மற்ற ராசிக்காரர்களுக்கு அப்படி இருக்காதா? என்றால் எந்த ராசிக்காரராக இருந்தாலும் அவர்களது ஜாதகத்தில் களத்திரக்காரகனான சுக்கிரனும், களத்திரஸ்தானமான 7-ம் இடமும் காதல் வயப்படுவதைத் தீர்மானிக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ராசிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவரவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பையும் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். அவை நன்கு அறிந்த ஜோதிடருக்குத்தான் தெரியும் என்பதால், நீங்களே நட்பு ராசிதானே என்று தேர்ந்தெடுத்து பின்பு வருந்த வேண்டாம். காரணம் இருவரின் ஜாதகத்திலும் லக்னம்,  ஆயுள் ஸ்தானம், மற்றும் அனைத்து வகையான ஸ்தானங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சினிமாவில் வேண்டுமானால்,முரண்பட்ட இரண்டு காதலர்கள் சேர்ந்து வாழ்வது போல் காண்பிக்கலாம். ஆனால், நிஜத்தில் அது சாத்தியமில்லை. இதில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். மாறுபட்ட குணமுள்ளவர்கள் வேறு; முரண்பட்ட குணமுள்ளவர்கள் வேறு. மாறுபட்ட குணமுள்ளவர்கள் தன்னைப்போலத்தான் தன் பார்ட்னருக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை உணர்ந்து அவரை அவரது போக்கில் செல்ல அனுமதிப்பார். முரண்பட்ட குணமுள்ளவர்கள் தன் வழிக்கே வரவேண்டுமென கட்டாயப்படுத்துவார்.

ஒரு சில காதல் தம்பதிகள் நாம் பார்க்கும் போது பகலில் எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இருவரும் மறுநாள் அப்படி எதுவும் நடக்காதது போல் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் வசியப் பொருத்தம்தான். 

சுக்கிரன் வீடு மட்டும் அல்லாது அவரவர்களின் ஜாதகத்தில் ஐந்தாம் இடமும்,  சந்திரன்  மற்றும் சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதே காரணமாகும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால்தான் காதல் கைகூடும். இல்லாவிட்டால். காதல் தோல்வியில்தான் முடியும்.

இருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதும் மேலும், சுக்கிரன் இருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாகிறது. 

ஜாதகர் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் லக்னத்திலிருந்து 7 -வது இடமான களத்திர ஸ்தானம்,  8 -ம் வீடான வாழ்க்கைத் துணையின் ஆயுள் ஸ்தானத்தைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்பதை முடிவு செய்ய முடியும். இந்த இரண்டு இடங்களும் நல்ல நிலையில் இருந்தால் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் நிலையே ஜாதகருக்கு அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 - ம் இடமான  பூர்வ புண்ணிய ஸ்தானமும் 7 -ம் இடமான களத்திரஸ்தானமும்  நல்ல நிலையில் இருந்தால் மாமன்  முறை -அத்தை முறையிலேயே காதலித்து மணம் முடிப்பார்கள்.

' மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா?' என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். பொதுவாக மனதை ஈர்க்கக் கூடிய வாசம் என்னவென்று கேட்டால், 'மல்லிகை மலரின் வாசம்' என்றுதான் பலரும் சொல்வார்கள். விதிவிலக்காக வேண்டுமானால், ஒரு சிலர் வேறு மலர்களின் வாசத்தைச் சொல்லலாம்.  

காலையில் வேலைக்குச் செல்லும் கணவன், மாலையில் வீட்டுக்கு வரும் போது மல்லிகைப் பூச்சரத்துடன் வருவது, தன் காதலின் அடையாளம் சொல்லத்தானே. கணவன் வாஞ்சையோடு கொடுத்த மலரை, மனைவி அணிந்துகொள்ளும்போது அவரது உள்ளம் உற்சாகமடைகிறது.  மல்லிகைப்பூவுக்கும் ஜாதகத்துக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.  

ஜோதிட ரீதியாக, சுக்கிரன்தான் காதலுக்கு உரிய கிரகம். சுக்கிரனுக்கு உகந்த மலர் என்றால், அது மல்லிகைதான். மல்லிகைப் பூ இருக்கும் இடத்தில், வீசும் மணம், இறுக்கமான சூழலையும் இளக வைத்து விடும். இதைத் தொடர்ந்து நல்ல சூழலும் அமையும். காதலுக்குரிய மலர் ரோஜா அல்ல. மல்லிகைதான்!
 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்
- படங்கள்: வி.ஸ்ரீநிவாசுலு 

அடுத்த கட்டுரைக்கு