Published:Updated:

சிவாலயத்தில் 'கோவிந்தா', 'கோபாலா' என்று முழங்குவது ஏன்? #MahaShivaratri

சிவாலயத்தில் 'கோவிந்தா', 'கோபாலா' என்று முழங்குவது ஏன்? #MahaShivaratri
சிவாலயத்தில் 'கோவிந்தா', 'கோபாலா' என்று முழங்குவது ஏன்? #MahaShivaratri

பல புண்ணிய கோயில்களைத் தன்னகத்தே கொண்ட குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது, மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று  நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடாகும்.

சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில்  அமைந்துள்ள  திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை , (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.இந்த ஓட்டத்தில் பங்குபெறும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசியன்று மாலையணிந்து, வேக வைக்காத உணவு வகைகளை உண்டு, சிவராத்திரி தினம் வரை விரதம் மேற்கொள்கின்றனர்.

மஹாசிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் இந்த வழிபாட்டு முறை கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து வருகிறது.இச்சடங்கில் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. சிவ வழிபாடாக இருந்தாலும்  ஓடுபவர்கள் ・கோவிந்தா கோபாலா・என்று கூவிக்கொண்டுதான் ஓட வேண்டும். அவர்கள் சிவப்பு நிற ஆடை கட்டி, கையில் ஒரு விசிறி வைத்திருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் கும்பிடுவதற்குப் பதிலாக இறைவனை நோக்கி விசிறியால் வீச வேண்டும்.இது ஏதோ புராதனமான ஜைனச் சடங்கின் மறுவடிவம்  என்பவர்களும் உண்டு. சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்களுக்கு அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, பொன்மனை சிவன் கோயிலிலும், சிவாலய ஓட்டம் நிறைவுபெறும் திருநட்டாலம் கோயிலிலும் தலா ஒரு இளநீர் மற்றும் பழம் வழங்கும் நடைமுறை இருந்தது. இந்த உத்தரவு 1939 பிப்ரவரி 14-ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான அரசிதழில் வெளியிடப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த நடைமுறை பின்பற்றுவதை மறந்துவிட்டது தமிழக அரசு. ஒருவேளை அந்த நடைமுறையை ஏற்படுத்தியது திருவிதாங்கூர் சமஸ்தானம் என்பதால்தானோ என்னவோ?
 சிவாலய ஓட்டம் ஆரம்பிக்கும் அன்று  காலை முதலே தெருவெங்கும் பக்தர்கள் சைக்கிள்களிலும், கால்நடையாகவும் செல்கிறார்கள். ஆரம்ப உற்சாகத்தில் ஓட ஆரம்பித்து சோர்ந்து , சாலையோரமாக அமர்ந்திருப்பவர்கள்  பலர். பொதுவாக நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் ஓடமுடியாது. ஆனால் எழுபது வயதிலும் ஓடி முடிக்கும் பக்தர்கள் பலர் உண்டு.


சிவாலய ஓட்டம் முஞ்சிறையில் ஆரம்பிக்கும். திருநட்டாலத்தில் முடியும். முஞ்சிறை பெரிய கோயில் ஒரு சிறு குன்றின்மீது உள்ளது. படி ஏறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். குமரிமாவட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலுக்குள் இருப்பது இங்கு மட்டும் தான். திருநட்டாலத்தில் சங்கரநாராயணர் கோயில் என்று பெயர் இருந்தாலும் ஒரு பெரிய தெப்பக்குளத்தின் இருபக்கமாக இரண்டு கோயில்களாகவே சிவனும் விஷ்ணுவும் உள்ளனர். சிவாலய பக்தர்கள் கடைசியில் விஷ்ணு கோயிலில்தான் ஓட்டத்தை முடிக்க வேண்டும். இந்த முறை சைவ வைணவ ஒற்றுமையை நாடெங்கும் உருவாக்கிய நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சடங்காக இது இருந்திருக்கலாம்.


இந்த சிவாலய ஓட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அழைத்துக் கொள்வார்கள்.பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாகவும் உள்ளது.


சிவாலய ஓட்டம் ஆரம்பித்த புராண வரலாறு...


பாதி மனித உருவமும் பாதி புலி உருவமும் கொண்டது புருஷாமிருகம். மிகச் சிறந்த சிவபக்தர். சிவனைத் தவிர வேறு தெய்வத்தை ஏற்கமாட்டார். விஷ்ணுவின் நாமத்தை கூறினாலே இவருக்குப் பிடிக்காது. புருஷாமிருகத்துக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உணர்த்த விரும்பிய கிருஷ்ணர் , பீமனை அழைத்தார். குருக்ஷேத்திர போரில் வெற்றி பெற புருஷாமிருகத்தின் உதவி தேவை என்று கூறியவர், பீமனிடம் 12 ருத்ராட்சங்களைக் கொடுத்து புருஷாமிருகத்திடம் செல்லுமாறும், அப்படி செல்லும்போது தன்னுடைய கோவிந்த நாமத்தை உச்சரிக்கும்படியும் கூறினார். தன்னுடைய பெயரை உச்சரிப்பதை விரும்பாத புருஷாமிருகம் பீமனைத் துரத்த வரும்போது ஒரு ருத்ராட்சத்தைப் போடும்படியும் கூறினார். பீமனும் கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி புருஷாமிருகத்திடம் நெருங்கினான். அது பீமனைத் துரத்த, பீமன் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட, அது ருத்ராட்சமாக மாறியது. புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சிவபூஜையில் ஈடுபட்டது. பிறகு கோவிந்த நாமம் சொன்ன பீமனைத் துரத்தியது. இப்படியாக பீமன் ருத்ராட்சம் போட்ட ஒவ்வோர் இடத்திலும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. முதலில் சிவலிங்கம் தோன்றிய இடம் திருமலை. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடம் நட்டாலம். அங்குதான் சிவன் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக புருஷாமிருகத்துக்கு தரிசனம் தந்தார்.


சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட்டத்தை துவங்கும் பக்தர்கள் சிவராத்திரி அன்று காலை மற்றும் இரவு முழுவதும் 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிப்பார்கள். 24-ம் தேதி மாலையில் நட்டாலம் சங்கரநாராயணனார் கோயிலை வந்தடையும் பக்தர்கள், அன்று இரவு முழுவதும் தூங்கா நோன்பிருந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 荘கோவிந்தா, கோபாலா鋳 என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

சிவாலய ஓட்டம் கடந்த காலங்களில் கால் நடையாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாக நடைபெற்று வந்தது.  தற்போது கால ஓட்டத்தில் இந்த நிகழ்ச்சி சைக்கிள், பைக், கார், பஸ் என அனைத்து வாகனங்களிலும் சென்று சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாக மாறி விட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்  வாகனங்களில் வந்து ஆலயங்களை தரிசிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் மட்டும் தரிசித்ததாக சிவ பக்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த வருடம் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வாருங்கள் நாமும் அவர்களோடு இணைந்து பன்னிரு சிவாலயங்களை தரிசிப்போம்.
த.ராம்
படங்கள்.ரா.ராம்குமார்.