Published:Updated:

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

Published:Updated:
தலங்கள்... தகவல்கள்...
ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்! -2
ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

சி வ தலங்களுள் 16 மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மற்றும் திருவாலவாய் ஆகிய 4 தலங்கள் குறிப்பிடத் தக்கவை. ‘திருவாலவாய்’ மதுரைமாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயர், கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு- சிவன் முக்தி தரும் தலம் என்பதால், சிவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும் சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டது மதுரை.

‘மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறுமளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

இங்குள்ள மீனாட்சி அம்மனது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது.

மீன் போன்ற கண்கள் கொண் டவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.

மீனாட்சி அம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.

விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், பிரும்மஹத்தி தோஷம் நீங்க பாண்டிய நாட்டுக் கடம்ப வனத்தில் சுயம்பு லிங்கத்தை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். இந்த சிவலிங்கத்தைத் தேவர்களும் பூஜித்து வந்தார்கள். ஒரு நாள் தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்பவனத்தில் கானம் ஒன்றைக் கேட்டு அருகில் சென்றபோது லிங்கம் அவன் கண்களுக்குத் தென்பட்டது. அப்போது மணவூரை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னரிடம், இந்தத் தகவலைக் கூறினான். அரசன் கடம்ப வனத்துக்கு வந்து ஈசனை தரிசித்தான். பின்பு அங்கு கோயில் கட்டி, நகரத்தையும் உருவாக்கி, மக்களுடன் குடியேறினான்.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீமீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும் 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறை. ணு மீனாட்சி அம்மனை திருமணம் புரிவதற்காக, சுடலையாண்டியான ஈசன், மணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என் றும் அழைக்கப்படுகிறார்.

இந்தத் தலத்தின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.

மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால், அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம்.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தலவிருட்சங்கள்; கடம்பம், வில்வம்.

பொற்றாமரைக் குளம், வைகை நதி ஆகிய தீர்த்தங்கள் இந்தத் தலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. எழு கடல், கொண்டாழி, கிருத மாலை, தெப்பக்குளம் புறத்தொட்டி நின்மாலிய தீர்த்தம் ஆகியன மறைந்து விட்டன.

சிவபெருமானால் ஆதியில் படைக்கப்பட்டது இங்குள்ள பொற்றாமரைக் குளம். எனவே, இது ஆதி தீர்த்தம் எனப்படுகிறது. இதற்குச் சுற்றிலும் உள்ள மண்டபச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தெற்குச் சுவரில் 1,330 குறள்களும் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

பொற்றாமரைக் குளத்தில் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்படிக லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது தற்போது தருமபுர ஆதீன மடத்தில் பூஜிக்கப்பட்டு வருகிறது.

மற்ற இடங்களில் இடப் பாதம் தூக்கி ஆடும் நடராஜ மூர்த்தி, மதுரை- வெள்ளியம்பலத்தில் தன் வலப் பாதத்தைத் தூக்கி நடனமாடுகிறார். பாண்டிய மன்னன் ராஜசேகரனுக்காக இறைவன் இப்படிக் காட்சியளித்ததாக ஐதீகம்.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

வெள்ளியம்பல நடராஜர் சந்நிதி, சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் 1,790 சதுர அடி பரப்பளவில் 1,354 கிலோ வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டு மின்னுகிறது. இந்தத்தகடுகளை கலை நுணுக்கம் மற்றும் புடைப்பு சிற்பங் களுடன் பொருத்திக் கொடுத்தவர், மதுரை கே.புதூரைச் சேர்ந்த அலாவுதீன் என்ற இஸ்லாமியர்.

மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் பற்றிய தகவல்களை ‘திருவாலவாயுடை யார் கோயில் திருப்பணிமாலை’ நூல் விவரிக்கிறது.

இந்தக் கோயிலின் கிழக்குக் கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் (கி.பி.1216-1238) கட்டப்பட்டதால் இது ‘சுந்தர பாண்டியன் கோபுரம்’ எனப்படுகிறது. இதில் 1,011 சுதை வடிவங்கள் உள்ளன.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

தெற்குக் கோபுரத்தின் உயரம் 152 அடி. இதில் 1,511 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இதை கி.பி.1559-இல் சிராமலைச் செவ்வந்தி மூர்த்தி என்பவர் கட்டினார்.

மேற்குக் கோபுரத்தைக் கட்டியவர் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1315-1347). இதில் உள்ள சுதை வடிவங்கள் 1,124.

வடக்குக் கோபுரம், ஒன்பது நிலைகள் கொண்டது. கட்டியவர் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் (1564-1572). 404 சுதைச் சிற்பங்கள் கொண்ட இதை மொட்டைக் கோபுரம் என்கிறார்கள்.

சித்திர கோபுரம், வேம்பத்தூரார் கோபுரம், நடுக்கட்டு கோபுரம், இடப குறியிட்ட கோபுரம் உட்பட மேலும் எட்டு சிறிய கோபுரங்களும் உள்ளன.

மீனாட்சி கோயிலுக்கு எதிரில் உள்ள அட்ட சக்தி மண்டபத் தூண்களில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்ஞரூபினி, சியாமளை, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டுச் சக்திகளின் சிலைகள் உள்ளன. இங்கு மீனாட்சி அவதரித்தது முதல் ஸ்ரீசுந்தரேஸ்வரரை மணந்தது வரையிலான சம்பவங்கள் வரையப் பட்டுள்ளன.

திருமலை நாயக்கரின் அமைச்சர் மீனாட்சி நாயக்கரால் கட்டப்பட்ட, மீனாட்சி நாயக்கன் மண்டப மேல் விட்டத்தில் 12 ராசிகள், சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது கோயிலுக்கு எதிரேயுள்ள மண்டபத்தில் காலை, மாலை இரு வேளைகளிலும் நகரா எனப்படும் தோல் வாத்தியமும், ஷெனாய் என்ற குழல் வாத்தியமும் இசைக்கப்பட்டன. நகராவின் ஒலி தூக்கலாகக் கேட்கும். எனவே, இந்த மண்டபத்தின் பெயர் நகரா மண்டபம்.

இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது, ஆயிரங்கால் மண்டபம். இதில் 985 தூண்கள் உள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் இவை நேர் வரிசையில் காட்சியளிக்கின்றன.

அஷ்ட ஸித்தி மண்டபம், மீனாட்சி நாயக்கன் மண்டபம், முதலிப்பிள்ளை மண்டபம் அல்லது இருட்டு மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூடு மண்டபம், திருமலை நாயக்கன் மண்டபம் ஆகியவற்றுடன் சுந்தரேஸ்வரர் கோயிலில், வீர வசந்தராய மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பரத்தடி மண்டபம் (நாலு கால் மண்டபம்), மண்டப நாயக மண்டபம், திருஞான சம்பந்தர் மண்டபம், சங்கப் புலவர் உலா மண்டபம் ஆகியவையும் உள்ளன.

25.6.63-ஆம் தேதி முதல் 28.6.63-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள், இந்த ஆலய கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை திருப்பணிகளை மேற்பார்வை இட்டு ஆசி வழங்கினார். அப்போது 200 சிவாச்சார்யர்கள், 100 வேத பண்டிதர்கள், 100 ஓதுவார்கள் ஆகியோர் பங்கேற்க, 84 கும்பங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஒரு முறை திருமலை நாயக்கர் திருச்சியிலிருந்து மதுரைக்கு வரும்போது அவருக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வலி நீங்கினால் மீனாட்சிக்குத் தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அதன்படி வயிற்று வலி நீங்கி, அவர் தெப்பக்குளம் வெட்டும்போது பிள்ளையார் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அவரை ‘முக்குறுணி விநாயகர்’ என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசி மாவினால் செய்த ஒரே கொழுக்கட்டையை இவருக்குப் படைக்கிறார்கள்.

ஆடி மாதம் விவசாயிகள் விதைக்கும் காலமானதால், கிராம மக்களும் விவசாயிகளும் பங்கு பெறுவதற்காக திருமலை நாயக்கர் ஆடித் திருவிழாவை, சித்திரை மாதத்துக்கு மாற்றி அமைத் தார்.

கள்ளழகர் சித்திரைத் திருவிழா மதுரைக்கு அருகிலுள்ள தேனூர் என்ற கிராமத்தில் நடந்து வந்தது. அப்போது மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க அவர் தேனூருக்கு எழுந்தருள்வார். பொது மக்களின் சௌகரியத்துக்காக, இதை சித்திரை மாதத்தில் திருக்கல்யாண உற்சவமாகவும், வைகையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமாகவும் மன்னர் திருமலை நாயக்கர் மாற்றி அமைத்தார்.

மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வடக்கே, வட திருவாலவாய்க் கோயில் உள்ளது. அங்கும் சொக்கநாதர் - மீனாட்சி சந்நிதிகள் உள்ளன. இதை ஆதி சொக்க நாதர் கோயில் என்கிறார்கள்.

கோயிலின் புது மண்டபத்தில் அரசர் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மூன்று அரசியரது சிற்பங்கள் உள்ளன. சிற்பி, அரசி நாகலாம்பாள் சிலையை வடிக்கும்போது உளிபட்டு சிலையின் காலில் பள்ளம் விழுந்தது. அமைச்சர் நீலகண்ட தீட்சிதரிடம் இதற்கு விளக்கம் கேட்டார் அரசர். அரசியாரின் காலில் மச்சம் உள்ளதால் பள்ளம் ஏற்பட்டது என்று பதிலளித்தார் அவர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட அரசர், தீட்சிதரின் கண்ணைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டாராம். பிறகு இறையருளால் மீண்டும் கண் பார்வை பெற்றார் தீட்சிதர்.

சுந்தரேஸ்வரர் புதன் கிரக அதிபதி. இவருக்கு புதன் கிழமை தேன் அபிஷேகம் செய்தால், குரல் வளம் பெருகும் என்பது ஐதீகம்.இதற்கு ஆதாரமாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, மதுரையில் தேன் அபிஷேகம் செய்ததைச் சொல் கிறார்கள்.

சுவாமி சந்நிதிக்கு எதிரில் வேலைப்பாடு நிரம்பிய அகோர வீரபத்திரர் மற்றும் பிரமாண்டமான பத்ரகாளி சிற்பங்கள் உள்ளன. மேலும் அக்கினி வீரபத்திரர், ஊர்த்வ தாண்டவர் சிற்பங் களும் உள்ளன.

இங்குள்ள தங்க ரதம் சிறப்பு வாய்ந்தது. ஏழு கிலோ தங்கம் (875 பவுன்), 78 கிலோ வெள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி, அன்றைய மதிப்பில் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் தங்க ரதம் 26 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.

பக்தர்கள் பணம் கட்டி, தங்க ரதத்தை கோயிலுக்குள் இழுக்கிறார்கள். பிரதி தமிழ் மாதம் முதல் தேதி இரவு 7 மணியளவில் தேவஸ்தானம் தங்க ரத உலா நடத்துகிறது.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

மதுரை வடக்குமாசி வீதி கோயிலில் எழுந்தருளியுள்ள செல்லத்தம்மன், மீனாட்சியின் அம்சம் என்பதால், மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது முதலில் இந்த அம்மனுக்கு புடவை, தாலி, மெட்டி ஆகியவற்றை பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள விபூதிப் பிள்ளையார் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் இவருக்கு விபூதி அபிஷேகம் செய்வதால் எப்போதும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார்.

மதுரைக் கோயிலில் மொத்தம் 231 உற்சவத் திருவுருவங்களும் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப் பட்ட வாகனங்களும், சப்பரங்களும், அம்மன் தேர், சுவாமி தேர், திருவாதவூர்த் தேர் ஆகியவையும் உள்ளன.

சுந்தரேஸ்வரர் சந்நிதியில் கம்பத்தடி மண்டபத்தில் வலப்புறமாக புலிக் கால் கணேசரை தரிசிக்கலாம். பெண்மைத் தோற்றம் இவரது விசேஷ அம்சம்.

மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தான் வருமுன் நடந்து விட்டதன் காரணமாக, தமையனாரான ஸ்ரீ கள்ளழகர் கோபமுற்று வைகையின் வடகரையிலேயே தங்கி விட்டு, மலைக்குத் திரும்பிவிட்டதாகப் புராணம் கூறுகிறது.

கி.பி.1310-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூரின் அட்டூழியங்களால் பேரழிவுக்கு உள்ளானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயம். இங்கிருந்த அம்பாள்- சுவாமி சந்நிதிகளும், சுற்றிலும் இருந்த ஒருசில மண்டபங்கள் மட்டுமே அப்போது தப்பித்தன. இதன் பிறகு 68 ஆண்டுகள் மூடியே கிடந்தது மீனாட்சியம்மன் கோயில். 1378-ல் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த குமார கம்பண்ணன் என்பவர் அவர்களை வென்று, பாண் டிய நாட்டை மீட்டார்.

தமிழக அதிகாரிகள் ஆறு பேர் அயல் நாடு சென்று, பார்வையிட்டு மேற்கத்திய நாகரிகப் படி தமிழகத்திலும் நகர நிர்மாணம் செய்யலாம் என்ற ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதை நிராகரித்த அப்போதைய முதல்வர், ‘‘நீங்கள் மதுரைக்குப் போய் அந்த நகரம் எப்படி அமைந்திருக்கிறது என்று பார்த்து வந்தால் போதும்!’’ என்றார். அதிகாரிகளின் அயல்நாட்டுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அந்த அளவுக்குப் புகழ் பெற்றது மதுரை. அந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜ்.

நியூஸிலாந்து நாட்டின் கோடீஸ்வரரான பெர்னார்டு வெப்பர், 2005-ஆம் ஆண்டில் உலக அதிசயங்கள் குறித்த புதிய பட்டியலை தயாரிக்கத் திட்டமிட்டார். அதில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலையும் சேர்த்தார். தனது பரிந்துரையை ஐ.நா. கலாசார அமைப்பான யுனெஸ்கோவிடம் அளித்தார். அவர்களது பரிசீலனைப்படி ஸ்ரீமதுரை மீனாட்சி அம்மன் கோயில் 25-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு வந்த வெளி நாட்டு பயணிகளான கிரேக்க அறிஞர் மெகஸ்தனீஸ் (கி.மு.320), கிரேக்க அறிஞர் பிளினி (கி.பி.75), பேரறிஞர் தாலமி (கி.பி.140) ஆகியோர் தங்களது பயணக் குறிப்புகளில் மதுரையைக் குறித்து சிறப் பாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரை அருகேயுள்ள திருவாதவூர். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை கோயில் திருப்பணிக்குச் செலவு செய்ததால் மாணிக்கவாசகரை சிறையிலிட உத்தரவிட்டான் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்கவாசகர் சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட, நரிகளைப் பரிகளாக்கி திருவிளையாடல் புரிந்தார் இறைவ னார். இதை நினைவூட்டும் ஐதீக விழா, ஆவணி மாதத்தில் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது.

மூர்த்தி நாயனார், சந்தனக் கட்டை கிடைக்காத தால் அதற்கு பதிலாக தன் முழங்கையை சந்தனம் தேய்க்கும் கல்லில் வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். இறைவன் அவரை தடுத்து, அரசனாக்கி அருள் புரிந்தார். மூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த அந்தக் கல், மீனாட்சியம்மன் சந்நிதியில் இன்றும் இருக்கிறது.

சிவபக்தர் பாணபத்திரரது வறுமையைத் தீர்க்க, சோமசுந்தரர், கடிதம் ஒன்றை தந்து, அதை சேரமான் பெருமாள் நாயனாரிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். அதனால் சேரமான், தனது செல்வம் மொத்தத்தையும் பாணபத்திரருக்கு சமர்ப்பித்தார். பாணபத்திரர் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு, சேரமானிடமே மீதியைத் தந்து விட்டார்.

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கிப் பதினைந்து பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடி பார்வை பெற்றார். பார்வை குறைவு உள்ளவர்கள், அந்தப் பாடல்களைப் பாடி அம்பாளை துதிப்பது இன்றும் கண்கூடு.

ஆதிசங்கரர், மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.

தாய்-தந்தையை இழந்த ஸ்ரீராகவேந்திரர், மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள தளவாய் தெருவில், தம் தமக்கை வேங்கடாம் பாளின் வீட்டில் வசித்தார். அப்போது அவர், இரு வேளையும் மீனாட்சியம்மனை தரிசிப்பது வழக்கம். வேங்கடாம்பாளின் பரம்பரையினர் இன்றும் பழைமை யான அந்த வீட்டு அறையில் தின மும் பூஜை செய்து வருகின்றனர். அங்கு ஸ்ரீராகவேந்திரரது சாளக்ராமங்கள், பஞ்சபாத்திரங்கள், உத்தரணி ஆகியவற்றை தரிசிக்கலாம்.

ராகவேந்திரரின் பக்தியால் மகிழ்ந்த அம்பாள், ‘நீ இருக்கும் இடத்தருகில் நான் எப்போதும் இருப்பேன்’ என்று வாக்குறுதி தந்தாளாம். அதன்படி மந்திராலயத்தில் ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்துக்குப் பக்கத்திலேயே மீனாட்சியம்மன், மாஞ்சாலம்மனாக கோயில் கொண்டிருப்பதாக ஐதீகம்.

மீனாட்சியம்மன் கோயில் மடைப் பள்ளியில் பணி புரிந்த ஸ்ரீநிவாஸன், ஸ்ரீமீனாட்சியின் அருளால், மீனாட்சி துதிப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்போது இவருக்கு பதிலாக அம்பிகையே சமைத்ததுடன், வெளிச்சத்துக்காக தனது மூக்குத்தியை பயன் படுத்தியதாகவும் கூறப்படுவது உண்டு.

கொட்டும் மழையில் சிறுமி வடிவில் வந்து, ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தாள் மீனாட்சி. அடுத்த கணம் வீடு இடிந்து விழுந்தது. சிறுமி மறைந்து போனாள். தன்னைக் காப்பாற்றியது மீனாட்சியே என்பதை உணர்ந்த அந்த அதிகாரி ஏராளமான ஆபரணங்களை மீனாட்சி அம்பாளுக்கு சமர்ப்பித்தார். அவை இன்றும் மீனாட்சி கோயிலில் உள்ளன. அந்த அதிகாரி - பீட்டர் பாண்டியன்.

தொகுப்பு: பரத்குமார், மாருதிப்ரியை, பா.சி. ராமச்சந்திரன், ஆர்.நாராயணன், சு.தாரணி, வி.பாலசுப்பிரமணியன், வத்சலா சதாசிவம், இல.நாராயணன், கே.ராஜலக்ஷ்மி, ஜெயலட்சுமி கோபாலன், இரா.கல்யாண சுந்தரம், சு.மீனா, எஸ். விஜய்சரபேஷ், டி.ஜெ. புவனேஸ்வரி, குளச்சல் செ.வரதராஜன், ராதா பரிமளம், அவினாசி முருகேசன்.

‘ஆ லயம் தரும் அபூர்வ சேதிகள்’ பகுதியில் அடுத்த இதழில் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயில்:

இந்த ஆலயம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்களை வரும் 24.04.07 செவ்வாய்க்கிழமைக்குள் வந்து சேருமாறு எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

சுவையான தகவல்கள் இதழில் வெளியாகும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்
(திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயில்)

சக்தி விகடன்,
34, கிரீம்ஸ் ரோடு,
சென்னை - 600 006.