Published:Updated:

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

Published:Updated:
ஆலய தரிசனம்
சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!


‘‘பே ரலை பொங்கும் திருச்சீரலைவாய்- பெரிய திருச்செந்தூர்; சிற்றலை தாலாட்டும் புதுக்குடி- சின்ன திருச்செந்தூர்!’’ என்று வாரியார் சுவாமிகளால் புகழப் பெற்ற திருத்தலம்- சிற்றலை புதுக்குடி சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். முருகப் பெருமான் மீது பக்தி கொண்ட இந்த ஊர்மக்கள், வருடம்தோறும் பங்குனி மாதம் விரதம் இருந்து, பங்குனி உத்திரத்தன்று பாத யாத்திரையாக திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவர். இப்படி திருச்செந்தூர் சென்று வழிபட முடியாதவர்களும் திருச்செந்தூர் போய் வந்த பலனைப் பெற வேண்டும் என்பதற்காகத் தங்களது ஊரில் முருகன் கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்பது அந்தப் பகுதி பக்தர்களது நீண்ட கால ஆசை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!
சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்... திருச்செந்தூர் பக்கமிருந்து பறந்து வந்த மயில் ஒன்று தற்போது கோயில் அமைந்துள்ள இந்த இடத்தில் தோகை விரித்து நடனமாடியது. அங்கு மீன் வலைகளைக் காய வைத்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு மயில் மீது அமர்ந்தபடி அப்போது காட்சி கொடுத்தார் முருகப் பெருமான். ஆச்சரியம் அடைந்த சிறுவன் இந்த விஷயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தபோது, அனைவரும் வியப்படைந்தனர்.

அதன் தொடர்ச்சி போல் அன்று இரவு அதே ஊரைச் சார்ந்த மகாலிங்கம் என்பவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘‘இன்று மயில் நடனமாடிய இடத்தில் நான் கோயில் கொள்ள விரும்புகிறேன். எனவே, நீ உடனடியாக செல்லப்பிள்ளையார்கோவில் என்ற ஊரில் வசிக்கும் செல்லவேல் சுவாமிகளை சென்று பார். திருச்செந்தூர் யோகி ஒருவரால் வழங்கப்பட்ட வேல் ஒன்று அவரிடம் உள்ளது. அதை வாங்கி வந்து இன்று மயில் நடனமாடிய இடத்தில் வைத்து வழிபடுக!’’ என்று கூறி மறைந்தார்.

அதன்படி செல்லவேல் சுவாமிகளை அழைத்து வந்து, முருகப் பெருமான் குறிப்பிட்ட இடத்தில் அந்த வேலை நட்டு வழிபட ஆரம்பித்தனர். அதை ஒட்டிய கடல் பகுதியில் சீற்றமில்லாத அலைகளைக் கண்ட செல்லவேல் சுவாமி, அந்தப் பகுதிக்கு, ‘சிற்றலை புதுக்குடி’ என்று பெயர் வைத்தார். நாளடைவில் அங்கு வந்து வணங்கிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன் பிறகு ஊரார் ஒத்துழைப்புடன் திருச்செந்தூர் கோயில் அமைப்பிலேயே, சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பி அதில் வள்ளி- தெய்வானையுடன் முருகப் பெருமானை எழுந்தருளச் செய்தார் அவர்.

இந்தத் திருக்கோயில் நந்தவனத்துக்கு அருகில் காணப்படும் கூந்தப் பனை சிறப்பு வாய்ந்தது. சுயம்புவான இந்த கூந்தப் பனையை, மனிதர்கள் எவரும் நட்டு வளர்க்க முடியாது என்கிறார்கள். அமைப்பை வைத்து வாரியார் சுவாமிகள் இந்தத் தலத்தை ‘சின்ன திருச்செந்தூர்!’ என்று போற்றினாராம்.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

மட்டுமின்றி, திருச்செந்தூரில் சண்முகப் பெருமானுக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் அதே முறையில் புதுக்குடியிலும் நடத்தப்படுகிறது. அவற்றுள் சிறப்பானது பங்குனி உத்திரத் தெப்பத் திருவிழா. இங்குள்ள சிவசுப்ரமணிய சுவாமிக்கு வருடம்தோறும் பங்குனி மாதத்தில் 11 நாட்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் கிராமத்து மக்கள். இதன் உச்சகட்ட நிகழ்ச்சியாக ‘கடல் தெப்பத் திருவிழா’ நடத்தப்படுகிறது.

புதுக்குடி முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று காலை முதல் வேல் காவடி, பறவைக் காவடி என விதவிதமாக காவடி எடுத்து வருகின்றனர் பக்தர்கள். நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். அன்று இரவு முருகப் பெருமான் வள்ளி- தெய்வானை சமேதராக விசாலமான தெப்பத்தில் அமர்ந்து கடல் மீது உலா வருகிறார். இப்படி புதுக்குடி கடற்கரையிலிருந்து கிளம்பும் தெப்பம் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் வரை பயணம் செய்கிறது.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

பங்குனியின் கோடை இரவில் சில்லென்ற காற்றை வாங்கியபடி உலா செல்லும் முருகப் பெருமான், ஜெகதாப்பட்டினம் பக்தர்களுக்கு அருள் பாலித்த பின் புதுக்குடி திரும்புகிறார்.

இங்கு முருகப் பெருமானுக்காக அமைக்கப்படும் தெப்பம் வித்தியாசமானது. இதற்காக முதலில் மூன்று பெரிய படகுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பின்பு தெப்பங்களை அலங்காரம் செய்கிறார்கள். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பங்கள், கடல் மீது மிதக்கும் கோயிலாக அற்புதமாகக் காட்சி அளிக்கிறது. இந்தத் தெப்பத்தை இழுத்துச் செல்வதற்காக விசைப்படகு ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. காத்திருக்கும் அந்தப் படகு கடல் மீது மெள்ள ஆடியபடி இறைவனின் அருளுக்காக கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் பக்தனைப் போல் பவ்யமாகக் காட்சி தருகிறது. வங்கக் கடலில் மனைவியருடன் முருகப் பெருமான் பவனி வரும் காட்சியைக் காண, கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

முருகப் பெருமானை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வரும் அந்தப் படகு அசைந்தாடி வருவது,

விழுது விடு வெண்ணிலவு பொழிய நகையன் வருக வருகவே,
விளரி பயிலு புளியு நிமிறும் விரவு குறவன் வருகவே
மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே!

என குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடி முருகப் பெருமானை அழைப்பது போலிருக்கிறது.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

இந்தத் தெப்போற்சவத்தின்போது முதலில் பக்தர்கள், விக்கினங்களை நீக்கும் விநாயகரை தெப்பத்தில் கொண்டு வந்து அமர்த்துகின்றனர். பின்பு, ‘‘புதுக்குடி முருகனுக்கு அரோகரா! பழநிமலை முருகனுக்கு அரோகரா! திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!’’ என்று பக்திக் குரல் எழுப்பியபடி, சிவசுப்பிரமணியரை வள்ளி- தெய்வானை சமேதராகத் தெப்பத்துக்கு எடுத்து வருகிறார்கள்.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

அதன் பிறகு நாகஸ்வரக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் ஆகியோருடன் தெப்பப் பாதுகாப்புக்காக வரும் இளம் மீனவர் பட்டாளத்துடன் தெப்பம் கடலில் மெதுவாக நகரத் தொடங்குகிறது. புதுக்குடி கடற்கரையிலிருந்து தெப்பம் கடலில் நகரத் தொடங்கும்போது கடற்கரையில் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் நடைபெறுகிறது.அத்துடன் அரோகரா கோஷமும் விண்ணைத் தொட... மிதக்கும் மின்விளக்குகளாலான தெப்பம் அலைகளுக்கு நடுவே தவழத் தொடங்குகிறது.

முதலில் கோபுரம் போல் அலங்கரிக்கப்பட்ட இழுவைப் படகும், மூன்றாவதாக தேர் போல் அலங்கரிக்கப்பட்ட அழைப்புப் படகும் வர, நடுவில் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் பவனி வரும் காட்சி தேவர் படை சூழ வெற்றி வீரனாக- தேவசேனாதிபதியாக சுப்பிரமணியர் தேவலோகத்துக்கு விஜயம் செய்த காட்சியை நினைவுபடுத்துகிறது.

தெப்பம் சற்றுத் தொலைவு சென்றதும் நடுக்கடலில் தெப்பத்தை நிறுத்தி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் சார்பாக முதல் அர்ச்சனை நடைபெறுகிறது. அப்போதும் நடுக்கடலில் வாண வேடிக்கைகளை நிகழ்த்துகிறார்கள். அந்தக் காட்சி விண்ணிலிருந்து பூமாரி பொழிவதுபோல் தோன்றுகிறது.

மின் விளக்குகளின் பொன்னிற ஒளியிலே முருக னின் திருமுகம் தங்கமாக ஒளிர மெய்ம்மறந்த பக்தர்கள், ‘‘வங்கக் கடலிலே பவனி வரும் தங்க முருகனுக்கு அரோகரா! எங்கள் முருகனுக்கு அரோகரா!’’ என கோஷமிடுகிறார்கள். ஆடியசைந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு தெப்பம் ஜெகதாப்பட்டினம் கடற்கரையை அடைகிறது. அங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக தரிசிக்கின்றனர். பெருகும் உற்சாகத்துடன் அரோகரா கோஷம் எழுப்புகின்றனர்.

‘‘பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும் தாராயோ’’

என்று தலைக்கு மேல் கையுயர்த்தி வேண்டி நிற்கிறார்கள்.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!

அங்கு நூற்றுக்கணக்கான அர்ச்சனைகளை ஏற்றுக் கொண்டு அங்குள்ள பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் முருகப் பெருமான். அதன்பிறகு தெப்பம் புதுக்குடி நோக்கித் திரும்புகிறது. அப்போதும் பக்தர்கள் வாண வேடிக்கை சகிதம் அரோகரா கோஷம் எழுப்பி விண்ணை அதிர வைத்து அவருக்கு விடை கொடுக்கிறார்கள்.

மீண்டும் கடலில் தவழத் தொடங்கும் தெப்பம் அதிகாலையில் புதுக்குடி வந்து சேர்கிறது. நல்ல நேரம் வரும் வரை சிவசுப்ரமணியரை கடலிலே இருத்தி வைத்து, பின்பு அவரை தெப்பத்திலிருந்து இறக்கி கோயிலுக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் களைகட்டுகின்றன. இப்படியாக 11-ஆம் நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.

கடலில் நடக்கும் இந்தத் தெப்பத் திருவிழாவைக் காண ஆசையாக இருக்கிறதா? அடுத்த பங்குனி உத்திரம் வரை காத்திருங்கள்! அருள் கிடைக்கும்.

சின்ன திருச்செந்தூரில் கடலில் நடக்கும் தெப்பத் திருவிழா!