


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘க லைகளில் சிறந்த தமிழகம்’ என்று அகிலமே போற்றும் வண்ணம் பண்டைய காலத்தில் நமது தமிழ்நாடு பல வித கலைகளிலும் உயர்ந்தோங்கி இருந்தது. இயல், இசை, நாடகம் என்று எந்த ஒரு கலையிலும் புராணக் கதைகளின் சாரத்தைப் புகுத்தி, குடிமக்கள் பக்தி நெறியுடன் வாழ்ந்து வருவதற்கு அன்றைய அரசர்கள் அரும்பாடு பட்டார்கள். அவ்வப்போது நாட்டு மக்களை அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் திரளாக வரவழைத்து ‘புராணக் கதைகளைப் பொதுமக்கள் எந்தக் காலத்திலும் மறந்து விடக் கூடாது... அவற்றைத் தங்கள் வாரிசு களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவற்றைப் பாடல்கள் வழியாகவும், நாட்டிய நாடகங்கள் வழியாகவும் சொல்லி வந்தார்கள். சங்கீத மும்மூர்த்திகள் என்று சொல்லப்படும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் அவதரித்த தஞ்சாவூர் மண்ணுக்குக் கலைகளின் வாசம் என்றென் றும் சற்று அதிகமே. இந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் என்கிற சிற்றூருக்குத் தனிப் பெருமையே உண்டு. காரணம்- கடந்த 1645-ஆம் வருடம் முதல் தற்போது வரை- அதாவது சுமார் 362 ஆண்டுகளாக- இந்த ஊரில் ‘பாகவத மேளா பக்த சமாஜ’த்தின் சார்பாக ஸ்ரீநரசிம்ம ஜயந்தி உற்சவம் ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீபக்த பிரகலாதன் கதையை நாட்டிய நாடகமாக ஒவ்வொரு வருடமும் பிரமாதமாக நடத்தி வருகின்றனர் இந்த அமைப்பினர்.
|

இரவு சுமார் பத்து மணிக்குத் தொடங்கும் இந்த நாட்டிய நாடகம், விடிய விடிய நடந்து அதிகாலை வேளையில் நிறைவுறும். இரண்யன், அவன் மனைவி லீலாவதி, இவர்களின் மகன் பிரஹலாதன் போன்றோரின் வாழ்க்கையை நாட்டிய நாடகமாக இதே ஊரைச் சேர்ந்த- பரம் பரை பரம்பரையாக பங்கேற்று வரும் கலைஞர்கள் நடித்துக் காட்டுவார்கள். இறுதியில் நரசிம்மர் எழுந்தருளி, இரண்ய வதமும் தத்ரூபமாக இங்கே நடந்து வருவது, ஆன்மிக அன்பர்கள் காண வேண்டிய ஒன்று. தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் இருக்கிறது சாலியமங்கலம். இந்த ஊருக்கு அச்சுதபுரம் என்ற பெயரும் உண்டு. அச்சுதபுரம் என்கிற ஊர்ப் பெயருக்கும் இங்கே 362 வருடங்களாக நடந்து வரும் பாகவத மேளாவுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. என்ன சம்பந்தம் அது?
|

கி.பி. 1634-ல் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தவர் அச்சுதப்ப நாயக்கர். அவரது காலத்தில் பரதம் பஞ்சநத பாகவதர் என்பவர் வசித்து வந்தார். பல மொழிகளிலும் புலமை பெற்றவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அந்நியர்கள் நமது மண்ணில் தங்களது கலாசாரத்தை நிலை நாட்ட முயன்றனர். இதைக் கண்டு கவலைப்பட்ட அச்சுதப்ப நாயக்கர், பாரத நாட்டின் பாரம்பரியமான கலைகளை மக்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தால், அந்நியக் கலாசாரம் அதிகம் ஊடுருவாமல் தவிர்த்து, நம் பண்பாட்டின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தலாம் என்று தீர்மானித்தார். எனவே, பழம் பெரும் கலைகள் வளர நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன் விளைவாக, பஞ்சநத பாகவதரை அணுகி தம் எண்ணத்தைத் தெரிவித்தார் அச்சுதப்ப நாயக்கர். மன்னரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த பாகவதர் ஸ்ரீபக்த பிரஹலாதா, விப்ரநாராயணா, ருக்மாங்கதா, ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம் போன்ற நாட்டிய நாடகங்களை இயற்றினார். அப்போது சாலியமங்கலம், மெலட்டூர், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர், சூலமங்கலம் ஆகிய ஊர்களில் ஸ்ரீபக்த பிரஹலாதா நாடகத்தைப் பிரபலப்படுத்தி, நரசிம்ம ஜயந்தியைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு அதற்குரிய நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார் அச்சுதப்ப நாயக்கர் (தற்போது சாலியமங்கலம் மற்றும் மெலட்டூரில் மட்டுமே இந்த வைபவம் நடந்து வருகிறது). ‘‘அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் தொடங்கிய இந்த நரசிம்ம ஜயந்தி உற்சவம், சாலியமங்கலத்தில் தொடர்ந்து வருடா வருடம் இன்றளவும் நடைபெற்று வருகிறது. எந்த வருடமும் இந்த உற்சவம் தடைப்பட்டதில்லை!’’ என்றார் ‘ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ம பாகவதமேளா பக்த சமாஜ’த்தின் பொருளாளரான எஸ்.வி. வெங்கடகிருஷ்ணன்.
|


நாயக்கர் காலத்தில் துவக்கி வைக்கப் பட்டதாலோ என்னவோ, அப்போதில் இருந்தே தெலுங்கு மொழியில் இந்த ‘பாகவத மேளா’ உற்சவம் நடந்து வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் இதைப் பார்த்து வரும் காரணத்தாலும், நடிகர் கள் பங்கேற்று வரும் காரணத்தாலும் எவருக்குமே மொழி ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எல்லோருக்கும் புரியும் விதத்திலேயே இது அமைந்திருக்கிறது என்கிறார்கள். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி களின் தாய்வழிப் பாட்டனார்கள், கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் கொண்டுள்ள காஞ்சி பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்றோர் இந்த நாடகத்தைக் கண்டு ரசித்துள்ளனர். சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெறும் இந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் அனைத்துக் கலைஞர்களுமே உள்ளூர்க்காரர்கள்தான். இன்று வெளியூரில் வசித்து வருபவர்கள் என்றாலும், இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும். பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிக்கிறார்கள். உதாரணத்துக்கு, இரண்யனின் மனைவியான லீலாவதி பாத்திரத்தில், கடந்த பதினைந்து வருடங்களாக நடித்து வருபவர் சுப்ரமணியம் என்பவர். இவர் அதற்கு முன் இருபத்திரண்டு வருடங்களுக்கு பிரஹலாதனாக நடித்தவர். தற்போது பிரஹலாதனாக நடித்து வரும் ரக்ஷித், சுப்ரமணியத்தின் மகன்ஆவார். இந்த நாடகத்தில் பிரதான இடம் வகிப்பது இரண்டு முகங்கள் (முகமூடிகள்). இதை ஸ்வாமி என்றே சொல்கிறார்கள். அவை: அத்தி மரத்தால் ஆன ஸ்வேத விநாயகர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆகியவை. இந்த இரண்டு முகங்களுக்கும் நித்ய வழிபாடு உண்டு. மிக ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிவழியாக இந்த பூஜையை நடத்தி வருகிறார்கள். திருவிழா நேரத்தில் இந்த ஸ்வாமி முகங்களை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். நரசிம்ம ஸ்வாமி பிம்பத்துக்கு பிராணப்ரதிஷ்டை, கண் திறத்தல், தீபாராதனை போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன (இந்த பிம்பத்தைத் தன் முகத்தில் அணிந்தே நரசிம்மர் வேடம் தாங்குபவர் நடிக்கிறார்.)
|

அதன்பின் ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீநிவாஸப் பெருமா ளுக்கு வசந்த மாலை சாற்றி இரவு எட்டு மணிக்கு கருட வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர், இரவு சுமார் பத்து மணிக்கு ஸ்ரீபக்த பிரஹலாதா நாட்டிய நாடகம் தொடங்கி அதிகாலை சுமார் ஐந்தேமுக்கால் மணிக்கு முடிவடையும். அதிகாலை சுமார் நாலரை மணிக்கு ஸ்ரீநரசிம்ம அவதாரமும் தொடர்ந்து இரண்யனுடன் வாக்குவாதம், யுத்தம் மற்றும் சம்ஹாரம் போன்றவை விறுவிறுப்பாக நிகழும். ஆக்ரோஷமும் உணர்ச்சித் ததும்பல்களும் நிறைந்த இந்த பிரஹலாத சரித்திர நாடகத்தைக் கண்டு களிப்பதற்கு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிப்படும் காட்சியைத் தத்ரூபமாகவே செய்து காட்டுகிறார்கள். இரண்யனாகக் கடந்த 26 வருடங்களாக நடித்து வருபவர் சங்கரநாராயணன் என்பவர். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீநரசிம்மராக பாத்திரமேற்று நடித்து வருபவர் ஸ்ரீநிவாசன் என்பவர். இவருக்கு வயது 80. நாடகம் துவங்கும் முன் சில காட்சிகளைப் பாடலாக இசைக் குழுவினர் பாட... அதற்கேற்ப அபிநயம் பிடித்து சைகையாலேயே விளக்கிச் சொல்வார் ஸ்ரீநிவாசன். இத்தனை வயதிலும் இவர், தன் முகத்தில் காட்டும் அபிநயமும், நரசிம்மர் வேடம் அணிந்த பிறகு காட்டும் ஆக்ரோஷமும் காண்பவர்களைச் சிலிர்க்க வைக்குமாம். வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், கஞ்சிரா, மோர்சிங், புல்லாங்குழல், நட்டுவாங்கம் என்று சகல வாத்தியங்களுடன் இந்த நாடக விழா நடைபெறும். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் ஆதரவும் இந்த பாகவத மேளா நிகழ்வுக்கு இருந்து வருகிறது. தவிர பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்து விழாவை இனிதே நிறைவேற்றி வருகிறார்கள் பாகவத மேளா அன்பர்கள். வருபவர்களுக்கு அன்னதானம் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள் விழா அமைப்பினர். இந்த வருடம் வருகிற மே மாதம் 1-ஆம் தேதி மாலை நாலரை மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது இந்தத் திருவிழா. அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ஸ்ரீபிரஹலாத நாட்டிய நாடகம் தொடங்கும். மறுநாளும் விழாவின் இதர நிகழ்ச்சிகள் தொடரும். அடுத்த நாள் மே 3-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 7 மணிக்கு பாகவத சம்பிரதாயப்படி ஸ்ரீருக்மணி கல்யாண உற்சவம் நடைபெறும். பாரம்பரியக் |

கலைகளின் தன்மை இன்னும் மெருகு குலையாமல் பாதுகாக்கப்பட்டு வருவதற்காக இந்த பாகவத மேளாவின் அன்பர்களைப் பாராட்டுவோம்!
|