Published:Updated:

நூல் விமரிசனம்

நூல் விமரிசனம்

நூல் விமரிசனம்

நூல் விமரிசனம்

Published:Updated:
சிறப்பு கட்டுரை
நூல் விமரிசனம்


கண்ணன் என்னும் கருந்தெய்வம்

ஆசிரியர்: எம்.ஆர். ராஜேச்வரன், வெளியீடு: கண்ணன் வெளியீட்டகம், 85, புதூர் மெயின் ரோடு, பீளமேடு, கோயமுத்தூர்-641 004. தொலைபேசி: 0422 - 652 9335 (பக்கங்கள்: 62) விலை ரூ.25

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நூல் விமரிசனம்

‘க ண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை’ என்று ஆண்டாள் நாச்சியார் திரு மொழியில் பாடுகிறார். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்ற பரம்பொருளின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்தி அதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம். பாரதப் போர் விளைவிக்கவும், பூமியின் பாரம் தீர்க்கவும், கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுரை சிறையில் நாராயணன் வந்து பிறந்தது, அவரது அவதார காரணம். கண்ணபிரானின் வரலாற்றை வடமதுரை, கோகுலம், பிருந்தாவனம், துவாரகை, விராடபூமி, அஸ்தினாபுரம், குருக்ஷேத்ரம் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகக் காட்டி, முடிவில் யாதவ பாண்டவர்களின் அந்திம காலம் என்ற எட்டு தலைப்புகளில் சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு செய்தியையும் தனித்தனி வரிகளில், ஒவ்வொரு வரிக்கும் எண் கொடுத்து புதிய அணுகுமுறையில் சுவையாக எழுதியுள்ளார். திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியர் நன்கு தோய்ந்தவர் என்பதை, அவரது மேற்கோள்கள் உணர்த்துகின்றன. கண்ணனது வரலாற்றுத் தொடர்பான கறுப்பு - வெள்ளைப் படங்களும் அச்சிடப் பட்டுள்ளது அழகாக உள்ளது.

துவாபர யுகத்தின் இறுதியில் கி.மு.3139-ல் மகா பாரதப்போர் 18 நாட்களில் நடந்து முடிந்தது. அநேக க்ஷத்ரிய வம்சங்களும், அக்காலத்து 56 ராஜ்யங்களும் சிதறுண்டு சின்னாபின்னப்பட்டு போயின. கண்ணன் இப் பூவுலகில் சுமார் 125 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றும், கண்ணன் இப்புவியில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தவரை, பூமியில் கால் வைக்க அஞ்சிய கலி புருஷன், கண்ணன் வைகுண்டம் சென்றதும் பூமியில் கால் வைத்தான். கி.மு.3102-ல் கலி யுகம் பிறந்தது என்று நூலை முடிக்கிறார் ஆசிரியர்.

திருப்பாவை தெளிவுரை

உரையாசிரியர்: டாக்டர். இரா.வ. கமலக்கண்ணன், வெளியீடு: திருவேங்கடவன் பதிப்பகம். 8, கக்கன் சாலை, அழகானந்தம் நகர், செவிலிமேடு அஞ்சல், காஞ்சி புரம் - 631 502. தொலைபேசி: 6727 2932 (பக்கங்கள்: 224) விலை: ரூ.80

நூல் விமரிசனம்

மா ர்கழி மாதம் என்றதும் நினைவுக்கு வருவது திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்கவை. ‘பாவை’ என்பதற்கு ‘நோன்பு’ என்று பொருள் கூறும் உரையாசிரியர், திருப்பாவை பற்றிய மிக ஆழமான, ஆராய்ச்சி முன்னுரையை 28 பக்கங்களில் வழங்குகிறார். நாடு, வளம் குன்றியபோது மழை பெய்யவும், கன்னியர் உத்தமமான கணவனை அடையவும் வேண்டி காத்யாயினி தேவியைக் குறித்து மார்கழி மாதம் முழுவதும் நோன்பு நோற்பது பண்டைய மரபு. இந்தச் செய்தியோடு திருப்பாவை நோன்பையும் ஒப்புமை நோக்கிக் காட்டுகிறார். திருவெம்பாவைப் பாடல்களுடன் பெரிதும் கருத்து ஒற்றுமை இருப்பினும், மணிவாசகர் பாவை நோன்பு பற்றி எதுவும் சொல்லவில்லை என்கிறார். திருவெம்பாவையில் நல்ல கணவரைப் பெறுவது நோக்கமாகக் கூறியிருப்பதுபோல் திருப்பாவையில் இல்லை என்றும், இறைக் காதலே திருப்பாவைச் சிறுமியரின் நெறி என்றும், அதற்கு நோன்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இறைவனை அடையவே முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறுகிறார். ‘சங்கத் தமிழ் மாலை’ ‘திருப்பாவை, வேதம் அனைத்துக்கும் வித்து’ என்று விளக்குவதுடன் திருப்பாவை உரையாசிரியர்கள் பற்றியும், ‘கோதாஸ்துதி’, ‘ஆமுக்தமால்யத’, ‘ஆண்டாள் சந்திர கலாமாலை’ ஆகிய நூல்கள் பற்றியும் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு பாசுரத்துக்கும் பொருள், சிறப்புப் பொருள், உள்ளுறைப் பொருள் என்ற முறையில் விரிவாக வியாக்கியானம் செய்துள்ளார் உரையாசிரியர். ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று முதல் பாசுரத்தில் வரும் வரிக்கு, இருபத்தொன்பதாம் பாசுரத்தில் ‘இற்றைப் பறை கொள்வான்’ என்ற இடத்தில், ‘பறை’ என்று சொல்வது ‘கண்ணன் திருவடிகளில் செய்யும் கைங்கரியமே’ என்று ஆய்ச்சியர் பெண்கள் நிர்ணயிக்கிறார்கள் என்கிறார். திருப்பாவையில் குறிப்பிடப்பெறும் திருமாலின் திரு அவதாரங்கள் பற்றி விரிவாகச் சொல்லி, இந்த பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானு டைய திருவருளுக்கு இலக்காகி மகிழப் பெறுவார் என்று நிறைவு செய்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் தெளிவுரை எழுதியுள்ள உரையாசிரி யரின் இந்த நூல் பாராட்டுக்கு உரியது.

நூல் விமரிசனம்