Published:Updated:

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

Published:Updated:
அற்புத பயணத் தொடர்
கண்டேன் கயிலையான் பொற்பாதம்! - 26
கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

‘க யிலையின் தென்புறம் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் அணி அணியாக உள்ள மலைகள், விசுவேஸ்வரனின் கணங்கள் மற்றும் சிப்பந்திகள் வசிக்கும் குடியிருப்புகளாக விளங்குகின்றன. தேவ லோகத்துக்கு ஏற்ற ஒப்பற்ற ஒரு நகரம் போன்று அவை காட்சி தருகின்றன.’

_ இதை சுவாமி கமலாத்மானந்தாவும், தனது நூலில் குறிப்பிடுகிறார். அந்தக் காட்சிகளை எல்லாம் முதல் நாள் பரிக்ரமாவின்போது கண்ணாரக் காணும் பாக்கியம் பெற்றோம்.

எங்களது கேம்ப் இருக்கும் பகுதி ‘திரபுக்’ எனப்படுகிறது. திரபுக் என்றால், திபெத்திய மொழியில் ‘குகை’ என்று பொருள். ஆனால், நாங்கள் குகையில் தங்கவில்லை! மாறாக எங்களது கேம்ப், மண்ணால் கட்டப்பட்டு குளிருக்கு அடக்கமான அறைகள் கொண்டது. மரக்கட்டில், மேல் விதானத்தில் நல்ல வேலைப்பாடுகள் கூடிய அமைப்பு, மின் விளக்குகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடையாது. எங்கள் விடுதிக்குப் பின்னால் பெரிய மலையில் குகை ஒன்று இருப்பதாகவும், அதன் வாயிலை அடைத்துக் கொண்டு பூத கணங்கள் காவல் காப்பதாகவும் வழிகாட்டி குறிப்பிட்டார். அன்றிரவு ஈசனை தியானித்து உறங்கச் சென்றோம்.

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

2.9.05 காலைக் கதிரவனின் அருள் பார்வையுடன் கண் விழித்தோம். நல்ல குளிர். விடுதியிலிருந்து வெளியில் வந்தோம். பனி மூடிய ஸ்வரூபனான எந்தை சிவபெருமான் கம்பீரமாகக் காட்சி தந்தார். வெந்நீரில் காலைக் கடன்களை முடித்தோம். சிலர் இங்கு குளித்தனர்.

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

இது கயிலைப் பயணத்தின் மிக கடுமையான நாள். கடல் மட்டத்திலிருந்து 4,790 மீட்டர் உயரத்தில் இருக்கும் சுடுல்புக் கோம்பா ( Zutulpuk Gompa ) என்ற இடத்தை, மாலை நேரத்துக்குள் அடைய வேண்டும். சுமார் 18 கி.மீ. தூரத்தை 6 முதல் 7 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்து செல்ல வேண்டும். இந்தப் பயணத்தின்போது கடல் மட்டத்தில் இருந்து 5,630 மீட்டர் உயரத்தில் உள்ள டோல்மா-லா-பாஸ் என்ற இடத்தை அடைந்து பிறகு அங்கிருந்து பயணித்து எங்களது தங்கும் இடத்தை அடைய வேண்டும். ‘இது உயிரைப் பணயம் வைக்கும் மலை ஏற்றம். இந்தப் பயணத்தின்போது கடந்து செல்லும் அதிக உயரமான பகுதி, இந்த டோல்மா-லா-பாஸ். ஆக்ஸிஜன் மிகவும் குறைவு. ஆபத்தான பயணம்’ என்றெல்லாம் பயண அமைப்பாளர் கூறி இருந்தார். ஒரு சிலர் இந்த இடம் வரை வந்து விட்டு மேற்கொண்டு பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டதால் வந்த வழியே திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

காலை உணவை முடித்தோம். மன உறுதியுடன் பயணம் தொடர்ந்தோம். மதியத்துக்கு புளி சாதமும், உருளைக் கிழங்கு கூட்டும் தரப்பட்டது. எனக்கு இன்று குதிரையும், குதிரைக்காரியும் கிடைத்தனர். சுமார் 1 கி.மீ. தூரம் கடினமான பாதை. சில சிற்றாறுகள் குறுக்கிட்டன. பயண அமைப்பாளர்கள் அமைத்த, தடித்த மரங்களால் ஆன தற்காலிகப் பாலத்தின் மூலம் அவற்றைக் கடந்தோம். ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் அதிகம் மூச்சு வாங்கியது. உதவியாளராக என்னுடன் வந்த பெண்ணுக்கு பதிலாக இன்று ஓர் இளைஞன் வந்தான். அடிக்கடி சிகரெட் பிடித்தான். அவன் பெயர் டூவான். வழக்கமாக வரும் பெண் உதவியாளரின் அண்ணன் என்றான். குதிரையில் செல்வதும் கடினமாக இருந்தது. குதிரைப் பயணத்தின்போது கால்களைத் தொங்க விட்டவாறே நீண்ட நேரம் வைத் திருந்ததால், தசைப் பிடிப்பும் பாதங்கள் இரும்பு வளையங்களில் அழுத்தியதால் வலிக்கவும் செய்தன.

ஒரு சில உதவியாளர்கள் பயணிகளுடன் ஒத்துழைக்கிறார்கள். ஆனால், எங்கள் உதவியாளர்களில் பெரும்பாலானவர்கள் எங்களுடன் அடிக்கடி சண்டை போட் டனர். ஒரு கட்டத்தில் என் பையிலிருந்த ரெட்புல் பானத்தை தருமாறு சைகை மூலம் கேட்டேன். அதை எடுத்த என் உதவியாளன், அதைத் திறந்து பாதி குடித்து விட்டு மீதியை எனக்குத் தந்தான். அவன் செய்கை பயத்தை ஏற்படுத்தியது. எல்லா விஷயங்களிலும் அவன் இப்படித்தான் நடந்து கொண்டான். ஏதோ ஒரு பாட்டிலை தனது பேண்ட் பையிலிருந்து எடுத்து அடிக்கடி குடித்தான். மதுவோ? என்னவோ? அவன் என் குதிரையுடன் சேர்ந்து வரவில்லை. ஒரு முறை திடீரென்று திரும்பிப் பார்த்தால், எனது பையுடன் வேகமாக எங்கோ ஓடினான். ஓய்வின்போது அவனது நடவடிக்கைகள் குறித்து பயண அமைப்பாளரிடம் முறையிட்டோம். அவர் அவனிடம் ஏதோ சொன்னார். ஆனால், அதன் பிறகு மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தரவுமில்லை. எனினும் மன உறுதியுடன் பயணத்தைத் தொடர்ந்தேன். வழி நெடுகக் கடுமையான ஏற்ற-இறக்கங்கள். பனிப்பாறைகள். சில இடங்களில் வழித்தடம் இருக்காது. கவனமாக ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து, பக்கத்துப் பாறை யைப் பிடித்து முன்னேற வேண்டும்.

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

குதிரை செல்ல முடியாத சில இடங்களில் அனைவரையும் இறக்கி விடுகிறார்கள். எங்களுக்கான பாதையைக் காட்டி விட்டு, வந்து சேருங்கள் என்று சொல்லிவிட்டு, குதிரையுடன் அவர்கள் வேறு பாதையில் சென்று விடுவார்கள். டோல்மா-லா-பாஸ் பகுதியின் காவல் தெய்வம் தாரா. உமையவளின் அம்சம். இந்தப் பகுதியை தாரா பீடம் என்றும் சொல்கிறார்கள். ‘தாரா என்றால் முக்தி அளிப்பவள் என்று பொருள்’ என்கிறார் கமலாத்மானந்தா.

அவர் விடியற் காலை 2 மணிக்கு பரிக்ரமா ஆரம்பித்த தாகத் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில், எவ்வளவு மன உறுதியுடன் பரிக்ரமா சென்றிருக்கிறார்கள்! சுமார் 4 மணி நேர பயணத்துக்குப் பிறகு, சிவஸ்தல் என்ற இடத்தை அடைந்ததாகவும் கமலாத்மானந்தா குறிப்பிடுகிறார்.

இந்த சிவஸ்தல் பகுதியை, திபெத்தி யர்கள் மயானமாகக் கருதுகிறார்கள். இதைக் கடக்கும்போது தங்களது தொப்பி, பூட்ஸ், கொஞ்சம் தலைமுடி போன்ற ஒரு சில பொருட்களை விட்டுச் செல்வார்களாம். மற்றும் சிலர் தங்கள் உடலில் சிறு காயம் ஏற்படுத்தி, சில ரத்தத் துளிகளையும் விட்டுச் செல்வார்களாம். இதனால், மரணத்துக்குப் பிறகு தங்கள் ஆத்மா சிவபெருமானுடன் ஐக்கியமாகும் என்று நம்புகின்றனர். எங்கள் பாதையில் ஆங்காங்கே துணி, தொப்பி, பூட்ஸ் ஆகியவை கிடந்தன. ஆனால், ‘இதுதான் சிவஸ்தல்’ என்று பயண அமைப்பாளர்கள் எவரும் கூறவில்லை.

கண்டேன் கயிலையான் பொற்பாதம்!

பாதையில் சில ஆறுகளில், பனி உறைந்து இருந்தது. சில இடங்களில் பனிப் பாறைகள் வெடித்துக் காணப்பட்டன. இயற்கை அழகு மனதுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தன. ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பயணித்தோம். களைப்பை மறக்க வேடிக்கையும் விளையாட்டுகளும் உதவின. டோல்மா-லா-பாஸுக்கு சுமார் 1 கி.மீ. முன்பாகவே எங்களை குதிரையிலிருந்து இறங்கச் சொன்னார்கள். இங்கிருந்து மலையின் மறு பக்கம் இறங்கி சமவெளியை அடையும் வரை குதிரையின் உதவி கிடையாது. மலை மீது ஏறும்போது குதிரைகளுக்கு சிரமம் இருக்காது. ஆனால், செங்குத்தான சரிவில் இறங்கும்போது குதிரைகள் மிகவும் சிரமப்படும். மட்டுமின்றி, அது ஆபத்தும் கூட. எனவே, இப்படி ஓர் ஏற்பாடு.

இந்த நடை பயணத்தின் போது கண்டிப்பாக உதவியாளரின் உதவி தேவைப் படும். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியபடி கடந்தோம். வழியில் ஓர் ஆற்றின் உறைந்த பனிக் கட்டிகள் மீது நடந்து சென்றோம்.

நால்வர் அணி- ஆற்றின் பனிக்கட்டியைக் குச்சியால் குத்திப் பார்த்தனர். சுமார் ஓரடி ஆழம் வரை ஐஸ்! அதற்குக் கீழே நீர் சுழித்துக் கொண்டு ஓடும் நதி. எவ்வளவு ஆழமோ தெரியாது. பனிக் கட்டியில் எங்காவது பிளவு இருந்து கால்தவறி உள்ளே விழுந்தால் ஜலசமாதிதான். இது ஒரு பயம் கலந்த அனுபவம். டோல்மா-லா-பாஸுக்கு சற்று முன்பாகவே ஓரிடத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம். ருசியாக இருந்தும் நான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, மீதியை வயதான உதவியாளர்களுக்கு வழங்கினேன். சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். சிலர் பாறைகளின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையும், மலைகளையும் ரசித்தனர். மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். நடக்கும்போது அடிக்கடி மூச்சிரைத்தது. ஒவ்வொரு 5 நிமிட நடைக்குப் பிறகும் ஓய்வு தேவைப்பட்டது. ‘இதோ வந்து விட்டோம்... இன்னும் கொஞ்ச தூரம்தான்!’ என்று உதவியாளர்கள் எங்களை உற்சாகப்படுத்தினர். நாங்கள் மெதுவாகக் குச்சி ஊன்றி நடந்தோம். அப்படியும் நான் உட்பட வேறு சிலரும் பல முறை விழுந்து... எழுந்தோம்.

ஒருவாறாக நாங்கள் டோல்மோ- லா- பாஸை அடைந்தோம். மூச்சு வாங்கியது. ஆனால், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படவில்லை. கயிலை மலை பல முகங்களைக் காட்டியது. என்ன புண்ணியம் செய் தோம் இறைவா என்று மனம் உருகி தரிசித்தோம். இந்தப் பகுதியில் மனித சரீரம், தேவ சரீரமாக மாறுகிறது என்கிறார்கள். சுற்றிச் சுற்றிப் பார்த்தால் எல்லையில்லா அண்ட வெளியில் இருப்பதுபோல் உணர்ந்தோம். இங்கு ஏதோ ஒரு சக்தியை, நிதர்சன உண்மையை, உருவமில்லா உருவத்தை, ஒளி மிகுந்த ஒளியைக் கண்டோம்... உணர்ந்தோம்!

டோல்மா-லா-பாஸில் ஒரு பெரிய பாறையை தேவி வடிவமாக திபெத்தியர் வழிபடுகின்றனர். எங்கள் குதிரைக்காரர்களில் சிலர், அந்தப் பாறை முன் தலை தாழ்த்தி வணங்கினர். அங்கு பெரிதும், சிறிதுமான வண்ணத் துணிகள் கொடிகளாக கட்டப்பட்டிருந்தன. இது திபெத்தியரின் வழக்கம். திபெத்தியர் தங்களது உடுப்புகளில் சிலவற்றை அங்கு இடுகிறார்கள். சிவாச்சார்யர்கள் கற்பூரம் ஏற்றி ஒரு சிறு பூஜை செய்தனர். எல்லோரும் விழுந்து வணங்கினோம்.