Published:Updated:

என் தெய்வம்!

என் தெய்வம்!

என் தெய்வம்!

என் தெய்வம்!

Published:Updated:
ஆராதனை
என் தெய்வம்!
என் தெய்வம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


இஷ்ட தெய்வம்:

‘‘குருவே தெய்வம். குருவே சகலமும்! என் இஷ்ட தெய்வம்- என் சத்குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார்.’’

குலதெய்வம்:

‘‘கலியுக வரதன் திருமலை திருப்பதி வேங்கடாசல பதி.’’

சென்னையில் அடிக்கடி போகும் கோயில்:

‘‘ஊரில் இருக்கும்போது தினமும் போவது மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில்.’’

விரும்பிச் செல்லும் திருத்தலம்:

‘‘சமயபுரம் மாரியம்மன் கோயில். அவள், பேசும் தெய்வம். விழிகள்- உதடு விளிம்புகள்- கன்னத்தின் மினுமினுப்பு- முகவாய்... என்று சகலமும் பேசும்! சில மூல மந்திரங்களைச் சொல்லியபடி அவளைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் மிகுந்த நம்பிக்கை தோன்றும். எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும்.’’

விடாப்பிடியான நம்பிக்கை:

‘‘தினமும் அதிகாலை இரண்டரை மணிக்குச் செய்யும் தியானம். இது எண்ணங்களைச் சீர்ப்படுத்தும். உணர்வுகளை உற்றுப் பார்க்க வைத்து, மனத்தைச் சமனப்படுத்தும். விடிந்ததும் கணபதி, சாளக்கிராமம், மேரு, சிவலிங்கம், மூகாம்பிகை ஆகியோருக்குச் செய்யும் ஒன்றே கால் மணி நேர அபிஷேக- ஆராதனைகள். இது மிகுந்த நிதானத்தையும் வைராக்கியத்தையும் வழங்கும். பூஜை எனக்காக மட்டுமே அல்லாமல், மகள் ஸ்ரீகௌரி- மகன் சூர்யா- மனைவியர் கமலா- சாந்தா மற்றும் நண்பர்களுக்கு என்று உள்ளே கவனமாக நினைத்துச் செய்கிறேன். அதனால் நிம்மதி காண்கிறேன். மாலை நேரத்தில் குருநாதர் நாம ஜபத்தையும், ராம நாம ஜபத்தையும் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சொல்வோம்.’’

என் தெய்வம்!


செய்ய ஆசைப்படும் பூஜை:

‘‘ஐந்து நாட்கள் தனியாக அமர்ந்து வேறெந்த வேலையும் இன்றி, எவரோடும் பேசாமல், லட்சக்கணக்கில் பாலா திரிபுரசுந்தரி, பஞ்சதசி, பிரத்யங்கரா வராஹி நாமங்கள் ஜபிக்க ஆசை. குருநாதர் நாமத்தை, மந்திரம் போல் திரும்பத் திரும்ப குறிப்பிட்ட வேளைகளில் தினமும் கூற ஆசை. உள்ளுக்குள் எண்ணங்கள் தோன்றும் மையத்தில் அமிழ்ந்து கிடக்க விருப்பம். இதற்கு வெறும் விருப்பம் போதாது; குருநாதர் அனுக்கிரகம் இருந்தால்தான் ஸித்திக்கும்!’’

சிலிர்க்க வைத்த ஆன்மிக அனுபவம்:

‘‘என் குருநாதர் மகான் யோகி ராம்சுரத்குமாரிடம் ‘உண்மையில் கடவுள் உண்டா? ஆம் எனில், அவரை உணர்வது எங்ஙனம்?’ என்று கேட்க, ‘இதோ பார்...’ என்று அவர் என் முதுகில் கை வைத்து அழுத்த, ‘உள்ளிருந்து பீரிட்டெழுந்து என் முன்னே நின்ற என் சக்தியே இறைவன்!’ என்று தெரிந்தது. கண்ணார, மனதார, உணர்வார அறிந்து கொண்டேன். எல்லோருக்குள்ளும் இருப்பது இறைச் சக்தியே. எல்லோரும் ஒன்றே. நான், நீ என்பது பேதமை. பல முறை பல இடங்களில், என் குருநாதர், என்னுள் என்னைப் பார்க்க வைத்தார். இது, பல நூறு வருடங்கள் தவம் செய்து கிடைக்க வேண்டிய விஷயம். குருநாதர் கருணையால் எளிதில் கிடைத்தது!’’

சின்ன வயதில் சென்று வந்த மறக்க முடியாத கோயில்:

‘‘காஞ்சி சங்கர மடம்... மகா பெரியவாள் தரிசனம்! என் அம்மாவால் அவர் மகிமைகள் அறிவுறுத்தப்பட்டன. எப்போதும் தொலைவில் நின்று பார்ப்பதே வழக்கம். அவர் நகர்வலம் போக... பின்தொடர்வது எனக்குப் பிடிக்கும். மிக மிக விளையாட்டுத்தனமாக இதை நான் செய்தாலும், பிற்பாடு வளர வளர... இது என்னுள் பெரும் மாற்றம் விளைவித்ததை அறிந்தேன். ஒரு முறை நகர்வலத்தின்போது மகா பெரியவாளையும், அவரின் பெரிய பக்தர் கூட்டத்தையும் பல முறை வலம் வந்து நமஸ்கரித்திருக்கிறேன். ‘இப்படி நூறாவது செய்யணும்’ என்று எண்ணம். ஆனால், எண்ணிக்கை நினைவில் இல்லை. அந்த நமஸ்காரம் கொடுத்த நிம்மதி இன்றும் உண்டு.’’

என் தெய்வம்!


திருமணம் ஆனதும் தம்பதியாகச் சென்ற முதல் கோயில்:

‘‘அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில்.’’

மறக்க முடியாத நிகழ்ச்சி:

‘‘அடிக்கடி என் குருநாதரின் அருகே ஒரே பாயில் அமர்ந்தது... பல முறை அவரது கொட்டாங்கச்சியில் நீர் அருந்தியது... அவரது இலையில் உண்டது... அவரது படுக்கையில் படுத்துக் கிடந்தது... அவர் அருகே, அவர் மீது கை போட்டபடி உறங்கியது... அவருடன் திருவண்ணாமலை சுற்றியது... அவர் என்னை, என்னுள் தள்ள, ஒரு பரவச நிலையில் அவரைப் பார்த்து வியந்தது... வேறு ஒரு கோணத்தில் உலக உயிர்களை அவரால் தரிசித்தது... அப்படியே திகைத்துக் கிடந்தது...’’

இத்தனை வருட கடவுள் வழிபாடு என்ன கொடுத்தது:

‘‘பொறாமை அறவே போயிற்று! எவரோடும் எது குறித்தும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. எனது வெற்றிகள், வித்தைகள் குறித்து நெல் முனையளவு கூட கர்வமில்லை. வாழ்வின் நிலையாமை தெளிவாகத் தெரிகிறது. எனவே, அதிசயம் என்று ஏதுமில்லை. எல்லா அதிகாரமும், செல்வமும், சீரும், புகழும், வலிவும் நிச்சயமாகக் காணாமல் போகும். எதுவும் நிரந்தரமில்லை. எனவே, இது வெறும் கூத்து. உரத்தும், மறுத்தும், சிரித்தும், கொஞ்சியும் பேசப் படுபவை மாயையே. எல்லா பொம்மைகளையும் போல நானும் ஒரு பொம்மை. பொம்மலாட்ட பொம்மை. இது புரிய... உள்ளே ஒரு பணிவான அமைதி இருக்கிறது. அது, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால், எனது செயல்கள் சீராக இருக்கின்றன.’’