Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
சித்தர், யோகி, சாது, மகான், ஞானி, முனிவர், ரிஷி என்ன வேறுபாடு?
கேள்வி - பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி - பதில்

சித்தர், யோகி, சாது, மகான், ஞானி, முனிவர், ரிஷி- இவர்கள் சாமியார்களா? அப்படியெனில் ஏன் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்?

- பி.கே. ரங்கநாதன், சென்னை-39

ஒரு விதை. அது முளைத்துச் செடியாகிறது. பூவாக, காயாக மாறுதலைச் சந்திக்கிறது. காலத்தின் தாக்கத்தால் வாட்டமுறுகிறது, மறைகிறது. மனித இனமும் இந்த ஆறு நிலைகளைச் சந்திக்கும் ( அஸ்தி. ஜாயதே. வர்த்ததே. விவரிணமாத. அபஷீயதே. நச்யதி. ) வளர்ச்சியின் மாறுதலுக்கு இணைந்த நடைமுறைகளை மனிதன் கடைப்பிடிக்கிறான். சிறு வயதில், வாங்கியதை மனதில் பதிய வைக்கும் திறன் அதிகம். எனவே, வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெற்று, மனதில் சேமிக்கிறான். அது பிரம்மச்சர்ய ஆச்ரமம்.

கேள்வி - பதில்

மனதில் எண்ணங்கள் மலர ஆரம்பிக்கும் பருவம் இளமை. இளமையில் இணையைப் பெற்று இன்பமுறுகிறான். அது குடும்ப வாழ்க்கை. கிரஹஸ்தாசிரமம்.

மனம் முதிர்ந்து நுகர்பொருளில் பிடிப்புத் தளரும் தறுவாயில் வீட்டை விட்டு மனைவியோடு காட்டை அடைகிறான். இயற்கையின் காய் - கனிகளை உண்டு, மனைவியோடு அறத்தை ஆற்றுகிறான். அமைதியான சூழலை, மன அமைதிக்காக பயன்படுத்துகிறான். தற்போது அவன் மனம், உலக விஷயங் களில் பற்றைத் துறக்கும். இது வானப்ரஸ்தாசிரமம்.

இது முதிர்ந்த நிலையில் துறவியாகி விடுவான். இது சன்யாஸாசிரமம். அதை நமது மொழியில் சாமியார் எனலாம். இயற்கையே இந்த நான்கு ஆசிரமங்களுக்குத் தூண்டுகோல். ‘தான் யார்’ என்று புரிந்து கொண்டவன் அவன்; மற்றவர்களுக்கும் புரிய வைப்பவன்; ஆன்மிகத்தின் ஆழத்தை உணர்த்துபவன்.

ஸித்தி பெற்றவர்கள்சித்தர்கள். மந்திரம், மருத்துவம், வருங்காலம் ஆகியவற்றில் ஸித்தி பெற்றவர்கள். செயற்கையாகத் தங்கம் உருவாக்கும் திறன் பெற்ற சித்தர்களும் உண்டு. மூலிகை, ரசாயனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிணி அகல, மருந்து களை உருவாக்கிய சித்தர்களும் உண்டு. தவத்தால் மற்றவர்களைத் தன் வசப்படுத்தும் சித்தர்களும் உண்டு. விரும்பியவற்றைக் கண்முன் காட்டும் திறமையும் அவர்களிடம் இருக்கும். தவப் பெருமையை உலக வாழ்க்கைக்கு பயன் படுத்தி தன்னை உயர்த்திக் கொள்ளும் சித் தர்களும் இருக்கிறார்கள். வாழ்வின் இலக்கு, அதன் இலக்கணம் ஆகியவற்றை அறிவுறுத்தி, பொதுச் சேவை புரிபவர்களும் உண்டு.

யோக சூத்திரம்’ நூலை இயற்றியவர்

பதஞ்சலி முனிவர். மூச்சுப் பயிற்சியால் புலன்களை அடக்கி மனதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இதில் விளக்குகிறார். மன அழுக்கை அறவே அகற்றி ஆன்ம லாபம் அடைவது ‘யோகம்’. இத்தகையவர்களே யோகிகள். ஹடயோகம் என்ற பிரிவில் தேர்ந்தவர் மூச்சுப் பயிற்சியால் உடலை லேசாக்கி, நீரில் நடப்பது, ஆகாயத்தில் உலவுவது போன்றவற்றை நிகழ்த்திக் காட்டுவர். யோக சமாதியில் ஆழ்ந்து சிரஞ்ஜீவியாகத் திகழ்பவர்களும் உண்டு. உலகவியலில் பற்றற்ற நிலை இவர்களில் தென்படும். தவ ஆற்றலை, அற்ப விஷயங்களில் திருப்பி விட்டு, தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்களும் உண்டு. யோகம், பிறவிப்பயனை அடையும் மாற்று வழி.

சாது, உயிரினங்களைத் துன்புறுத்த மாட்டார். நன்னடத்தை அவரது இலக்கணம். பிறரையும் நன்னடத்தையில் திருப்பி விடுவார். ஆலயம் சென்றால் ஆண்டவனை அடிபணிய வேண்டும். கங்கையை நெருங்கினால் நீராட வேண்டும். அப்போதுதான் நன்மை பயக்கும். ஆனால், சாதுக்களைப் பார்த்தாலே போதும். நன்மைகள் நம்மைத் தேடி வரும் ( தரிசனாதேவ ஸாதவ: ) அவர்களது எண்ணம், பேச்சு, செயல் ஆகியவை நன்மை பயப்பவை. உலக நண்பன், சாது.

கேள்வி - பதில்

உயர்ந்த செயலை உலகுக்கு அளிப்பவரை மகான், பெரியவர் எனலாம். காந்தி மகான், அஹிம்சை வழி நாட்டை மீட்டவர். பொதுச் சேவையில் இன்பம் கண்டவர். பீஷ்மர் மகான், வாக்குறுதியைக் காப்பாற்றியவர். ஹரிச்சந்திரன் மகான், இன்னல்களால் துவளாமல் வாய்மையில் நிலைத்து நின்றவர். பகீரதன் மகான், விண்ணக கங்கையை மண்ணுக்குக் கொண்டு வந்தவர்.

தன் முன்னோர்களை கரையேற்றியவர் ஆதி சங்கரர்- ஞானி. இயற்கையின் ரகசியத்தை உணர்ந்தவர்- உணர்த்தியவர். துயரிலிருந்து விடுபடும் வழி சொன்னவர். அறிவியல் தகவல் மையம், வேதம். அதன் மூலம் பரம்பொருளைச் சுட்டிக் காட்டியவர். கரை காணாத கடல். அதிலிருந்து அலைகள் எழும்பி அதிலேயே ஒடுங்குகிறது. பொருள்கள் அத்தனையும் பரமாத்மாவிடமிருந்து தோன்றி, பின்னர் அவரிடமே லயிக்கிறது. கடல் ஒன்று; பரம்பொருளும் ஒன்று என்ற தத்துவத்தை மெய்ப்பித்தவர்.

புத்தன், ஜைனன், சார்வாகனன், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர், நிம்பார்க்கன், கௌதமர், கணாதர், ஜைமினி, பாதராயணர், பதஞ்சலி, கபிலர் போன்றோர் ஞானிகள். தங்களது சிந்தனை வாயிலாக மற்றவர்களைச் சிந்திக்க வைத்து முன்னேற்றியவர்கள். தோன்றில் புகழுடன் தோன்றுக என்பது அவர்களது கொள்கை. இலக்கு ஒன்று. வழிகள் பல என்பதுதான் இவர்களது பாகுபாடு.

அகத்திய முனிவர், குடத்திலிருந்து தோன்றியவர். கடலைக் குடித்து சாகசம் செய்து, தென்னாட்டில் குடி புகுந்து விந்திய மலையை வளராமல் தடுத்தவர். அரசர்களுக்கு அஸ்திரங்களை அளித்து ஆதரித்தவர் விஸ்வாமித்திரர். மறையின் சாரத்தை- காயத்ரியை அறிமுகம் செய்தவர். ராம னுக்கு திருமணம் செய்வித்து மகிழ்ந்தவர்.

துர்வாச முனிவர், தவத்தால் ஆன்மபலத்தைப் பெருக்கிக் கொண்டவர். வியாசர், வேதத்தை வகுத்தவர். புராணங்களை அறிமுகம் செய்தவர். தத்துவ விளக்கம் அளித்தவர். சந்திர வம்சத்தைச் செழிக்க வைத்தவர். அத்தனை மதங்களுக்கும் ஆதாரமான நூலை இயற்றியவர்.

ரிஷிகள் மந்திரங்களை அறிந்து வெளியிடுபவர் கள். மௌத்கல்யர், மறைந்திருந்த மந்திரங்களை வெளிக் கொண்டு வந்தவர். எட்டாத ஒலிகளைப் பெற்று உலகுக்கு அளித்தவர் பரத்வாஜர். மூன்று ஆயுளை வேதம் கற்கப் பயன்படுத்தியவர். விண்ணில் இருக்கும் வேத ஒலிகளை வாங்கி, மக்களுக்கு வழங்கிய ரிஷிகளின் குழாம் ஒன்று வேதத்தில் உண்டு. தாங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் தூய வாழ்வு பெற்று பிறரையும் தூய்மைப்படுத்திய தனிப் பிறவிகள்.

அஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்குமா?

- கீதா முருகானந்தம், திருவைகாவூர்

கேள்வி - பதில்

பதினைந்து திதிகள், ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதமை, சஷ்டி, ஏகாதசி- நந்தா. துவிதியை, சப்தமி, துவாதசி- பத்ரா. திருதியை, அஷ்டமி, திரயோதசி - ஜயா. சதுர்த்தி, நவமி, சதுர்தசி- ரிக்தா. பஞ்சமி, தசமி, பூர்ணிமா - பூர்ணா. சில முகூர்த்தங்களுக்கு அஷ்டமியைச் சேர்ப்பதில்லை. ‘ஜயா பிரிவில் தென்படும் திருதியையும், திரயோதசியும் முகூர்த்தங்களில் இடம் பிடித்திருப்பதால், அஷ்டமியும் சேர்க்கப்படுவதில் தவறில்லை’ என்று முகூர்த்தப் பதவி நூல் விளக்குகிறது.

‘இஷ்டா கிருஷ்ணாஷ்ட மீன்ந்தோ’ என்று ஆரம்பிக்கும் செய்யுளின்படி, தேய்பிறை அஷ்டமி யில் திருமணம் செய்யலாம் என்கிறார்கள் கேரள தேசத்தவர்கள். அஷ்டமி, துவாதசி போன்றவை பேச்சுவார்த்தையில் வெற்றி பெறப் பயன்படுகின் றன. அவர்கள் வெற்றி பெறுவதால் அதை நிராகரிப்பதற்கில்லை. அம்பாள் பூஜைக்கு அஷ்டமி சிறப்பு என்பார்கள். (ச துர்தச்யாம் அஷ்டம்யாம் வா விசேஷத: ) கொல்கத்தா- காளி பூஜையில் அஷ்டமிக்கு சிறப்புண்டு. துர்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜையில் ( நவராத்திரியில் ) நடுநாயகமாக விளங்குவது அஷ்டமி. இங்கு வெற்றி தேடித் தருவதில் அஷ்டமிக்கு பங்கு இருக்கிறது. முகூர்த்தப் பொதுப் பட்டியலில் அஷ்டமி இடம் பெறாததால், அது விலக்கத் தக்கது என்ற தோற்றம் பரவி விட்டது. ஜன்மாஷ்டமி, அசோகாஷ்டமி போன்ற விரதங்கள் அஷ்டமிக்குப் பெருமை சேர்க்கின்றன. திதிகளுக்கு வெற்றி- தோல்வி என்ற பாகுபாடு இல்லை. பயணத்துக்கு திருதியை, சஷ்டி சுபம். சஷ்டி கலகத்தை உண்டு பண்ணும் (சஷ்ட்யாம் கலகபந்தனம்). எனினும், முகூர்த்தத்துக்கு சஷ்டி சுபம். ஆகையால் வெற்றியைத் தரும் என்று சொல்ல வேண்டும்.

நல்ல நாள்- கெட்ட நாள் என்று நிர்ணயிப்பது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தின் கூட்டணியே. திதி- செல்வச் செழிப்பை அளிக்கும். வாரம்- வாழ்க்கையின் நீட்டிப்பு. நட்சத்திரம்- தவறுகளை மன்னிக்கும். யோகம்- பிணியை அகற்றும். கரணம்- வெற்றி தரும் என்று பலன் சொல்வதுண்டு. ஐந்தில் ஒன்றை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. ‘அஷ்டமியில் தொடங்கும் காரியத்துக்கு வெற்றி கிடைக்காது!’ என்று அஷ்டமியின் பலனை மட்டுமே நடைமுறைப்படுத்துவது தவறு.

அமாவாசை அன்று போருக்கு நாள் குறித்துக் கொடுத்தான் சகாதேவன். கண்ண னின் சூதால், கௌரவர்களின் போர் பிர தமையில் நிகழ்ந்தது. பிரதமையில் பயணம் வெற்றியைத் தராது ( ப்ரதமாயாம் கமனம் நஷ்டம் ). ஆனால், தேய்பிறை பிரதமையில் திருமணம் செய்வதுண்டு. அங்கு அது வெற்றி தரும். சதுர்த்தி- ரிக்தை அதாவது குறை. அதில் முகூர்த்தம் வைப்பதில்லை. நவமி, சதுர்த்தசி- ரிக்தை. இவற்றிலும் முகூர்த்தம் இருக்காது. அது போல் பூசம் நட்சத்திரத்தில் திருமணம் இருக்காது; பும்ஸுவனம், சீமந்தம் இருக்கும். பொது அட்டவணையில் சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகள் மற்றும் பூசம் நட்சத்திரம் முகூர்த்தத்துக்கு உகந்தது அல்ல என்று சொல்லும். அதே பஞ்சாங்கத்தில், உதாரணமாக 18.6.2007-ல் சதுர்த்தி பூசம் இரண்டும் இருக்கும் வேளையில் திருமண முகூர்த்தத்தைக் காணலாம். அது போல் 6.5.2007-லும் சதுர்த்தியில் திருமண முகூர்த்தத்தைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். அட்டவணையை ஒட்டி முகூர்த்தம் இருக்க வேண்டும். அல்லது முகூர்த்தத்தை ஒட்டி அட்டவணையை மாற்ற வேண்டும். ஏன் இந்த தடுமாற்றம்? சாஸ்திரத்தில் ஒன்று; நடைமுறை வேறு என்று தென்படுகிறது. நடைமுறை அஷ்டமியை விலக்கியதால், தங்கள் மனதில் நெருடல் ஏற்படுகிறது.

பார்வதியை, ஹிமவான் மகள் என்கிறார்கள். மகா விஷ்ணுவை, பார்வதியின் சகோதரர் என்கிறார்கள். அப்படியானால், விஷ்ணுவின் தந்தை ஹிமவானா?

- லலிதா தியாகராஜன், நவிமும்பை

பிரம்மாவுக்கு பிதாமகன் என்று பெயர் உண்டு. பிதாமகன் என்றால், தமிழில் ‘தாத்தா’ என்று பொருள். அத்தனை பேருக்கும் அவர், எப்படி தாத்தா ஆவார்? ஆனால், அவர் எல்லா ஜீவராசிகளுக்கும் தாத்தாதான். முதல் மனிதனை அவர் படைத்தார். அதன் பிறகு அவர் மகன் அடுத்த படைப்பை ஏற்றுக் கொண்டார். ஆகையால் அவர் முதற் படைப்பாளி என்பதை ‘தாத்தா’ என்கிறார்கள்.

பார்வதி, தாட்சாயணியின் மறு தோற்றம். அவள் பிறப்புக்கு பர்வதராஜனை தகப்பனாக ஏற்றுக் கொண்டாள். அதனால் தனது பெயரை பார்வதியாக மாற்றிக் கொண்டாள். உலகத் தாய்- தந்தையர் பார்வதி- பரமேச்வரன். அவர்களுக்கு தாய்- தந்தை கிடையாது. கந்தனை உலகுக்கு அளிக்க, திரும்பவும் ஈசனை அடைய ஹிமவானுக்கு மகளாகத் தோன்றினாள். ஆகையால், அவளுடைய தோற்றத்தை வைத்து ஹிமவானுக்கு தகப்பன் ஸ்தானம் கிடைத்தது.

கேள்வி - பதில்

கிருஷ்ணனுக்கு வாசுதேவன் என்று பெயருண்டு. கம்சனை அழிக்க அவன் தோன்ற வேண்டும். அதற்கு வசுதேவனைத் தேர்ந்தெடுத்தார் (அதாவது வாசுதேவனின் தந்தை). வசுதேவனுக்கு தகப்பன் ஸ்தானத்தை அளித்தார். தகப்பனைப் பெருமைப்படுத்த கிருஷ்ணனை ‘வாசு தேவா’ என்று அழைத்தால் மிகவும் மகிழ்வார். வாசுதேவன் என்ற பெயர் தகப்பனாரை (வசுதேவன்) ஞாபகப்படுத்துகிறது. அது அவருக்குப் பெருமை.

கிருஷ்ணனாகத் தோன்றுவதற்கு முன்பு அம்பிகை தோன்றிவிட்டாள். அம்பிகை, கிருஷ்ணனை யசோதை யிடம் அனுப்பிவிட்டு, கண்ணனின் ஸ்தானத்தில் அமர்ந்து கம்சனிடம் அகப்பட்டுக் கொண்டாள். அவளைத் துன்புறுத்தும் வேளையில், கம்சனின் கையில் இருந்து நழுவி விண்வெளியில் தோன்றி, ‘உன் எதிரி கோகுலத்தில் வளர்கிறான்!’ என்ற முதல் தகவலை கம்சனுக்குச் சொன்னவள். இப்போது கண்ணன், பார்வதிக்கு சகோதரன். கண்ணன் விஷ்ணுவின் அவதாரம். பாமர ஜனங்களுக்கு அவர்கள் உறவைச் சுட்டிக்காட்ட சகோதரியாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. தந்தை, தாய், சேய் போன்ற உறவுகள் நாம் புரிந்து கொள்ளப் பயன்படும் என்பதால் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வோர் அவதாரத்திலும் ஒரு தகப்பன் இருப்பான். ராமாவதாரத்தில் தசரதன். பரசுராமாவதாரத்தில் ஜமதக்னி. கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவன். ஆகையால், கதையை கதையாகப் பார்க்காமல், அதன் கருத்துக்கு முதலிடம் அளித்தால் ஹிமவான், விஷ்ணுவின் தகப்பன் என்று தாங்கள் சொல்ல மாட்டீர்கள்.

வீட்டில் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய ஏதாவது முறைகள் உண்டா?

- டி. பாலமுருகன்

கேள்வி - பதில்

வாழ்நாள் முழுவதும் நித்ய பாராயணமாக சுந்தர காண்டத்தைப் பயன்படுத்தலாம். ராமாயணத்தின் சிறப்பு திருப்புமுனையை அறிமுகம் செய்தவர் ஆஞ்சனேயர். ராமனின் நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் இருப்பார். ராமாயணச் சொற்பொழிவில் அவருக்காக ஓர் இருக்கையை ஏற்படுத்தி இருப்பார்கள் (யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ரதத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம். பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நம த ராஷஸாந்தகம்)

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் தவிக்கும் மனித இனத்துக்கு, சுந்தர காண்டப் பாராயணம் வழி காட்டும். ஒரு தடயமும் இல்லாமல் தனது புத்திசாலித்தனத்தால் அன்னை சீதையை அடையாளம் கண்டு ராமரைத் தேற்றினார். திக்குத் தெரியாமல் தவிக்கும் பக்தனை சரியான திசையில் செல்வதற்கு சுந்தர காண்டப் பாராயணம் உதவும். தற்காலச் சூழலுக்கு உகந்த பாராயணம். நாள் ஒன்றுக்கு ஏழு சர்க்கங்களாக பாகுபடுத்திப் பாராயணம் செய்யலாம் ‘ஸப்தஸர்க்க பாராயணம்’ என்று சிறப்பாகக் கூறுவார்கள். பல அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் இன்றைய தலைமுறையினருக்குக் கால அவகாசம் கிடைப்பது அரிது. ஆகையால் விருப்பப்படி கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு சிறிய சிறிய பகுதியாகவும் பாராயணம் செய்யலாம்.

கேள்வி - பதில்