Published:Updated:

சுக்கிரன், குரு, சனி, ராகு... கிரகங்கள் சர்க்கரைநோய்க்கு காரணமா? #Astrology

சுக்கிரன், குரு, சனி, ராகு... கிரகங்கள் சர்க்கரைநோய்க்கு காரணமா? #Astrology
சுக்கிரன், குரு, சனி, ராகு... கிரகங்கள் சர்க்கரைநோய்க்கு காரணமா? #Astrology

ருவருக்கு உடலில் சர்க்கரை அதிகமானால் வரும் நோய் சர்க்கரை நோய். இன்சுலின் குறைபாட்டால் வரக்கூடியது. சர்க்கரையால் மட்டுமே வரக்கூடிய நோயா இது?

சர்க்கரை நோய் என்பது பரம்பரையாக வருவதா அல்லது உணவு சார்ந்த விஷயங்களால் வருவதா? 

உடலில் சர்க்கரை கூடியிருப்பதைக் கண்டறியும் டாக்டர், ''உங்கள் குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா யாருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறதா?'' என்றுதான் கேட்கிறார்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடியுமா என்று  ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

''இனிப்பு, இந்த வார்த்தையே வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் நாக்கில் நீர் வரவழைக்கும். விளம்பரங்கள் கூட, 'ஸ்வீட்

 எடு... கொண்டாடு' என்பதாகத்தான் இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு சாக்லெட்ஸ் கொடுக்கும்போது தனக்கும் ஒன்று எடுத்துக்கொள்ளும் சுபாவம் வயதான பிறகும் தொடர்கின்றது. 

வெறும் சர்க்கரை மட்டுமே அல்லாமல், நேரம் தவறி உணவருந்துதல், அதாவது சாப்பிடும் வேளைக்கு இருக்கவேண்டிய இடைவெளி அதிகமாக இருப்பது,  பாலீஷ் செய்யப்பட்ட பச்சரிசி அதிகமாக உண்பது,  ஸ்வீட் பொட்டெடோ எனப்படும் அதிக வெள்ளை உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வது,  அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்த இனிப்புகள் சாப்பிடுவது. இவையெல்லாம் உடலில் இன்சுலின் சுரப்பியை பாதித்து அதில் குறைபாட்டை ஏற்படுத்தி சர்க்கரை நோயைக் கொடுக்கும்.

இதில் அதிக இடைவெளி கொடுத்து உண்பது அதாவது நேரம் தவறி உண்பது உடலில் வாயுவை ஏற்படுத்தும். வாயுக் கோளாறுகளுக்கு ஜாதகத்தில் குருவே காரகத்துவம்  பெறுகின்றார்.  

சாதாரண வெல்லம், நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு ஆகியவைக்கு குரு காரகத்துவம் பெறுகின்றார். ஆனால், அதே வேளையில், இதை அஸ்கா என்னும் வெள்ளைச் சர்க்கரையாக மாற்றும்போது  சுக்கிரனின் காரகத்துவம் பெறுகின்றது.

சர்க்கரை நோயை நீடிக்கச் செய்து பரம்பரை வழியாகக் கடத்தும்போது சனியின் காரகத்துவம் பெறுகிறது. இந்த நோயை அதிகப்படுத்துவது ராகுவின் வேலையாகும்.  

இந்த நோயைக் கடுமையாக்கி, ஒரே இடத்தில் இருக்கவைத்து, சுரப்பிகளின் செயல்பாட்டைக் குறைத்து, சிறுநீரகத்தின் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்வது கேதுவின் வேலையாகும்.  

நமது உடலில், 'ஜெனடிக் கோட்' எனப்படும் பரம்பரை விகிதாசாரம் ஒரு ஜாதகனின் தந்தையின் அளவு 24%,  தாத்தாவினுடையது 32%,

 அவருடைய தந்தையான முப்பாட்டனுடையது 16%  அதற்கு முன் 8%,6%,4%,2% ஆக மொத்தம் ஏழு தலைமுறை ஜெனடிக் சார்ந்த அணுக்கள் சார்ந்த விஷயங்களும் இருக்க, ஜாதகனுடையது வெறும் 8% ஆக மொத்தம் 100 சதவிகிகமாக இருக்கும்.

இதில் எந்தத் தலைமுறையில் என்ன என்ன வியாதிகள் இருந்தனவோ, அது அந்த விகிதாசாரத்தில் ஜாதகனின் உடலில் இருக்கும். அதை அதிகப்படுத்திக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதுதான் ஜாதகனின் கடமையாகும்.

ஜாதகத்தில் நோயைக் குறிக்கும் பாவம் ஆறாம் பாவம், அதைத் தீவிரப்படுத்தித் தீர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துவது எட்டாம் பாவமாகும். அதற்குத் தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்வதையும் அல்லது மருத்துவமனையில் தங்கி டயாலிசிஸ் செய்துகொள்வதையும், அந்த நோயால் கண்கள் பாதிக்கப்படுவதையும் பன்னிரண்டாம் பாவத்தைப் பார்த்து சொல்லிவிடலாம். 

இதில் ஆறாம் பாவமும்  பன்னிரண்டாம் பாவமும் மிக முக்கியமாக ஒருவரின் நோயின் தன்மையைத் துல்லியமாகச் சொல்லிவிடும். ஒருவரது ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவம் ஒருவரின் தூக்கத்தைச் சொல்லும். ஒருவருக்கு இந்த பாவம் கெட்டு தூக்கம் சரிவர இல்லையென்றால், உடலில் முதலில் பாதிப்பது கல்லீரல் ஆகும். அதன்பிறகு கணையமும் பாதிக்கும். இவை கண்களைச் சோர்வாக்கி, பார்வையில் குறைபாட்டை ஏற்படுத்தி விடும்.  

சுக்கிரன் சர்க்கரை நோயை முதலில் உடலில் ஆரம்பித்து வைக்கும். குரு அதைத் தீவிரப்படுத்தும். பிறகு அதை நிரந்தரமாக்கி விடுவது சனியின் வேலையாகும்.

ஆகவே இந்த கிரகங்கள் ஜாதகத்தில் 6,8,12-ம் பாவங்களோடு தொடர்பு கொண்டாலோ, இந்த பாவங்களில் சேர்க்கை பெற்றாலோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி கண்டிப்பாக வரும்.  மேலும்  இந்த பாவங்கள் நீர் ராசியாக (ஜல ராசியாக) வந்தால் அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆக வந்து குரு, சுக்கிரன், சனி தொடர்பு கொண்டால் நோயின் தாக்கம் அதிகமாகி, அவர்கள் சிறுநீரை கட்டுப்படுத்தமுடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.  

இதில் ராகு தொடர்பு கொண்டால் அதுவும் பன்னிரண்டாம் பாவத்தோடு சேர்ந்தால், உடலில் ஓர் உறுப்பை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் கேது தொடர்பு கொண்டால், அதுவும் 8-ம் பாவத்த்தில் சேர்க்கை பெற்றால்,  சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு  செயல் இழந்து அதை மாற்றக்கூடிய நிலைக்குக் கூட செல்ல நேரிடும். ஆகவே, ஒருவரது ஜாதகத்தில் சர்க்கரை நோயைக் கொடுக்கக் கூடிய கிரகங்கள் குரு, சுக்கிரன். இதை பரம்பரையுடன்  சம்பந்தப்படுதுவது சனி ஆகும். அதை தீவிரமாக மாற்றி அவயத்தை வெட்டுவது  ராகுவும் , உறுப்புகளை செயலிழக்கச் செய்வது கேதுவும் ஆகும்

இதை சமீபத்தில் மறைந்த நமது முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவர் ஜாதகத்தில், நீர் ராசியான குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் நின்று, கடகத்தில் சனி நின்று ராகு மேஷத்தில் சுக்கிரன் பரணி நட்சத்திர சாரத்தில் நின்று சர்க்கரை நோயை அதிகப்படுத்தியது. இதுவே அவரை பெரிதும் பாதித்தது.

சர்க்கரை நோய்க்குப் பரிகாரமாக, முதலில் நல்ல தூக்கம் வேண்டும். நேரம் தவறாமல் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள்  பச்சரிசி உணவை விட புழுங்கல் அரிசி உணவை எடுத்துக்கொள்வது நல்லது. அதிக நெய் சேர்த்த இனிப்புகள் சாப்பிடக் கூடாது.  சிறிய பாகற்காய் சூப் வைத்து குடித்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

சர்க்கரைக் கொல்லி என்ற  பொடி ஆயுர்வேதத்தில் உள்ளது அதை வாங்கி மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.  முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் குரு ஓரையில் எடுத்துக் கொண்டால், நோய் சீக்கிரம் குணமாகும். சித்த மருத்துவம் நன்கு பயனளிக்கக் கூடியது. 

ஆயுர்வேத சிகிச்சையென்றால், பஞ்ச கர்ம முறையில் மருத்துவச் சிகிச்சை எடுத்து கொண்டால், சந்ததிகளுக்கு இதன் தாக்கம் இருக்காது.  மேலும் தகுந்த மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம். வாழ்க வளமுடன்!


- எஸ்.கதிரேசன்