Published:Updated:

சந்தோஷம் தரும் சப்த விடங்கத் தலங்கள் தரிசனம்!...

கண்ணன் கோபாலன்
சந்தோஷம் தரும் சப்த விடங்கத் தலங்கள் தரிசனம்!...
சந்தோஷம் தரும் சப்த விடங்கத் தலங்கள் தரிசனம்!...

ந்திரனுக்கு உதவுவதற்காகச் சென்றார் முசுகுந்த சக்கரவர்த்தி. தனக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு பிரதி உபகாரம் செய்ய நினைத்த இந்திரன், முசுகுந்தனிடம் தான் செய்யக்கூடிய பிரதி உபகாரம் இருந்தால் சொல்லும்படி கேட்கிறான்.

முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் தினமும் பூஜை செய்யும் விடங்க மூர்த்தியின் திருவுருவத்தைக் கேட்கிறார். தான் வழிபடும் மூர்த்தியை எப்படி தருவது என்று நினைத்த இந்திரன், தான் பூஜித்த மூர்த்தியைப் போலவே இன்னும் 6 மூர்த்திகளையும்  தோற்றுவித்து, ஏழு மூர்த்திகளையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் காட்ட, முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் பூஜித்த விடங்கமூர்த்தியை சரியாகக் கண்டுபிடித்து எடுக்கிறார். எனவே, இந்திரம் மனம் மாறி தான் பூஜித்த விடங்க மூர்த்தியுடன் மற்ற ஆறு மூர்த்தங்களையும் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுக்கிறார். முசுகுந்த சக்கரவர்த்தி அந்த மூர்த்தங்களை திருவாரூர் உள்ளிட்ட ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்கிறார். அந்தத் தலங்களே சப்த விடங்க தலங்கள்.

திருவாரூர்:

திருவாரூரில் உள்ளது ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகமலாம்பிகை. இந்தத் தலத்தில், அஜபா நடனம் கொண்டு, வீதி விடங்கராகக் காட்சி தருகிறார் 

ஆதி விடங்கர்

திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்காறாயில் எனப்படும் திருக்கார வாசல். சுவாமி ஸ்ரீகண்ணாயிர நாதர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகயிலாசநாயகி. இங்கே... ஆதிவிடங்கராக, குக்குட நடன நாயகனாக காட்சி தருகிறார் தியாகேசர் (குக்குடம் என்றால் சேவலின் நடையைப் போன்ற நடனம் என்று பொருள்).

அவனி விடங்கர்

திருக்காரவாசலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோளிலி எனப்படும் திருக்குவளை திருத்தலம். பிரம்மன் வழிபட்டு அருள்பெற்ற அருமையான தலம்; ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.  அம்பாளின் திருநாமம் ஸ்ரீவண்டார் பூங்குழலி.
இங்குதான், அவனி விடங்கராகக் காட்சி தந்து, உலக மக்களுக்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஈசன். இங்கேயுள்ள திருநடனம் - பிரமர நடனம் என்பர். பிரமரம் என்றால் வண்டு; அதாவது வண்டு பறப்பது போலான நடனம். 

நீல விடங்கர்

திருக்குவளையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருவாய்மூர். இங்கே... ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவாய்மூர்நாதர்; ஸ்ரீவேதாரண் யேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபாலினும் நன்மொழியாள். கோயிலுக்கு எதிரேயுள்ளது பாபமேக பிரசண்ட தீர்த்தம். பிரம்மன், தேவர்கள் முதலானோர் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை தரிசித்து பாவங்கள் நீங்கப்பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

இன்னொரு விசேஷம்... இந்தத் தலத்தில் சூரிய பகவான் பெயரால் சூரிய தீர்த்தமும், இந்திரன் நீராடி வழிபட்டதால் இந்திர தீர்த்தமும் உண்டு. இங்கே... நீல விடங்கராக தியாகேசர் பெருமான் எழுந்தருளியுள்ளார். தண்ணீரில் மிதக்கும் தாமரை மலர் போல், மெள்ள ஆடுகின்ற நடனம்கொண்டு திகழும் தலம் என்பதால், கமல நடன ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.

புவனி விடங்கர்

திருவாய்மூரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேதாரண்யம். அருமையான, புராண - வரலாற்றுச் சிறப்புமிக்க அழகு ததும்பும் ஆலயம். வேதங்கள் சிவ பூஜை செய்த தலம்; ஈசனின் பேரரு ளால் அவை இங்கே செடி-கொடி களாக உறைந்திருப்பதால், வேதா ரண்யம் என்றானதாம்! இறைவனின் திருநாமம் - ஸ்ரீவேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை.

இங்கே... புவனி விடங்கராக, ஹம்ச பாத நடனத்தில் அதாவது அன்னப் பறவையின் நடையையத்தபடி காட்சி தருகிறார் தியாகேசர். மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே இவருக்கும் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து வேதாரண்யத்துக்கு நேரடி பஸ் வசதி உண்டு.

சுந்தர விடங்கர்

திருவாரூரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நாகப்பட்டினம். திருநாகைக்காரோணம் எனப் புராணங்களால் புகழப்படும் இந்தத் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாயாரோகணர் திருக்கோயில். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீநீலாயதாட்சி.

இந்த ஆலயத்தில், சுந்தர விடங்கராக, (வீசி நடனத்தில்) அருள்பாலிக்கிறார் ஸ்ரீதியாகேசபெருமான். அற்புதமான இந்த ஆலயம் ஊருக்கு நடுவிலேயே அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் நாகப்பட்டினத்துக்கு நேரடி பஸ் வசதி உண்டு; நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு.

நக விடங்கர்

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோயில். சனி தோஷங்கள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்யும் ஒப்பற்ற அதே திருத்தலம்தான்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபோகமார்த்த பூமுலையாள். இந்தத் தலத்தில் நக விடங்கராக, உன்மத்த நடனத்தில் காட்சி தருகிறார் தியாகேசர். அருமையான தலம்; பாவங்களையெல்லாம் போக்கும் கோயில். நள தீர்த்தத்தில் நீராடி, இறைவனைத் தரிசித்து, நம் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்; சனி தோஷங்களில் இருந்து விலகி, சந்தோஷமாக வாழ்வோம்!

இரண்டு நாள் ஒதுக்கி, திருவாரூரில் இருந்து ஆற அமர அப்படியே வந்தால், சப்த விடங்கர் தலங்களை கண்ணார தரிசிக்கலாம்; மனதார மகிழலாம்.

எஸ்.கண்ணன் கோபால்
படங்கள்: மு.நியாஸ் அகமது