Published:Updated:

சகல வளங்களையும் அருளும் சக்தி பீடங்கள் #PhotoStory

சகல வளங்களையும் அருளும் சக்தி பீடங்கள் #PhotoStory
சகல வளங்களையும் அருளும் சக்தி பீடங்கள் #PhotoStory

அனைத்துக்கும் ஆதி ரூபமாக  விளங்குபவள் ஆதிபராசக்தி. எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவளும் அவளே. பக்தர்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்களும் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார்.  ஆதிசக்தியின் அம்சமாக விளங்கும் இத்தகைய அம்பிகைகளை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சகல வளங்களையும் அருளும் சக்தி பீடங்களாக விளங்கும் சில அம்பிகைகளின் திருவடிவங்களை தரிசிப்போமா?


மூகாம்பிகை  

கர்நாடக மாநிலத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கே மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது; அலங்காரம், புஷ்பாஞ்சலி உண்டு. லிங்கத் திருமேனியாகத் திகழும் சிவனாருக்கு அபிஷேகம் நடைபெறும்போது லிங்கத்தின் நடுவில் தங்கக் கோடு ஒன்றைக் காணலாம்! இதில் இடது புறம் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவபெருமான்; வலது புறம் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபார்வதி ஆகியோர் அருள்பாலிப்பதாக ஐதீகம்! 


கன்னிகாபரமேஸ்வரி 

ஆரிய வைசியர்களின் குலதெய்வம் கன்னிகா பரமேஸ்வரி. ஆரிய வைசியர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தங்கள் குலதெய்வமான கன்னிகா பரமேஸ்வரிக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். பெண்களின் உரிமையை நிலைநாட்டிய கன்னித் தெய்வம் என்றும், கேட்டவர்களுக்கு கேட்ட வரத்தை கேட்டபடி அருளும் தெய்வம் என்றும் வாசவி என்னும் கன்னிகாபரமேஸ்வரி போற்றப்படுகிறாள்.

அபிராமி

மகாவிஷ்ணுவின் ஆபரணங்களில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவள் அன்னை அபிராமி. திருக்கடவூரில் அருளாட்சி புரியும் அபிராமி அம்பிகை, எப்போதும் தன்னையே தியானித்துக்கொண்டு இருந்த சுப்ரமணிய பட்டருக்காக, அமாவாசை திதியை பௌர்ணமியாக மாற்றி அருள் புரிந்தாள். அன்றுமுதல் சுப்ரமணிய பட்டர் அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்டார். இவர் பாடிய அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.

மதுரை மீனாட்சி

மலயத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் யாக குண்டத்தில்  பார்வதியின் அம்சமாக அவதரித்தவள் அன்னை மீனாட்சி. குமரகுருபரரின் பிள்ளைத் தமிழ் கேட்டு மகிழ்ந்தவள். வீட்டை நிர்வகிப்பவர் குடும்பத் தலைவியாக இருந்தால், அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறது என்று பொருள். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாதம்தோறும் திருவிழா நடந்தபடி இருக்கும். மீன்கள் தன் பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுபோல், அன்னை மீனாட்சியும் தன் கனிவுப் பார்வையினால் உலக ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கிறாள்.


பாலா திரிபுரசுந்தரி

அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள்.

புவனேஸ்வரி

ஒவ்வொரு குறிப்பிட்ட பயனுக்கும் ஒரு தெய்வத்தை வணங்குவோம் ஆனால்,  புவனேஸ்வரியை வழிபட கல்வி, செல்வம், வீரம்,என யாவும் கிட்டும். புவனேஸ்வரியை வழிபட்டால், இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது.பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும். நமது பூமியைப்போல் எண்ணற்ற உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி.புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

-தொகுப்பு: ஜி.லட்சுமணன்