Published:Updated:

திடீர் முதல்வராகும் யோகம் எப்படிப்பட்ட ஜாதகருக்கு அமையும்? #Astrology

திடீர் முதல்வராகும் யோகம் எப்படிப்பட்ட ஜாதகருக்கு அமையும்? #Astrology
திடீர் முதல்வராகும் யோகம் எப்படிப்பட்ட ஜாதகருக்கு அமையும்? #Astrology

இந்தியாவில் 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. இதில் சிலருக்கு  திடீரென்று முதல்வர் ஆகும் யோகம் கிடைத்திருக்கின்றது. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போயிருக்கின்றது. தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  திடீர் திடீரென்று மூன்று முறை முதலமைச்சரானார். சசிகலா முதல்வராவர் என்று எதிர்பார்த்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது முதல்வராகி இருக்கின்றார். இப்படி திடீரென்று முதலமைச்சராகும் வாய்ப்பு எந்த வகையான ஜாதக அமைப்புள்ளவர்களுக்குக் கிடைக்கும் என ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியைக்கேட்டோம். 

''தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால், கொடி பிடித்து கூட்டம் சேர்த்தவன் எல்லாம் தலைவன் ஆக முடியுமா?' என்னும் கேள்விக்குப் பதிலாக தமிழக அரசியலில் பல நிகழ்வுகளும் படிப்பினைகளும் நீண்ட காலமாகவே நடந்து கொண்டுதானிருக்கின்றன. 
எதிர்பாராதபடி ஒருவர் ஒரே நாளில் தலைவனாக முடியுமா? அப்படி ஆக வேண்டுமென்றால், அவருக்கு மிகப்பெரிய மக்கள்செல்வாக்கு, அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலமும், இருக்கவேண்டும். இவையெல்லாம் இருந்தும் பல தலைவர்கள் தமிழகத்தில் தலைவனாக முடியாமல், தொடர்ந்து கட்சியை சரியான பாதையில் நடத்த முடியாமல், பேருக்கு ஒரு கட்சி ஊருக்கு நாலு பேர் என இருக்கும் தலைவர்களையும் நாம் பார்க்கின்றோம்.

தலைவனான எல்லோராலும், ஏன் முதல்வராக ஆக முடியவில்லை? மேலும் மக்கள் செல்வாக்கும் இல்லாமல் எந்தவித பின்புலமும் பெரிதாக இல்லாமல் திடீரென்று சிலர் முதலமைச்சராவதுதான் எப்படி? முன்னாள் முதல்வர்களான ஜானகி எம்ஜிஆர், ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திடீரென முதல்வர் ஆனவர்கள்.  இதுபோன்ற உதாரணங்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல, வெளி மாநிலங்களிலும் நிறைய உண்டு. கர்நாடகாவின் முன்னாள்  முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு போன்ற முன் மாதிரிகளைச் சொல்லலாம். 

ஏன்? பாரதப் பிரதமர் பதவிக்கு உரியவர் என்று பலமுறை பேசப்பட்டும், ஆசைப்பட்டும் இருந்த அத்வானியால் பிரதமராக ஆக முடியவில்லை. ஆனால், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள்  திடீரென பிரதமர்களாக பதவி வகித்தனர். இத்தனைக்கும் இவர்கள், இந்தியாவில் உள்ள பெருவாரியான மாநிலங்களில் செல்வாக்கு இல்லாதவர்கள்தான். ஆனாலும், பிரதமராக ஆன பழைய வரலாறு உண்டு.

ஒரு மனிதன் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியும் என்பதையும் முடியாது என்பதையும் அவரவரது சொந்த ஜாதகம்தான் முடிவு செய்யும். மாநிலத்தின் முதல்வர் என்பது கிட்டத்தட்ட அந்தக்கால அரசப் பதவிக்கு நிகரானது. பல கோடி மக்களுக்கு தலைவனாக வேண்டும் என்று விதி இருந்தால்தான் ஒருவரால் முதல்வராக ஆகமுடியும். அந்த விதி இல்லையென்றால், என்னதான் தலைகீழாக நின்றாலும் ஆகமுடியாது.

விதியை மதி கொண்டு வெல்ல முடியும் என்று மதியைப் பயன்படுத்தினாலும், இறுதியில் விதிதான் வென்று நிற்கும். அந்த விதியைப் பற்றிக் குறிப்பிடுவதுதான் ஜாதகம் என்னும் ஜோதிட சூத்திரங்கள்.

முதலில் ஜோதிட ரீதியாக, அரசியல் தலைவனாக  ஆகும் தகுதி யாருக்கு அமையும்? அப்படித் தலைவன் ஆனவர்களின் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்ப்போம். பொதுவாக, அரசியல் பற்றி பார்க்கும்போது, மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம்  சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். 

1. மனிதநேயம்  - செவ்வாய்
2. ஆளுமைத் திறமை - சூரியன்
3. மக்கள்செல்வாக்கு - குரு, சந்திரன்
4. ராஜதந்திரம் - புதன்
5. முற்போக்குச் சிந்தனை - சூரியன், புதன்
6. தொண்டர்கள் - சனி

இந்த கிரகங்களை 'ராஜாங்க கிரகங்கள்' என்பார்கள். இந்த ராஜாங்க கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.

திரிகோண ஸ்தானத்தின் பலம்:
இந்த ராஜாங்க கிரகங்கள், திரிகோண ஸ்தானம் எனப்படும் லக்னத்திலிருந்து 1, 5, 9 -ம் இடத்தில் நின்று இருந்தாலோ பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலோ மிகப் பெரிய செல்வாக்குமிக்க பதவியை வகிக்கும் யோகம் கிடைக்கும். 

விபரீத ராஜயோகம்:
இந்த ராஜாங்க கிரகங்களில்  மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அவர்களுக்கு திடீர்  பதவியோகத்தைத் தரும். ஆனால், மீதமுள்ள மூன்று கிரகங்கள் கெட்டுப்போயிருந்தால், அவர்கள் பதவியில் நீடித்து நிலைக்க முடியாத அமைப்பையும் தரும்.

திடீர் யோகம்:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3, 6, 8 - ம் இடத்துக்கு உரியவர்கள்  அந்தந்த இடத்திலேயே ஆட்சி பெற்று இருந்தாலும், அவர்களுக்கு திடீர் அரசியல் பிரவேசமும் மக்களை ஆட்சி செய்யும் பதவியோகமும் கிடைக்கும். 

- எஸ்.கதிரேசன்