அம்பாஜியில் அருள் தரும் அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்! - 54

ச  ம்ஸ்கிருதத்தில் க்ஷ- முப்பத்தைந்தாவது மெய்யெழுத்து. இதன் நாயகி க்ஷமாவதிதேவி அல்லது மாயாமாலினிதேவி என்று அழைக் கப்படுகிறாள். இவளின் ரூபலாவண்யத்தை சித்தசாபர தந்திரம் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது.

க்ஷம் மாயா மாலினிதேவி பஞ்சாநந வரஸ்திதா
பஞ்சாஸ்யா பாடலா தத்தே கட்க சூல வராபயாந்

மாயாமாலினி எனப்படும் க்ஷ-கார மாத்ருகா தேவி, ஐந்து முகங்களுடன், சிவந்த நிறமுள்ளவளாக, வலப் புற- இடப் புற மேல்கரங்களில் முறையே சூலமும் கட்கமும் கொண்டு, வலப்புற- இடப் புறக் கீழ்க் கரங் களில் முறையே அபய-வர முத்திரைகள் விளங்கும் சதுர்புஜங்களோடு கம்பீரமான சிம்ம வாகனத்தில் ஆரோகணித்து அபூர்வக் காட்யளிக்கிறாள் என்பது இதன் பொருள்.

க்ஷ-காரோ நரஸிம்ஹச்ய மேரு: ஸம்பர்த்த கோபிச என்று இவளை மந்திராபிதானம் தெரி விக்கிறது. அதாவது க்ஷ-காரதேவி வைணவத்தில் நரசிம்மனாக, மேருவாக, சைவத்தில் சம்பர்த்தனாக இருக்கிறாள் என்பது அந்த ஸ்லோகத்தின் கருத்து.

இந்த க்ஷ-காரம் பிறந்த இடத்தில்தான் தாட்சாயிணி யின் கேசம் விழுந்தது என்றும், ஸித்தி அளிக்கும் இந்த மகா சக்தி பீடத்தை சத்ரபுரம் என்றும் மேருதந்திர நூல் தெரிவிக்கிறது. சத்ரபுரம் எனும் இந்த அரிய சக்தி பீட தலத்தை பல மாநிலங்களில் மிக நுணுக்கமாகத் தேடியும் நமக்குப் புலப்படவில்லை. ஒரு வேளை கால ஓட்டத்தினாலோ, அந்நியர் படையெடுப்புகளாலோ தலம் முற்றிலும் அழிந்து போயிருக்கக் கூடும். இருந் தும், அன்னையின் கேசம் விழுந்த தலம் பிருந்தாவனம் என்று தந்திர சூடாமணி நூலிலிருந்து அறியும் நம் மனம், சற்றுச் சமாதானமடைகிறது. எனவே, கடைசி மகாசக்தி பீடமாக அமையும் இந்தப் புனித பிருந்தாவனத்தில் பல லீலைகள் புரிந்த நீலமேக சியாமளனின் திருவிளையாடல்களை மனதில் இருத்தி, பீடேஸ்வரியின் தரிசனம் பெறுவோம்!

விருந்தாபன், பிருந்தாபன், பிருந்தாவனா என்ற சில பெயர்களைக் கொண்ட இன்றைய பிருந்தாவனமும் ஒரு மகாசக்தி பீடமா என்ற சந்தேகம் தோன்றுகிறதல் லவா? அந்தச் சந்தேகம் தோன்றுவது நியாயமே! ஏனெனில், பாலகிருஷ்ணனின் கட்டுமீறிய பால்ய லீலா விநோதங்களே மூலைக்கு மூலை இன்றும் சுடர்விட்டு விளங்குவதாலும், ராதையின் புனித நாமம் பரவி இருப்பதாலும் இந்தத் தலத்தில் மகாசக்தி யின் அருமை பெருமைகள் காலப் போக்கில் மெதுவாக மங்கி விட்டன. மற்ற மகா சக்தி பீடங்களில் பரவலா கக் கேட்கப்படும் ‘ஜே! மாதாதி!’ எனும் புனித கோஷம் இந்தத் தலத்தில் கேட்பது மிக அரிது. அதற்கு பதிலாக நகர் முழுவதும் எழும் இனிய நாதம் என்ன தெரியுமா? ‘ராதேஷ்யாம்!’. ஆனால், இங்கு வேத காலத்திலேயே ஆதிபராசக்தி குடிகொண்டு விட்ட தாலோ என்னவோ... துவாபர யுகத்திலிருந்தே இந்தத் தலத்தில் சக்திக்கே முதலிடம். ஆம், பிருந்தாவனத்தில் திரும்பும் இடங்களிலெல்லாம் ராதையும் கோபியருமே நம் மனக் கண்ணில் தென்படுகின்றனர். எனவே, இந்தப் பெண்டிரின் வரலாற்றைக் காண்போம்.

பாத்ம கல்பத்தில் சுருதிகள் (வேதங்கள்) ஒரு முறை பாற்கடலை அடைந்து, விஷ்ணுவைத் துதித்தனர். அவர்களுக்கு உடனே தரிசனம் தந்த தயாளன், அவர்களது விருப்பத்தைக் கேட்டான். உலக ரட்சகனின் உண்மை உருவைத் தாங்கள் தரிசிக்க விரும்புவதாகக் கூறவே, ராதை- கோபியர் சூழ ஜகன்மோகன ஸ்வரூபமாக அவர்களுக்கு தரிசனம் தந்தார் மகாவிஷ்ணு. இதைக் கண்டு பரவசமடைந்த சுருதிகள் தாங்களும் அவருடன் இன்பத்தை நுகர அருள வேண்டும் என்று வேண்டின. சுவேதவராக கல்பத்தில் துவாரகையில் அவர்கள் எண்ணம் ஈடேறும் என்று பரந்தாமன் பகர்ந்தார். அதன்படி, துவாரகை யில் பிறந்து கண்ணனுடன் கூடி இருந்ததால், இவர்கள் சுருதி கோபிகைகள் எனப்பட்டனர்.

இந்த கோபியரைப் பற்றி இதோ ஒரு ருசிகரமான தகவல். துவாரகையை விட்டு யாதவர்களுடன் குடிபெயர்ந்த கோபாலன், பிரபாச பட்டணத்தை அடைந்தார். முனிவர்களது சாபத்தால் யாதவர்கள் அங்கு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அடியோடு மாண் டனர். தனியாக விடப்பட்ட தாமோதரன், ஒரு முறை யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது ஒரு வேடன் தவறாக எய்த விஷ அம்பினால் தாக்குண்டு, சரீரத் தியா கம் செய்து வைகுந்தம் போய்ச் சேர்ந்தார். மாதவன் மறைவால் மனம் வெடித்த சுருதி கோபியர் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்குள்ள பெருங்குளத்தில் மூழ்கி ஜல சமாதி அடைந்தனர். அவர்களது புனித உடல்கள் அப் போது சந்தனம்போல் குளத்து நீரில் கரைந்து, அந்தச் சந்தனம் குளத்தில் அடியில் வண்டல் மண்போல் தங்கி விட்டது. பிற்காலத்தில் தோன்றிய கிருஷ்ண பக்தர்கள் இந்தச் சந்தனத்தை எடுத்து புண்டரமாக (நெற்றியில்) அணியத் துவங்கினர். பிரபாச பட்டணமான இன்றைய சோமநாத் தலத்தில் இன்றும் அந்தப் புனிதக் குளம் தென்படுவதோடு அந்தச் சந்தனமும் கிடைக்கிறது. கோபியர் உடலால் உண்டான அந்தச் சந்தனமே ‘கோபி சந்தனம்’ என்ற பெயரடைந்தது!

மிதிலையில் ராமன், சீதையைத் திருமணம் செய்து கொள்ள நகர வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த ஊர்ப் பெண்கள் ராமனைக் கண்டு மோகித்து, அவனை நாடி தங்கள் விருப்பத்தை விவரித்தனர். துவாபர யுகத்தில் அவர்களது ஆசையைத் தீர்ப்பதாக ராமன் வாக்களித்தார். அதன்படி அந்தக் கன்னிகைகள் அனைவரும் அடுத்த பிறப்பில் நவநந்தர்களுக்குப் புத்திரிகளாகப் பிறந்து, வளர்ந்து, அதிகாலையில் யமுனையில் புனித நீராடி, காத்யாயினி விரதத்தைக் கடைப்பிடித்தனர். இவ்வாறு ஒரு முறை அவர்கள் ஆற்றில் நீராடும்போதுதான், அங்கு மாயக் கண்ணன் வந்து அவர்களது உடைகளைத் திருடி எடுத்துக் கொண்டு மரத்தின்மேல் உட்கார்ந்து விட்டான்! அனந்தனின் ஆசைப்படி கோபியர் அனைவரும் தங்களின் இரு கரங்களையும் உயரே கூப்பி அவனை வேண்ட, அவர்களது தூய பக்தியை மெச்சிய மாதவன் ஆடைகளைத் திருப்பித் தந்ததுடன் அவர்களது தாபத்தையும் தணித்தான். இந்தப் பெண்கள், ‘மைதில கோபிகைகள்’ என்று அழைக்கப்பட்டனர்.

கோசல நாட்டின் வழியே ஒரு முறை ராமன் செல்லும்போது அவன் திருமேனியைக் கண்ணாரக் கண்டு மனதார மோகித்த பெண்களுக்கு ராமன் அபயம் அளித்து, ‘உங்களுக்கு நான் கிருஷ்ணாவதாரத்தில் அருள் புரிகிறேன்’ என்று வரமளித்தான். மறு பிறவியில் அந்தப் பெண்கள் உபநந்தர்களது இல்லங்களில் பிறந்து கண்ணனைக் கருத்தில் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் இந்தக் கன்னிகைகளுக்குத் தங்கள் குலத்திலேயே மணம் செய்வித்தும், அவர்கள் மனம் கண்ணனிடமே நின்று, அவனுடன் கலந்து விளையாடியது. கண்ணன் செய்த சர்வ லீலைகளும் இவர்களிடம் தானாம். இந்தக் கோபியரை, ‘கோசல கோபியர்’ என்று சொல் வார்கள்.

கல்யாணம் முடிந்து சீதாவுடன் நகர்ப் பிரவே சம் செய்த ரகுராமனைக் கண்டு, அயோத்தி நகரத்துப் பெண்கள் மோகிக்க, அவர்களை கிருஷ்ணாவதாரத்தில் கூடுகிறேன் என்று ராமன் அசரீரியால் சொல்வித்தான். அதன்படி சிந்து தேசத்து அரசன் விமலன் என்பவனின் பெண்களாகப் பிறந்து பின்னால் பிருந்தாவனம் ஏகி, கிருஷ்ணனுடன் ஜலக்கிரீடை செய்து வந்தனர். இந்த கோபியரை, ‘அயோத்யா கோபிகைகள்’ என்பர்.

தசரத ராமன் தந்தை சொல் காக்கும் பொருட்டு சீதை, லட்சுமணனோடு வனப் பிரதேசங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். வனங்களில் இருந்த அனேக ரிஷிகள் ராமனைத் துதித்து சீதை போல அவருக்கு தேவியாக இருக்க விரும்பினர். வில்லேந்திய ராமன், அவர்களது விருப்பத்தைத் தனது அடுத்த அவதாரத்தில் பூர்த்தி செய்வதாக வாக்களித்தார். அந்த ரிஷிகள் வங்க தேசத்து மன்னன் மங்களனன் என்பவனின் 5,000 தேவியர்க்குக் குமரிகளாகப் பிறந்தனர். இவர்களால் அரசனது செல்வம் விரைவாகக் குறையவே, ஒரு முறை தன்னிடம் வந்த சயன் எனும் அரசனோடு அந்தப் பெண்களை அனுப்பி வைத்தான். சயன், அந்தப் பெண்களை நந்தகோபனிடம் அனுப்பினான். கண்ணன் மேய்க்கும் மாடுகளின் சாணத்தை எடுத்து வந்த இந்தக் குமரிகள், காளிந்தி உபாசனையால் ஒரு நாள் கண்ணனோடு கூடிக் களித்தனர். இந்த கோபியரை, ‘ரிஷி கோபிகைகள்’ என்று கூறுவர்.

இவ்வாறு கோபிகையரின் தோற்றம் அறிந்த நாம், ராதையின் தோற்றத்தையும் அறிவோமா?

விருஷபானு எனும் முனிவர் தமது யாகசாலையைப் புதுப்பிக்க முற்பட்டபோது அழகிய பெண் குழந்தை ஒன்று அந்த நிலத்தில் தென்பட்டது. இந்தக் குழந்தையே பிற்காலத்தில் ராதை என்று அழைக்கப் பட்டாள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

தேவமாதாவாகிய ராதா ஏதோ கருத்து வேறுபாட் டால், ஸ்ரீதாமன் என்பவனை சங்குசூடன் என்ற அசுரனாகும்படி சபித்தாளாம். அவனும் சளைக்க வில்லை. ‘மானிட வடிவில் பிறப்பாய்!’ என்று அவளுக்கு எதிர்ச் சாபம் கொடுத்தான். இதன் விளை வாகவே ராதா, விருஷபானு- கலாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தாள் என்று வேறு ஒரு வரலாறும் உண்டு. அகல்யா, சீதை, ஆண்டாள் ஆகியோரைப் போல் ராதையும் அயோனிஜை (கருவில் இருந்து பிறவாதவள்) எனலாம். வட இந்தியாவில் அனுசரிக்கப்படும் பாதிரபதம் (ஆவணி) மாதம், சுக்கில பட்சம், அஷ்டமி ஞாயிறு கூடிய தினமே ராதையின் பிறந்த நாளாகும். வைகாசி மாதம், ரோகிணி நட்சத்திரம், சுக்கில திரிதியை கூடிய சுபதினத்தில் யசோதை இளஞ்சிங்கம், ராதை யைப் பாணிக்கிரஹணம் செய்து கொண்டார் என்று ஆதி புராணத்திலிருந்து அறிகிறோம். மாயக் கண்ணனின் மன தைக் கவர்ந்த ராதையின் மறு பெயர்கள் விருந்தா, விருந்தாவனி, விருந் தாவன விநோதினி ஆகும். விஷ்ணுவின் சக்தி அம்சமாக இவள் கருதப்படுகிறாள். ராதையும், ரமணனும் பிருந்தாவனத்தில் புரிந்த பற்பல லீலா விநோதங்களைப் பற்றி பல நூல்களிலும் விரிவாகக் காணலாம். முக்கியமாக ஜயதேவர் இயற்றிய கீதகோவிந்தம், இதைப் பற்றி அணுவணுவாகக் கூறும். வேணுகோபாலனின் வேணுகானத்தைப் பற்றி அந்த நூல்களின் வர்ணனைகளைச் சற்று ரசிப்போம்.

மழைக் காலம் முடிந்து முன்பனிக் காலம். வானம் மேகமற்றுத் தெளிந்தது. யமுனை கலக்கமற்று ஓடியது. தடாகங்களில் தாமரைகள் மலர்ந்தன. பொன்னிற மாலை வந்தது. பிருந்தாவனத்தில் வீசும் தென்றல் யாவரையும் தழுவி வெப்பத்தைத் தணித்தது. கதிரவன் கொடுமையை, வெண்மதி தோன்றிக் குறைத்தது. இரவில் வானமெல்லாம் நட்சத்திரங்கள் நிரம்பித் தெரிந்தன. ஆனால், கானகமேகிய கண்ணனைக் காணோமே என்று வீட்டிலிருந்த கோபியர் மனம் வருந்தி, உள்ளம் சூடேறித் தவித்தனர்.

கானகத்தை அடைந்த கானலோலன் தனது குழலை எடுத்து உதட்டைக் குவித்து ஊதலுற்றான். காற்றினிலே வந்த அந்த அமுத கீதத்தை மனக் குளிர்ச்சியோடு கேட்ட கோபியர், அதன் அழகைப் பற்றி தோழியருடன் பாட ஆவலுற்றனர். ஆனால், அவர்கள் உள்ளங்களிலே குழலூதும் கோபாலன் திருவுருவம் தெளிவாகத் தெரியவே ஆசை மிகுந்து நா எழாது சோர்ந்தனர். பிறகு, சிறு விரல்கள் குழல் மீது படிய இன்னிசை கீதம் எழுப்பிய எம்பெருமானை மனக்கண்ணால் கண்டு இல்லங்களை விட்டு வெளியே வந்தனர்.

கானத்தைக் கேட்ட கோபிகையர் கானகத்தை நோக்கி ஓடினர். கூழைப் பொங்க வைத்தவள் அதை மறந்து கோவிந்தனை நாடினாள். கணவனுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவள் குழலோசையில் மயங்கி மாதவனைத் தேடினாள். உணவருந்திக் கொண்டிருந்தவள் பசியை மறந்து பாலகிருஷ்ணனைக் காண விரைந்தாள். பாலைக் கறந்து கொண்டிருந்தவள் பாத்திரத்தைப் பாதியில் வைத்துவிட்டுப் பறந்தாள். பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தவள் பால் காயும் முன்னே வெளியேறினாள். மேனிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர்களும், கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டிருந்தவர்களும் தம்மை மறந்து தாமோதரனை நோக்கிச் சென்றனர். சிலர் ஆடை, ஆபரணங்களை அலங்கோலமாக அணிந்தும், மேலாடை அவிழ்ந்து நிலத்தில் புரண்டும் வர, கானகம் நோக்கி விரைந்தனர்.

மனம் விரகதாபத்தால் பொங்கி வழியத் தன்னி டம் வந்த கோபியரின் வேண்டுகோளுக்கு அந்த வேணுகோபாலன் இணங்கினான். கோபியரின் நடுவே மல்லிகைப் புன்முறுவலோடு, நட்சத்திரங்களின் நடுவே சந்திரனென மாதவன் ஜ்வலித்தான். இவ்வாறு கோபியர் சூழ யமுனைக் கரையை அடைந்தான் கோபாலன். ஆம்பல் மணத்துடன் அங்கு மெல்லிய காற்று வீசியது. அந்த இடத்தில் நந்தகுமாரனும் நளினகோபியரும் லீலைகள் பல புரிந்தனர். இதனால் கோபியருக்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது. தங்களுக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை என்று கர்வமடைந்தனர். அவர்களது தற்பெருமையை அடக்க வேண்டும் என எண்ணிய யசோதை இளம்சிங்கம், அந்த இடத்திலிருந்து மாயமாக மறைந்து விட்டான். உடனே கோபியர் புலம்பினர். அது ஒரு சோக கீதமாக வடிவெடுத்தது. இவை ‘கோபிகா கீதம்’ எனப்படுகிறது. இந்தப் பாடல்கள் பக்திக்கும், பாகவதத்துக்கும் நடுநாயகமாக விளங்குகிறது.

இதைக் கேட்ட அந்த மாயவன் சித்தம் இரங்கியது. தாமரை முகம் திகழ, மஞ்சள் பட்டாடை உடுத்தி, வனமாலை அணிந்து மன்மதனுக்கோர் மன்மதனாக கோபியர் முன் திடீரென்று தோன்றினான். இதை எதிர்பார்க்காத கோபியர், வியந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்தன. உயிர் திரும்பிய உடலாயின. உடனே அனைவரும் மீண்டும் யமுனைக் கரையை அடைந்தனர். நறுமணம் வீசும் மல்லிகையையும், மந்தாரத்தையும் முகர அங்கு கருவண்டுகள் கூடியிருந் தன. சந்திரன் இருள் நீக்கி எங்கும் ஒளி படர நின்றான். யமுனையின் அலைகள், கரையில் மணலையும் அலை போல் பரப்பி இருந்தன.

திடீரென்று மறைந்து, கோபியர் முன் தோன்றி யதைப் பற்றி கண்ணன் கூறும் காரணங்கள் வியக்க வைக்கின்றன. வேதாந்தத்தின் அழகான சாரத்தை ரத்தினச் சுருக்கமாக அச்சுதன் விளக்கியது, யுத்த பூமியில் அர்ஜுனனுக்குக் கூறிய பகவத் கீதைக்கு முன்னோடியாக அமைந்தது போலும்! அவன் மொழியை ஆர்வத்துடன் கேட்ட மங்கையர் தங்களது சோகங்களை மறந்தனர். ஆயர்குல மாதர் மணிகள் சூழ, வட்டமாகக் கை கோத்து நின்றான் நவநீத சோரன். அவர்கள் ‘ராஸம்’ எனும் நடனத் தைத் துவக்கினர். அவர்கள் கூடி கை கோத்தும், ஒரு கை தோள் மீது வைத்தும் ஆடும் ஆட்டத்தையே ‘ராஸம்’ என்று பரத முனிவர் நாட்டிய சாஸ் திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கோபாலன் ஒவ்வொரு கோபியரின் அருகிலும் தனியாக உருவெடுத்து அவள் மீது தன் கரத்தை வைத்துக் கொண்டான்.

இந்த வைபவத்தைக் காண, வானில் விண்ணவர் கூடினர். பேரிகை முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. கந்தர்வர் ஒன்றுகூடி கண்ணனின் பெருமையைப் பாடினர். மங்கையரின் மேகலை மணியோசையும், காற் சலங்கைச் சத்தமும், கைவளைகளின் சிற்றொலியும் கலந்திருக்க... தேவகியின் திருமகன் கோபியர் நடுவே பொன்மணி இடையே இழைத்த மரகதமாக விளங் கினான். தாளத்துடன் அடி வைத்து, கை அசைய, புருவமிரண்டும் அசைய, மருங்கசைய, வடிவதனப் புன்முறுவலுடன் திகழ, உடல் குலுங்க, ஆடை சலசலக்க, குண்டலம் கன்னத்தைச் சென்றடிக்க, முத் தென முகம் வேர்க்க, கூந்தல் கலைய, ஆடை தழுவ கோபியருடன் ஆடிய கண்ணன், முகில் நடுவே வீசும் மின்னலெனத் தோன்றியதாக ‘ஸ்ரீமத்பாகவத ராஸ லீலை’ வர்ணிக்கிறது.

பிருந்தாவனத்தில் கோயில்கள் சுமார் 1000 இருக்கும் என்று கூறுகிறார்கள். இருந்தும் அங்கு பிரசித்திப் பெற்று விளங்கும் சில கோயில்களை மாத் திரம் தரிசனம் செய்வோம்.

கோவிந்தேவ் கோயில்: மிகவும் புகழ் வாய்ந்த இந்தக் கோயில் கிரேக்கக் கட்டடக் கலைப் பாணி யில் கட்டப்பட்டது. ஏழு அடுக்குகள் கொண் டது. ஆக்ராவில் செங்கோட்டையை நிர்மாணிக்க அனுப்பப்பட்ட செந்நிறக் கருங்கற்களில் பெரும் பகுதியை இந்தக் கோயிலுக்கு அக்பர் தானமாக வழங்கியுள்ளார். இதைக் கட்டி முடிக்க ஒரு கோடி ரூபாய் செலவானதாம். அக்பரின் படைத் தளபதி மான்சிங்கால், கி.பி. 1590-ல் இது கட்டப்பட்டது.

பங்கே பிஹாரி கோயில்:    கி.பி.1864-ல் எழுப்பப் பட்ட ஆலயம். தான்சேனின் குருவும், வட இந்திய சங்கீதத்தில் வல்லவரும், தீவிர கிருஷ்ண பக்தருமான ஹரிதாஸ் என்பவரால், ‘நிதுவனம்’ எனும் காட்டில் கண்டெடுக்கப்பட்ட கண்ணன் சிலை இதன் கருவறையில் உள்ளது. மனங்கவரும் பொன்னூஞ்சல் தரிசனம் ஆவணி மாதத்தில் இங்கு கிட்டும்.

ஷாஹ்ஜி கோயில்:    லக்னோவிலிருந்த பெரும் பணக்கார நகை வியாபாரியான ஷாகுண்டன்லால் எனும் பக்தரால் கி.பி. 1876-ல் திட்டமிட்டுக் கட் டப்பட்ட கவர்ச்சியான ஆலயம். ஆலயத்தின் சக்கர வடிவத்தை, வெள்ளைப் பளிங்குத் தூண்கள் தாங்குகின்றன. 15 அடி உயரம் கொண்ட இத்தகைய 12 பளிங்குத் தூண்கள் முறுக்கப்பட்ட கயிறு போல் அமைந்திருப்பது நமது கவனத்தைக் கவருகிறது. ராதையும், ரமணனும் இங்குள்ள கருவறை தெய்வங்கள். பஸந்த் கம்ரா எனும் இங்குள்ள தர்பார் ஹாலில் பெல்ஜிய சரவிளக்குகளும், கண்ணாடிக் கொத்து விளக்குகளும், வண்ணச் சித்திரங்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

ஸ்ரீரங்கநாதர் ஆலயம்:    மதுராவிலிருந்த ஒரு பணக்கார சேட் குடும்பத்தாரால் கி.பி.1851-ல் கட்டப் பட்ட இது ஒரு பெரும் ஆலயம் ஆகும். தமிழ் நாட்டுப் பாணியில் கோயிலின் முகப்பில் ஆறு தளங்கள் கொண்ட ராஜ கோபுரம் நமக்கு முகமன் கூறுகிறது. ராஜ கோபுரத்தை அடுத்து பெருமாள் சந்நிதிக்கு எதிரே ஐம்பது அடி உயரம் கொண்ட, தங்க முலாமிட்ட கொடிமரத்தைக் காண்கிறோம். கருவறையில் சேஷ சயனத்தில் அரங்கநாதர் பள்ளி கொண்டு பக்தர்களுக்குப் பரவசமூட்டும் சேவை சாதிக்கிறார். மார்ச்-ஏப்ரல் மாதங்களை ஒட்டி நடத்தப்படும் பிரம்மோத்சவத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். அப்போது அரங்கநாதர் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

ராதாவல்லப கோயில்:    ராதையைப் பிரதானமாகக் கொண்டு அமைக்கப்பட்ட, ‘ராதா வல்லபம்’ எனும் குழுவைத் தோற்றுவித்த ஹரி வம்ஸ கோஸ்வாமி எனும் மகானால் எழுப்பப்பட்ட கோயில் இது. ஆனால், கர்ப்பக்கிரகத்தில் ராதாவுக்குச் சிலை கிடையாது. அந்த அறையில் தரிசனம் தரும் வேணுகோபாலன் அருகில் ராதையின் அடையாளமாக ஓர் மகுடம் வைக்கப்பட்டுள்ளது. கி.பி. 1670-ல் அந்நியர்களால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட பழைய கோயிலின் அருகில்தான் இந்தப் புதிய கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

ஜெய்ப்பூர் கோயில்:    ராஜஸ்தானில் இருந்த ஜெய்ப்பூர் மகாராஜா ஸவாய் மாதவ் என்பவரால் 1917-ல் கட்டப்பட்ட ஆலயம். இதைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் பிடித்தன. பளிச்சிடும் பளிங்குக் கற்கள் நம் மனதை ஈர்க்கின்றன. இங்கு காணப்படும் ஒவ்வொரு பெரிய தூணும் ஒரே கல்லினால் ஆனவை. இந்தக் கோயிலுக்கு வேண்டிய பெரும் பாறைகளைக் கொண்டு வந்து சேர்க்க, 8 கி.மீ. தூரத்திலுள்ள மதுராவிலிருந்து ரயில் பாதை போடும் செலவை அந்த மகாராஜாவே ஏற்றுக் கொண்டாராம். ஸ்ரீராதா- மாதவன், ஆனந்தபிஹாரி, ஹன்ஸகோபாலன் எனும் தெய்விகத் திருவுருவங்களை இந்தக் கோயிலில் தரிச னம் செய்யலாம்.

ராதா ரமண கோயில்:    ‘ராதா ரமண’ என்றால் ராதைக்கு இன்பத்தை அளிப்பவன் என்று அர்த்தம். கண்ணனையே இந்தப் பெயரினால் அழைப்பர். இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் கோபால்பட் கோஸ்வாமி எனும் பக்தர். இவருக்கு சைதன்ய மகாபிரபுவால் அளிக்கப்பட்ட உட்காரும் பீடம் மற்றும் கம்பளியை இந்தக் கோயிலில் காணலாம்.

யமுனைக் கரையிலுள்ள அழகிய பிருந்தாவனத் தலம், டெல்லியிலிருந்து 126 கி.மீ. தூரத்திலும், மதுரா விலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் உள்ளது. 51-வது மகா சக்தி பீடத்தின் அம்மனின் பெயர் உமா. க்ஷேத்திர பாலர் பூதேசர். இந்தப் பெயர்களின் அடிப்படையில் தேவி கோயிலைக் கண்டுபிடிக்க இந்த நகரில் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. இது ஒரு மகாசக்தி பீடம் என்றால், ‘அப்படியா!’ என்று உள்ளூ ரார் ஆச்சரியத்தால் வாய் பிளக்கிறார்களே தவிர, பலருக்கும் அதன் இருப்பிடம் தெரியவில்லை. மிக பிரயாசைப்பட்டு முயற்சித்ததில், பூதேச மகாதேவ் எனும் சிவன் கோயிலில் உள்ள பாதாள அறையில் இந்த அம்மன் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது. இந்த மகாசக்தி பீடேஸ்வரி இன்று காளி எனும் நாமம் கொண்டு ஆராதிக்கப்படுகிறாள்.

இந்தக் கோயிலுக்குப் போய்வர நல்ல பாதை கிடையாது. விசாரித்துக் கொண்டே பல சந்து பொந்துகளில் செல்ல வேண்டும். இந்தக் கோயிலில் பூதேசர் எனும் நாமத்துடன் இறைவன், சிவலிங்க ரூபத்தில் அருள் பாலிக்கிறார். இவரது கருவறையை அடுத்துக் கீழே போகும் சுமார் 50 படிகளில் இறங்கி னால் அங்குள்ள பாதாள அறை ஒன்றில் அம்மன் தரிசனம் கிட்டும். அம்மன் உடல் முழுவதும் துணி போர்த்தப்பட்டுத் தலையில் முக்காடும் இருப்பதால் அம்பிகையின் ரூப லாவண்யத்தை நாம் காண முடியாது. ஆனால், அங்கு தெய்வ சாந்நித்தியம் அலை மோதுகிறது இதை எவரும் உணரலாம்.

முதன் முதலில் உமா எனும் பெயர் கொண்ட இந்த அம்மனே, துவாபர யுகத்தில் அவளது அம்சமான காத்யாயினி எனும் நாமம் ஏற்று இந்தத் தலத்தை ரட்சிக்கும் தெய்வமாகக் கருதப்பட்டாள். கோபியர் இங்கு வந்து அனுஷ்டித்த, ‘பாவை நோன்பு’ எனும் காத்யாயினி விரதத்தின் விவரங்களை ஆண்டாளின் திருப்பாவையிலிருந்து அறிகிறோம்.

பிருந்தாவனத் தலத்தில் கோபாலனுக்கும் கோபிய ருக்கும் அவர்களது வாழ்வில் ஈடற்ற இன்பங்களை வாரி வழங்கிய காத்யாயினி எனும் ஆதி உமாதேவியை முக்கரணங்களால் நாம் வணங்கி, நீண்ட புனித யாத்திரை கொண்ட 51 மகா சக்தி பீடங்களின் தரி சனத்தை இந்தப் புண்ணியத் தலத்தோடு சுபமாக முடிப்போம்.

ராகம்: சுத்த தன்யாசி

தாளம்: ஆதி

பல்லவி

பிருந்தாவனமதில் அழகுற அமர்ந்த
உமாதேவி பூதேசர் காத்திட (பிரு)

அனுபல்லவி

சிருங்காரமாய் அனகபாரம் கொஞ்சும்
திருநுதலில் சந்த்ரகலை சேர்ந்த கிரீடம் துலங்க

துரிதகாலம்

மதியோ வெண்மதியோ தண்மதியோவென
அதியற்புத அழகுடன் அன்பர் மனதில்
பதிந்து பேரானந்தம் பெருகிட
அதிசயமான ஆத்ம சுகமளிக்க (பிரு)

சரணம்

இரவியினை சுற்றிய கார்மேக திரளென
கார்குழல் பொலிந்திட பதியான
கார்கண்டார் மனங்குளிர மென்னகை
சேர்க்கும் கமல திருமுகமும்

துரிதகாலம்

காதலோடு நாதனையணைந்தொரு
பாதியாய் அவனில் கலந்து
பேதமற லயித்து சிவசக்தியாகி ஞான
போதமுற்றோர்க் கினிய பேரொளிகாட்சி தந்து (பிரு)

(அட்சர சக்தி ரூபங்கள் என்று இந்த 51 பீடங்களை
ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறோம்? ஜபல்பூர் நாகராஜ சர்மாவின்
விளக்கக் கட்டுரை அடுத்த இதழில்...)