Published:Updated:

வியாபாரத்தில் வெற்றி... வணிகர்களுக்காகவே ஒரு விசேஷ கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வியாபாரத்தில் வெற்றி... வணிகர்களுக்காகவே ஒரு விசேஷ கோயில்!
வியாபாரத்தில் வெற்றி... வணிகர்களுக்காகவே ஒரு விசேஷ கோயில்!

வியாபாரத்தில் வெற்றி... வணிகர்களுக்காகவே ஒரு விசேஷ கோயில்!

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதே என்று கஷ்டப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம். உங்களுக்கு அருள்புரிவதற்காகவே இறைவனும் இறைவியும் ஒரு திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

அந்தத் தலத்தில்,‘கையில் தராசு பிடித்தபடி சிவபெருமான், அளவைப்படியை கையில் ஏந்தி பார்வதி இப்படி இறைவனும், இறைவியும்

வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.  திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.  புதிதாய் வியாபாரம் தொடங்குவோர், தொழில் செய்வோர், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என எல்லோரும் இங்கு வந்து தரிசனம் செய்தால் தொழில் சிறக்கும், செல்வம் செழிக்கும் என நம்புகிறார்கள். இத்தலத்தின் சிறப்புகள் பற்றி விவரிக்கிறார் கைலாசக் குருக்கள்,

“அய்யனே இங்கு வந்து வியாபாரம் செய்ததால் இந்த ஊருக்கு ‘அய்யன்பேட்டை’ என்று பெயர் ஏற்பட்டது. ஒருகாலத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உணவுக்கே தவியாய் தவித்தபோது, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், திருவீழிமிழலையில் இறைவனிடம் முறையிட, அவரோ முன்கோபுர வாசலில் திருநாவுக்கரசருக்கும், பின்கோபுர வாசலில் திருஞானசம்பந்தருக்கும் தினந்தோறும் தங்கத்தில் படிக்காசு தந்தார். ‘இந்த காசுகளை எடுத்துப்போய் பொருள் வாங்குவது எங்கே? தொண்டர்களுக்கு உணவு படைப்பது எங்கே?’ என்று மீண்டும் இறைவனையே நாட, ‘அய்யன்பேட்டையில் பொருள் வாங்குங்கள், ஆண்டார்பந்தியில் உணவு படையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.  

அதன்படி, அய்யன்பேட்டை சென்றபோது இறைவன் தராசோடும், இறைவி படியோடும் வாணிகம் செய்திருக்கிறார்கள்.  அங்கு பொருள் வாங்கி பக்கத்து ஊரான ஆண்டார்பந்தியில் உணவு படைத்திருக்கிறார்கள்.  எனவேதான் இங்கு செட்டியப்பர் என்கிற சுந்தரேஸ்வரர் சுவாமி, படியளந்த நாயகி என்கிற மீனாட்சி அம்பாள் வீற்றிருக்கிறார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்  ஆகியோரின் பாடல்பெற்ற ஸ்தலம்.  ஆண்டுதோறும் சித்திரை பரணி நாளன்று ‘வியாபார விழா’ வெகுவிமர்சையாக நடைபெறும்.  அந்நாளில் ஏராளமான வணிகர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  இது வியாபாரத் தலம் என்பதால் பெரும்பாலும் கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வந்து வணங்குகிறார்கள்.  

தனிச் சந்நிதியில் பைரவர் வீற்றிருக்கிறார்.  பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடைபெறுகிறது. அதில் பங்குபெறுவோர் கண் திருஷ்டிபோன்ற கெடுதல்களிலிருந்து விடுபடலாம்.  

ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளில் இங்குள்ள துர்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து ‘வளையல் அணி விழா’ நடைபெறும்.  

புத்திரபாக்கியம் வேண்டுவோர் இதில் கலந்து கொண்டு தொடர்ந்து 9 வாரம் ராகுகாலத்தில் துர்கையை வணங்க, அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறிய எவ்வளவோ பெண்கள் பலனடைந்து துர்கைக்கு நன்றிக் கடன் செலுத்துவதை கண்கூடாக காண்கிறேன்'' என்று சிலிர்ப்புடன் கூறினார். 

கோயிலின் பின்புறத்தில் தேவேந்திரனே மயில் வாகனமாக வீற்றிருக்க, வள்ளி, தெய்வானையோடு மயில்மேல் அமர்ந்த நிலையில் முருகன் காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.  திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்கினால் அவர்களது என்னம் ஈடேறும், கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுடன் வாழும் தம்பதியினர் வணங்கினால் துன்பம் விலகி சந்தோஷ வாழ்வு ஏற்படும்.  

கடவுள் வாணிபம் செய்யும் கோலத்தோடு காட்சித் தருவதும், ஆண்டுதோறும் வியாபாரத் திருவிழா நடைபெறுவதும் என்று வணிகர்களுக்கான விசேஷ கோயிலாகவே இத்தலம் அடையாளம் காட்டப்படுகிறது. வணிகர்கள் ஒருமுறையாவது இத்தலத்துக்கு வந்து தரிசித்து பலன் பெறலாம்!

குறிப்பு : மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து பூந்தோட்டம் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் மருதுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.  

- மு.இராகவன், மயிலாடுதுறை
படங்கள் : க. சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு