Published:Updated:

கண்ணன் கதைகள்!

சிறப்பு கட்டுரை
கண்ணன் கதைகள்!
 

கண்ணன் கதைகள்!
கண்ணன் கதைகள்!

காவிஷ்ணுவின் மகிமை எப்போதும் நிறைந்திருக்கும் மதுரா புரி நகரில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ரதம் ஓடிக்கொண்டிருந்தது. தெருவெங்கும் பலவிதமான அலங்காரம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் மக்கள், கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொடியவனான கம்சன் தேர் ஓட்டினான். புதுமணத் தம்பதியான வசுதேவரும் தேவகியும் அந்தத் தேரில் உட்கார்ந்திருந்தனர். மங்கல வாத்தியங்களான சங்கு, மிருதங்கம், துந்துபி ஆகியவை முழங்கின. தேர் சீராக ஓடியது. கம்சன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்பட்டான்.

சத்தியவானான வசுதேவர் மீது உள்ள அளவற்ற அன்பினாலோ அல்லது ‘கம்சன் கூட ஒரு நல்ல காரியம் செய்கிறானே!’ என்ற எண்ணத்தாலோ மக்களும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவர் மகிழ்ச்சியையும்- குறிப்பாக கம்சனின் நிம்மதியையும் அமைதியையும் குலைக்கும் விதமாக ஓர் அசரீரி கேட்டது.

‘‘மூடனே... கம்சா! நீ இப்போது அழைத்துச் செல்லும் இந்த தேவகியின் எட்டாவது கர்ப்பம் உன்னைக் கொல்லப் போகிறது!’’ என்றது.

கண்ணன் கதைகள்!

அதைக் கேட்டதும் கம்சனுக்கு மரண பயம் வந்துவிட்டது. நல்லவன், தனக்கு ஏற்படும் நல்லதை, அடுத்த வர்களுடன் பகிர்ந்து கொள்வான். தீயவனோ தனக்கு உண்டாகும் ஆபத்தை, அடுத்தவர்களிடம் தள்ளி விடுவான்.

தீயவனான கம்சனும் இதையே செய்தான். தனக்கு மரணம் வரப் போகிறது என்றதும் தேரை நிறுத்தினான். ஒரு கையால் வாளை உருவி, மறு கையால் மணக் கோலத்தில் இருந்த தேவகியின் கூந்தலைப் பிடித்து அவளைக் கொல்ல முயன்றான்.

தடுத்தார் வசுதேவர், ‘‘போஜ வம்சத்துக்குப் புகழ் சேர்க்க வேண்டிய c, இப்படிச் செய்யலாமா? உன் தகுதிக்கு இது சரியா? போடு கத்தியைக் கீழே! தேவகியின் தலைமுடியை விடு! ஒவ்வொரு ஜீவன் பிறக்கும்போதும், அதன் மரணமும் நிச்சயிக்கப்படு கிறது. அது இன்றா, நாளையா அல்லது நூறு வருடங்கள் கழித்தா என்பது தெரியாது. மற்றபடி, மரணம் நிச்சயம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. மனிதன் எப்படி ஒரு காலைப் பூமியில் ஊன்றிக் கொண்டு அடுத்த காலைத் தூக்கி வைத்து நடக்கிறானோ அது போல, ஜீவன் வேறு ஓர் உடம்பை அடைந்து முந்தைய உடம்பை விடுகிறது. இதை உணரும் எவரும் மரணம் குறித்துப் பயப்பட மாட்டார்கள். விவரம் அறிந்த c, மனதில் இரக்கம் உடையவன். அதனால் தேவகியைக் கொல்லாதே!’’ என்று அறிவுரை சொன்னார்.

கண்ணன் கதைகள்!

‘‘கொன்றே தீருவேன்!’’ என்று பிடிவாதம் பிடித்தான் கம்சன்.

சட்டென்று யோசனையில் ஆழ்ந்த வசுதேவர், ‘எப்படியாவது இதைத் தடுத்தாக வேண்டும். கம்சன் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயத்தைச் சொல்லியாவது, இந்தப் பாவத்தைத் தடுக்க வேண்டும். ‘பிறக்கும் குழந்தை களைத் தருகிறேன்; தாயை விட்டுவிடு!’ என்று சொன்னால் இவன் மனம் ஒரு வேளை மாறலாம். மேலும், எனக்குக் குழந்தைகள் பிறக்கும் என்பது என்ன நிச்சயம்? அதுவரையில் கம்சன் உயிருடன் இருப்பான் என்பது என்ன நிச்சயம்? உலகமே அதிர்ஷ்டத்தில்தான் அடங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தா மனிதன் நடமாடுகிறான்? இந்தக் கொலையை முதலில் தடுக்க வேண்டும். மற்றவை தெய்வத்தின் கையில்!’ என்று தீர்மானித்த வசுதேவர், சிரித்தபடியே கம்சனை நோக்கித் திரும்பினார்.

‘‘கம்சா! நீ தேவகிக்கு பயப்படவில்லையே? இவளுக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளையால் உனக்கு மரணம் என்றுதானே அசரீரி சொன்னது? எட்டாவது பிள்ளை என்ன? மொத்தப் பிள்ளைகளையும் உன்னிடம் தந்து விடுகிறேன்!’’ என்றார் வசுதேவர்.

சற்று நேரம் யோசித்த கம்சன் அதற்கு ஒப்புக் கொண்டான். ‘அதுவும் சரிதானே?’ என்று தீர்மானித்தவன், தேவகியை உடனே விட்டுவிட்டான். அதன் பின் உத்தமர் வசுதேவர், மனைவியுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.

கண்ணன் கதைகள்!

முதல் பிள்ளை பிறந்தது. பொய் சொல்ல, பயந்த வசுதேவர் தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக கீர்த்திமான் என்னும் அந்தப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கம்சனிடம் போனார்.

குழந்தையைப் பார்த்தான் கம்சன். உடனே யாரும் எதிர் பாராத காரியத்தைச் செய்தான். வசுதேவரின் தியாக புத்தியும் சத்தியவாக்கும் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தன. ‘‘வசுதேவரே! இது முதல் குழந்தைதானே? இதனால் எனக்கு பயமில்லை. எட்டாவது குழந்தை பிறக்கட்டும். பார்க்கலாம். இந்தக் குழந்தையைக் கொண்டு போங்கள்!’’ என்று சொல்லி, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் அவரிடமே தந்து வழியனுப்பி வைத்தான்.

கம்சனின் இந்தக் கருணையைக் கண்டார் நாராயண பட்டத்திரி. ‘குருவாயூரப்பா! கருணை என்னும் குணத்துக்கு என்ன சிறப்பு பார்த்தாயா? ஏதோ ஒரு வேளையில் அது துஷ்டர்களின் புத்தியில் கூடப் புகுந்து விடுகிறதே?’ என நாராயணீயத்தில் கேட்கிறார்.

கம்சன் மனதில் புகுந்த கருணையை விரட்டியடிக்க அதோ, ஒரு புண்ணியவான் கிளம்பிவிட்டார். கம்சன் உள்ளத்தில் கருணை பிறந்த அந்தக் கணத்திலேயே, ஆகாய வழியாகக் கையில் வீணையுடனும் வாய் நிறைய நாராயண நாமத்துடனும் போய்க் கொண்டிருந்த நாரதர் வெகு வேகமாக கம்சனிடம் ஓடோடி வந்தார்.

கண்ணன் கதைகள்!

‘‘கம்சா! உன்னை அறிவாளி என்று நினைத்தேன். ஆனால், நீ முட்டாளாக இருக்கிறாயே. உன்னைச் சுற்றிச் சூழ்ந்து எத்தனை அபாயங்கள் வலம் வருகின்றன என்று தெரியுமா? தேவகி, வசுதேவர், கோகுலத்தில் உள்ள யசோதையின் கணவர் நந்தகோபர், கோபர்கள் _ கோபிகைகள் ஆகியோர் எல்லாரும் தேவர்களின் அம்சங்கள். கம்சனான நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் அரக்கர்கள். உங்கள் அனைவரையும் வதம் செய்து பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக, ஸ்வாமி, வசுதேவரின் குழந்தையாக அவதரிக்கப் போகிறார். இதெல்லாம் அவர் நடத்தும் நாடகம். பார்த்து நடந்து கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. நான் வருகிறேன்!’’ என்று எச்சரித்துவிட்டு நாரதர் அங்கிருந்து கிளம்பினார்.

வஞ்சனை நிறைந்த கம்சனின் உள்ளம், சஞ்சலம் அடைந்தது. எனவே, அவன் வேறொரு முடிவுக்கு வந்தான். உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து விலங்கு போட்டான். அதன் பிறகு அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், ‘இது என்னைக் கொல்ல வந்ததோ?’ என்று பயந்து உடனுக்குடன் அதைக் கொன்றான். தொடர்ச்சி யாக, முதல் குழந்தை உட்பட இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டன.

இப்படி நடக்கும் என்று நாரதருக்குத் தெரியாதா? பிறகு அவர் ஏன் இப்படிச் சொன்னார்?

கம்சனால் கொல்லப்பட்ட அந்த ஆறு குழந்தைகளும் போன பிறவியில், மரீசி என்பவரின் பிள்ளைகள். பிரம்மதேவரின் சாபத்தால் அவர்கள் அசுரக் குழந்தைகளாகப் பிறந்தனர். அவர்களது சாபத்தை நீக்கி அருள் புரியவே அவர்களை தேவகியின் கருவில் தோற்றுவித்து, கம்சனால் கொல்லப்பட்டு சாப விமோசனம் வழங்கத் திருவுள்ளம் கொண்டார் நாரதர். தேவகியின் குழந்தைகள் ஆறு பேரும் கம்சனால் கொல்லப்பட்டதற்கு இதுவே காரணம்.

ஏழாவது கருவைச் சுமந்தாள் தேவகி. பகவான் யோக மாயையைக் கூப்பிட்டார். ‘‘தேவீ! கோபிகைகளாலும் கோபர்களாலும் அலங்கரிக்கப் பட்ட கோகுலத்துக்குப் போ. அங்கே வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணி இருக்கிறாள். தேவகியின் வயிற்றிலுள்ள கர்ப்பத்தை எடுத்து, அதை அப்படியே ரோகிணியின் வயிற்றில் வைத்து விடு. அதன் பிறகு நான் பூரண அம்சமாக தேவகியிடம் அவதரிப்பேன். நந்தன் மனைவி யசோதையிடம், நீ அவதாரம் செய்!

கண்ணன் கதைகள்!

பக்தர்கள் கோயில்கள் கட்டி, அவற்றில் உன்னை பிரதிஷ்டை செய்வார்கள். உனக்கு துர்க்கா, பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, கிருஷ்ணா, மாதவி, கன்னிகா, மாயா, நாராயணி, ஈசனா, சாரதா, அம்பிகா என்ற பெயர்கள் உண்டாகும். உன்னை வழிபடும் மக்களுக்கு எல்லா விதமான செல்வங்களையும் கொடுப்பவளாக இருப்பாய். தூபம், தீபம் மற்றும் பல வகையான உபசாரங்கள் செய்து உன்னை பூஜிப்பார்கள்.

ஒரு வயிற்றில் இருந்து மற்றொரு வயிற்றில் ஆகர்ஷிக்கப்படுவதால் அந்தக் குழந்தை சங்கர்ஷணன் என்றும், மிகுந்த பலசாலியானதால் பலபத்ரன் என்றும், மக்களை மகிழச் செய்வதால் ராமன் என்றும் பெயர் பெறும்! போ! சொன்னதைச் செய்!’’ என்று உத்தரவிட்டார்.

யோகமாயை அவ்வாறே செய்தாள். ‘‘தேவகியின் ஏழாவது கர்ப்பம் தோன்றி மறைந்து விட்டது!’’ என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. நிலையான ஆனந்த வடிவனான ஸ்வாமி, இவ்வாறு தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் குழந்தையாக வடிவம் கொண்டார்.

தங்களுக்காகத் தேவகியின் கர்ப்பத்தில் வாசம் செய்யும் ஸ்வாமியை தரிசிக்க தேவர்கள் அனைவரும், கம்சனின் சிறைச்சாலைக்கு வந்தனர். ஸ்வாமியைத் துதித்தார்கள்.

இந்த இடத்தில் நாராயண பட்டத்திரி, நாராயணீயத்தில் அற்புத மான வேண்டுகோள் ஒன்றை ஸ்வாமியிடம் சமர்ப்பிக்கிறார்.

பகவான் நாராயணனின் அவதார லீலைகளை பக்தி மயமாக வர்ணித்து, நேரடியாக குருவாயூ ரப்பனின் ஒப்புதல் பெற்ற ஒப்பற்ற நூல் நாராயணீயம். தனது நோய் நீங்குவதற்காக நாராயண பட்டத்திரி எழுதிய இந்த நூல் அவரது நோயை நீக்கியதுடன், இதைப் பாராயணம் செய்யும் பலரது நோய்களையும் தீர்த்து வைப்பது அனுபவபூர்வமான உண்மை.

கண்ணன் கதைகள்!

இதோ, பட்டத்திரியே தேவகியின் வயிற்றில் இருந்த கண்ணனிடம் வேண்டுகிறார்.

‘குருவாயூரப்பா! எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் தேவகியின் கர்ப்பத்தில் நுழைந்த மாத்திரத் தில் தேவர்கள் அனைவரும் கம்சனின் சிறைச்சாலையைத் தேடிவந்து தங்களைத் துதித்தார்கள் அல்லவா? அப்படிப்பட்ட கருணா மூர்த்தியான தாங்கள் எனது வியாதிக் கூட்டத்தை நீக்குங்கள். மேலும் தேவகி, தங்களைத் தன் கர்ப்பத்தில் தரித்தாள். (அதுபோல) நான் தங்களை என் இதயத்திலே தரிசிக்க வேண்டும். அதற்குத் தேவை, அசையாத பக்தி. அதையும் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’ என வேண்டுகிறார். அந்த வேண்டுதலை குருவாயூ ரப்பன் நிறை வேற்றியது அனை வருக்கும் தெரியும்.

கண்ணன் கதைகள்!

வாருங்கள்! கண்ணனைத் தன் வயிற்றில் சுமக்கும் பாக்கியம் பெற்ற தேவகியிடம் போவோம். தேவகியின் அப்போதைய நிலையை சில நூல்கள் அற்புதமாக வர்ணிக்கின்றன.

உலகத்தையே சுமப்பவனை, தான் சுமப்பதால், ‘எங்கே பூமிக்கு பாரம் அதிகமாகி விடுமோ!’ என்ற எண்ணத்தில், மிக மிக மெதுவாக நடக்கிறாள் தேவகி.

அவள் தூங்கும்போது கனவில், ‘என் ஸ்வாமியை இவள் சுமக்கிறாள். புண்ணியசாலியான இவளை நான் சுமக்க வேண்டும்!’ என்று தன் முதுகில் தேவகியைச் சுமந்து செல்கிறான் கருடன். ‘உள்ளத்தில் நான் சுமக்கும் என் கணவனை இவள் சுமக்கிறாள். எனவே, இவளை நான் பராமரிக்க வேண்டும்!’ என்று லட்சுமிதேவி, தேவகிக்குப் பணிவிடை செய்கிறாளாம்.

ஓய்வு நேரத்தில், துணியில் பலவித வண்ண ஓவியங்களை வரைந்தாள். அப்பழுக்கு இல்லாத பக்தி கொண்ட உத்தமமான பக்தர்கள் எல்லாம் கண்ணன் நினைவுகளில் தங்களை மறந்திருக்க, கண்ணன் அவதரிப்பதற்கான நட வடிக்கைகளில் இறங்கினான்.

‘சர்வ மங்கல வடிவினரான ஸ்வாமி, அவதரிக்கும் நள்ளிரவு நெருங்கியது. சுபக் கிரகங்கள் தாமாக ஒன்று கூடின. அஷ்டமி யும் ரோகிணியும் இணைந்த வேளை. திசைகள் எல்லாம் மின்னின. துந்துபி முழங்கியது. தேவர்கள் பூமழை பொழிந்தனர். உலகம் ஆனந்தக் கடலில் மூழ்கியதைப் போல, எல்லோர் உள்ளங்களிலும் குதூகலம் பொங்கியது. கம்சனின் சிறைச்சாலையில் ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் அற்புதம் உதயமானது’ என்கிறார் பரீட்சித்து மன்னனுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை சொல்லி வந்த சுகாச்சார்யார்.

கண்ணன் கதைகள்!

சிறிய வடிவம். தாமரைக் கண்கள். நான்கு திருக்கரங்கள். அவற்றில் சங்கு, சக்கரம், கதாயுதம், பத்மம். திருமார்பில் ஸ்ரீ வத்ஸம். கழுத்தில் கௌஸ்துப மணி. மேனியில் பீதாம்பர ஆடை. தலையில் வைடூரியங்கள் இழைத்த கிரீடம். உடலில் குண்டலம்- தோள்வளை ஆகிய ஆபரணங்கள். சுருண்ட கறுத்த தலைமுடி. நீர் குடித்த மேகம் போல திருமேனி ஆகியவற்றுடன் கண்ணன் அவதரித்தான்.

வசுதேவரும் தேவகியும் கண்ணில் நீர் மல்கக் கைகூப்பித் துதித்தனர். ‘‘ஸ்வாமி... சங்கு- சக்கரம் தாங்கிய திருக்கரங் களை மறைத்து சாதாரணக் குழந்தையாகக் காட்சி அளியுங் கள். தாங்கள், அவதாரம் செய்துள்ள தெய்வம் என்பதைக் கம்சன் அறியக் கூடாது!’’ என வேண்டினாள் தேவகி.

கம்சனிடம் உள்ள பயத்தால் மட்டும் தேவகி இப்படிச் சொல்லவில்லை. வேறோர் அற்புதமான காரணமும் உண்டு.

‘‘தெய்வமே! உங்களது இந்த தரிசனம் எனக்குப் புதிதல்ல. எப்போதும் என் இதயத்தில், நான் கண்டு தரிசிக்கும் வடிவம்தான். ஆனால், இப்போது அழியக் கூடிய என் உடம்பில் இருந்து, அழிவற்ற தெய்வமான நீங்கள், ஒரு சாதாரணக் குழந்தையாக அவதரித்திருக்கிறீர்கள். இனி நான் தியானிக்க உட்கார்ந்தால், ‘இது என் பிள்ளைதானே?’ என்ற மயக்கமும் அலட்சியமும் தோன்றி விடும். அதனால் சாதாரணக் குழந்தையாகக் காட்சி தாருங்கள், போதும்!’’ என வேண்டினாள். இந்த வேண்டுகோளை கண்ணன் நிறைவேற்றினான்.

பிறகு அவர்களிடம் தன்னை கோகுலத்தில் உள்ள யசோதையின் பக்கத்தில் விட்டுவிட்டு அவளின் பெண் குழந்தையை எடுத்து வருமாறு கட்டளையிட்டான் கண்ணன். வசுதேவர் கண்ண னுடன் கிளம்பினார். உடனே சிறைக் கதவுகள் தாமே திறந்து கொண்டன. வெளியே மழைத்தூறல். இருள் மயம். ஆதிசேஷன், குடையாக மழையிலிருந்து அவர்கள் நனையாமல் தடுத்தான். ஆதிசேஷனது மணிகள் பாதையில் வெளிச்சம் காட்டின.

கண்ணன் கதைகள்!

யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கண்ணனைக் காண்பதில் அவ்வளவு குதூகலம் போலும் யமுனைக்கு. கண்ணனின் பால லீலைகள் தனது கரையில்தான் நடக்கப் போகின்றன என்கிற குதூகலமோ? ‘யமுனா தீர விஹாரி’ என்றும், ‘தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்றும் கண்ணனைப் போற்றிப் பாடும்போதெல்லாம், தன்னையும் சேர்த்துப் பாடப் போகிறார்கள் என்பதை உணர்ந்த மகிழ்ச்சியோ? தெரியவில்லை.

கண்ணனுடன் ஆற்றைக் கடந்த வசுதேவர், யசோதையின் வீட்டில் நுழைந்தார். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தை பிறந்து மயக்கத்தில் ஆழ்ந்திருந்த யசோதையின் பக்கத்தில் கண்ணனை விட்டுவிட்டு அவளின் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்பினார் வசுதேவர்.

சிறைச்சாலைக்கு வந்ததும் பெண் குழந்தை பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது. கம்சனின் முடிவை அறிவிப்பது போன்ற அந்த அழுகுரல், அவனை அங்கே வரவழைத்தது. ‘என்னைக் கொல்லும் குழந்தை பிறந்து விட்டது!’ என்றவாறு வேகமாக வந்த கம்சன், தேவகியிடம் இருந்த குழந்தையைப் பிடுங்கினான்.

கண்ணன் கதைகள்!

தேவகி கெஞ்சினாள். ‘‘அண்ணா! இதுவரை ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டேன். அதனால் புத்திர சோகத்தால் பரிதவிக்கும் என்னைப் பார்! இந்தக் குழந்தை யையாவது தயவுசெய்து விட்டு விடு!’’ என்று பதறினாள்.

இதுவரை குழந்தைகளைப் பறிகொடுத்தபோது இல்லாத பதற்றம், இப்போது மட்டும் தேவகிக்கு ஏன் ஏற்பட வேண்டும்? ஒருவேளை இது பெண் குழந்தை என்பதாலா? பரம் பொருளையே பிள்ளையாகப் பெற்ற தேவகி, ஒருக்காலும் இவ்வாறு நினைக்க மாட்டாள். பிறகு? மகான் கள் இதற்கு அற்புதமான ஒரு விளக்கம் சொல்வர்.

இதுவரை ஆறு குழந்தை களைப் பறிகொடுத்தது வசு தேவர், கம்சனுக்கு அளித்த சத்தி யத்தைக் காப்பாற்றவே! அதற்காக தேவகி தியாகம் செய்தாள். ஒன்றைத் தியாகம் செய்வதானால், விருப்பு- வெறுப்பு இல்லாமல் முழுமனதோடு செய்ய வேண்டும். இல்லா விட்டால் அதற்கு பலன் இல்லாமல் போய்விடும். இப்போது கம்சன் கொல்ல வருவது அடுத்தவள் பெற்ற குழந்தையை! அதை தேவகியின் குழந்தையாக எண்ணி அவள் எதிரிலேயே கொல்லப் போகிறான். அது மகாபாவம். அதனால், ‘கம்சா! என் குழந்தை உயிருடன் இருப்பதற்காக, அடுத்தவள் குழந்தையைப் பலி கொடுப்பதா? வேண்டாம்! அதனால் இந்தக் குழந்தையைக் கொல்லாதே!’ என்ற அடிப்படையிலேயே தடுத்தாள்.

கண்ணன் கதைகள்!

கம்சன் அதைப் பொருட்படுத்த வில்லை. அதைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டான். ‘‘என்னைக் கொல்ல வந்த இதை நான் கொன்றுவிட வேண்டும்!’’ என்று குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து அதன் தலையை கல்லில் அடிக்க ஓங்கினான். அப்போது அவனே எதிர்பார்க்காத ஆச்சரியம் நடந்தது.

அவன் கைகளில் இருந்து விடுபட்ட குழந்தை, ஆகாயத்தில் உயர்ந்து துர்க்காதேவியாகி எட்டு திருக்கரங்களுடன் காட்சி யளித்தாள். அந்தக் கரங்களில் வில், அம்பு, சூலம், கேடயம், கத்தி, சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவை இருந்தன. கந்தர்வர்கள், சித்தர்கள் போன்றோர் அவளை துதித்துக் கொண்டிருந்தனர்.

அம்பிகை, கம்சனை அழைத்து எச்சரித்தாள். ‘‘முட்டாளே! காலத்தை வெல்ல முடியாது. உன்னை அழிப்பவன் பிறந்துவிட்டான். நிச்சயம் உன்னை அழிப்பான். இரக்கம் காட்ட வேண்டிய குழந்தைகளை இனி கொல்லாதே!’’ என்று கூறி மறைந்தாள்.

இந்த இடத்தில், பாகவதமோ நாராயணீயமோ சொல்லாத ஓர் அரும் தகவலை ஒரு மலையாளக் கவிஞர் சொல்கிறார்:

‘ஆகாயத்தில் இருந்த அம்பிகை, ‘‘கம்சா! உன்னை எனது சூலத்தால் நானே குத்திக் கொல்ல முடியும். ஆனால், கொல்ல மாட்டேன். ஏனெனனில், தெரிந்தோ தெரியாமலோ, என் கால்களைப் பிடித்தாய்! திருவடிகளைப் பற்றிய தீயவனுக்கும் அருள் புரியும் தாய் நான். இப்போது c, தப்பித்துப்போ!’ என்று சொல்லி மறைந்தாள்.

கம்சன் மனம் திருந்தினான். ‘அம்பிகை சொன்ன வாக்கு உண்மை. இவர்கள் தோஷம் அற்றவர்கள்’ எனத் தீர்மானித்து, வசுதேவரையும் தேவகியையும் உடனே விடுதலை செய்தான். அவர்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்’ என்று சொல்கிறார் அந்தக் கவிஞர்.

அதெல்லாம் இருக்கட்டும். கோகுலத்தில் யசோதையின் பக்கத்தில் இருக்கும் கண்ணனைத் தேடி எல்லோரும் ஓடி வரப்போகிறார்கள். அதற்குள், நாம் அங்கே சென்று விடலாம், வாருங்கள்!

ஆயர்பாடியில் ஓர் அதிகாலைப் பொழுது. யசோதையின் பக்கத்தில் தன் சின்னஞ்சிறு கால்களை அசைத்தபடி அழுதான் கண்ணன். அதைக் கேட்டு, கோகுலம் முழுவதும் ஆனந்தப் பரவசம் அடைந்தது. அப்போது கண்ணனைக் கண்ட கோகுலவாசிகளின் மனநிலையை பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத் தானென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே
உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே

கண்ணன் கதைகள்!

கோடிசூரிய ஒளியுடன் ஸ்வாமி யைப் பார்த்தவர்கள், ‘இதை நாம் பார்த்தால் போதுமா? ஆயர்பாடி முழுவதும் அல்லவா பார்க்க வேண்டும்?’ என்று, ஆர்வத் துடன் குழந்தைக்கு அருகில் வர வேண்டியவர்கள், வெளியே ஓடுகிறார்கள். கால்கள்தாம் ஓடுகின்றனவே தவிர, மனம் யசோதையின் பக்கத்தில் இருக்கும் கண்ணனிடமே இழுக்கிறது. மனதுக்கும் கால்களுக்குமான இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட உடம்பு ‘பொத்’தென்று விழுகிறது. குதூகலத்தில் கோபியர் போடும் கோஷம், ஆயர்பாடி முழுதும் பரவி எதிரொலித்து, ஒரு பெரிய முழக்கமாக மாறுகிறது.

ஆண்களும் பெண்களுமாக ஏராளமானவர்கள் கண்ணனைக் காண வருகிறார்கள். பாட்டுப் பாடியும் தாளத்துக்கு ஏற்ப ஆடியும் வருகிறார்கள்.

கண்ணனை தரிசித்ததும் அவர்களது நடவடிக்கைகள் மாறின. தங்களது வீட்டு உறிகளை முற்றத்தில் உருட்டி விடுகிறார்கள். தயிர், பால், நெய், வெண்ணெய் போன்றவற்றை ஒருவர் மேல் ஒருவர் பூசியும் தூவியும் விளையா டினர். சுருக்கமாகச் சொன்னால், ‘அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே’ என்கிறார் ஆழ்வார்.

அவர்கள் செய்த காரியங்கள், ‘சித்த சுவாதீனம் இல்லாதவர்கள்’ என்று நினைக்கும்படி இருந்தன.

மனிதனது சாதாரண அறிவுக்கு எட்ட முடியாதவன் பகவான். அவனை உணர வேண்டுமென்றால், அறிவால் ஆவது ஒன்றும் இல்லை. அறிவால் ஆராய்ச்சி செய்பவர், அறிய முடியாத ஸ்வாமியை, கோபியர் தங்கள் உள்ளங்க ளால் விரைவில் நெருங்கி விட்டார்கள். கோபியரைப் போன்ற திடமான பக்தியை நமக்கும் அருளுமாறு, ஆயர்குல அதிபனிடம் வேண்டுவோம்.

மகான்கள் தரிசித்த மாதவன்!

கண்ணன் கதைகள்!

ண்ணனை மடியில் கிடத்தி ஆடையால் மூடி பாலூட்டிக் கொண்டிருந்தாள் யசோதை. கண்ணன் திடீர் திடீரென்று யசோதையின் முகத்தைப் பார்த்துக் கன்னங்கள் குழிய, பொக்கை வாய் திறந்து சிரிக்கிறான். யசோதையும் சிரித்தாள்.

‘குருவாயூரப்பா! நீயும் உன் தாயும் மட்டும் இப்படிச் சந்தோஷப்பட்டால் போதுமா? அதில் எனக்கும் ஒரு பங்கு வேண்டாமா? எனது வாத நோய் போக்கி, என்னையும் சிரிக்க வை!’ என நாராயணீயத்தில், பட்டத்திரி வேண்டுகிறார்.

அதோ! கண்ணன் தூங்கத் தொட்டில் தயாராகிவிட்டது. கண்ணனைத் தூங்க வைப்பது அடுத்த கட்டம். அழகான அந்தத் தொட்டிலைப் பெரியாழ்வார் அமைத்துத் தருகிறார். அதுவும் இந்த உலகத்தில் தயாரிக்கப்பட்ட தொட்டில் அல்ல. பிரம்ம லோகத்தில் இருந்து வந்தது.

மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

(பெரியாழ்வார்)

கண்ணன் கதைகள்!

இந்த உலகம் பிரம்மனின் சிருஷ்டி. உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் ஸ்வாமி மட்டுமே. அவன் உலகத்துக்குள் அடக்கம். ஆனால், உலகமோ அவனுக்குள் அடக்கம். இந்த இரண்டு தத்துவங்களையும் காட்டவே, ஸ்வாமி - வாமனனாக வந்து, பிறகு உலகளந்த பெருமாளாக நின்றான். இது பெரியாழ்வார் நினைவுக்கு வந்தது போலும்! ‘அப்பனே! உனது சாமர்த்தியங்களை எல்லாம், ஏழை யசோதை ஆட்டும் தொட்டிலிலே காட்டி விடாதே! குறளனாக (வாமனனாக) நீ வந்ததும் தெரியும். நெடு(ம்)மாலாகி நீண்டு வளர்ந்ததும் தெரியும். அது பழைய கதையாகவே இருக்கட்டும், இங்கே வேண்டாம்!’ என்று வேண்டிக் கொள்கிறார்.

வைகுண்டம் என்னும் தொட் டிலை விட்டு உலகம் என்னும் தரைக்கு இறங்கியது, அதாவது கிருஷ்ணாவதாரம் எடுத்தது யசோதையின் தொட்டிலில் கிடந்து ஆடுவதற்காக மட்டுமா என்ன? தொட்டிலில் இருந்த கண்ணன் கீழே இறங்கித் தவழ ஆரம்பித்தான்.

கால்களில் கொலுசுகள். கிண்கிணிகள் கட்டிய அரைஞாண் இடுப்பில். கைகளில் காப்பு. தலையின் பக்க வாட்டுகளில் ஒதுங்கி, அழகு மிளிரும் தலைமுடி. அதன் மீது ஒரு மயில் இறகு. இந்தக் கோலத்தோடு கை, கால்களை வேகமாக கண்ணன் அசைக் கும்போது கொலுசுகள், கிண்கிணிகள், காப்புகள் ஆகியவை ‘கல்கல்’ என்று ஒலிக்க கண்ணன் தவழ்ந்தான்.

பலராமனுடன் கண்ணன் தவழ்வதைப் பார்க்க ஆயர்பாடி யில் உள்ள அனைவரும் கூடி விட்டனர். கூட்டத்தைப் பார்த்த குழந்தைகளுக்கு உற்சாகம் பிறந்தது. இருவரும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர். தலை முடி கலைந்தது. ஆபரணங்கள் நழுவின. ‘எல்லோரும் பார்க்கிறார்களே!’ என்று வெட்கத்துடன் குழந்தைகள் சிறு பற்கள் தெரியச் சிரித்தனர்.

கண்ணனும் பலராமனும் மெள்ள மெள்ள நடக்க ஆரம் பித்தனர். அது சாதாரணக் குழந்தைகளின் நடை போல் இல்லை. யானைக்குட்டிகளின் கம்பீரத்துடன் விளங்கியது. அதை பதிவு செய்திருக்கிறார் பெரியாழ்வார். வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! அந்த நடை அப்படியே தெரியும்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்ப
படுமும்மதப் புனல் சோரவாரணம்
பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடைமணி பறை கறங்க
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர் நடை நடவானோ?

கண்ணன் கதைகள்!

குட்டி யானை நடக்கும்போது அதன் காலில் கட்டியுள்ள இரும்புச் சங்கிலிகள், ‘சலார் பிலார்’ என்று சத்தம் எழுப்பும். அதுபோல கண்ணன் நடக்கும்போது, பாதச் சலங்கைகளின் ஓசை கேட்கிறது.

யானையின் கழுத்து மணிகள் போல் அவன் கழுத்து மணிகளும் ‘டாண் டாண்’ என்று ஓசை எழுப்புகின்றன. யானையின் தலையில் இருந்து வழியும் மதநீர் போல, கண்ணன் நடந்து, விழுந்து, எழுந்து போவதால் அவன் உடம்பில் வியர்வை பெருகி வழிகிறது.

ஒரே ஒரு வேறுபாடு. பிரமாண்ட மான உடம்புடன் யானை, நான்கு கால்களால் நடந்து காட்டும் கம்பீரத்தை, சிறிய உடம்புடன் இரண்டு கால்களால் நடந்து காட்டினான் கண்ணன். மற்றொரு வேறுபாட்டையும் காட்டுகிறான் அவன்.

கண்ணன் திடீரென்று சறுக்கி விழுந்தான். மறுபடியும் தானே எழுந்து நடந்தான். ‘என்ன அதிசயம் இது? இதைப் பார்க்க வேண்டும்!’ என்று ஆகாயத்தில் கூடினர் மகரிஷிகள். ஒவ்வொரு முறையும் கண்ணன் விழுந்து எழும்போது, மொத்த ரிஷிகளும் நமஸ்காரம் செய்து கொண்டே இருந்தனர். ஏன்? சேற்றில் கண்ணன் பாதம் பதித்து நடக்கும்போது அந்தச் சேற்றில் ஏதோ ஒன்று தெரிகிறது. என்ன அது?

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்
உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு
எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து

(பெரியாழ்வார்)

என்னதான் மனித வடிவம் எடுத்து வந்தாலும் தெய்வம், தன் பாதரேகைகள், சங்கு, சக்கரம், தாமரை, கலசம், குடை போன்ற தெய்விகச் சின்னங்களை மறைக்க முடியாது. கண்ணன் நடந்த சேற்றில் அவ்வளவும் இருந்தன. ஆகாயத்தில் இருந்த முனிவர் கூட்டம் அவற்றைப் பார்த்துவிட்டு, ‘‘ஆஹா! இந்த கண்ணன் எங்கள் வாசுதேவனே!’’ என்று அவன் திருவடிகளுக்கு வந்தனம் செலுத்தினர்.

சிறகு முளைத்த பறவை, கூட்டில் இருக்குமா? நடக்கத் தொடங்கிய கண்ணன், வீட்டில் இருப்பானா? கிளம்பிவிட்டான். அவனைச் சுற்றி ஒரு பட்டாளமும் போனது. இந்தப் பட்டாளம் எங்கு போகிறது?

கண்ணன் வந்த காரணம்!

கண்ணன் கதைகள்!

ண்ணனுடன் போன கும்பல் விசித்திரமானது. கால் இல்லா தவன், காது கேட்காதவன், பேச முடியாதவன் எனப் பத்து அல்லது பதினைந்து பேர். இவர்கள்தான் கண்ணனின் பட்டாளம்.

ஏழைகள், அநாதை கள், ஊனமுற்றோர், தீனர்கள் ஆகியோரைக் காப்பாற்றிக் கை கொடுத் துத் தூக்கிவிட வந்த அநாதை ரட்சகன் அல்லவா ஸ்வாமி! அவனது பட்டாளம் வேறு எவ்வாறு அமையும்?

சரி! இந்தப் பட்டாளம் எங்கு போகிறது? எதற்காகப் போகிறது? வேறொன்றுமில்லை; வெண்ணெய் திருடத்தான்!.

ஆயர்பாடியில் உள்ள எல்லா வீடுகளிலும் நுழைந்து கண்ணன் வெண்ணெய், தயிர், பால் ஆகியவற்றைத் திருடினான் என்பது எல்லோரையும் பரவசப் படுத்தும் ஒன்று. கண்ணன் ஏன் திருட வேண்டும்?

சாதாரணமாக இல்லாமையே திருட்டுக்கு முக்கியக் காரணமாக இருக்கும். தன்னிடம் இல்லாததை அடுத்தவரிடம் திருடுவது திருடர்களின் பழக்கம். இதன்படி, கண்ணனிடம் எது இல்லை?

கண்ணன் கதைகள்!

கண்ணனிடம் இல்லாதது உள்ளத்தில் அழுக்கு! மற்றவர் களிடம் அது நிறைய இருக்கும். அவர்கள் உள்ளத்தோடு அந்த அழுக்கையும் சேர்த்துப் பறிக்கக் கிளம்பிய கண்ணனை, இதனால்தான் மகான்கள் ‘சித்த சோரன்’ என்று அழைத்து ஆனந்தப்படுகிறார்கள்.

கண்ணனை தெய்வமாகப் பார்க்காமல், யசோதையின் குழந்தையாகப் பார்த்தால், பால்- தயிர்- வெண்ணெய் போன்றவற்றை கண்ணன் திருடக் காரணம், யசோதையின் சிக்கன புத்திதான் என்கிறார்கள் மகான்கள்.

அதன் விரிவு: ஸ்வாமி கிருஷ்ணாவதாரம் எடுத்ததே வெண்ணெய் சாப்பிடத்தான். வைகுண்டத்தில் ஓயாமல் பூஜை செய்து அமிர்தத்தை நைவேத்தியம் செய்து ஸ்வாமிக்கு சலிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். ‘எத்தனை நாள்தான் அமிர்தத் தையே சாப்பிடுவது?’ என்று ஸ்வாமி நினைத்தார்.

ஒரு நாள்... வைகுண்டத் தில் வழக்கமான பூஜைகள் நடந்தன. அப்போது பூமி யில், யசோதை காய்ச்சிய வெண்ணெயின் வாசனை வைகுண்டத்தை அடைந்தது.

அவ்வளவுதான் ஸ்வாமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘திகட்டிப்போன இந்த அமிர்தத்தை விட்டுவிட்டு, ஒரு நொடிப் பொழுது பூமிக்குப் போய், அந்த வெண்ணெயை விழுங்கி வரலாமே! இதற்காக ஓர் அவதாரம் எடுத்தாலும் பரவாயில்லை!’ என நினைத்தாராம் ஸ்வாமி.

கண்ணன் கதைகள்!

அதிலும் ஒரு சங்கடம். பூஜை நடக்கும்போது பாதியில் தான் மறைந்து போனால், அங்குள்ள பக்தர்களின் மனம் கஷ்டப்படும். அவர்கள் ஒரு நொடிப் பொழுது கண்களை மூடித் திறந்தால் போதும். அதற்குள் ஓர் அவதாரம் எடுத்து பூமிக்குச் சென்று வெண்ணெயை விழுங்கி விட்டு வரலாம். ஆனால், அந்தப் பக்தர்களோ இமை கொட்(மூ)டாதவர்கள். என்ன செய்வது? இக்கட்டான நிலை ஸ்வாமிக்கு.

அதே நேரத்தில்... அலங்காரம் முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு வாசனை தூபம் காட்ட ஆரம்பித்தனர். மேக மண்டலத்தைப் போன்ற அந்த தூபப் புகை, ஒரு கண நேரம் ஸ்வாமிக்கும் பக்தர்களுக்கும் இடையே திரை போட்டது போல் இருந்தது. ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்!’ என்று தீர்மானித்த ஸ்வாமி, பூமியிலே இறங்கி ஓர் இரவில் ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர ஆயர்பாடி வந்து, ஆசை தீர வெண்ணெயைத் தின்று, பலவிதமான லீலைகள் செய்து கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்டு, தனது இருப்பிடமான வைகுண்டத்துக்குத் திரும்பி விட்டார். நடந்தது எதையும் அறியாத பக்தர்கள், தூபம் முடிந்ததும் தீபம் காட்டினர்.

‘காலத்துக்கு அப்பாற் பட்டவன் கடவுள்’ என்னும் இந்த அற்புதமான தத்துவத் தைக் கொண்ட கருத்தமைந்த நம்மாழ்வாரின் பாடல் இது:

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அத்தூபம் தராநிற்கவே
அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு
உண்ணப்போந்து இமிலேற்றுவன்கூன்
கோட்டியை ஆடினை கூத்து
அடலாயர்தம் கொம்பினுக்கே

கண்ணன் கதைகள்!

வெண்ணெய் சாப்பிடுவதற்காக ஆயர்பாடியை நாடி வந்த கண்ணனுக்கு, ஏதும் அறியாத யசோதை வேண்டிய அளவு வெண்ணெய் கொடுக்காததால் தான், கண்ணன் வீடுதோறும் வெண்ணெய் திருடக் கிளம்பினான். நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளப் போகும் கண்ணனின் அந்த வெண்ணெய்த் திருட்டை, யசோதையின் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

ஒரு நாள்... யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதையின் அருகிலேயே படுத்திருந்தார் ஸ்வாமி.

அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில்லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டிப் பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன்.

‘‘அம்மா! இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும்கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான்.

யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவது வெண்ணெய் என்று தெரியாதவன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப்பானையிலும் தோன்றும். கண்ணா. நீ இங்கே பக்கத்தில் நிற்காதே. தள்ளி தூரமாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள்.

கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றால், இவள் அதற்கும் மேலாக பதில் சொல்கிறாளே!’ என்று எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.

‘‘அம்மா! அது பூதம் என்றால் ஆளை விழுங்கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்கலாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங்குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடுத்து விடு. நான் விழுங்கி விடுகிறேன். நாம் இருவருமே தப்பிக்கலாம்!’’ என்றான் கண்ணன்.

‘இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம்கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள்.

‘‘இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந்து முடிக்கிற வரையில் நீ ஆடினால் வெண்ணெய் தருவேன். நான் இடக் கையால் மத்துக் கயிற்றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வேண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படித் தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை.

அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப்படியே ஆடினான். ‘குழந்தைக்குக் கால் நோகுமே’ என்ற எண்ணம் இல்லாதவளைப் போல, யசோதை தன் போக்கில் வேகவேகமாகக் கடைந்து கொண்டிருந்தாள்.

கண்ணன் கதைகள்!

அந்த வேகத்துக்கும் ஈடு கொடுத்து ஆடினான் கண்ணன். அவன் கால்களை மாற்றுவது கண்ணுக்குத் தெரியவில்லை. எப்போதும் ஒரு கால் உயரத் தூக்கியபடியே தெரிந்தது. வியர்க்க, விறுவிறுக்கக் கண்ணன் ஆடிய அந்த நாட்டியத்துக்கு அபூர்வமான ஒரு பெயரைச் சூட்டினார்கள் மகான்கள்.

கண்ணன் ஆடியது பரத நாட்டியமோ, கதகளியோ, குச்சுப்புடியோ, மணிபுரியோ அல்ல. அண்ட சராசரங்களை ஆட்டிப் படைக்கும் ஸ்வாமி, ஒரு கை வெண்ணெய்க்காக ஆடியதை ‘நவநீத நாட்டியம்’ என்கிறார்கள்.

யசோதை கடைந்து முடித்தாள். ஸ்வாமியும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, கோயிலில் பிரசாதத்தை எதிர்நோக்கும் பக்தனைப் போல, யசோதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஒரு யானைத் தலை அளவுக்கு வெண்ணெய் தருவாள் அம்மா!’ என்ற எதிர்பார்ப்பு.

யசோதையோ ஒரு கடுக்காய் அளவுக்குச் சிறிய வெண்ணெய் உருண்டையுடன் கண்ணனை நெருங்கினாள்.

அதற்குள் ஸ்வாமி ஒரு தந்திரம் செய்தார். ‘அதை, குறைந்த பட்சம் இரண்டு கடுக்காய் அளவுக்காவது ஆக்கிவிடலாம்!’ என்ற எண்ணத்தில் ஒரு தூணின் பக்கத்தில் போய் நின்றார். அந்தத் தூண் அவ்வப்போது வெண்ணெய்க் கையைத் தடவித் தடவி, கண்ணாடி போலப் பளபளத்தது. அதில் தெரிந்த வடிவத்தையும் சேர்த்து, இரண்டு கண்ணன் நிற்பதைப் போல இருந்தது. ‘இரண்டு கண்ணனுக்கு இரண்டு வெண்ணெய் உருண்டை களைக் கொடுப்பாள் யசோதை!’ என்பது ஸ்வாமியின் எண்ணம்.

ஸ்வாமிக்கு இவ்வளவு இருந்தால், ஸ்வாமியை வளர்த்து அவன் லீலைகளையெல்லாம் அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு எவ்வளவு இருக்கும்?

ஸ்வாமியின் லீலையில் தன்னை மறந்தாள் யசோதை. ‘நமக்கு இரண்டு கண்ணன்கள் போலிருக்கிறது. இந்த இருவருக்குமே வெண்ணெய் தர வேண்டும்’ என நினைத்தாள்.

‘ஆஹா! நமக்குத்தான் வெற்றி!’ என சந்தோஷப்பட்ட ஸ்வாமி ஆசை யாகக் கை நீட்டி னார்.

எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் யசோதை. தன் கையில் வைத்திருந்த கடுக்காய் அளவு வெண்ணெயை இரண்டு பங்காக்கி, அதை இருவருக்கும் கொடுத்தாளாம்

(த்விதா விதேன நவநீத மேகம்).

ஸ்வாமிக்குக் கோபம். ‘ஊஹும்! கெஞ்சிக் கேட்டால் இவள் தரமாட்டாள். திருடத்தான் வேண்டும்!’ என்று தீர்மானித்தார். அது எவ்வாறு செயல் வடிவம் பெற்றது என்பதை திருமங்கை மன்னன் சொல்கிறார்.

பாற்கடலா! மோர்க்கடலா!

கண்ணன் கதைகள்!

டிய களைப்பால் தூங்கு பவனைப் போல, அங்கேயே படுத்துவிட்டான் கண்ணன். பொய்த் தூக்கம்.

‘பாவம் குழந்தை. தூங்கட்டும். நாம் வேலையைப் பார்ப்போம்!’ என்று, வெண்ணெயை ஒரு பானைக்குள் போட்டு மூடிய யசோதை, அதன் பக்கத்திலேயே தயிரையும் மோரையும் வைத்து விட்டு அடுப்பங்கரைக்குப் போனாள்.

அதற்காகக் காத்திருந்தவன் போல, பொய்த் தூக்கம் தூங்கிய ஸ்வாமி, மெள்...ளக் கண் திறந்து பார்த்தான். அதே இடத்தில் கிடந்தபடி கையை நீட்டிப் பானையில் இருந்த வெண்ணெய் முழுவதையும் விழுங்கினான். பானை காலியானதும் அடுத்த பானையை எட்டிப் பார்த்தான்.

கண்ணன் கதைகள்!

கண்ணனுக்குக் கடுங்கோபம் வந்தது. அதில் தயிர்கூட இல்லை; மோர்தான் இருந்தது. பிறகு கோபம் வராதா?

‘நான் உலாவும் இந்த ஆயர்பாடியில், பால் வற்றிய பசுக்கள் கூட காமதேனுவாக மாறி, ஏராளமாகப் பால் பொழிகின்றன. அப்படியும் என் தாயாருக்கு ஏன் இந்த புத்தி? தயிரில், ஏன் தண்ணீரைக் கலந்து மோராக வைத்திருக்கிறாள்?’ என்று கோபமாக எட்டி உதைத்தார் ஸ்வாமி. பானை உடைந்து, அறை முழுவதும் மோர் பரவியது.

சத்தம் கேட்டு யசோதை ஓடி வந்தாள். ஆஹா! அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்ல? சனகாதி யோகிகளுக்கும் நாரதாதி முனிவர்களுக்கும் கிடைக்காத அற்புத தரிசனம் அப்போது யசோதைக்குக் கிடைத்தது. அவர்களெல்லாம் ஸ்வாமியை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாகப் பார்த்தார்கள். ஆனால், யசோதையோ, உடைந்த குடத்துடன் அறை முழுவதும் பரவியிருக்கும் மோர்க்கடலின் நடுவில் முழுகிக் கிடந்த ஸ்வாமியைப் பார்த்தாள்.

இந்தக் கருத்தைச் சொல்லும் பாடல்:

ஓராதவன் போல் உறங்கி அறிவுற்றுத்
தாரார் தடந்தோள்கள் உள்ளளவுங் கைந்நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போற்க் கிடந்தானைக் கண்டவளும்

தேயும் நிலவே! தேயாத நிலவைப் பார்க்க வா!

கண்ணன் கதைகள்!

ண்ணன் செய்த அனைத்தை யும் மன்னித்தாள் யசோதை. பாசமும் பரிவும் காட்டினாள். எத்தனையோ பாக்கியங்களை யசோதைக்கு வாரி வழங்கிய கண்ணனின் அருளுக்கு, யசோதையின் பரிவு ஈடாகாது என்பது மகான்களின் கருத்து. எனவே, இப்படிப்பட்ட கண்ணனைப் பல விதங்களிலும் பக்திப் பரவசத்துடன் அனுபவித்தி ருக்கிறார்கள் மகான்கள் பலர். அதில் ஒன்று.

மெல்லியதாக இருள் கவிழ்ந்த மாலை நேரம். ஆயர்பாடி அடங்கி விட்டது. குடிசைகளில்கூட அகல் விளக்குகள் அணைக்கப் பட்டன. தொழுவங்களில் மாடுகள் தலை அசைக்கும்போது எழும் மணியோசை கேட்டது. அருகில் பாயும் யமுனையாற்றின் சலசலப்பு. வீடுகளில் தூளிகளில் கிடந்த குழந்தைகளின் அழுகுரல். தொடர்ந்து பெண்களின் தாலாட்டு. கோவர்த்தன மலையின் மறு புறம் பயமற்றுத் திரிந்த விலங்குகளின் குரல்கள். நன்றாக இருட்டியதும் ஆயர்பாடியே தூங்கி விட்டது.

‘இதுதான் நல்ல நேரம். நான் கண்ணனைக் காண வருகிறேன்’ என்பது போல் ஆகாயத்தில் சந்திரன் வந்தான். கோகுலத்தின் வீதிகளில் நிலா வெளிச்சம். ஆனால், வீட்டுக்குள் எல்லாம் இருட்டு. ஒரே ஒரு வீட்டில் மட்டும் உள்ளேயும் வெளி யேயும் வெளிச்சம்.

அது யசோதையின் வீடு. கண்ணனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் யசோதை. பிள்ளைக்கு நிலா காட்ட அல்ல. தேய்ந்து வளரும் நிலாவுக்கு, தேயாத நிலவான தன் மகன் கண்ணனின் முக மண்டலத்தைக் காட்டுவதற்காக.

தன் முகத்துச்சுட்டி தூங்க
தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணியார்ப்பப்
புழுதியளைகின்றான்
என் மகன் கோவிந்தன்
கூத்தினை இளமா மதீ
நின்முகம் கண்ணுளவாகில்
நீ இங்கே நோக்கிப் போ

-பெரியாழ்வார்

கண்ணன் கதைகள்!

‘சந்திரனே! உன் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தால், அவற்றைப் பெற்ற பலனடைய, நீ வந்து என் பிள்ளையைப் பார்த்து விட்டுப் போ!’ என்று யசோதை யின் பெருமிதம் சந்திரனுக்குக் கட்டளை இடுகிறது.

பலப்பல சொல்லியும் சந்திரன் இறங்கி வரவில்லை. சற்று வேகத்தைக் கூட்டினாள் யசோதை. ‘‘சந்திரனே! சிறுபிள்ளை என்பதால் என் மகனை அசட்டை செய்கிறாயா? உண்மையிலேயே இவன் சின்னப்பிள்ளைதானா என்று மஹாபலியிடம் கேட்டுப் பார்!’’ என்கிறாள்.

சந்திரன் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஸ்வாமி சாதாரண மனிதனாகத் தன்னைக் காட் டிக் கொண்ட ராமாவதாரத்தில் கூப்பிட்ட உடன் வராததற்காக சமுத்திரராஜன் என்ன பாடு பட்டான்? இதுவோ முழுமையான அவதாரம். நமக்கு எதற்கு வம்பு? போய்ப்பார்த்து விடுவோம்!’ என்று தீர்மானித்து, ஆயர்பாடியை நோக்கி இறங்கினான்.

சிறிய கிராமமான கோகுலத்தில் சந்திரன் திடுமென்று வந்து இறங்கினால்... யசோதையால் பார்க்க முடியுமா என்ன? அவள் மயக்கம் போட்டு விழுந்தாள்.

பழம் போல் கண்ணன் கையில் வந்து சேர்ந்தான் சந்திரன். சந்திரன் இவ்வாறு நிலை பெயர்ந்தால் மகாபிரளயமே உருவாகும்.

அடுத்த விநாடி... கண்ணன் விஸ்வரூபம் எடுத்து, பிரபஞ்சம் முழுவதும் பரவிப் பிரளயத்தைத் தடுத்தான். அப்போது ஒரு சிறிய பொம்மை மாதிரி சந்திரனைத் தன் திருக்கரத்தில் தாங்கி நின்றான். பிறகு சந்திரனை மறு படியும் வானவெளிக்கு அனுப்பிவிட்டு, ஒரு சில நொடிகளில் குழந்தை வடிவம் ஆனார் ஸ்வாமி.

இவ்வளவும் யசோதை வீட்டு நிலா முற்றத்தில் நடந்தன. ஆனால், எதையும் பார்க்க முடியாமல் அவள் மயங்கி விழுந்தி விட்டாளே!

யசோதையின் மயக்கம் தெளிந்தது. ‘இந்த நிலா இன்றைக்கு, மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. நானே மயக்கம் போட்டேன் என்றால், கண்ணனின் கதி என்ன ஆகும்? போதும்! போதும் நிலவைப் பார்த்தது! உள்ளே போய்த் தூங்கலாம்!’ என்று தீர்மானித்து கண்ணனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே போனாள். கண்ணனும் சாதுவாக ஒன்றும் தெரியாதவன் போல, யசோதையின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டான். அந்த கண்ணன் நம் உள்ளத்திலும் நுழையட்டும்! நலங்களை யெல்லாம் வழங்கட்டும்!

திருடியது யார்?

கண்ணன் கதைகள்!

ண்ணனை நினைத்தால், அவன் தனது பதினோரு வயது வரை செய்த லீலைகள்தான், எவர் மனத்திலும் அரியாசனம் போட்டு உட்காரும். கண்ணனின் பால பருவ லீலைகள், சாதாரண மனிதர்களான நம்மைவிட சுகாச்சார்யார், லீலாசுகர், வேதாந்த தேசிகர், நாராயணப் பட்டத்திரி போன்ற மகான்கள் மற்றும் ஆழ்வார்கள் பலரை அதிகமாகக் கவர்ந்துள்ளன. இப்படிப்பட்ட கண்ணனின் லீலைகளை வருங்காலத் தலைமுறைகள் அறிந்து ஆனந்தம் அடைவதற்காக, அவற்றைப் பல்வேறு முறைகளில் வெளியிட்டுள்ளனர் அந்த மகான்கள்.

கண்ணனின் லீலைகளில், குறிப்பிடத் தக்கது வெண்ணெய் திருடியது. கண்ணன் வெண்ணெய் திருடியதற்கான காரணத்தைப் பார்த்த நாம், நாராயணப் பட்டத்திரி சொல்லும் காரணத்தைப் பார்ப்போம்.

கண்ணன் கதைகள்!

அவர், கண்ணனின் பழைய அவதாரங்களிலிருந்து தொடங்குகிறார். ‘குருவாயூரப்பா... மஹாபலிச் சக்ரவர்த்தி பலம் வாய்ந்தவன். அவனிடம் திருட முடியாது. யாசிக்கத்தான் வேண் டும். ஆனால், கோபிகைகள் அபலைகள். அவர்களிடம் தைரியமாகத் திருடலாம் என்றுதான், யாசிக்காமல் விசித்திரமான முறையில் தயிரையும் வெண்ணெயையும் திருடினீர்களா?’ என பக்தியோடும் உரிமையோடும் கேட்கிறார்.

மேலும் தொடர்கிறார். ‘குருவாயூரப்பா... தங்களது தயிர்- வெண்ணெய்த் திருட்டினால் கோபிகைகள் கோபமோ, வருத்தமோ அடையவில்லை. மட்டுமின்றி தாங்கள், கோபிய ரின் உள்ளங்களைக் கவர்ந்து, அவர்களை ஆனந்தக் கடலி லும் மூழ்க அடித்தீர்களே? குருவாயூரப்பா... வெண்ணெய் திருடும் காரணத்தால் வீடுகள் தோறும் நுழைந்து, அவர்களின் உள்ளத்தில் ‘ஆனந்தம்’ என்னும் விலையுயர்ந்த பொக்கிஷத்தையும் அல்லவா வழங்கியிருக்கிறீர்கள்?’ என்கிறார் பட்டத்திரி.

‘இதன்படி, நாரதர் முதலான பாகவத உத்தமர்களின் ஏகபோக பாக்கியமான பரம்பொருளை, சின்னஞ்சிறிய இடமான ஆயர் பாடியில் இருக்கும் தங்களது வீடுகளுக்கு தினந்தோறும் வரவழைத்து, ‘பிரும்மானந்தம்’ எனும் அமிர்த ரசத்தை அளவில்லாமல் குடித்த கோபிகையர் அல்லவா உண்மையில் திருட்டுக் குற்றம் செய்தவர்கள். திருட்டுக் கொடுத்தவன் அல்லவா ஸ்வாமி?’ என்கிறார் மகான் ஒருவர்.

அதோ! ஸ்வாமி தன் கும்பலுடன் மறுபடியும் திருடக் கிளம்பிவிட்டார். இந்தத் தகவல், கோகுலத்தின் வீதிகளில் எல்லாம் பரவியது. அதனால் முடிந்தவரையில் அவர்கள் தங்களது வீட்டைப் பாதுகாத்துக் கொண்டனர்.

வீட்டின் பின்புறம் போய் பால் கறந்தால், கண்ணன் வருவது தெரியாமல் போகுமே என்று கருதி பெண் ஒருத்தி, வீட்டின் வாயிற் பக்கத்திலேயே மாட்டைக் கட்டிப் பால் கறந்தாள்.

கண்ணன் அவள் முன்னால் வந்து நின்றான். ‘எப்போதும் பத்துப் பேருடன் சுற்றுபவன், இப்போது தனியாக வந்திருக்கிறானே! என்ன நடக்கப் போகிறதோ?’ என்று பயத்துடன், அவள் கண்ணனைப் பார்த்தவாறே பால் கறந்தாள். கண்ணனும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தான்.

‘இவன் கள்ளன்; ஏதாவது செய்து விடுவானோ!’ என்று கண்ணனின் கருணை முகத்தையே பார்த்தாள் அவள்.

கண்ணன் கதைகள்!

கண்ணனின் விழிகளும் சற்றே குனிந்திருந்த திருமேனியும் இரு திருவடிகளும் அவற்றில் ஊன்றியிருந்த இரு கைகளும் அவள் மனதைக் கொள்ளை கொண்டன. பால் கறப்பது நின்றுவிட்டது. கைகள் ஆட வில்லை, அசையவில்லை. அவனது வடிவழகையே விழுங்கிக் கொண்டிருந்தன அவள் கண்கள். இவ்வளவும் ஒரு சில நொடிகளில் நடந்தன.

வீட்டுக்குள் ‘கடபுடா’ என்று பானைகள் உடையும் சத்தம். ஒன்றும் புரியவில்லை. ‘கண்ணன் இங்கே இருக்கும் போது உள்ளே என்ன சத்தம்?’ என்று குழம்பினாள். உடனே உட்புறம் ஓடினாள்.

அங்கே... பாலும் தயிரும் ஆறாக ஓடின. அங்கொன்றும் இங் கொன்றுமாக உடைந்த பானைத் துண்டுகள் அசைந்தன. கண்ணனின் நண்பர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.

அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. ‘‘இனி உங்களை விட்டு வைக்கப் போவதில்லை!’’ என்று கத்தியபடி ஓடினாள். அது பலனளிக்கவில்லை. அங்கிருந்த வர்கள், கொல்லைப் புற வழியாகப் பறந்துவிட்டனர். ‘அவர்கள் தப்பித்து விட்டார்களே!’ என்ற ஆற்றாமை, வாயிலில் இருந்த கண்ணன் மேல் திரும்பியது.

‘‘கள்ளக் கண்ணா! நண்பர் களை வீட்டுக்குள் அனுப்பி விட்டு, ஒன்றும் தெரியாதவனைப் போல வாசலில் என்னை வேவு பார்த்தாயா? இதோ வருகிறேன். வசமாக மாட்டிக் கொண்டாய்!’’ என்றபடி வெளியே ஓடி வந்தாள்.

கண்ணன் கதைகள்!

அங்கே கண்ணன் இல்லை. போகும்போது கன்றுக்குட்டியை யும் அவிழ்த்து விட்டிருந்தான். அது, தன் இஷ்டம் போல தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் உள்ளே ஓடினாள். ‘கண்ணன் வந்திருப்பானோ?’ என்று திரும்பவும் வெளியே வந்தாள். இப்படியே அலைந்தாள்.

‘வாழ்க்கைக் களேபரத்தில் அகப்பட்ட ஜீவன், அதிலிருந்து மீள்வதற் காக தெய்வத்தைத் தேடி அலைவதையும் வாழ்க்கைக் களேபரம் மறுபடியும் அந்த ஜீவனை உள்ளே இழுப்பதையும் ஜீவன் மீண்டும் தெய்வத்தைத் தேடுவதுமாக இருக்கும் உலக இயலைச் சுட்டிக் காட்டுவது போல அந்த நிகழ்ச்சி இருந்தது!’ என்கிறார் மகான் ஒருவர்.

தேடுபவர்களின் கண்களில் சிக்காதிருப்பதும், தேடாதவர் களைத் தேடிப்போய் அருள் செய்வதும் தெய்வத்தின் இயல்பு. அதை நிரூபிப்பது போல் கண்ணனும் அவன் தோழர்களும் அடுத்த தெருவில் நுழைந்து விட்டனர்.

ஸ்வாமியே செய்த பால் அபிஷேகம்!

கண்ணன் கதைகள்!

‘இ ன்று கண்ணன் வந்தால், எப்படியும் பிடித்துவிட வேண்டும்!’ என்று எண்ணினாள் கோபிகை ஒருத்தி.

பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை வைத்திருக் கும் உறியில் ஒரு மணியைக் கட்டினாள். ‘யாராவது வந்து கை வைத்தால், இந்த மணி ஒலிக்கும். இதிலிருந்து அவன் தப்ப முடியாது!’ என்று தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். பொறி, புலன்களை வென்றவர்க்கே சுலபத்தில் அகப்படாத ஸ்வாமி, இந்தப் பொறியிலா அகப்படுவார்!

கண்ணன், கோஷ்டியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். உறியைப் பார்த்தான். கை எட்டாத உயரத்தில் உறி! அங்கிருந்த பலகைகளை எடுத்து அடுக் கினர். அந்தப் பலகைகளின் மேல் ஒருவன் ஏறி நிற்க, அவன் தோள் மேல் அடுத்தவன் ஏற, ஏணி ஒன்று உருவானது. உறியை நெருங்கிய கண்ணனின் கண்களில், மணி தென்பட்டது.

விஷயம் புரிந்தது. கண்ணன், ‘பளிச்’சென்று மணியின் நாக்கை ஒரு கையால் பிடித்தான். மணி மௌனமானது. மறு கையால் பானையின் கீழ்ப்பகுதியை உடைத்தான். அருவி போல் பாலும் தயிரும் கொட்டின. அள்ளி அள்ளி அனைவரும் குடித்தனர். உறிஞ்சிக் குடிக்கும் அந்த ஓசை கூட வெளியில் கேட்கவில்லை.

வெளியே தன் வேலையை முடித்து விட்டு, ‘யப்பாடா... மணி சத்தம் கேட்கவில்லை!’ என்ற எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளே நுழைந்தாள் கோபிகை. அங்கு ஒரு கும்பல் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைக் காலி செய்து கொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். மணி அடிக்காதது எதனால் என்று புரிந்தது.

அதற்குள் நண்பர்களின் தோளில் இருந்த கண்ணன் ‘தொப்’பென்று கீழே குதித்தான். தன் வாயிலிருந்த பாலை, அப்படியே கோபிகையின் முகத்தில் உமிழ்ந்தான். முகத்தைத் துடைத்துவிட்டுப் பார்த்தபோது கண்ணனும் அவன் நண்பர் களும் அங்கு இல்லை. தான் கட்டிய மணியைப் பரிதாபமாகப் பார்த்தாள் கோபி.

இங்கு சாமர்த்தியமாகத் தப்பிய கண்ணன் அடுத்த இடத்தில் அகப்படப் போகிறான். என்ன சொல்லி அங்கே சமாளிக்கிறான் என்று பார்ப்போம்!

இறக்கி விடேன்!

கண்ணன் கதைகள்!

ண்ணன் அந்த வீட்டில் வெகு ஜாக்கிரதையாக நுழைந்தான். உடன் வந்தவர் களும் ஓசை எழுப்பாமல் அவனைப் பின்தொடர்ந்தனர். கதவு முழுவதுமாகத் திறந்து இருந்ததால், எல்லோரும் ஒன்றாகப் போய் வழக்கப்படி உறியை நெருங்கினர்.

‘வீட்டில் யாரும் இல்லை’ என்பது அவர்களது எண்ணம். ஆனால், இவர்களது வருகையை எதிர்பார்த்து, கதவைத் திறந்து வைத்துவிட்டு அதன் பின்னால் ஒளிந்திருந்து இவர்களது செயல் களைக் கவனித்தாள் அந்த வீட்டு கோபிகை. ‘உறியில் கை வைக் கட்டும். தப்ப முடியாதபடி பிடித்து விடுவது!’ என்று அவள் தீர்மானித்தாள்.

இங்கும் உறி, உயரத்தி லேயே இருந்தது. முன்பு போலவே, பலகைகளை அடுக்கி அதன் மேல் ஏறிய கோபாலச் சிறுவர்கள் ஒருவர் தோளில் மற்றொருவர் ஏறி நிற்க... வழக்கம்போல் ஏறி உறியைப் பிடித்தான் கண்ணன்.

‘இதுதான் நல்ல சந்தர்ப்பம். இல்லாவிட்டால், தப்பித்து விடுவார்கள்’- என்றெண்ணிய கோபிகை, கண்ணனையும் அவன் குழுவினரையும் நெருங்கினாள்.

கண்ணன் கதைகள்!

‘‘கண்ணா! வந்து விட்டாள்!’’ எனக் கூச்சலிட்ட கோபாலச் சிறுவர்கள் அப்படியே வெளியேறி ஓடிவிட்டனர். அவர்கள் தோள் மீது ஏறி, உறியைப் பிடித்த கண்ணன், அப்படியே தொங் கினான்.

‘வசமாக அகப்பட்டு விட்டான். இவன் கீழே இறங்க முடியாது!’ என்று சந்தோஷத்துடன் கண்ணனை நெருங்கி, தன் இடுப்பில் கை வைத்தபடி நிமிர்ந்து பார்த்து, ‘‘யாரடா நீ?’’ என்று மிரட்டல் குரலில் கேட்டாள்.

‘இதைத் தெரிந்து கொள்ளத்தான் வேதங்களும் உபநிடதங் களும் சாஸ்திரங்களும் என்னை ஆராய்கின்றன. இதை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாளே இவள்!’ என்று நினைத்த கண்ணன் சொன்னான்: ‘‘பலராமன் தம்பி!’’

‘‘எனது வீட்டுக்குள் ஏன் வந்தாய்?’’

‘‘எங்கள் வீடு என்று நினைத்து விட்டேன்!’’

‘‘நல்ல பதில்தான். சரி, உறியில் உள்ள வெண்ணெய்ப் பாத்திரத் தில் உனக்கு என்ன வேலை?’’

‘‘அம்மா... சொன்னால் நம்பமாட்டீர்கள். எங்களது கன்றுக்குட்டியைக் காணோம். தேடிக் கண்டுபிடிக்கச் சொன் னாள் என் தாயார். எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். காணோம். ஒருவேளை இந்த உறியில் இருக்குமோ என்னவோ? இங்கும் தேடிப் பார்க்கலாம் என்று ஏறினேன்!’’

(கண்ணனுக்கும் கோபிகைக்கும் இடையே நடந்த இந்த உரை யாடலை நினைத்தாலே போதுமே. தனியாக வேறு தவம் வேண்டுமா என்கிறார் தலை சிறந்த பக்தரான லீலாசுகர்).

‘‘இறங்கு!’’ என்றாள் கோபிகை.

‘‘இறக்கி விடேன்!’’ - கண்ணன்.

‘‘இதற்கு மட்டும் என் உதவி வேண்டுமா?’’

‘‘ஆமாம்!’’

‘எல்லோரையும் உயர்ந்த நிலைக்கு ஏற்றி விடுவது எனது வேலை. உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலைக்கு இறக்கி விடுவது மனிதர்களது வேலை’ என்று நினைத்தானோ கண்ணன்?

எது எப்படியோ, நாம் பள்ளத்தில் விழுந்து விடாமல், நம்மைக் கைதூக்கி உயர்த்த வேண்டும் என்று மாயக்கண்ணனிடமே வேண்டுவோம்.

கண்ணன் கதைகள்!
அடுத்த கட்டுரைக்கு