Published:Updated:

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

ஈசனின் திருத்தலங்கள்!
தேவாரத் திருவுலா!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- டாக்டர் சுதா சேஷய்யன்

தேவாரத் திருவுலா!

திகாலைப் பொழுது. இன்னமும் கதிரவக் கீற்றுகள் முழுவதுமாகப் படரவில்லை. எனினும், அல்லோல கல்லோலப்பட்டது, கங்கையில் புனிதமாய காவிரி ஆற்றங்கரை. ஆங்காங்கே அரவமும் மக்கள் நடமாட்டமும் இருந்தாலும், காவிரிப் பெண் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தாள். சில இடங்களில், தன்னுடைய ஜில்லென்ற தண்ணீரைப் பாறைகளில் மோதி, மெலிதான கிங்கிணி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

காவிரித் தாயின் அபிமான மகன் உறையூர்ச் சோழன் மாவளத்தான் மாதடக்கை கமலச் செம்பியன் பெருநற்கிள்ளி, காவிரி நீராட வரும் காலைப் பொழுது. அருமந்த மகன் வருவதற்காக ஆற்றுத் தாயும் காத்திருந்தாள்.

‘‘மாமன்னர் கோப்பெருநற்கிள்ளி வாழ்க! வாழ்க!’’
‘‘மாவளத்தான் மாதடக்கை செம்பியன் வாழ்க! வாழ்க!’’

கட்டியக்காரனின் குரல் முரசைவிட வேகமாக முழங்க, உறையூர்ச் சோழ மன்னர் நீராட வந்தார்.

தேவாரத் திருவுலா!

‘‘காவிரியம்மா!’’ என்று கன்றின் அன்போடு அழைத்துக் கொண்டே, ஆற்றுக்குள் இறங்கினார். காவிரியும் தன் மகிழ்வைத் தெரிவிப்பதற்கு, மன்னர் மீது நீரை வாரித் தெளிக்க, குள்ளக் குளிரக் குடைந்து நீராடினார் மன்னர். நீராட்டம் முடித்துக் கரையேற யத்தனித்தார்.

‘‘அந்தோ! இதென்ன... கழுத்தில் அணிந்திருந்த முத்துச்சரம் எங்கே?’’

மன்னரின் முத்துச்சரத்தைக் காவிரி கழற்றி விட்டாளோ? விலையுயர்ந்த முத்துச்சரமாயிற்றே.... கரையேற மாட்டாமல் மன்னர் தவித்தார்.

‘காவிரியணீம்மா! ஏனம்மா ஆரத்தைக் கழற்றினாய்? ஆனைக்கா அண்ணலுக்கு அணிவிக்கக் கருதினாயோ தாயே?’

மன்னர் மனதினுள் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைய... ‘‘ஆனைக்கா அண்ணலே! அந்த மாலையை ஏற்றுக் கொள் ஆதிநாயகனே!’’ என்று உள்ளக் கிடக்கையை வாயார வெளிப்படுத்தினார்.

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

தி ருவானைக்கா திருக்கோயிலின் கருவறை. தலை தாழ்த்திக் கை குவித்து மன்னர் மாவளத்தான் நிற்க.... அருள்மிகு வெண்ணாவலீசருக்குத் திருமஞ்சனம் நடந்தேறிக் கொண்டிருந்தது.

‘கிலிங்... கிலிங்...’ ஈசனைத் திரு மஞ்சனமாட்டிக் கொண்டிருந்த ஜம்புநாத குருக்கள் எதுவும் புரியா மல் விழித்தார்.

அதே நேரம் _ மாவளத்தானும் கண் திறந்து நோக்க... மன்னரின் பரிவாரமெல்லாம் பார்த்துக் கொண் டிருக்க... திருமஞ்சனக் குடத்திலிருந்து குருக்கள் நீர் வார்க்க....

‘அட! இதென்ன பளபளப்பு... என்னது அது, வெள்ளை வெள்ளை யாக?!’

குடத்துக்குள்ளிருந்து முத்துமாலை விரைந்து வந்து பரமேஸ்வரன் திரு மேனியில் பாங்கொளி சேர்த்தது!

மாவளத்தான் திக்குமுக்காடிப் போனார். ‘‘ஆனைக்கா அண்ணலே! அங்கு கொடுத் ததை இங்கு ஏற்றாயா? என்னே உன் பெருங் கருணை!’’

தி ருவானைக்கா _ ஸ்ரீரங்கத்துக்கு சுமார் ஒரு கி.மீ. கிழக்கில் அமைந்துள்ள திருத்தலம். வடக்கில் வடவாறான கொள்ளிடமும், தெற்கில் காவிரியும் நீர் மாலைகளாகக் கோத்துக் கிடக்க, இடையில் சோலையும் மலர்களும் சுகந்த வாசமுமாகப் பரவிக் கிடக்கும் புண்ணிய பூமி!

தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுந்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா
கொள்ளென ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடையாரே!

என்று சுந்தரமூர்த்தி சுவாமி கள், சோழனின் மணி ஆரத்தைப் பரமன் அணிந்து அருள்பாலித்த அழகைப் பாடுவார்.

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர்
நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமுட்டிச்
செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்ல கண்டம் கொண்டடியேன் என் செய்கேனே

என்று திருநாவுக்கரசர் நெஞ்சுருகப் பாடிய தல மாம் திருவானைக்கா செல்வோம், வாருங்கள்.

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

தி ருவானைக்கா. யானை வழிபட்டதால் ஆனைக்கா. நாவல் (ஜம்பு) மரத்தடியில் சிவலிங்கமாகப் பரமன் எழுந்தருளியதால் ஜம்புகேஸ்வரம். பஞ்சபூதத் தலங்களுள் நீர்த்தலமானதால் அப்பு க்ஷேத்திரம். அம்பாள், ஐயனைத் தொழுததால் ஞானக்ஷேத்திரம்.

யானையின் தொடர்பைக் காட்ட கஜாரண்யம், இபவனம் (இபம் - யானை), தந்திவனம் (தந்தி - யானை ) என்றும், நாவல் காடு என்பதால் ஜம்புவீஸ்வரம், வெண்நாவல் வனம், ஜம்பு வனம் என்றும், ஞானம் அருளிய தலம் என்பதால் ஞானத்தலம், ஞானபூரி என்றும், அமுத பூமி என்பதால் அமுதேஸ்வரம் என்றும், பற்பல பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு.

கண்ணைக் கட்டும் அழகுடன் பிரமாண்டமாக நிற்கிறது திருவானைக்கா ஆலயம். ஐந்து பிராகாரங்களைக் கொண்ட கோயில். ஐந்தாவது மற்றும் நான்காவது திருச்சுற்றுகளில் வீடுகள் உள்ளன. நான்காவது பிராகாரத் திருமதில், ‘நீறிட்டான் மதில்’ என்று பெயர் பெற்றது. ஐந்தாவது சுற்று, ‘விபூதிச் சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. முன் கோபுர வாயிலில் உள்ள சிங்கத் தூண்கள்- பல்லவ மன்னர்களும் இந்தக் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

நீறிட்டான் மதில் சுமார் 35 அடி உயரமும், மொத்தமாகச் சுமார் 8,000 அடி நீளமும், ஏறத்தாழ ஐந்தரையடி அகலமும் கொண்டது.

து சரி, நீறிட்டான் மதில் என்றால் என்ன பொருள்? ஆழித்தேர் மறுகில்பயில் மெய்த்திருநீறிட்டான் மதில் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா என்று திருப்புகழ் இந்த மதில் பற்றிக் கூறும். கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. மதில் கட்டப்பட்டது. மதில் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த ஒரு சித்தர், கூலி வேலை செய்தவர்களுக்குக் கூலியாகத் திருநீறு கொடுத்தார். அவரவர் செய்த பணிக்கேற்ப, அந்தத் திருநீறு பொன்கட்டிகளாக மாறின. நீறிட்டதால், இது திருநீறிட்டான் திருமதில். சிவ பெருமானே சித்தராக வந்து தமக்கான மதிலைத் தாமே கட்டிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. தம் பணியைத் தாமே செய்து கொண்ட எம்பெருமானை வணங்கிக் கொண்டே உள் புகுகிறோம். அவனருளால்தானே அவன் தாள் வணங்க வேண்டும். ‘வழிநடத்து வள்ளலே!’ என்று விண்ணப்பித்தவாறே ஆலயம் தொழுவோம்.

தேவாரத் திருவுலா!

தி ருவானைக்கா திருக்கோயிலின் அமைப்பு உற்றுக் கவனிக்கப்பட வேண்டியது. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. மேற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், அடுத்தடுத்து மூன்று கோபுரங்களைக் கடந்து மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். நான்காம் மற்றும் மூன்றாம் பிராகாரங்களைக் கடந்து, நேராக மூலவர் சந்நிதி நோக்கிச் சென்றால், சிறிது சிறிதாகக் கீழே இறங்கி, மூலவர் சந்நிதியை அடையும்போது தரை மட்டத்துக்கும் கீழே அந்தத் திருச்சந்நிதி அமைந்திருக்கும் அழகை ரசிக்கலாம். படிப்படியாக இந்தக் கோயில் கீழிறங்குவானேன்? என்ன காரணம்? இதற்கு விடை தேட வேண்டும் என்றால் காலச் சக்கரத்தின் வரலாற்றில் சற்றே இல்லை... நிறையவே பின்னோக்கிப் போக வேண் டும்.

து பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம். காவிரிக் கரையெல்லாம் நிறைய வெண் நாவல் மரங்கள். அதனாலேயே ஜம்புவனம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டது.

ஒரு நாவல் மரத்தின் அடியில் அழகு லிங்கம் ஒன்று. காட்டுக்குள் திசை மாறிச் சென்று கொண்டிருந்தது ஒரு யானை. நாவல் மரத்தை நெருங்கிய யானை, சடாரென்று நின்றது. இத்தனை நாட்களாகத் தன் நெஞ்சில் நிறைந்திருந்த ஆசைக்கு, இன்று ஓர் அட்சய பாத்திரம் கிடைத்ததே என்று மகிழ்ந்தது. ‘இனி தினமும் காவிரி நீர் கொணர்ந்து, மலர் கொய்து, தும்பிக்கையால் தண்டனிட்டு பரமேஸ்வரனைப் பணிந்து பூஜிக்கலாமே!’

மறுநாள் காலை வரை காத்திருக்கக்கூடப் பொறுமை இன்றி, மலர்வனம் எங்குள்ளது என்று பார்த்து வரப் புறப்பட்டது யானை.

தேவாரத் திருவுலா!

ஒவ்வொரு நாளும் யானையின் பூஜை கோலாகலமாக நடக்கும். காவிரியில் நீராடிவிட்டு, தும்பிக்கையில் நீர் முகந்து வரும். அபிஷேகப் பிரியரான பரமனுக்கு நீர் வார்க்கும். மல்லிகை, முல்லை, சம்பங்கி, சண்பகம், தாமரையுமாக மலர் கொணர்ந்து தூவித் தொழும். அருளண்ணலின் திருமேனிக்கு அழகு செய்து அழகு பார்க்கும்.

சில காலம் கழித்து, அதே வனத்துக்குச் சிலந்திப் பூச்சி ஒன்று வந்து சேர்ந்தது. சிவலிங்கம் கண்டவுடன் சிலந்திக்கும் சொல்லொணா ஆவல். பார்த்துப் பார்த்துப் பரவசப்படும். ஆனால், ஒன்று மட்டும் உறுத்தும். நாவல் மரத்தின் இலைகள் அவ்வப்போது காய்ந்து சருகாகி உதிர்ந்து சிவலிங்கத்தை அபசாரப்படுத்துகின்றனவே! மேலே ஒரு விதானம்(மேல் பந்தல்) இருந்தால் இது நடக்குமா? விதானம் கட்ட முத்துக்கும் மணிக்கும் சிலந்தி எங்கே போகும்? ஆனாலும், விதானம் கட்ட வேண்டுமே! எண்ணம் இருந்தால், ஏகும் வழி கிட்டாமலா போகும்? வழி கிடைத்தது. தனது வலையைக் கொண்டே, இறைவனுக்கு விதானம் கட்டியது. சருகுகளும் இலைகளும் லிங்கத்தின் மீது விழவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சிலந்தி, அங்கு தங்கினால் அது சிவ அபசாரம் என்றெண்ணி, வேறிடம் சென்று தங்கியது.

மறுநாள் காலையில் யானை வந்தது. அன்போடு ஆண்டவன் திருமேனியை நோக்க.... ‘அடடா... அபசாரம்! அபசாரம்! சிலந்தி வலை. எச்சில் பட்டுப் போச்சே!’ (சிலந்தி தன் எச்சில் கொண்டுதானே வலை பின்னும்) பரிதவித்த யானை, வேகவேகமாக வலையழித்துத் தூய்மைப்படுத்தி.... அபிஷேகம் செய்து.... தன் பூஜையைத் தொடர்ந்தது.

யானை சென்ற பின்னால் சிலந்தி வந்தது. தன் பணியாக மீண்டும் ஒரு விதானம் கட்டியது.

காலப்போக்கில், இதுவே தினசரி நிகழ்வானது. யானை பூஜை செய்தது. அடுத்து வந்த சிலந்தி விதானம் அமைத்தது. பின்னால் வந்த யானையோ, அபசாரம் என்று அதை அழித்தது.

தாங்க மாட்டாத சிலந்தி, ஒரு நாள் மறைவாகக் காத்திருந்து யார் தனது விதானத்தை அழிக்கிறார்கள் என்று பார்த்தது. யானை என்பது தெரிந்தவுடன், தும்பிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கியது. வலி பொறுக்க மாட்டாத யானை, தும்பிக்கையை ஓங்கித் தரையில் அடித்தது. ரத்தம் கொட்ட யானையும் இறந்தது; சிலந்தியும் இறந்தது. யானையும் பூஜை செய்தது. சிலந்தியும் கோயில் கட்டியது (விதானம் அமைப்பதென்பது கோயில் கட்டுவதுதானே!). யானை செய்தது கிரியை. நோன்பு, சடங்கு, பூஜை முறை இவை அனைத்தும் கிரியையில் அடங்கும். சிலந்தி செய்தது சரியை. தன்னுடல் நோவ, சடங்கு முறை இல்லாமல் செய்யும் தொண்டுதான் சரியை.

சிவகணங்களுள் இருவரான புஷ்பதந்தன், மாலியவான் ஆகியோர்தாம் யானையாகவும் சிலந்தியாகவும் பிறந்தவர்கள். கிரியை செய்த புஷ்பதந்தன், மீண்டும் தன் சிவகண வடிவம் பெற்றான். சரியை செய்த சிலந்தியின் ஆசை (கோயில் கட்டுவது) முழுவதுமாக நிறைவேறவில்லை. எனவே, இறைவன் அருளால், மாலியவான் சோழ குலத்தில் அரசனாகத் தோன்றினான்.

தேவாரத் திருவுலா!

சோ ழ மன்னர் சுபதேவனுக்கும் அவர்தம் திருவாட்டி கமலவதிக்கும் அரும்பெரும் மகவாக அவதரித்தார் சோழன் கோச்செங்கணான். எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட கோச்செங்கண் சோழரான இந்த மன்னர், முதன்முதலாகக் கட்டிய கோயிலே திருவானைக்கா என்று கருதப்படுகிறது.

கி.பி. 3-4-ஆம் நூற்றாண்டு காலத்தில் உறையூர் பகுதியைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னர் கோச்செங்கணான். திரு வானைக்காவில்தான், தனக்கு முற்பிறவியில் அருள் கிடைத்தது என்பதை உணர்ந்து, இந்தத் திருக்கோயிலைக் கட்டினார்.

ஆனைக் காவில் தாம்முன்னம்
அருள் பெற்றதனை அறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழும் கோயில் செய்கின்றார்
ஞானச்சார்வாம் வெண்ணாவல்
உடனே கூட நாம் சிறக்கும்
பானற்கனத்துத் தம்பெருமான்
இருமங்கோயில் பணி சமைத்தார்

என்று இதனைச் சேக்கிழார் பாடுகிறார்.

அதெல்லாம் சரி... அது ஏன் கீழே கீழே இறங்கும்படி கோயிலைக் கட்டினார்?

கோ ச்செங்கண் சோழனுக்குத் தன் பூர்வ பிறவி நினைவு முழுமையாக வந்ததாம். யானைதானே தான் கட்டிய விதானக் கோயிலை அழித்தது? அப்படி யானால் இந்த பிறவியில் தான் கட்டும் கோயிலுக்குள் யானை புகாவண்ணம் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.

யானை மிகப் பெரிய உருவம் கொண்டது. அத்தனை எடையையும் தூக்கிக்கொண்டு, படிகளில் ஏறுவது கடினம். அதைவிடக் கடினம், படிகளில் இறங்குவது (படிகளில் இறங்கும்போது, மனிதர்களுக்கே உடல் எடை முன்பக்கமாகக் கீழே தள்ளும். யானைக்குக் கேட்கவா வேண்டும்). யானை புகா கோயிலாகக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட சோழ மன்னர், கீழே கீழே இறங்குவது மாதிரி கட்டினாராம்.

கோச்செங்கண் சோழன் கட்டிய பல கோயில்கள், மாடக்கோயில்களாக அமைந்துள்ளன என்பது தமிழகத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சிறப்பாகும். அவை எங்கே இருக்கின்றன தெரியுமா? திருவாரூர்-மயிலாடுதுறை தடத்தில் உள்ள நன்னிலம், திரு அம்பர் மற்றும் காரைக்கால் அருகில் உள்ள திருவைகல் போன்ற தலங்களில் சிவன் கோயில்களையும், திருநறையூரில் (நாச்சியார்கோவில்) விஷ்ணு கோயிலையும் இந்த மன்னரே எழுப்பித்தார். சாதாரணமாக, மாடக் கோயில் என்பது மாடத்தில் உள்ள கோயில் என்பதாக உயரத்தில் அமையும் (யானை ஏறினாலும் இறங் கக் கஷ்டப்படும். அதனால், ஏற யத்தனிக்காது). ஆனால், சில தலங்களில் இந்த மாடக் கோயிலே கீழிறங்கும் வகையில் அமைந்துள்ளது.

திருவானைக்காவில் கோயில் கொண்டுள்ள ஜம்புகேஸ்வரர், தண்ணீர் வடிவினராக இருப்பதாலும், கருவறைப் பகுதியில் எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருப்பதாலும், உயர் மாடத்தில் அமைக் காமல் சோழன், கருவறையை நீர் மாடத்தில் அமைத் துக் கட்டியிருக்க வேண்டும்.

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல்பந்தர் செய்து
உலந்தவன் இறந்தபோதே கோச் செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே!

என்று சிலந்தி சோழனாகப் பிறந்ததைப் பாடுவார் திருநாவுக்கரசர்.

எப்படியோ சிற்பக் கலையும் செழுமைகொள் சைவ நெறியும் சேர்ந்திலங்கும் திருவானைக்கா திருத்தலம், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக உள்ளே அழைக்கிறது. வாரீர்!

தேவாரத் திருவுலா!