Published:Updated:

மயிலத்தில் மகா தரிசனம்

மயிலத்தில் மகா தரிசனம்

ஆலய தரிசனம்
மயிலத்தில் மகா தரிசனம்
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- நிதர்ஸனா

அரசராக வந்த முருகன் ஆட்கொண்ட ஸ்தலம்!

மயிலத்தில் மகா தரிசனம்

கு ன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடங்கள்! ஆனால், மயிலத்தில் வள்ளி-தெய்வானையுடன் இணைந்து மணக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசுப்ரமணியருக்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒரு சிறிய மண் குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது கோயில். பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது அந்தக் குன்று. மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது கோபுரம். கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... இங்கு வந்து மயில் வடிவ மலையாக மாறிக் கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் காட்சி தந்தபோது, ‘‘என்னைத் தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என சூரபத்மன் வேண்டி னான்.

கேட்டதைக் கொடுக்கும் முருகனிடம் சூரபத்மன் இன்னொரு வேண்டுகோளும் வைத்தான்: ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண் டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’

‘‘எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று முருகன் இவற்றை ஏற்றுக் கொண்டு மறைந்தார். சூரபத் மன், அதுவரை மலையாக நிலை கொண்டு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின் னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

மயிலத்தில் மகா தரிசனம்

காலப்போக்கில் பாரத தேசத்தில் சைவத்தின் ஒளியை மறைக்கும் விதமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. சித்தர்களும் முனிவர்களும் மனம் வருந்தி, மீண்டும் சைவத்தைத் தழைக்கச் செய்யுமாறு சிவ பெருமானிடம் வேண்டினர். உடனே சிவகணத் தலைவரான சங்குகன்னரை அழைத்த சிவபெரு மான், ‘‘தென்னாடு சென்று சைவநெறியைத் தழைக் கச் செய்வாயாக!’’ என்று பணித்தார்.

சங்குகன்னர் புதுவைக்கு வடக்கில் இருக்கும் பொம்மபுரம் (தற்போதைய பொம்மையர் பாளை யம்) கடற்கரைப் பகுதியில் பத்து வயது பாலனாக பிரசன்னமானார். நெற்றியில் திருநீறு, அதற்கு மேல் உத்திராட்சம், குண்டலம் அணிந்த காதுகள், சின்முத்திரையுடன் கூடிய வலக் கை, திருநீற்றுப் பையைத் தாங்கிய இடக் கை, முகத்தில் புன்முறுவல், எப்போதும் ‘நமசிவாய’ என உச்சரிக்கும் உதடுகள்... இப்படிப்பட்ட தோற்றத்துடன் வெளிப்பட்ட அவர், அருகிலிருக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சைவ நெறியை உணர்த்தினார். பல ஸித்து வேலைகளையும் அந்த வயதிலேயே செய்ததால் அவருக்கு ‘பாலசித்தர்’ என்று பெயர் வந்தது. தான் பிரசன்னமான கிராமத்தில் அவர் ஒரு மடம் அமைத்தார். ‘பொம்மைய பாலசித்தர் மடம்’ என அது அழைக்கப்பட்டது.

சைவ நெறியை அந்த மடம் பரப்பிய நேரத்தில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆரம்ப மாயின. ஒரு நாள் பாலசித்தரைத் தேடி வந்த நாரதர், மயூராசலம் மற்றும் சூரபத்மன் குறித்து எடுத்துக் கூறி, ‘‘நீங்களும் மயிலம் மலையில் முருகனை நோக்கித் தவமிருந்தால் நினைத்த செயல்கள் கைகூடும்!’’ என்று யோசனை சொன்னார்.

மயிலத்தில் மகா தரிசனம்

அவ்வாறே பாலசித்தர் மயிலம் வந்து முருகனை நோக்கி முப்பத்தைந்து ஆண்டுகள் கடும் தவம் புரிந்தும் முருகன் அருள் புரியவில்லை. இதனால் அக்னியை உருவாக்கி அதன் நடுவிலிருந்தபடி உக்கிர தவம் புரிய ஆரம்பித்தார் பாலசித்தர். அப்போதும் முருகன் காட்சி தரவில்லை.

இந்த நிலையில் முருகப் பெருமானின் தேவிய ரான வள்ளி-தெய்வானை ஆகியோரை நோக்கி தவம் புரிந்தார் பாலசித்தர். அதனால் தேவியர் இருவரும் பாலசித்தருக்கு அருள் புரியுமாறு முருகனிடம் வற்புறுத்தினர். ‘‘அதற்குரிய நேரம் வரும்போது செய்கிறேன்!’’ என்றார் முருகன்.

தாங்கள் இவ்வளவு சொல்லியும் முருகன் கேட்காததால், தேவியர் இருவரும் ஊடல் கொண்டு முருகனைப் பிரிந்து மயிலம் வந்தனர். பாலசித்தரை அணு கிய அவர்கள்,‘‘எங்கள் இருவரையும் உங்கள் மகள்களாகக் கருதிப் பாதுகாக்க வேண் டும்!’’ என்று சொல்லி அந்த மலைமீது ஒரு மாளிகையை எழுப்பி அதில் வசித்தனர். பாலசித்தர் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்ததுடன் அவர் களுக்குக் காவலாகவும் இருந்தார்.

மயிலத்தில் மகா தரிசனம்

காலம் கடந்தது. முருகர், ஓர் அரசர் போல வேடமிட்டு போர்க்கோலம் பூண்டு மயிலம் வந்து சேர்ந்தார். அவர் நேராக வள்ளி-தெய்வானை வசிக்கும் மாளி கைக்குள் நுழைய முயன்றார். பாலசித்தர் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால் அந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது போராக மாறியது. தேவியர் இருவரின் அருளோடு சித்தர் போரிட்டார். முருகன் அவரை எதிர்கொண்டார். எவருக்கும் வெற்றி- தோல்வி கிட்டாமல் போர் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் முருகன் தனது சக்தி வாய்ந்த வேலாயுதத்தை சித்தர் மீது ஏவினார். அதையும் தன்வசப்படுத்திக் கொண்டார் பாலசித்தர்.

அதன் பின்னரே அரசராக வந்திருப்பது முருகப் பெருமான் என்பது சித்தருக்கு விளங்கியது. எனவே, முருகனின் தாள் பணிந்து தன் குற்றத்தை மன்னித்து அருளுமாறு பாலசித்தர் வேண்டினார். முருகன் அவருக்குக் காட்சியளித்து ஞானோபதேசம் வழங் கினார். தேவியர் இருவரையும் அழைத்து வந்த சித்தர், ‘‘என் மகள்களாக இவர்களைப் பாதுகாத்து வருகிறேன். தாங்கள் இவர்களை இங்கு மணமுடிக்க வேண்டும். பின்பு மணக்கோலத்தில் எந்த நாளும் இந்தத் தலத்தில் காட்சி தர வேண்டும்!’’ என முரு கனிடம் விண்ணப்பித்தார்.

தேவர்கள் யாவரும் புடைசூழ முருகன்- வள்ளி- தெய்வானை திருமணம் கோலாகலமாக நிகழ்ந்தது. அப்போது சிவபெருமான், ‘‘இன்னும் பல்லாண்டு காலம் நீ சைவத்தைத் தழைக்கச் செய்த பின், என் புதல்வனின் சந்நிதிக்கு வலப்பக்கத்தில் ஜீவ சமாதி அடைவாயாக!’’ என பாலசித்தருக்கு ஆசி வழங்கினார். அதன்படி சைவம் தழைக்கப் பாடுபட்ட பாலசித்தர், ஓர் ஆனி மாதம் திருவாதிரை நாளில் முருகனின் வலப்பக்கம் சிவயோக சமாதி அடைந்தார். அதையட்டி இன்றும் அந்த இடத்தில் லிங்க வழிபாடு தொடர்கிறது.

சிவ நெறித் தொண்டு மேற் கொண்டு வந்த ஒரு தம்பதியின் மகனைத் தன் சீடனாக ஏற்று, அவருக்கு ‘சிவஞான பாலய தேசி கன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பாலசித்தர். இந்தச் ‘சீட மரபு’ தற்போதும் தொடர்கிறது. சிவநெறியின் வழிவரும் பெரி யவர்கள் தொடர்ந்து ‘சிவஞான பாலய சுவாமிகள்’ என்ற பெயர் பெற்று இங்கு சைவ சமயத்துக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். இப்போது பத்தொன்பதாம் பட்டம் குருமகா சன்னிதானம் அருளாட்சி செய்து வருகிறார். இவரது ஆளுகையின் கீழ் இருக்கும் ‘திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம்’தான் மயிலம் கோயிலை நிர்வகித்து வருகிறது.

மலை ஏறும் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், வயதானவர்களும் சிரமமில்லாமல் ஏறும் விதமாக அமைந்திருப்பது இங்கு விசேஷம். இந்தத் திருக்கோயிலுக்கு பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். இவற்றுள் ஒன்று அக்னி தீர்த் தம். இது மலைக்குத் தென்கிழக்கில் உள்ளது. இதில் நீராடியோ, அல்லது இதன் நீரைத் தலையில் தெளித்துக் கொண்டோ, குளக்கரையில் இருக்கும் சுந்தர விநாயகரை வழிபட்டு மலையேறுவது வழக்கம்.

தைப்பூச விழாவின்போது பக்தர்கள் இந்தக் குளக்கரையில் இருந்துதான் காவடி எடுப்பார்கள். அப்போது பக்திப் பெருக்கோடு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என தோளில் விதவிதமான காவடிகளைச் சுமந்தபடி நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி மலையேறுவது கண்கொள்ளாக் காட்சி!

மலை உச்சியை அடைந்தால் ஒருபுறம் ராஜ கோபுரம், இன்னொரு பக்கம் பெரிய மண்டபம் என கோயிலுக்குள் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். அதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

மயிலத்தில் மகா தரிசனம்

மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் முதலில் இருப்பவர் விநாயகர். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் பக்கத்திலேயே பாலசித்தர் ஜீவ சமாதி அடைந்த ஆலயம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத் திருக்கிறது.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை.

இதேபோல உற்சவமூர்த்தி முருகப் பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலை யில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!

மூன்று உற்சவர்கள்!

மயிலத்தில் மகா தரிசனம்

யிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.

பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வரு வார் இந்த மூலவர்.

இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.

இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!

எங்கே இருக்கிறது?

வி ழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில். இங்கிருந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை பஸ் போகிறது. தங்கும் வசதியோ, பெரிய ஹோட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உசிதம். இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை ஆறு முதல் பிற்பகல் ஒரு மணி வரை. மாலை நான்கு முதல் இரவு எட்டே முக்கால் வரை. ஞாயிறு, வெள்ளி, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் கோயில், நாள் முழுக்கத் திறந்திருக்கும்.

அபிஷேகம், அர்ச்சனை போன்ற வழிபாடுகளுக்காக கோயிலுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்: 04147 241223.