Published:Updated:

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அகத்தியரையே ஈர்த்த அற்புத மாதம்!
மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

சி வபெருமான் குழந்தையாக வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள் புரிந்தது மாசி மாதத்தில்தான்.

அன்னதானத்தின் பெருமையை விளக்குவதுடன், பிரம்மஹத்தி போன்ற கொடும் பாவங்களைப் போக்கி, பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகா தசிகள் வருவதும் இந்த மாசி மாதத் தில்தான்.

தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அகஸ்தியர் அருள்பெற்றது, எலும்புகள் பூக்களாக மாறிய அதிசயம், பிரகலாதனைக் கொல்ல வந்தவள் வெந்து போனது - என மாசி மாதத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் பல உண்டு.

இனி அவற்றைப் பார்க்கலாம்.

மாசி மகத்தில் வந்த மகன்!

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா லை நேரம் திருவண்ணா மலை - அண்ணாமலையார் கோயிலில் வல்லாள மகாராஜாவும், அவர் மனைவியரான மல்லமா தேவி, சல்லமாதேவி ஆகியோரும் உமையாள் கணவரை உள்ளம் உருக வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

‘‘யார் கண்ணுலயும் தண்ணி வராம ஆள்ற நம்ம ராசா கண்ணுல தண்ணி வரும்படியா ஆயிடுச்சே!’’

‘‘ஒரு தப்பும் பண்ணாதவருக்கு, ஒரு கொழந்த இல்லாம போயி டுச்சே!’’

‘‘ஒண்ணுக்கு ரெண்டா ராணிங்க இருந்தும், இந்தக் கடவுள் கண்ணத் தெறக்கலியே!’’

‘‘சிவன் கோயில்ல நின்னுக்கிட்டு இப்படிப் பேசாத. சிவனுக்குத்தான் மூணாவது கண் இருக்கு.’’

-இப்படி வெளியே நின்றிருந்த வீரர்கள் பேசிக் கொண்டிருந் தார்கள்.

மற்றொரு வீரன், ‘‘வாயை மூடுங்கள்! அதோ, அரசர் வந்து கொண்டிருக்கிறார்!’’ என்று அவர்களை அடக்கினான். அனை வரும் கைகளில் பிடித்திருந்த ஆயுதங்களுடன் நிமிர்ந்து நின்றார்கள்.

மனைவியர் பின்தொடர மன்னர் அரண்மனையை அடைந்தார். குழந்தை இல் லாத கவலை, மன்னரையும் அவர் மனைவியரையும் தூங்க விடவில்லை.

மறுநாள் அர சவை கூடியது. மன்னர் தன் மனக் கவலையை மந்திரிகளிடம் கூறி னார். அவர்கள், ‘‘குழந்தை பிறக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு, யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்யலாம். முக்கண் முதல்வன் மகப்பேறு அருள்வான்!’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள். சபை கலைந்தது.

மறு நாள்... கோட்டையில், ‘‘யார் வந்து எது கேட்டாலும் மன்னர் வழங்குவார்!’’ என்று முரசு ஒலித்து அறிவிக்கப்பட்டது. கூடவே, அன்னதானத்தை அறிவிக்கும் கொடியும் ஏற்றப்பட்டது.

திருமணம் என்றால் ஆயிரம் பொன். உபநயனம் (பூணூல் போட) என்றால் முந்நூறு பொன். கோயில் திருப்பணிக்கு இருபதாயிரம் பொன். சத்திரம்- சாவடி கட்டவும், கிணறு- குளம் வெட்டவும் தலா ஐம்பதாயிரம் பொன் என்ற கணக்கில் மக் களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. எண்ணற்றோர் இந்த உதவிகளைப் பெற்று, பயன் அடைந்தனர். தவிர, மன்னரின் மன நிலையை அறிந்த பொதுமக்கள் சில ரும், தங்களால் இயன்ற அளவுக்கு தானம் செய்தார்கள்.

அப்போது ஒரு நாள் நாரதர் அரண்மனைக்கு வந்தார். மன்னர் அவரை வணங்கி, உபசரித்து ஆசனத்தில் அமர வைத்தார்.

‘‘வல்லாளா! உத்தம ஞானிகள் வாழ்த்தும் முதன்மைக் குலம் மூன்று. அவை: சூரிய குலம், சந்திர குலம், அக்கினி குலம். அவற்றுள் நீ அக்கினி குலத்தில் உதித்தவன். உன்னுடைய தர்மம், என்னை இங்கே வரவழைத்தது. உன் மனத்தில் உள்ளதைச் சொல்!’’ என்றார் நாரதர்.

அவரிடம் குழந்தை இல்லாத தமது குறையை வெளிப்படுத்தினார் மன்னர்.

‘‘மன்னா! ஏராளமாக தர்மம் செய்து வரும் உனக்குக் கண்டிப்பாகக் குழந்தை உண்டு. சாஸ்திரங்கள் பொய் இல்லை. கவலையை விடு!’’ என்ற நார தர் அங்கிருந்து புறப்பட்டு திருக் கயிலையை அடைந்தார்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அங்கு திருநீலகண்டரை வணங்கி, ‘‘மங்கலங்களை அருளும் மகாதேவா! எல்லோரையும் வாழ வைக்கும் வல்லாளன் ஒரு நீதிமான். அளவிட முடியாத தர்மவான். உங்கள் திருவடித் துணையைத் தவிர, வேறு எந்தத் துணையையும் நாடாதவன். குழந்தைச் செல்வம் இல்லை என்று அவன் குமுறலாமா?’’ என்று தனது வேண்டுகோளை ஸ்வாமியிடம் விண்ணப்பித்து விடைபெற்றார் நாரதர். நான்முகன் மைந்தரான நாரதருக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை கயிலைநாதன்.

அதே நேரம்... திருவண்ணா மலையில் சிவனடியார் கூட்டம் ஒன்று, ‘‘அரும்பசி தணிய அன்னம் இடுவார் இல்லையா? கனிவோடு அமுதூட்டும் கன்னியர் இல் லையா?’’ என்று கூவியபடி வந்தது!

கண்களைக் கவரும் சிவந்த திருமேனி. உடல் எங்கும் விபூதி. கழுத்தில் ருத்ராட்சம் முதலியவற் றுடன் அந்தக் கூட்டத்தின் தலைவர் நடுவில் வர, அடியார்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

இரவு மணி பத்து. ஒவ்வோர் அடியாரும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தனர். அவர்களின் தலைவரான அழகுத் திருமேனியர் நேரே அரண்மனைக்குச் சென்றார்.

அரசர் அவரை வணங்கி வர வேற்றார். அவர் கண்களுடன் தன் கண்களை இழையவிட்ட அடியார் தலைவர், ‘‘மன்னா! நீதியை வளர்க்கும் நீயும் உன் அரசும் நீடூழி வாழ்க. எனக்குப் பணிவிடை செய்யவும் என் ஆவலை நிறைவேற்றவும் ஒரு பெண் வேண்டும்!’’ என்றார்.

அதர்மத்தின் வாடைகூட வராமல் ஆட்சி செய்யும் அரசர், ‘‘இதோ, இங்கு காத்திருங்கள்... சற்று நேரத்தில் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, அந்தப்புரத்தை அடைந்தார். அவர் முகம் வாடி இருந்தது.

‘‘முக வாட்டம் ஏன்?’’ என மனைவியர் இருவரும் அவரிடம் கேட்டனர்.

‘‘மாதவர் ஒருவர் வந்திருக்கிறார். பணிவிடையுடன் அவர் ஆவலைத் தீர்க்க, பெண் ஒருத்தி தேவையாம். யார் எது கேட்டாலும் கொடுப்பதாக வாக்குறுதி தந்து இருக்கிறேன். அவர் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாது போல் இருக்கிறது. என்ன செய்வ தென்று தெரியவில்லை!’’ என்றார் அரசர்.

‘‘வேந்தே! வருத்தத்தை விடுங்கள். அடியவருக்குப் பணிவிடை செய்ய, நான் போகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்’’ என வேண்டினாள் சல்லமாதேவி.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அரசருக்கு மெய்சிலிர்த்தது. மகிழ்ச்சியில் மனம் துள்ள, அடியவர் இருந்த அறையை நோக்கி ஓடினார். அடியாரின் கால்களில் விழுந்து வணங்கினார்.

‘‘ஸ்வாமி! தாங்கள் கேட்டுக் கொண்டபடி தங்களுக்கு உதவ வருகிறாள் ஒரு வனிதை’’ என் றார். உத்தமனும் பெரியவர்க்கு உரைத்திட்டானால் என்று இந்தத் தகவலைச் சொல்கிறது புராணம்.

‘மாற்றானுக்கு மனைவியை அளித்தவன் உத்தமனாம்; கேட்டுப் பெற்றவன் பெரியவராம்! என்ன கதை இது!’ என்று அறிவு கேட்கிறது. அவசரப்பட்டுக் குழம்ப வேண்டாம். ஆராய்ச் சியும் விஞ்ஞானமும் நெருங்க முடியாத நிகழ்ச்சிகள் கோடிக் கணக்கில் உண்டு. மனதுக்கு வெள்ளையடித்துக் கொண்டு வாருங்கள். அதோ! இளைய அரசியான சல்லமாதேவி, அடியார் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

பால், பழ வகைகள், வீணை முதலியவற்றுடன் சல்லமாதேவி, அடியாரின் அறைக்குள் நுழைந் தாள். படுத்திருந்த அவர் அருகில் சென்று அமர்ந்தாள். வீணையைச் சுருதி கூட்டி இனிமையாகப் பாடி னாள்.

அடியார் எழுந்திருக்கவில்லை. நெருங்கிச் சென்று அவர் முகத் தைப் பார்த்தாள். அவர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது தெரிந்தது. பன்னீரை எடுத்து முகத்தில் தெளித்தாள். அப்போதும் அவரிடம் எந்தவித அசைவும் தென்படவில்லை. கண்களையும் திறக்கவில்லை.

‘கொக்கரக்கோ’ என்று கோழி கூவும் சத்தம் கேட்டது. ‘‘ஆ! பொழுது விடிந்து விடும் போல் இருக்கிறதே. மன்னர் வாக்குத் தவறக் கூடாது. அவர் வாக்கை நான் காப்பாற்ற வேண்டும்’’ என்று சத்தமாகச் சொல்லிய சல்லமாதேவி, அடி யார்க்குப் பணிவிடை செய்வதற்காக அவர் கால்களைப் பிடிக்கப் போனாள்.

சங்கர பக்தியிலும் சங்கம (அடியார்) பக்தியிலும் தலைசிறந்த சல்லமாதேவி, அப்போது ஓர் அதிசயத்தைக் கண்டாள்.

அடியார் இருந்த இடத்தில் _ அழகான ஓர் ஆண் குழந்தை கை-கால்களை உதைத்தபடி அழுது கொண்டிருந்தது. செக்கச் சிவந்த அந்தக் குழந்தையைப் பார்த்த சல்லமாதேவி திகைப்பு அடைந்தாள். ‘இங்கு வந்திருந்த அடியார், என் கண் எதிரிலேயே குழந்தையாக மாறியது எப்படி? ஒன்றும் புரியவில்லையே!’ என்று குழப்பத்தில் ஆழ்ந்த அவளுக்குக் குழந்தையைத் தூக்கக்கூடத் தோன்றவில்லை.

குழந்தையின் அழுகுரல் கேட்ட தும் மன்னரும் மல்லமாதேவியும் வேகவேகமாக அங்கு ஓடி வந்தார் கள். குழந்தையைப் பார்த்ததும், ‘ஏது இந்தக் குழந்தை? நமது அரண்மனை தேடி வந்த அந்த அடியார் எங்கே?’ என்றெல்லாம் கேட்கக்கூடத் தோன்றவில்லை அரசருக்கு. அழகுக் குழந்தையை அள்ளி எடுத்தார். மார்பில் அணைத்தார். முத்த மழை பொழிந் தார். அன்பு வெள்ளத்தில் நா குழறினார். குழந்தையை வாரி அணைத்து உச்சி முகர்ந்தார்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அரசர் தன்னை இழந்திருந்த அந்த நேரத்தில், மின்னல் ஒன்று பளிச்சிட்டது. அத்துடன் அவர் கையில் இருந்த குழந்தை சட் டென்று மறைந்தது. மன்னருடன் சேர்ந்து அவர் மனைவியரும் பயந்து அலறினர்.

‘‘அண்ணாமலையாரே! அடி யேனை சோதனை செய்யவா, இப்படிக் குழந்தையாக வந்தீர்? என் கதி என்ன?’’ என்று கதறினார் மன்னர்.

அதற்கு பதில் அளிப்பது போல, ஆகாயத்தில் இருந்து மலர் மாரி பொழிந்தது. ‘‘அம்மா...ஆஆ!...’’ என்ற குரலும் கேட்டது. ரிஷப வாகனத்தின் மேல் அம்பிகையுடன் அண்ணா மலையார் காட்சி தந்தார். அரச தம்பதி, கை குவித்து துதித்தார்கள்.

‘‘மன்னா! நிலையில் லாத இந்த வாழ்வில் மகப் பித்து உனக்கு. எந்த விதமான கர்மத் தொடர்பும் இல்லாதவன் நீ. உனக்கு எப்படி பிள்ளை பிறக்கும்? அதன் காரணமாகத்தான் ‘குருபரன் அருளால் குழவியும் உண்டாம். செலவிடை தருவாய்’ என்று நாரதர் மூலம் குறிப்பால் உணர்த்தினோம். உத்தமமான குழந்தை தோன்றும். உடனே அது மறைந்து விடும் என்ற அந்தக் குறிப்பை நீ அறியவில்லை. நீ செய்த சிவ புண்ணியத்தின் பலனாக உனக்கு, யாமே குழந்தையாக வந்தோம். கற்பு நெறியிலும் அருள் நெறியிலும் தலைசிறந்த உன் மனைவியர் பெருமையையும், உன் பக்தியையும் உலகத்துக்கு உணர்த்தவே யாம் இந்த ஆடல் கள் யாவற்றையும் நடத்திக் காட்டினோம். உமக்கு யாமே எள்ளும் நீரும் இறைப்போம். கவலையை விடு!’’ என்று விவரித்த சிவபெருமான் மறைந்தார். அரச தம்பதி அளவிலா ஆனந்தம் அடைந்தனர்.

ஒரு நாள் அரசியர் பரி மாற, அரசர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, தண்டை ஒலி எழுப்ப ‘தகதக’ வென ஒரு குழந்தை ஓடி வந்தது. மன்னரின் உணவில் கை இட்டது. சோற்றைப் பிசைந்து அவர் வாயில் ஊட்டியது. சோற்றுப் பருக்கைகள் குழந் தையின் உடலிலும் மன்னரின் உடலி லும் சிந்தின. கீழே விழுந்த சில பருக்கைகளை எடுத்துத் தன் வாயிலும் போட்டுக் கொண்டது குழந்தை. அரசரும் அவர் மனைவியரும் இதை ரசித்துச் சிரித்தனர்.

சாப்பாட்டுக்குப் பிறகு அரசியர் தாம்பூலம் மடித்துத் தர, அதை வாங்கிய குழந்தை, அரசரின் வாயில் திணித்தது. குழந்தையை வாரி எடுத்து முத்தம் தந்தார் மன்னர். குழந்தை திடீரென்று மறைந்தது.

இப்படியே அவ்வப்போது தோன்றுவதும் அரச தம்பதியின் மார் மேலும் தோள் மேலும் விளையாடி, மறை வதுமாக அந்தக் குழந்தை திருவிளையாடல் புரிந்து வந்தது.

மாசி மாதம், மகம் நட்சத்திரம். வல்லாள மன்னர் தன் வழக்கப்படி சிவ பூஜையை முடித் தார். மனமும் வாயும் ‘ஹரஹர’ என்று உச் சரிக்கும் வேளையில் அவர் உயிர் பிரிந்தது. ‘‘மன்னா!’’ என்று கத்தியபடி கணவர் உடல் மீது விழுந்தனர் அவர் மனைவியர். மன்னர் மறுபடி எழுந்திருக்கவில்லை. கணவரைப் பின்தொடர்ந்து காரிகையர் உயிரும் பறந்துவிட்டன.

திருவண்ணாமலை மக்கள் கண்ணீர் சிந்தினார்கள். அந்தத் தகவலை அமைச்சர் அறிக்கையாக அனுப்ப, அதை அண்ணாமலையார் (ஸ்வாமி) முன்னால், அர்ச்சகர்கள் வாசித் தார்கள்.

‘‘அம்மா! அப்பாஆஆ...’’ என்று ஓர் இனிமையான நாதம் எழுந்தது. அடுத்து லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஜோதிமயமான ஒரு குழந்தை, ஓட்டமும் நடையுமாக அரச மாளிகைக்குச் சென்று உத்தமமான மூவர் மேலும் விழுந்து, அழுது புரண்டது. மேலும் அந்தக் குழந்தையே வல்லாளத் தம்பதிக்கு ஈமச்சடங்குகளைச் செய்தது. பிறகு, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் குழந்தை மாபெரும் ஜோதியாகி அங்கிருந்து மறைந்தது.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

‘‘அண்ணாமலையாரே வந்து அரச தம்பதிக்குத் தன் கையால் பிரேத சம்ஸ்காரம் செய்திருக்கிறார். என்ன பாக்கியம்! என்ன பாக்கியம்! அண்ணாமலையாருக்கு... அரோ ஹரா!’’ என்று அங்கிருந்த அனை வரும் கூவினார்கள்.

அப்போது ஆகாயத்தில், ‘‘ஆண்டுதோறும் மாசி மகத்தன்று இந்த நிகழ்ச்சி, ஒரு திருவிழாவாக நடைபெறும். நாம் குழந்தையாக வெளிப்பட்ட வல்லாள மகாராஜா கோபுர வாயில், அன்று மட்டும் திறக்கப்படும்!’’ என்று ஓர் அசரீரி ஒலித்தது.

அண்ணாமலையார் சொன்ன படி, அந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடைபெறுகிறது. ஸ்வாமி, வெளியில் வந்து மகா ராஜாவுக்கு சிராத்தம் செய்து விட்டுப் போகிறார்.

நாம் நம்புகிறோமோ.. இல்லையோ... மாசி மகத்தன்று அண்ணாமலையாரின் திருக்குரல், ‘‘அம்மா! அப்பா!’’ என்று ஒலிக்கும். இதைக் காதாரக் கேட்டவர்களும் உண்டு.

ஷட்திலா ஏகாதசி

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். இது பற்றிய விவரங்கள் புலஸ்திய மகரிஷியால் கூறப்பட்டது.

ஒரு முறை தால்ப்யர் என்ற முனிவர், புலஸ்தியரை தரிசித்து, ‘‘மகரிஷியே! பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம்... அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!’’ என வேண்டினார்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங் கினார்: ‘‘தால்ப்யரே! மாசி மாத ஆரம் பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் - பருத்திக்கொட்டை ஆகிய வற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப் பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத் தும் விலகும்!’’ என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறை யைப் பற்றியும் கூறினார்.

‘‘பூசணிக்காய், தேங்காய், கொய்யாப் பழம், கொட்டைப் பாக்கு - ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியை பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றை தான மாகக் கொடுக்க வேண்டும். எள்ளை அரைத்து உடலில் பூசிக் கொள்வது, அரைத்த அதே எள்ளுடன் நீராடு வது, எள்ளை தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய் வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது ‘ஷட் திலா’ (ஷட்-ஆறு; திலம்-எள்) எனப்படுகிறது. இந்த பூஜையை முறைப்படி செய்தால், நீங்கள் சொன்ன பாவங்கள் எல்லாம் விலகும்!’’ என்றார் புலஸ்தியர்.

ஷட்திலா ஏகாதசி மகிமை: பெண்மணி ஒருத்தி தர்மங்கள் அனைத்தையும் பொறுப்புடன் செய்து வந்தாள். ஆனால், அன்னதானம் செய்வதில் மட்டும் அவளுக்கு விருப்பம் இல்லை. அன்னதானத்தின் பெரு மையை அவளுக்கு உணர்த்த எண்ணி, ஒரு நாள் பெருமாள் சந்நியாசி வேடத்தில் அவளது வீட்டுக்கு வந்தார். அவரை வணங்கி வரவேற்றாள் அந்தப் பெண்மணி. அவளது உபசரிப்பை ஏற்ற சந்நியாசி, சற்று நேரத்தில் தனது பி¬க்ஷப் பாத்திரத்தை அவளிடம் நீட்டி, ‘‘அம்மா! பி¬க்ஷ போடு!’’ என்றார்.

அதுவரை அன்னதானமே செய்யாதிருந்த பெண்மணிக்கு அடங்காத கோபம் வந்தது. ஒரு மண் கட்டியை எடுத்து பி¬க்ஷப் பாத்திரத்தில் போட்டாள். உடன் சந்நியாசியாக வந்திருந்த ஸ்வாமி மறைந்தார்.

அதன் பிறகும், அந்தப் பெண்மணியின் மனம் அன்னதானத்தில் ஈடுபடவில்லை. ஆனால், மற்ற தானங்களையும் விரதங்களையும் முறையாக செய்து வந்தாள் அவள். அதன் பலனாக அவள், மனித உடம்புடன் சொர்க் கத்தை அடைந்தாள்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அங்கே அவளுக்கு ஓர் அழகான அரண்மனை அளிக்கப்பட்டது. அதன் அழகில் மயங்கிய அவள், அதைச் சுற்றிப் பார்த்தாள். ஏராளமான பணிப்பெண்கள் மற்றும் நிறைய வசதிகளுடன் இருந்தது அந்த அரண்மனை. இருந்தும் அங்கு உணவு மட்டும் கிடைக்கவில்லை. எனவே, பசியால் வாடினாள் அவள்.

அப்போது... அவள் எதிரில் துறவி வேடத்தில் (ஏற்கெனவே வந்ததைப் போல) வந்தார் ஸ்வாமி. அவரை வணங்கி, ‘‘முனிவரே! நான் செய்த விரதங்களுக்கும் தவத்துக்கும் ஏற்றபடி, இங்கே எனக்குச் சுகம் கிடைக்கவில்லை. பசி என்னை வாட்டுகிறது. இதற்கு என்ன காரணம்?’’ என்று வருத்தத்துடன் கேட்டாள்.

‘‘பெண்ணே! நீ பூலோகத்தில் எல்லா விதமான தானங்களையும் செய்தாய்! அதன் பலனாக மானிட உடம்புடன் சொர்க்கத்துக்கு வந்திருக் கிறாய். ஆனால், நீ அன்னதானம் செய்ய வில்லை. அதனால்தான் சொர்க்கத்துக்கு வந் தும், பசிக்கு உணவு கிடைக்காமல் வருந்துகிறாய்!’’ என்று பதில் சொன்னார் துறவி.

‘‘துறவியே! உடல் கொண்ட உயிர்கள் எல்லாம் உணவைத் தேடும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஏதாவது வழி சொல்லுங்கள்!’’ என்று வேண்டினாள் அவள்.

‘‘கவலைப்படாதே! உன்னை தரிசிப்பதற்காக தேவலோகப் பெண்கள் வருவார்கள். அப்போது நீ அறைக்குள் போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்! அவர்கள் கதவைத் தட்டுவார்கள். நீ திறந்து விடாதே! ஷட்திலா ஏகாதசி விரதம் இருந்த புண்ணிய பலனைத் தந்தால் மட்டுமே கதவைத் திறப்பதாகச் சொல்!’’ என்று வழிகாட்டி மறைந்தார் துறவி.

அப்படியே செய்தாள் அந்தப் பெண்.

தாழிட்ட அவளது அறைக் கதவைத் தட்டினார்கள் தேவ லோகப் பெண்கள். ‘‘ஷட்திலா ஏகாதசி விரதப் பலனை எனக்குத் தந்தால்தான் கதவைத் திறப்பேன்’’ என்றாள் அவள்.

பலர் மறுத்துத் திரும்பினார்கள். ஒருத்தி மட்டும், ஷட்திலா ஏகாதசிப் பலனை அளித்தாள். பசியால் வாடிய பெண்ணின் முன்னால், உணவுப் பொருட்கள் குவிந்தன. அவள் பசி தீர்ந்தது!

என்னதான் வாழ்க்கை வசதிகள் இருந்தாலும், பலருக்கு உணவைக் கண்டால் மிகவும் வெறுப்பாக இருக்கும். இதற்கு ‘அன்ன துவே ஷம்’ என்று பெயர். ஷட்திலா ஏகாதசி விரதம் இருந்தால், அன்ன துவேஷம் நீங்கும். பசி யால் துயரம் உண்டாகாது. ‘பளிச்’சென்று சொல்ல வேண்டு மானால், சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது.

ஜயா ஏகாதசி

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசி ‘ஜயா ஏகாதசி’ எனப்படும். இதன் மகிமை என்ன தெரியுமா?

ரதிதேவியைவிட மிகவும் அழ கானவள் புஷ்பவந்தி. குயிலினும் இனிய குரல் வளம் கொண்டவள். அவள் கணவன் மால்யவான். கந்தர்வ தம்பதியான இருவரும் தேவேந்திர சபையில் ஆடிப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

ஒரு நாள்... தேவேந்திர சபை யில் அவர்களது நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அனைவரும் மெய்ம்மறந்து ரசித்துக் கொண் டிருந்தார்கள். அவர்கள் மட்டு மல்ல;

புஷ்பவந்தியும் மால்யவானும் கூடத் தங்களை மறந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் மோகப் பார்வையை வீசிக் கொண்டார்கள். பாடல் தவறிப் போனது. அபஸ்வரம் தலை நீட்டியது. அவையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள். இந்திரனுக்குக் கடுங்கோபம் மூண்டது.

‘‘புஷ்பவந்தி! மால்யவான்! நீங்கள் இருவரும் பேயாகி, பூமி யில் திரியுங்கள்!’’ என்று சாபம் கொடுத்தான். சாபம் பலித்தது. கந்தர்வ தம்பதி, பேய் வடிவம் கொண்டு பூமியில் திரிந்தார்கள். பல்லாண்டுகள் பல விதமான துயரங்களை அனுபவித்தார்கள்.

ஒரு நாள்... இருவரும் உணவு ஏதும் கிடைக்காமல், அலைந்து அல்லல்பட்டு ஓர் அரச மரத்தின் அடியில் வந்து தங்கினார்கள்.

‘‘தேவலோகத்தில் திவ்வியமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே! காலத்தின் கோலம்! ப்ச்..!’’ என்று வாய்விட்டுப் புலம்பினார்கள். இரவு முழுவதும் அவர்கள் தூங்கவில்லை.

மறு நாள் பொழுது விடிந்தது. பேய்களாக இருந்த அவர்கள் நீங்கிப் பழையபடி கந்தர்வ வடிவத்தை அடைந்தார்கள். காரணம்?

அவர்கள் உபவாசம் இருந்த அந்த நாள் ‘ஜயா ஏகாதசி’ நாள். இரவு முழுவதும் உண் ணாமல் உறங்கா மல் அவர்கள் தங் கியிருந்தது- ஓர் அரச மரத்தின் அடி யில். அந்த ஜயா ஏகாதசியின் பலனே, அவர்களின் பேய்த் தன்மையை நீக்கியது. பேய்க்கும் நற்கதியைத் தரக் கூடிய ஏகாதசி இது. தீய குணங்கள் என்னும் பேய்களை நீக்குவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

மாசி பௌர்ணமி திருத்தலம்

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சி பௌர்ணமியில் தரிசிக்க வேண்டிய மகிமை நிறைந்த தலம் ஈங்கோய் மலை. உத்தமமான இந்தத் தலம் காவிரிக் கரையில் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் காவிரியைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம். செய்யக் கூடிய செயல்களை, விவரம் அறிந்து கொண்டு செய்தால் பலன் அதிகம் அல்லவா? அதனால், எதையும் விவரம் அறிந்துகொண்டு செய்தால் அதிக பலன்.

காவிரி என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. காவேர மகரிஷியின் பெண்ணாக வந்தாள். அதனால் இவளுக்குக் காவேரி என்று பெயர்.

காகத்தால் கவிழ்த்து விடப் பட்டதால் காவிரி.

இவற்றைத் தவிர மகான்கள் கூறும் மற்றோர் அற்புத மான விளக்கமும் உண்டு. அவர்கள் எழுத்து எழுத்தாகப் பொருள் சொல்வார்கள். அது: ‘கா’ - பாவங்களைப் போக்குவது. ‘வி’- விரும்பியதைக் கொடுப்பது, ‘ரி’ - முக்தியைக் கொடுப்பது.

இந்த மூன்றையும் செய்வதால் ‘காவிரி’ எனப் பெயர் பெற்றது.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

ஐப்பசி மாதத்திலும், மாசி மகத்தன்றும் காவிரியில் நீராடுபவர்களின் புண்ணியத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது.

‘காவிரியின் தீர்த்த மகிமையினால் யாகங்கள் ஏராளமாகச் செய்யப்படும். அதனால் நமக்கு ஏராளமாக அவிர்பாகம் கிடைக்கும்!’ என்று தேவர்கள் மகிழ்கிறார்கள்.

முன்னோர்களான நம் பித்ருக்களும், ‘ஆஹா..! காவிரி தீர்த் தத்தினால் பக்குவம் செய்யப்பட்ட சாதம், காய் - கறி முதலியவற்றால் நமக்கு நம் வாரிசுகள் பிண்டம் போடுவார்கள். அது, கயாவில் போடப்படும் பிண்டத்தை விட விசேஷம். மேலும், காவிரியில் நீராடி நமக்குத் தர்ப்பணம் முதலானவற்றைச் செய்வார்கள்.’ என்று மகிழ்ச்சியடைவதாக நமது ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

இனி அகண்ட காவிரி என்றால் என்ன? அதன் மகிமைகள் என்ன என்பதைப் பார்ப்போம். தலைக்காவிரி என்னும் இடத்தில், கடல் மட்டத்துக்கு ஐயாயிரம் அடிக்கு மேலே, மகாவிஷ்ணுவின் வடிவான ஒரு நெல்லி மரத்தின் அடியில் இருந்து (குமிழ்கள் கிளம்புவதைப் போல) காவிரி உற்பத்தி ஆகிறது.

அங்கிருந்து சுமார் 6 கி.மீ தூரம் தாண்டி கீழே, பாகமண்டலம் என்னும் இடத்தில் கனகா, சுஜோதி என்ற இரண்டு உப நதிகள் வந்து காவிரியுடன் கலக்கின்றன.

மேலும், காவிரியின் வடக்குப் பக்கத்தில் 29 உபநதிகள் வந்து காவிரியுடன் கலக்கின்றன. அவை: கனகா, சிரங்கல நதி, கோபடி, கொட்டுறு, கருகண்டகி ஹோலி, முட்டார் முடியாறு, சிக்கோலிஹோலி, ஜாம்பூர் நதி, ஹேமாவதி, லோகபாவனி, ஷிம்ஸா, அர்க்காவதி, சேலம், சற்போகுஹல்லாகுர்ஜாகுலி, தொட்டஹள்ளி, குந்தாள பள்ளம், பெரிய பள்ளம், பாலையாறு, தொப்பையாறு, சரபங்கி, திருமணிமுக்த்தாறு மற்றும் எட்டு சிற்றாறுகள்.

இவற்றைத் தவிர, காவிரியின் தெற்குப் பக்கத்தில் 22 உப நதிகள் வந்து காவிரியுடன் கலக்கின்றன. அவை: திட்டுமால ஹொளெ, பெல்லியட்டார் கடனூர் ஹொளெ, லக்ஷ்மண தீர்த்தம், கபினி, கவர்ணா, குண்டலா, ஓருகோட்டை, வீரப்பகௌண்டல் ஹெரளெ, தொட்டகோனை, சின்னவர்த்தி ஹல்லா, எலக்கி ஹத்து ஹள்ளா, பாலாறு, பெரும் பள்ளம், நொய்யல், அமராவதி மற்றும் ஏழு சிற்றாறுகளும் கலக்கின்றன.

வடக்கில் கலக்கும் உப நதிகள் 29. தெற்கே கலக்கும் உப நதிகள் 22. ஆக, மொத்தம் 51 உப நதிகள்.

அகண்ட காவிரியில் 51 மந்திர பீஜாக்ஷர சக்திகளும் கூடியுள்ளன என்பதை இந்த உப நதிகள் நமக்கு நினைவு படுத்துகின்றன. இந்த 51 உப நதிகளிலும் கடைசியாக காவிரியில் கலப்பது அமராவதி நதி. இது காவிரியுடன் கலக்கும் இடத்துக்குத் ‘திருமுக்கூடல்’ என்று பெயர்.

இதற்கு எதிரே காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலத்துக்கு ஸ்ரீராம சமுத்திரம் எனப் பெயர். இந்த இடத்தில் இருந்துதான் பரிபூரணமான அகண்ட காவிரி ஆரம்பமாகிறது.

இதன் பிறகு சுமார் 45 கி.மீ தூரம் பாய்ந்தோடி, வாத்தலைக் கூடு என்ற இடத்தில் கொள்ளிடம், காவிரி என்று இரு பிரிவுகளாக பிரிகிறது. இதற்கு எதிரில் தென்கரையில் உள்ள எலமனூர் என்ற இடத்தில் அகண்ட காவிரி முடிவடைகிறது. (சுமார் 45 கி.மீ நீளமும், சுமார் 2 கி.மீ அகலமும் உள்ள அகண்ட காவிரி பகுதியே இந்த நதியின் முக்கியப் பகுதியாகும். நீர் பொங்கிப் பெருகி வரும் காலத்தில் அகண்ட காவிரியின் அழகும் கம்பீரமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.) இதன் பிறகே காவிரியில் இருந்து கிளை நதிகள் பல பிரிகின்றன.

அப்போது - காவிரியின் வடக்குப் பக்கத்தில் ஐயாறு, காயத்ரி நதி, கொள்ளிடம், அரசலாறு, வீரசோழன் என ஐந்து கிளை நதிகள் பிரிந்து செல்கின்றன.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!
மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

காவிரியின் தெற்குப் பக்கத்தில் உய்யக் கொண்டான், விண்ணாறு, தென் காவிரி, குடமுருட்டி என்னும் நான்கு கிளை நதிகள் பிரிந்து செல்கின்றன.

சரி, இனி அகண்ட காவிரி யின் நடுவில் தரிசனம் தரும் அம்பிகையையும், அகஸ்திய முனிவரின் ஞான அனுபவங்களையும் பார்ப்போம்.

அகஸ்தியர் கையில் இருந்த கமண்டலத்தைக் காக்கை வடிவம் எடுத்து வந்து விநாயகர் கவிழ்த்தார் என்பது அனைவருமே அறிந்த தகவல்.

காகம் கவிழ்த்ததும் கமண்டலத்தில் இருந்த காவிரி, பெருக்கெடுத்து ஓடியது. அகஸ்தியர் மனம் வருந்தினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.

‘குறுமுனிவா! நம் பக்தனான c, லலிதா சக்திபீட தலத்தில் இருந்து தவம் செய்ய வேண்டும். அதற்காகவே விநாயகர் மூலமாக உன் கமண்டலத்தை உருட்டி விடச் செய்தோம். எந்த இடத்தில் காவிரி, பரிபூரண அகண்ட காவிரியாகச் செல்கிறதோ, அந்த இடத்தின் நடுவில் காவிரியின் வடக்குப் பக்கத்தில் உள்ள மரகதாசலமே சாயாபுர சக்தி பீடமாகும். உத்தமமான அந்த இடத்தில் இருந்து நீ தவம் செய்!’’ என்று வழிகாட்டியது.

அகஸ்தியர் உள்ளம் அமைதி அடைந்தது. அவர் அன்னை லலிதாம்பிகையை தியானித்து அங்கிருந்து கிளம்பினார். அகண்ட காவிரியின் ஆரம்ப தலமாகிய திருமுக்கூடல் (மதுக்கரை) என்னும் இடத்தை அடைந்தார். அங்கு, தானே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

அதன் பிறகு அகஸ்தியர் மத்திய அகண்ட காவிரிக்கு வந்தார். அவருக்கு, காலையில் கடம்பர், மதிய நேரத்தில் சொக்கர், மாலைப் பொழுதில் ஈங்கோய்மலை (வழிவழியாக இன்று வரை சொல்லப்பட்டு வரும்) ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

நல்லவர்களின் ஆசை- அதுவும் நல்ல ஆசை உடனடியாக நடவடிக்கைக்கு வந்துவிடும் என்பது அங்கே உண்மையானது. காலையில் காவிரியில் நீராடிய அகஸ்தியர் (குளித்தலைக்கு அருகில்) கடம்பரை தரிசித்தார். உச்சிப் பொழுதில் ஐயர்மலை சொக்கரை தரிசித்தார்.

அதன் பின் மாலைப் பொழுதில் அகண்ட காவிரி யின் வடக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரை தரிசிக்க முயன்றார். அங்கு கோயில் கதவுகள் சார்த்தப்பட்டிருந்தன.

அகஸ்தியரின் மனதில் கவலை குடிகொண்டது. ‘‘இந்த மூன்று திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம். நம்மால் அவ்வாறு தரிசிக்க முடியாமல் போய் விட்டதே!’’ என்று வாய் விட்டுச் சொன்னார்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

அகஸ்தியரின் வாட்டம் ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை. அசரீரியாக தன்னை வெளிப்படுத்தினார்.

‘‘அகஸ்தியா! கவலைப் படாதே! தட்சகன் என்னும் நாக அரசன், இந்த மரகத மலை மீது ஒரு பக்கத்தில் ‘சர்ப்ப நதி’ எனும் வாய்க்காலாக உருமாறி மத்திய அகண்ட காவிரியில் மூழ்குகிறான். அந்த இடம் மகா புனிதமான தீர்த்தம். நீ அதில் மூழ்கு! மனிதர்கள் யாரும் உன்னை அறிந்துகொள்ள முடியாதபடி, ஈ வடிவம் கொண்டு கோயிலுக்குள் நுழைந்து பூஜை செய்வாயாக!’’ என்றது அசரீரி.

அகஸ்தியர் முகம் மலர்ந்தது. அசரீரி சொன்னபடியே செய்தார். மனித வடிவம் நீங்கி, ஈயாக வடிவம் கொண்டார் அவர். அவரது உருவம் மாறுவதற்குக் காரணமாக இருந்த ‘சர்ப்ப நதி’ அன்று முதல் ‘கொண்ட உருமாறி’ என்று வழங்கப்பட்டது. பிறகு அதுவே மருவி, ‘கொண்டா மாறி’ என்று சொல்லப்படுகிறது.

மரகத மலையில் அன்று முதல் அகஸ்தியர் ஈ வடிவமாக இருந்து தவம் செய்யும் காரணத்தால், அது ‘ஈங்கோய்மலை’ எனப் பெயர் பெற்றது.

ஈ வடிவம் கொண்ட அகஸ் தியர் பல விதமான பூக்களில் இருந்து தேனைச் சேகரித்து, அந்தத் தேனாலேயே சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தார். வாட்டமில்லாத வழிபாடு பல காலம் நடந்து வந்தது. இதனால் மகிழ்ந்த மரகதேஸ்வரர், அகஸ்தியர் முன் தோன்றினார்.

ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெரும் ஜோதியை அகஸ்தியர் வணங்கி எழுந்தார்.

‘‘தெய்வமே! ஸ்ரீ வித்யா மந்திர அர்த்தங்களை யும், லலிதாம் பிகை உபாசனை பற்றியும் தங்களிடம் இருந்து அறிய விரும்பு கிறேன். மேலும், இந்த ஈங்கோய்மலை சாயாபுர சக்தி பீடத் தலத்திலேயே தங்கி, ஸ்ரீசக்ர மேரு பீடம் அமைத்து பூஜை செய்யத் தங்களிடம் அனுமதியும் வேண்டுகிறேன்!’’ என்று சொல்லிக் கை கூப்பினார்.

அகஸ்தியரின் விருப்பத்தை நிறைவேற்றினார் ஆண்டவன். அதன்படியே இன்றும் அகஸ்தியர் எவரது பார்வையிலும் படாதபடி ஈங்கோய்மலையில் தவமும் வழிபாடும் செய்து வருகிறார்.

மகாயோகினி யான லோப முத்திரை (அகஸ்தியரின் மனைவி)யும், அகஸ்தியருக்குத் துணையாக அடுத்தவர் பார்வையில் படாதபடி இருந்து ஈங்கோய் மலையில் ஸ்ரீசக்ர ராஜ பூஜையும் தவமும் செய்து வருகிறார். இங்கு வந்து பக்தியுடன் தரிசிப்பவர்களும் பிரார்த்தனை செய்பவர்களும் நினைப்பவை எல்லாவற்றையும் அடைவார்கள்.

அகஸ்தியர், ஈங்கோய்மலைக்கு வந்து அகண்ட காவிரியில் மூழ்கி, ஈ வடிவம் கொண்டு பூஜை செய் தது மாசி மாதப் பௌர்ணமி அன்று. ஆகையால், அந்த தினத் தில் அகண்ட காவிரியில் நீராடி ஈங்கோய்மலையில் ஸ்வாமி தரிசனமும் வழிபாடும் செய்வது மிக மிக விசேஷம். (ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அவ்வாறு செய்வது விசேஷமே.)

ஈங்கோய்மலையைப் பற்றி மற்றும் சில முக்கிய தகவல்கள்: கடம்பந்துறை-கடம்பர், ஐயர் மலையில் சொக்கர், ஈங்கோய் மலை எனும் இவற்றில் முதல் இரண்டு தலங்கள் அதாவது கடம்பந்துறையும் ஐயர் மலையும் அகண்ட காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன. மூன்றா வது திருத்தலமான ஈங்கோய்மலை, அகண்ட காவிரியின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது (ஐயர் மலைக்கு நேர் எதிராக, இடப் பக்கமாக அமைந் துள்ளது.)

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!
திருச்சி காவிரி

இந்த மூன்று திருத்தலங்களை யும் சேர்த்துப் பார்த்தால் சிவன் கோயில்களில் இருக்கும் (சிவன் - முருகன் -அம்பிகை மூவரும் சேர்ந்த) சோமாஸ்கந்த வடிவத்தைப் போல இருக்கும். அபூர்வமான அமைப்பு இது. இதன் காரணமாகவே இந்த மூன்று திருத்தலங்களும் சேர்த்து ‘சோமாஸ்கந்த க்ஷேத்திரம்’ என்று சொல்லப்படுகிறது. இவற்றுள்:

ஐயர்மலை - சிவபெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலம்.

கடம்பர் கோயில் - முருகனுக்கு முக்கி யத்துவம் வாய்ந்த திருத்தலம்.

மரகதாசலம் என்னும் ஈங்கோய்மலை - அம்பாளுக்கு முக்கியத்துவம் கொண்ட திருத்தலமாக விளங்குகிறது.

இந்த மூன்று தலங்களிலும் ஈங்கோய்மலைக்குத் தனிப் பெருமை உண்டு. அது: ஸோமாஸ்கந்த க்ஷேத்திரத்தில் ஒன்றாக விளங்குவதுடன், சக்தி க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. சக்தி பீடங்களில், ஈங்கோய்மலை ‘ளம்’ என்னும் எழுத்துக்கு உரியதாக இருக்கிறது. இந்தத் தலத்தின் பிரதான சக்தி - லலிதாம்பிகை.

அம்பிகையின் திருமுக ஜோதியின் சாயை (நிழல்) விழுந்த இடம் இது. ஆதலால், இதற்கு (ஈங்கோய் மலைக்கு) ‘சாயாபுரம்’ என்ற பெயரும் உண்டு.

சிவபெருமான் இங்கு மரகதத்தால் ஆன லிங்க வடிவாக இருப்பதால், அவருக்கு மரகதேஸ் வரர் என்ற திருநாமம்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

கயிலாயத்தில் இருந்த ஒன் பது சித்தர்கள் இங்கு வந்து தவம் செய்து, சிவபெருமானிடம் வேண்டி வரங்கள் பலவற்றையும் பெற்றார்கள். அந்த ஒன்பது சித்தர்களும் இந்த தலத்திலேயே ஒன்பது இடங்களில் தவம் செய்து, இங்கேயே ஸித்தி அடைந்தார்கள். எனவே, இது நவ சித்தர்களின் சமாதித் தலமாகவும் விளங்குகிறது.

சித்த புருஷரான போகர், பழநியில் தண்டாயுதபாணி யைப் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னால், இந்த திருத்தலத்துக்கு வந்து, ஒரு புளிய மரத்தின் அடியில் வெகு காலம் சமாதி யோக நிஷ்டையில் இருந்தார். போகரின் சமாதிக் கோயில் இந்த மலையின் அடிவாரத்தில் இன்றும் உள்ளது.

இந்தத் திருத்தலம் வந்து வழி படுவதால் வேண்டும் வரம் கிடைக்கும். யோகினிகளால் பூஜை செய்யப்படும் சக்தி பீட நாயகி, நமது அல்லல்களைத் தீர்த்து, சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வை அருள்வாள் என்பதில் சந்தேகமில்லை. பேய், பிசாசு, பில்லி, சூன்யம் முதலியவற்றால் உண்டான தீமை கள் கூட முழுவதுமாக நீங்கும்.

அகஸ்தியர் முதலான மாமுனிவர்களாலும், ஒன்பது சித்த புருஷர்களாலும் பூஜை செய்யப்பட்டு வந்த - ஈங்கோய்மலை மரகதலிங்கம் தற்போது அங்கு இல்லை. திருடு போய் விட்டது.

சக்தி பீடங்கள் ஐம்பத்தொன்று என்று சொல்லப் படுபவற்றில், மிகவும் மேலான இந்தத் தலம், முசிறியில் உள்ளது. முசிறியில் இருந்து மேற்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ள இந்த திருத்தலத்துக்கு முசிறியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

கும்பகோணத்தில் மாசிமகம்!

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சி மகத்தன்று கும்ப கோணத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். ஞானமும் முக்தியும் கிடைக்கும். (பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்.)

அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சி இதை விளக்குகிறது. பாவனன் என்பவர் கையில் ஒரு மண் குடத்துடன் காசிக்குக் கிளம்பினார். சீடனும் கிளம்பினான்.

இறந்து போன தந்தைக்கு தகனக் கிரியைகளைச் செய்து விட்டு அவர் எலும்புகளைக் கொண்டு போய் கங்கையில் போட்டால் நல்ல கதி கிடைக்கும் என்ற எண்ணத்தில், தந்தையின் எலும்புகள் கொண்ட குடத்து டன் பாவனன் போய்க் கொண் டிருந்தார்.

போகும் வழியில் கும்ப கோணத்துக்கு வந்தார்கள். அங்கே சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சக்ரபாணி ஆல யத்தில் உள்ள அரச மரத்தடி யில் தன் கையில் இருந்த மண் குடத்தை வைத்தார். பிறகு,

‘‘சிஷ்யா! இதைப் பார்த்துக் கொள்! இதோ, வருகிறேன்’’ என்று சீடனிடம் கூறிவிட்டு, காவிரியில் சக்கர தீர்த்தத்தில் நீராடச் சென்றார். சற்று நேரம் ஆனது. சீடனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

‘‘குடத்தில் குருநாதர் சாப்பிட ஏதாவது வைத்திருப்பார். அதைச் சாப்பிட்டுப் பசியாறலாம்’’ என்று முணுமுணுத்தபடியே குடத்தின் மேல் மூடியை அகற்றினான் சீடன்.

அதில் _ பல விதமான வண்ணங்களில் தாமரைப் பூக்கள் இருந்தன. ‘இதை எப்படிச் சாப்பிடுவது?’ என்று எண்ணிய சீடன் முன் போலவே அதை மூடிவைத்து விட்டான். ‘குருநாதரிடம் சொன்னால் அவர் திட்டுவார்’ என்ற பயத்தில், நடந்ததை அவரிடம் சொல்லவில்லை.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

குருநாதர் குளித்து விட்டு வந்தார். குடத்தை எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். காசியை அடைந் தார்கள். கங்கைக் கரையை அடைந்த குருநாதர் குடத்தில் இருக்கும் எலும்புகளை கங்கையில் போடுவதற்காக, மந்திரங்களைச் சொன்னபடியே குடத்தைத் திறந்தார்.

‘குடத்தில் பூக்கள் இருந்தன. அவற்றை என்ன செய்யப் போகிறார் இவர்?’ என்ற எண்ணத்தில் எட்டிப் பார்த்தான் சீடன். குடத்தில் எலும்புகள் இருந்ததைக் கண்டு, ‘‘அச்சச்சோ!’’ என்றான்.

குரல் கேட்ட குருநாதர், ‘‘என்ன?’’ என்றார்.

‘‘கும்பகோணத்தில் இருந்த போது, தின்பதற்கு ஏதாவது இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தக் குடத்தைத் திறந்து பார்த்தேன். இதில் பூக்களாக இருந்தது. ஆனால், இங்கோ... எலும்புகளாக இருக்கிறதே!’’ என்று விவரித்தான் சீடன்.

இதன் பின், உண்மையைத் தெரிந்து கொண்ட குருநாதர், கங்கையில் எலும்புகளைப் போடாமல் குடத்தை மூடிக் கொண்டு கிளம்பினார் கும்பகோணத்துக்கு.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

ஆனால், கங்கைக் கரையில் இருந்தவர்களோ, ‘‘இங்கு வந்த நீங்கள், கங்கையில் எலும்புகளை போடாமல் போகக் கூடாது. விடமாட்டோம்!’’ என்று தடுத் தார்கள்.

அப்போது அனைவரும் திகைக் கும்படியாக அசரீரி கேட்டது. ‘‘அவனை விட்டு விடுங்கள்! கங்கையைவிட புனிதமானது காவிரி. அதிலும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதம் நிறைந்தது. பகவானுடைய சக்கரம் அங்கே நித்திய வாசம் பண்ணுவதே அதற்கு தகுந்த சாட்சியாகும். இந்த எலும்புகளை இவன் அங்கேயே கொண்டு போகட்டும்!’’ என்றது.

தடை நீங்கியது. குடத்துடன் குருநாதரும் சீடனும் கிளம்பி கும்பகோணத்தை அடைந் தார்கள்.

அங்கே சக்கர தீர்த்தத்தில் குடத்தைத் திறந்து பார்த்தபோது, எலும்புகளுக்கு பதிலாக பூக்கள் இருந்தன. அதிசயித்த குருநாதர், அவற்றைச் சக்கர தீர்த்தத்தில் சேர்த்து விட்டு, சக்கரபாணியைத் தரிசித்து வீடு போய்ச் சேர்ந்தார்.

முன்னோர்களின் எலும்பு களைக் கூடத் தூய்மையாக்கும் இந்த நிகழ்ச்சி மாசி மகத்தன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதன் காரண மாகவே மாசி மகம் அன்று, கும்ப கோணத்தில் உள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடுவதும், முன்னோர் களுக்குத் தர்ப் பணம் செய்வதும் விசேஷமாகச் சொல்லப்படு கிறது.

இதன்படி செய்தால் பித்ருக் களுக்கும் நற்கதி கிடைக்கும். நமக்கும் நல்வாழ்வு கிடைக்கும்.

மாசி மகத்தன்று, கும்ப கோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராடி பித்ருக்களுக்கு சிராத்தம் செய்பவர்களுக்கு, கயையில் கோடி சிராத்தம் செய்த பலன் கிடைக்கும்.

பரம்பரையும், மகா பாதகங் களில் இருந்து விடுதலை பெறும். அதாவது, 100 தலைமுறை - பாத கங்கள் தீண்டாமல் வாழும் என ஞான நூல்கள் கூறுகின்றன.

ஹோலி கொண்டாட்டம்!

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!
மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சி மாத பௌர்ணமி அன்று வடக்கே மும்பை, கல்கத்தா முதலான பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னாலேயே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விடும். வண்ண வண்ணப் பொடிகளையும் சாயம் கலந்த தண்ணீரையும் ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்வார்கள். ஒரே குதூகலமாக இருக்கும். இந்த ஹோலி பண்டிகையைக் குறித்த வரலாறு:

அரக்கனான இரண்யகசிபுவின் உறவுக்காரப் பெண் ‘ஹோலிகா’ என்ற அரக்கி. குழந்தைகளைக் கொன்று தின்பதே இவள் வழக்கம். நெருப்பும் இவளை எரிக்க முடியாது.

நாராயணன் நாமம் சொன்ன தன் மகன் பிரகலாதனை இந்த ஹோலிகாவிடம் ஒப்படைத்தான் இரண்யகசிபு.

பிரகலாதனைக் கையில் தூக்கிக் கொண்ட ஹோலிகா!

‘‘மன்னா! இன்னும் சற்று நேரத்தில் பார்! இந்தப் பயல் சாம்பலாகப் போகிறான்!’’ என்று கூவியபடியே, கொழுந்து விட்டு எரியும் தீயில் குதித்தாள். தீயால் தன்னை எரிக்க முடியாது என்ற தைரியம் அவளுக்கு.

ஆனால், தீயில் குதித்த சற்று நேரத்திலேயே ஹோலிகா எரிந்து போனாள். பிரகலாதனோ எந்தத் தீங்கும் இல்லாமல், தீயிலிருந்து வெளி வந்தான்.

இதையட்டியே, இன்னும் வட நாட்டில் ‘ஹோலிகா’ கொடும்பாவி கட்டிக் கொளுத்துகிறார்கள்.

நல்லவற்றுக்கு அழிவு கிடை யாது; தீயவற்றுக்கு என்றும் வாழ்வு கிடையாது என்பதை விளக்குவதே ஹோலி பண்டிகை. தீமை அழிந்து நன்மைகள் கிடைப்பதால், உள்ளம் துள்ளுகிறதல்லவா? அதையே ஹோலி பண்டிகையின் போது செய்யப்படும் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன.

ஸ்ரீமுஷ்ணம் அதிசயம்!

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

தெ ய்வம் எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் அருள் செய்யும் என்பது உண் மையான பக்தர்கள் அறிந்த உண்மை.

முஸ்லிம் தலை வர் ஒருவருக்கு ஸ்ரீமுஷ்ணத்து ஸ்வாமி, துயர் தீர்த்த வரலாறு அதைப் புலப்படுத்துகிறது.

பூராஸாஹிப் என்பவர் முஸ்லிம்களின் தலைவராக விளங்கியவர். இவருக்கு, முதுகில் ராஜபிளவை என்னும் கட்டி உண்டானது. திறமைசாலியான மருத்துவர்கள் பலர் வைத்தியம் பார்த்தும், பலன் இல்லாமல் போனது. நாளாக நாளாக வலி அதிகமானது. தாங்க முடியாமல் துடித்தார் பூரா ஸாஹிப்.

தெரிந்தவர்கள் அனைவரிடமும் தன் துயரத்தைச் சொல்லி, ‘‘இது தீர ஏதாவது வழி உண்டா?’’ என்று விசாரித்தார்.

‘‘ஸ்ரீமுஷ்ணத்தில் வெங்கட்ராவ் என்ற உப்பு இலாகா அதி காரி இருக்கிறார். உத்தமமான வைஷ்ண வர். விஷ்ணு பக்தியில் ஊறிப் போனவர். அவரிடம் போய்க் கேட்டால், ஏதாவது வழி பிறக்கும்!’’ என்று பதில் வந்தது.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

சற்றுத் தயங்கினார் பூரா ஸாஹிப். ஆனால், அவருடைய நோயின் கொடுமை அவரைக் கொண்டுபோய் வெங்கட்ராவின் முன்னால் நிறுத் தியது.

தனது துயரத்தை விரிவாகச் சொல்லி, ‘‘என்னைப் பீடித்து வரும் ராஜபிளவையில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். வழி காட்டுங்கள்!’’ என்று கண்ணீர் வடித்தார் பூரா ஸாஹிப். ‘ஏதாவது சொல்லுவார்!’ என்று எதிர்பார்த்து அங்கேயே நின்றார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எந்த பதிலையும் வெங்கட்ராவ் சொல்லவில்லை. ‘விறுவிறு’வென்று துளசி தீர்த்தத்தைக் கொண்டு வந்து பூரா ஸாஹிப்பிடம் தந்தார். ‘‘இதைச் சாப்பிட்டு விட்டு வீடு செல்லுங்கள்!’’ என்றார் வெங்கட் ராவ்.

ஸ்வாமியின் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார் பூராஸாஹிப்.

அன்று இரவு... பூரா ஸாஹிப் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கனவில் - ஒரு பன்றி வந்து முதுகைக் குத்து வதைப் போன்ற காட்சி வந்தது. ஒன்றும் புரியாவிட்டாலும் பூரா ஸாஹிப்புக்கு மெய்சிலிர்த்தது.

மறு நாள் அவரது ராஜபிளவை நோய் பூரணமாகக் குணமடைந்தது. பூரா ஸாஹிப் முகம் மலர்ந்தார். ‘‘ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி அருளால்தான் என் கட்டி பூரண குணமடைந்தது!’’ என்று சொல்லி, 150 ஏக்கர் நன்செய் நிலத்தை அந்த ஸ்வாமிக்கு எழுதி வைத்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. பூரா ஸாஹிப்பின் வாழ்நாள் முடிந்தது. ஸ்ரீமுஷ்ணத்தின் அருகில் இருக்கும் கிள்ளை என்ற ஊரில் அவரது சமாதி அமைந்தது.

வராக ஸ்வாமியின் அருளால் பூரா ஸாகிப்பின் துயர் தீர்ந்ததை நினைவுபடுத்துவதற்காகவும், ஸ்வாமியின் அருளைப் பெறுவதில் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், இப்போதும் மாசி மக உற்சவத்தின்போது உற்சவரை பூரா ஸாகிப்பின் சமாதி அருகில் எழுந்தருளச் செய்து, தீபாராதனை செய்யப்படுகிறது.

பூரா ஸாஹிப்பின் குடும்பத் தாருக்குப் பிரசாதங்கள் அளிக் கும் வழக்கமும் உள்ளது. கோயில் சந்நிதி வரை செல்ல முஸ்லிம் களுக்கு இந்தக் கோயிலில் அனு மதி வழங்கப்பட்டிருக்கிறது.

மாசி மாதமும் கடற்கரையும்

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!
மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மா சிமகத் திருநாள் கடலாடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதமான இந்த நன்னாளில் கடலில் நீராடுவது மிகவும் விசேஷமாகச் சொல்லப் படுகிறது.

மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலிச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும்
அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய்

என்னும் திருஞானசம்பந்தரின் பாடல் இதனை வலியுறுத்தும்.

இதன் விசேஷத்தை இரண்ய வர்மன் என்ற சக்ரவர்த்திக்கு, வியாக்ரபாத முனிவர் விவரித் திருக்கிறார்.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!

மன்னன் ஒருவன். தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரமெல்லாம் அவன் எதிரிலேயே யாரும் இருக்க முடியாது. அவ்வளவு கொடியவன். அவனை வெல்வதற்கேற்ற ஒரு நல்வழியைத் தேடி, வருண பகவானை நாடிப் போனார் அவனது குரு. அப்போது இருள் சூழ்ந்த நேரம்.

‘யாரோ பகைவன்தான் வருகிறான்!’ என்று நினைத்த வருண பகவான், தன் பாசத்தை அவர் மேல் வீசினான். குரு இறந்தார். அந்தப் பாவம் ஒரு பிசாசாகத் தோன்றி வருணன் முன்னால் நின்றது. வருணனின் கால்களையும் கைகளையும் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளியது அந்தப் பிசாசு. வருணன் அங்கேயே நீண்ட காலமாகக் கிடந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

தேவர்கள், மனிதர்கள் யாவரும் போய் சிவபெருமானிடம், ‘‘கால காலா! வருணனின் துன்பத்தை நீக்கி அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

வேண்டுதலுக்கு இணங்கிய சிவபெருமான் கடலுக்குள் சென்று வருண பகவானின் கட்டுக்களை அறுத்து விடுதலை அளித்தார்.

விடுதலை பெற்ற வருணன் கடலில் இருந்து வெளிப்பட்டு சிவபெருமானை வணங்கினான். கை கூப்பியபடி ஒரு வேண்டுகோளையும் வைத்தான். ‘‘கண்ணுதலோனே! தாங்கள் எழுந்தருளி எனக்கு விடுதலை அளித்த, மாசிமகமாகிய இந்த நன்னாளில் இந்தத் துறை(கடற்கரை)யில் நீராடி யவர்களின் துன்பக் கட்டுகளை எல்லாம் நீக்கி, அவர்களுக்கு முக்தி தந்தருள வேண்டும். ஸ்வாமியான தாங்களும் மாசி மகத்தன்று இந்தத் துறைக்கு எழுந்தருள வேண்டும்’’ என்று வேண்டி வரங்களைப் பெற்றான்.

இந்த வரலாற்றை வியாக்ரபாதர் சொல்லி முடித்ததும், இரண்ய வர்மன் மனம் மகிழ்ந்து மாசிமக நன்னாளை எதிர்பார்த்து இருந் தார்.

மாசி மக நாள் வந்தது. சிதம் பரத்தில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானுக்குக் கொடி ஏற்றினார் இரண்யவர்மன். தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்து விழாவை தரிசித்து ஸ்வாமியை வழிபட்டார்கள்.

ஸ்வாமி கடலுக்குச் செல்லும் வழியைத் தூய்மையாக்கி அலங்கரித்தார்கள். சிவபெருமான் கடலுக்கு எழுந்தருளினார். வருணன் எதிர் வந்து நமஸ் கரித்தான். வருணனின் பாசத்தைப் போக்கியருளிய துறையில் திருமஞ்சனமாடிய (நீராடிய) சிவ பெருமான், அடியார்களுக்கு அருள் புரிந்து கனகசபையில் புகுந்தார்.

வருணனின் பாசம் அறுத்த அந்த இடம் ‘பாசமறுத்த துறை’ என்றே பெயர் பெற்று விளங்குகிறது. இது சிதம்பரத்தில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது.

மாசி மகத்தன்று இந்த இடத்தில் ‘தீர்த்தோற்சவம்’ மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மங்கலங்கள் அருளும் மாசி மாதம்!


அம்பிகை அவதாரம்!

ல்லா ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து அருள் செய்யும் அம்பிகை, திரு அவதாரம் செய்த மங்கலத் திருநாள் ‘மாசி மகம்’.

உபதேசம் பெறலாம்!

மா சி மகத்தன்று உபதேசம் பெறுவது மிக மிகச் சிறந்தது. பிரம்மோபதேசம், வேறு ஏதாவது மந்திர உபதேசம் முதலானவற்றை இந்த நாளில் பெற்றால், அதற்குத் தனிச் சிறப்பும் பலனும் உண்டு. புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிக்கலாம். உதாரணம்: கம்ப்யூட்டர் கோர்ஸ், சங்கீதக்கலை, பரதம் முதலானவை. நல்ல முறையில் சீக்கிரம் பதியும். பலனளிக்கும்.