Published:Updated:

இங்கே நிம்மதி!

இங்கே நிம்மதி!

அன்பு... அரவணைப்பு
இங்கே நிம்மதி! - 21
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- மாதா அமிர்தானந்தமயி தேவி

இங்கே நிம்மதி!

ரு மடத்தில், குருவோடு சீடர்கள் பலர் வசித்து வந்தனர். அற்புத சக்திகள் படைத்த குரு அவர். அவருடன் சேர்ந்து சீடர்கள் தவம் புரிந்தனர். அன்பும் பக்தியும் அந்த சீடர்கள் மத்தியில் பொங்கி வழிந்தது. குருவை மதித்த அதே வேளையில், தங்களுக்குள்ளும் அவர்கள் அன்புடன் நடந்து கொண்டனர். ‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்று யாரையாவது கேட்டால் அவர்கள் இந்த மடத்தைத்தான் காட்டுவார்கள். நிம்மதி தேடி பல நாட்டு மக்கள் வந்து போகும் இடமாக அந்த மடம் இருந்தது. அற்புதமான ஆன்மிகச் சூழல் அங்கே நிலவியது.

ஒரு நாள் குரு சமாதி அடைந்தார். அவரது வழிகாட்டுதல் இல்லாமல் போனாலும் சீடர்கள் சில நாட்கள் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டு வந்தனர். துணி துவைப்பது, சமையல் செய்வது, மடத்தை பராமரிப்பது என பல பணிகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு இதுவரை செய்து வந்த சீடர்கள், குரு இல்லாத சூழ்நிலையில் முரண்டு பிடிக்க ஆரம்பித்தனர். தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை வந்துவிட, அவர்களால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை. அன்பும், பக்தியும் இல்லாமல் அவர்களது இதயம் வறண்டது. சீடர்களே நிம்மதி இழந்து காணப்பட்டதால், நிம்மதி தேடி பக்தர்கள் எவரும் அங்கே வரவில்லை!

மூத்த சீடர் ஒருவர் மடத்தின் நிலைமை குறித்துக் கவலை கொண்டார். மீண்டும் இந்த மடத்தைப் பழைய மாதிரி உயரிய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என நினைத்தார் அவர். அருகிலிருந்த காட்டில் மகான் ஒருவர் வாழ்வதாகக் கேள்விப்பட்டு அவரிடம் போன மூத்த சீடர், தங்களது மடத்தின் நிலையைக் கவலையோடு எடுத்துச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்ட அந்த மகான் புன்முறுவலுடன், ‘‘மடத்தில் வாழும் உங்களில் யாரோ ஒருவர் கடவுளின் அவதாரம். ஆனால், அவர் தனது தெய்விக இயல்பை வெளிப்படுத்தாமல் சாதாரணமாக வாழ்கிறார். அவர் அதை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார். மற்ற சீடர்கள் அவரிடம் அன்பும் மரியாதையும் காட்ட மறந்து விட்டீர்கள். அதனால்தான் உங்கள் மடத்தில் இவ்வளவு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது!’’ என்று சொன்னார்.

அந்த அவதார புருஷர் யார் என மூத்த சீடர் பல முறை வற்புறுத்திக் கேட்டும் மகான் சொல்லவில்லை. அதோடு அவர் தியானத்தில் மூழ்கி விட்டார்.

மூத்த சீடர் மடத்துக்குத் திரும்பி வரும்போது அவருக்குப் பெரும் மனக் குழப்பம். ‘மகான் சொன்ன அந்த அவதாரச் சீடர் யாராக இருக்கும்?’ என்ற கேள்வி அவர் மண்டையைக் குடைந்தது. ‘மடத்தில் துணிகளைத் துவைக்கும் துறவியா? இருக்காது... அவர் முன்கோபி ஆயிற்றே. சமையல் செய்பவரா? இல்லை... அவருக்கு ஒழுங்காக சமைக்கவே தெரியாதே! கடவுளின் அவதாரம் இப்படி அலட்சியமாக இருக்க வாய்ப்பில்லையே! ஒருவேளை மடத்தை தினமும் சுத்தம் செய்யும் துறவியா? இருக்காது. இத்தனை வருஷங்கள் ஆகியும் அவருக்கு ஒழுங்காக தவம் செய்யக்கூடத் தெரியவில்லையே!’

இப்படியாக யோசித்தபடியே நடந்து மடத்துக்கு வந்துவிட்டார் மூத்த சீடர். அவசரமாக மற்ற எல்லா சீடர்களையும் அழைத்து, மகான் தன்னிடம் கூறியதைத் தெரிவித்தார். இதைக் கேட்டு அவர்களும் ஆச்சரியம் அடைந்தனர். ‘மகான் கூறிய அவதார புருஷர் யாராக இருக்கும்?’ என தங்களுக்குள் அவர்கள் விவாதம் செய்தனர். மடத்திலிருந்த அனைத்துச் சீடர்களுக்கும் ஏதோ ஒரு குறை தங்களுக்குள் இருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயம், ‘தாங்கள் அந்த அவதார புருஷர் கிடையாது!’ என ஒவ்வொருவரும் தங்கள் மனதுக்குள் உணர்ந்தனர்.

அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக, ‘நம்மில் யாரோ ஒருவர்தான் அவதார புருஷர். நாம் அடுத்தவர்களின் குறைகளை மட்டுமே பார்ப்பதால், யார் அவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அந்த மகான் கூறியபடி அந்த அவதார புருஷர் தம்மை மறைத்துக் கொள்ள ஏதாவது குறைகள் உள்ள சாதாரண மனிதர் போல நடக்கலாம். எப்படி இருந்தாலும் கடவுளை நாம் அவமதிக்கக் கூடாது. யார் கடவுள் என தெரியாத நிலையில் நாம் எல்லோருமே ஒருவரை ஒருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடத்துவோம்’ என அவர்கள் முடிவு செய்தனர்.

அந்த நிமிடம் முதல் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள். அவதார புருஷரைத் தேடும் முயற்சியில் அவர்கள் பிற சீடர்களின் நல்ல பண்புகளைப் பார்க்க ஆரம்பித்தனர். இதனால் இயல்பாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கலாயினர். நாளடைவில் அவர்கள் தங்களில் எல்லோரையுமே கடவுளின் அவதாரமாகப் பார்த்தனர். நிம்மதி அங்கே மீண்டும் குடிபுகுந்தது. பழையபடி அந்த மடத்தைத் தேடி மக்கள் குவிந்தனர்!

எல்லாவற்றுக்கும் காரணம் அந்த மகான் சொன்ன ஒரே ஒரு பொய். அதை பொய் என்று சொல்லவும் முடியாது. தனக்குள் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு ஜீவனும் கடவுளின் அவதாரம்தான்!

வாழ்க்கையில் சந்தோஷம்-துக்கம், அன்பு-கோபம், நிம்மதி-மனவேதனை இவை எல்லாமே ஒன்றுக்கொன்று எதிரான துருவங்கள். இவை வெளியில் எங்கிருந்தும் வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்வதில்லை. எல்லா உணர்வுகளும் உங்களுக்குள் இருந்துதான் எழுகின்றன. உங்களிடம் என்ன குணம் இருக்கிறதோ, அதைத்தான் மற்றவர்களிடம் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் அடுத்தவர்களுக்கு என்ன தருகிறீர்களோ, அதையே அவர்களிடமிருந்து பெறுகிறீர்கள். அடுத்தவர்களின் செயல்கள் எப்படி உங்களை பாதிக்கிறதோ, அதே மாதிரி உங்கள் செயல்களும் அடுத்தவர்களை பாதிக்கின்றன.

ஒரு நாள் பேருந்தில் ஏறினார் அந்தப் பயணி. அதன் நடத்துநர் நடந்து கொண்ட விதம் அவரை மட்டுமல்ல, பல பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. புன்னகையுடன் அவர் பேசினார். நிறுத்தங்களில் சரியாகப் பேருந்தை நிறுத்தினார். எல்லோரும் ஏறிய பிறகே பேருந்துக்கு விசில் கொடுத்தார். சரியாகச் சில்லறை கொடுத்தார். எவ்வளவோ கூட்டம் ஏறிய பிறகும் கூட அவரது அமைதி குலையவில்லை. ‘சற்று நகர்ந்து உள்ளே போங்கள்’ என கனிவாகப் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதைக் கவனித்த அந்தப் பயணி, ‘‘மற்ற பேருந்துகளில் இதுபோல் நான் பார்த்ததில்லை. நீங்கள் மட்டும் இப்படி புன்னகையோடு பணி புரி வதன் ரகசியம் என்ன?’’ என்று கேட்டார்.

‘‘இதில் ரகசியம் எதுவும் இல்லை. என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்!’’ என்று சிரித்த அந்த நடத்துநர், தன் கதையைச் சொன்னார்.

‘‘இந்த வேலைக்கு வருவதற்கு முன்பு நான் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். காலையில் அவசரமாக வேலைக்குக் கிளம்புவேன். பேருந்து தாமதமாக வரும். அப்படியே வந்தாலும் நிறுத்தத் தில் நிற்காமல் நீண்ட தூரம் முன்னால் போய் நிற்கும். ஓடிப் போய் ஏறுவதற்குள் அவசரமாக நடத்துநர் விசில் கொடுப்பார். பயணச்சீட்டு வாங்க சில்லறை தராவிட்டால் திட்டுவார். பாக்கியைக் கேட்டால் கோபமாக பேசுவார். மறு நாளும் அதே பேருந்தில்தானே போக வேண்டும். அதனால் பதிலுக்குத் திட்டாமல் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். இதே மனநிலையோடு அலுவலகம் போனால், அங்கு சக ஊழியர்களிடம் சிரிக்கக்கூடத் தோன்றாது. வேலையிலும் கவனம் ஓடாது. மன இறுக்கத்தோடு வேலை பார்ப்பதால் தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவேன். அவரைத் திருப்பித் திட்டவும் முடியாது.

அந்தக் கோபத்தை மனதில் அடக்கிக் கொண்டு வீட்டுக்கு வருவேன். காரணமே இல்லாமல் மனை வியை, குழந்தைகளைத் திட்டுவேன்; அடிப்பேன். அவர்கள் என்னைக் கண்டாலே தூர விலகி ஓடுவர். இப்படி குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஒதுங்கித் தனிமையில் தவித்தேன். இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.

ஒரு நாள் காலை. நான் கிளம்பி வருவதற்குள் பேருந்து கிளம்பி விட்டது. ஓடிப் போய் ஏற முயன்ற போது நடத்துநர் விசில் அடித்து பேருந்தை நிறுத்தி என்னை ஏற்றிக் கொண்டார். இவர் புதியவராக இருந்தார். திட்டாமல் சிரித்தபடி சில்லறை பாக்கி யைக் கொடுத்தார். பேருந்தில் உட்கார இடமில்லை. நடத்துநர் எழுந்து அவர் இருக்கையில் என்னை உட்கார வைத்தார். காலையில் அவசரமாகக் கிளம் பிய களைப்பில் அப்படியே தூங்கி விட்டேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நடத்துநர் என்னை எழுப்பி விட்டார்.

இங்கே நிம்மதி!

என்னால் இதை நம்ப முடியவில்லை. அன்று எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வறண்ட பாலைவனத்தில் தாகத்தால் தவிப்பவன் அடைமழையைப் பார்த்து எப்படி ஆறுதல் அடைவானோ, அப்படி இருந்தது எனக்கு! அதே மகிழ்ச்சியுடன் அலுவலகம் போனேன். சக ஊழியர்களைப் பார்த்துச் சிரித்தபடி வணக்கம் தெரிவித்தேன். அவர்களும் என்னைப் பார்த்து அன் போடு சிரிப்பது எனக்கு தெரிந்தது. உற்சாகத்துடன் வேலை பார்க்க உட்கார்ந்தேன். வேகமாக அன்றைய வேலைகள் முடிந்ததால் மேலதிகாரி என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடுமை காட்டாமல் உத்தரவுகள் பிறப்பித்தேன். அன்பாகப் பேசி, அவர்களது நலன் விசாரித்தேன். எப்போதும் கஷ்டமாகத் தோன்றும் வேலை அன்று ரொம்ப சுலபமாகத் தெரிந்தது. மாலை வீட்டுக்குள் சிரித்தபடி நுழைந்தேன். மனைவியிடம் மனம் திறந்து பேசினேன். குழந்தைகளோடு கொஞ்சி விளை யாடினேன். எப்போதும் நிசப்தமாக இருக்கும் வீடு அன்று கலகலப்பாக மாறியது. என்னிடம் ஏற்பட்ட மாற்றத்தால் அனைவரிடமும் ஏற்பட்ட மாற்றங்கள் எனக்குத் தெரிந்தது. ஒரே நாளில் உலகமே வண்ண மயமாக மாறிவிட்டது போல தோன்றியது.

அப்போதுதான் எனக்கு புரிந்தது _ நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே பெறுகிறோம். ‘அந்த பழைய நடத்துநர் மாதிரி இருக்கும் எல்லோரும் மாறட்டும்... அதன் பிறகு நானும் மாறுகிறேன்’ என முரண்டு பிடிப்பதில் அர்த்தமில்லை. நான் நல்ல வனாக மாறினால், என்னைச் சுற்றிலும் மாற்றங்கள் நிகழ்வது புரிகிறது. அதனால் இனி எல்லோரிடமும் அன்பையும், பணிவையும் மட்டுமே காட்டுவேன் என தீர்மானித்தேன். எனக்கு இந்தப் புதிய வேலை கிடைத்த பிறகு அதே மாதிரி நடக்கிறேன்!’’ என்று நீளமாகச் சொல்லி முடித்தார் அந்த நடத்துநர்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒவ்வொருவரை யும் கடவுளின் அவதாரமாக நினைத்துக் கொள்ளுங் கள். அது உங்கள் மேலதிகாரியோ, கீழே வேலை பார்க்கும் ஊழியர்களோ, உங்கள் உறவினர்களோ, குழந்தைகளோ... எல்லோரையும் அப்படி நினைத் துக் கொள்ளுங்கள். கடவுள் மீது பொழியும் அதே பக்தியையும் அன்பையும் பணிவையும் அவர்களிடம் காட்டுங்கள். அவர்களது குறைகளை மறந்துவிட்டு நல்ல விஷயங்களைக் கண்டு பிடித் துப் பாராட்டுங்கள். உங்களைச் சுற்றி உலகம் மாறியிருப்பதை உணர்வீர்கள். உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நிறைய உறவுகள் உரு வாகும்.

அன்பைக் கொடுத்து அன்பைப் பெறும் வாழ்க் கையில், அலுப்பும் அவதியும் கண்டிப்பாக இருக் காது!