Published:Updated:

சுகி.சிவம் பக்கம்

சுகி.சிவம் பக்கம்

உங்களுக்கு ஒரு செய்தி
கடவுள் உணவு தருவார்!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சுகி.சிவம்

சுகி.சிவம் பக்கம்

னக்குப் பசித்தால் கடவுளுக்குப் பசிக்கும் என்ற பொருளில், ‘யான் பசித்த போதெல்லாம் தான் பசித்ததாகி’ என்று பாடினார் வடலூர் வள்ளலார்.

அபரிமிதமான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளின் அன்பு நெருக்கத்தைப் பல முறை அனுபவித்தும் இருப்பார்கள். ஆனால், இந்த நம்பிக்கை, மனித முயற்சிக்கு - உழைப்புக்கு விரோதமாகி விடக் கூடாதே என்று நான் கவலைப்படுவது உண்டு.

உழைக்காமலேயே உட்கார்ந்து கொண்டு, குடும்ப வாழ்வில் இருந்தபடி ‘கடவுள் எனக்குச் சோறு போட்டால் என்ன!’ என்று கேட்பது அபத்தம். அறிவீனம். உழைப்பது நமது கடமை. நமக்குப் படியளக்க வேண்டியது இறைவன் கடமை என்பதுதான் சரியான வாழ்க்கை முறை.

‘என் கடன் பணி செய்து கிடப்பது’ என்று அறிவித்த நாவுக்கரசர், ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல்’ என்று கடவுளுக்கு நினைவூட்டினார். சமயத்துக்கும் சமூகத்துக்கும் உழைத்த வீரத்துறவி விவேகானந்தர், ‘பாடுபடுவது, தமது கடமை. தமக்குப் படியளப்பது இறைவன் கடமை!’ என்றே வாழ்ந்தார்.

ஒரு முறை விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்தபோது அவரது காவி உடையையும் துறவித் தோற்றத்தையும் ஒருவர் கேலி செய்தார். உடல் உழைப்பின்றி சந்நியாசிகள் ஊரை ஏமாற்றுவதாகக் கிண்டல் செய்தார். ‘உடல் உழைப்பு மட் டும் உழைப்பல்ல. அறிவைக் கொண்டு சமுதாயத்துக்குப் பயன்படுவதும் உழைப்புதான்!’ என்றார் சுவாமி. ஆனால், மற்றவரோ சந்நியாசிகள் உழைக்காமல் ஊரை ஏமாற்றி உண்டு கொழுப்பதாகத் தமது கருத்தை வலியுறுத்தினார்.

‘‘நீர் எமக்கு உணவிடுவது இல்லை. கடவுள் எமக்குப் படியளக்கிறார். உணவு தருகி றார்!’’ என்றார் விவேகானந்தர்.

‘‘அதெல்லாம் இல்லை. நீர் பிச்சை எடுப்பதால் உணவு தருகிறார்கள். நீர் பிச்சை கேட்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்தால், கடவுள் உமக்குச் சோறிடுவாரா?’’ என்றார் வம்புக்காரர்.

‘‘இடுவார்!’’ என்றார் சுவாமி.

உணவு வேளை வந்தது. ரயில் நிலையத்தில் இறங்கி சுவாமி நின்றார். ‘கடவுளாவது உணவு தருவதாவது...’ என்று வம்புக்காரர் கேலி யாக நினைக்க ஆச்சரியம் ஒன்று நடந் தது!

‘‘சுவாமி...சுவாமி’’ என்று கத்திய படி விவசாயி ஒருவர் கையில் உணவு மூட்டையுடன் ஓடி வந்தார். வலுக்கட்டாயமாக சுவாமியிடம் உணவைத் திணித்தார். வம்புக்காரர் ஆச்ச ரியமாக அவரைப் பார்த்து, ‘‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’’ எனக் கேட்டார்.

‘‘ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் என் வீடு. நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். கனவு வந்தது. கனவில் இதே சுவாமி வந்தார். ‘இவர் பசியாக இருக்கிறார். உணவு கொண்டு போய்க் கொடு’ என்று ஒரு குரல் கேட்டது. நான் அலட்சியமாகப் படுத்து உறங்கினேன். மீண்டும் அதே குரல் கடுமையாகக் கேட்டது. எழுந்து உணவை அள்ளிக் கொண்டு என்னை அறியாமல் ரயில் நிலை யம் நோக்கி வந்தேன். கனவில் கண்ட அந்த சுவாமி இவர்தான். இவரேதான்!’’ என்று கூறிவிட்டுப் பல முறை வணங்கினார் விவசாயி. வம்புக்காரர் வாயடைத்துப் போனார்!

வேடிக்கைக் கதைகூட ஒன்று உண்டு. எப்போதும் கடவுளை வியந்து பேசும் ஆத்திகரை, நாத் திகர் ஒருவர் மட்டம் தட்ட நினைத்தார். ‘‘கடவுள்தான் உனக்கு எல்லாம் செய்கிறார் என்று அளக்கிறாயே! ஓர் அத்துவானக் காட்டில் உணவோடு நீ இருந்தால் கடவுள் உனக்கு ஊட்டி விடுவாரா? ஒரு வாய் ஊட்டினால்கூட நான் உன் கட்சி!’’ என்று சவால் விட்டார்.

ஆள் அரவமில்லாத பொட்டல்காட்டில் தட்டு உணவோடு இருவரும் உட்கார்ந்தனர். நெடு நேரமாகக் கடவுள் வரவும் இல்லை. ஊட்டவும் இல்லை!

அதன் பிறகு அந்த வழியாக ஒரு வழிப்போக்கன் கடும் பசியுடன் வந்தான். தட் டில் உணவுடன் மௌனமாக உட் கார்ந்திருக்கும் இவர்களைப் பார்த்ததும் அருகில் வந்தான். அவசரமாக உணவை அள்ளித் தின்னப் போனவன் திடீரென்று யோசித்தான்.

‘இந்த உணவில் விஷம் இருக்குமோ, அதனால்தான் இவன் உண்ணவில்லையோ?’ என்று நினைத்தவன் இரண்டு கவளம் உணவை எடுத்து வலுக்கட்டாயமாக இருவர் வாயிலும் திணித்தான். சாப்பிட்டபின் அவர்கள் சாகாவிட்டால், தான் தின்னலாம் என்கிற எண்ணத்தில்.

எப்படியோ! கடவுள் ஊட்டி விட்டார். உண்மையில் அவர் பால் நினைந்தூட்டும் தாய்! ஆனால், அடிக்கடி அந்த வேலையை அவருக்குத் தரலாமோ? உழைக்கத் தெரியாத பிள்ளைப் பருவத்தில்தான் தாய் பாலூட்டுவாள். உணவு தருவாள். வளர வளர தாய்க்கும் சேர்த்து பிள்ளை சம்பாதிக்க வேண்டாமோ?

கடவுளையும் புரிந்து கொள்ளுங்கள். கடமையையும் புரிந்து நில்லுங்கள். அதுதான் வாழும் வழி!