Published:Updated:

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்
பிரயாகையில் அருள்தரும் ஸ்ரீலலிதாம்பிகை!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ஜபல்பூர்நாகராஜ சர்மா

முப்பத்தெட்டாவது ரூபம்
‘ப’-ம் பட்காரிணிதேவி எனும் ஆதபகோமளாதேவி

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

ம்ஸ்கிருதத்தின் இருபத்திரண்டாவது மெய்யெழுத்து ‘ப’. இதற்குரிய அம்மனின் திருநாமம் பட்காரிணிதேவி எனும் ஆதப கோமளாதேவி. கீழ்க்கண்ட சுலோகம் இவளைப் பற்றி வர்ணிக்கிறது.

பஞ்சவக்த்ரோக்ர ஸிம்மஹஸ்தா பாடலாதப கோமளா
பாக்யா சுனகணாஸிகேட வராபயதராசராந்
பாசம்ச டமரும் தத்தே க்ரமேண தசபி: கரை:

ஐந்து முகங்கள் மற்றும் பத்துக் கரங்களுடன் சிவந்த நிறம் கொண்டவள். இவளின் வலக் கரங்களில் முறையே அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, உடுக்கை முதலியவையும், இடக் கரங்களில் முறையே வர முத்திரை, மான், கேடயம், பாசம், சூலம் முதலியவையும் காணப்படுகின்றன. பிரமாண்டமான சிம்ம வாகனத்தின் மீது இவள் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள் என்பது கருத்து.

‘ப’கார மாத்ருகாதேவி சைவத்தில் சிகீஸ்வரனாக, வைணவத்தில் ஜனார்த்தனாக, சாக்தத்தில் ரௌத்ரி கலையாக, நம் சரீரத்தில் இடது விலாப் பகுதியாக, பட்காரமெனும் ‘உஸ்’ எனும் சப்தமாக நல்லோர்களால் கூறப்படுகிறாள் என்று மாத்ருகா நிகண்டு சுலோகம் வர்ணிக்கிறது.

ஜனார்த்தன: சிகீரௌத்ரீ வாமபார்க்கவக்ருதாலய:
பட்கார: ப்ரச்யோ தே ஸத்பி: ப-கார: பாந்திமஸ்ததா

‘ப’காரம் உதித்த இடம், ‘தீர்த்த ராஜா’ எனப் படும் பிரயாகை. இங்கு தாட்சாயிணியின் தேக ரசம் விழுந்ததால், இது மகாசக்தி பீடமானது. இங்கு தேவி உடலின் நீர்ச்சத்து விழுந்த மண், வெண்ணிறத்தில் காணப்படுகிறது. ‘கங்கையின் கிழக்கில் பகலா பீடமும், வடக்கில் சாமுண்டா உபபீடமும், கங்கை-யமுனை நதிகளின் மத்தியில் ராஜராஜேஸ்வரம் என்ற உபபீடமும் உள்ளன. யமுனையின் தெற்கில் ‘புவனேசி’ அம்மன் குடிகொண்டுள்ளாள்’ என்று மேருதந்திரம் கூறுகிறது.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

பிரயாகையில் அம்பிகையின் நீர்ச் சத்து விழுந்தது என்று தந்திர சூடாமணி கூறினாலும், அங்கு அம்மனின் மூன்று கைவிரல்கள் மட்டுமே விழுந்தன என்று வெவ்வேறு நூல்கள் கூறுகின்றன. அன்னைக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல் கங்கை- யமுனை- சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் இங்கு ஒன்றிணைவதால், இது ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது.

இங்குள்ள பீடேஸ்வரியின் திருநாமம் லலிதா. பத்ம புராணம், ‘ப்ரயாகா லலிதா தேவி’ என்கிறது. இந்த இடத்தின் க்ஷேத்திரபாலகர் _ பவ பைரவர். லலிதா பரமேஸ்வரியின் வல்லமையை உணர்ந்து, பிரயாகையை வலம் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடி நற்பயன்கள் பெறுவோம்.

‘அன்பே சிவம்.’ சிவத்தை எளிதில் காண முடியாது. ஆனால், அதிலுள்ள அன்பை உணர முடியும். அந்த அன்புதான் லோகநாயகி- ஜகன்மாதா- புவனேஸ்வரி- லோகமாதாவான சித்சக்தி. இந்த அன்னையின் கருணை இல்லாவிட்டால், இந்த ஜென்மம் கடைத்தேறாது. அவளது அருளால் தாயின் மென்மையை அல்லது லலிதத்தை உணர்கிறோம். பரப்பிரும்ம சக்தியான இவள் பெயரே லலிதா பரமேஸ்வரி!

மனதுக்கு சந்தோஷம் தரும் சகல உணர்வுகளும் லலிதம் எனப்படும். தாயார், குழந்தையுடன் கொஞ்சிக் குலாவி விளையாடுவது போல், ஜகன்மாதா தன் பக்தர்களை பாலகர்களாகக் கருதி, லலனமாக (செல்லமாக) விளையாடுவதால் இவளுக்கு லலிதாம்பாள் என்று பெயர்.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

என்ன விளையாட்டு அம்பிகையினுடையது? பிரம்ம ரூபத்தில் படைப்பவள்; விஷ்ணு ரூபத்தில் ரட்சிப்பவள், ருத்ர ரூபத்தில் சம்ஹரிப்பவள். அவள் ஒருத்தி மட்டுமே இப்படியெல்லாம் உயிர்களோடு விளையாடுகிறாள்.

லலிதாம்பிகா ஓம் & இது லலிதா சகஸ்ரநாமத்தின் 1000-ஆவது நாமாவளி. அம்பிகா, அம்மா என்பவை தாயாரைக் குறிக்கும். ‘சர்வலோக ஜனனி’யானதால் அம்பிகை எனப்படுகிறாள். அப்படிப்பட்ட லலிதை தாயாகவும் விளங்குவதால், லலிதாம்பிகா என்று அந்தக் கடைசி நாமா குறிப்பிடுகிறது.

லலிதாம்பிகை அழகு வடிவானவள். அம்பிகைக்கு இத்தனை அழகும் லாவண்யமும் எங்கிருந்து வந்தன? அன்புதான் அழகாகியது. காருண்யம் லாவண்யம். இவள் எங்கு இருக்கிறாள்? ஆதிசங்கரர் விடை தருகிறார்:

சப்தப் ரம்மமயீ சராசரமயீ ஜோதிர்மயீ வாங்மயீ
நித்யானந்தமயீ நிரஞ்சனமயீ தத்வம்மயீ சின்மயீ
தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ
ஸர்வைச்வர்யமயீ சதாசிவமயீ

அவள் எங்கும், எல்லாமாகவும் இருப்பாள் என்பதே ஆசார்யர் திருவாக்கு. கர்ம உபாசனைக்கு பயன் தரும் கனிவு, உலகைக் காப்பாற்றும் அம்சம் ஆகியவை இந்த சக்திக்கு உண்டு. ஆகவே விரைவில், சுலபமாக ஸித்தி பெற விரும்புவோர் லலிதா பரமேஸ்வரியை உபாசிப்பது உத்தமம். இந்த அடிப்படையில்தான் பங்குனி அமாவாசைக்குப் பின் தொடங்கும் வசந்த நவராத்திரியில் வட இந்திய தேவி ஆலயங்களில் பக்தர்கள்- முக்கியமாக ஆயிரக்கணக்கில் பக்தைகள் லலிதாம்பாளை வழிபடுவதற்குக் கூடுகிறார்கள்.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

முக்கண்ணன், மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றியவன் பண்டாசுரன். தனது தவ வலிமையால் இவன் அமரர்களை அச்சுறுத்தி வந்தான். இதனால் இன்னலுற்ற இந்திராதி தேவர்கள், ‘ஸ்ரீவித்தை’ ஜபம் அனுஷ்டித்து, தங்களின் உடற்பகுதிகளை ஒவ்வொன்றாக அறுத்து ஹோமத்தில் இட்டு பராசக்தியை வழிபட்டனர். இதை ஏற்றுக் கொண்டு, அந்த அக்னி குண்டத்தின் மத்தியில் ஸ்ரீசக்கரம் எனும் ரதத்தில் பிரத்தியட்சமாகி தேவர்களுக்கு அருள் புரிந்தாள் அம்பிகை. எனவே, ‘சிதக்னி குண்ட ஸம்பதா’ (சிதக்னி குண்டத்தில் தோன்றியவள்) என்று நான்காவது நாமமாக, லலிதா சகஸ்ரநாமத்தில் இந்த அம்பிகையைக் காண்கிறோம்.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

கோடி சூரிய ஒளியுடன் சந்திரனின் குளிர்ச்சியும் கொண்டவள். ஒரு சக்கரம் உள்ள ரதத்துடன் தோன்றிய இவள், மும்மூர்த்திகளின் அம்சமானவள். அழகின் எல்லை. ஆனந்தக் கடல். மாதுளை முத்தின் வண்ணத்தில் உடைகளுடன், சர்வாபரணங்களும் அணிந்தவள். சிருங்காரி. கண்ணில் கருணை கொண்டவள். பாசம், அங்குசம், கரும்பு, கோதண்டம், பஞ்ச பாணம் ஆகியவற்றை கரங்களில் ஏந்திய மகாதேவியான லலிதா பரமேஸ்வரி, யாக குண்டத்திலிருந்து தோன்றினாள் என்று ப்ரும்ஹாண்ட புராணம் கூறுகிறது. இதுவே லலிதா அம்மனின் வரலாறு.

வானுலகில் இருந்து தோன்றிய கங்கைக்கு, பூமியைக் கண்டதும் ஏதோ பூரிப்பு! கலகலவென்று நகைத்து, கும்மாளத்துடன் பிரயாகையை அடைந்தாள். ‘‘கங்கையே! சற்று நில். நானும் உன்னுடன் வருகிறேன்!’’ என்றாள் யமுனை.

‘‘நிற்பதா! பகீரதன் எப்படிப்பட்ட தவமிருந்து என்னை பூமிக்கு வரவழைத்திருக்கிறான் தெரியுமா? அவன் எண்ணத்தை நிறைவேற்றி, சகர(அரச)புத்திரர்களைக் கரையேற்ற வேண்டும். அத்துடன், மற்றோர் அதிர்ஷ்ட வாய்ப்பாக அம்பிகையின் விரல்கள் வீழ்ந்த இடத்தில் புரண்டு செல்லும் பாக்கியமும் பெற்றிருக்கிறேன்!’’ _ கங்கை.

‘‘அப்படியா? மிக்க மகிழ்ச்சி. நானும் அந்த பாக்கியம் பெற உன்னுடன் வருகிறேனே!’’

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

‘‘நாம் கூடிவிட்டால், அப்புறம் எனது பெயர் என்ன ஆவது?’’

‘‘இதுவரை எனக்கென்று தனிப் பெயர் இருப்பதில் திருப்தி அடைகிறேன். பெயரெல்லாம் உனக்கே இருக்கட்டும். நானும் உன்னைப் போல் வானுலகைச் சேர்ந்தவள். சூரிய புத்ரி. பகீரதனைப் போல், என்னை யாரும் வருந்தி அழைக்காவிட்டாலும், மக்கள் நலன் கருதி நானே இறங்கி வந்துள்ளேன். நாம் இருவரும் கூடினால் மக்களின் தாபம் தீரும். நாம் பிறவிப் பயன் பெறுவோம். அம்பிகையின் விரல்கள் வீழ்ந்த புனிதப் பகுதியில் புரண்டு, தூய்மைப்படுத்திக் கொள்ள c, எனக்கு உதவ வேண்டும்!’’

_ யமுனையின் பேச்சில் கங்கை நெகிழ்ந்தாள். ‘‘அக்கா!’’ என்று அவள் யமுனையை ஆரத் தழுவியபோது இருவர் உள்ளங்களிலும் ஏதோ ஒன்று சில்லென்று பாய்ந்தது. அப்போது அந்தர்வாகினியாக- உள்ளோட்டமாகப் பிரவேசித்த சரஸ்வதி கூறினாள்: ‘‘உங்களிடம் அறிவையையும் உணர்ச்சியையும் பின்ன விட்டவள் நான். உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டால்தான் நாம் திரிவேணியாக மாற முடியும். நானும் ஸதிதேவி தலத்துக்கு வந்து விடுகிறேன்.’’

- இதுவே திரிவேணி சங்கமக் கதை.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

கங்கை ஸ்படிக நிறமானவள். களங்கமற்ற உருவம் உள்ளவள். யமுனை சூரியனின் நிழல் படுபவள். ஆதலால், கறுப்பு நிறத்தவள். சரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள். கம்பீரம் மிக்கவள். இன்ன நிறம் என்று கூற முடியாதவள். இந்த மூவரும் கூடி பிரயாகையை திரிவேணியாக்கி புகழ்பெறச் செய்தனர். இதில் எல்லா தீர்த்தங்களும் அடங்குவதாலேயே பிரயாகை, ‘தீர்த்த ராஜன்’ ஆகிவிடவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

சமுத்திரராஜனின் மகன் சங்கன், விளையாட்டுப் பிள்ளை. ஒரு முறை வேத ரிக்குகளை ( வேத ஸ்லோகங்கள்) வைத்து விளையாடிய அவன், அதை ஒளித்து வைத்துவிட்டு, ‘காணாமற் போய்விட்டது!’ என்று கையை விரித்தான். அதனால் பூஜைகளும் நியமங்களும் தடைபட்டது. எனவே தேவர்கள் வேத ரிக்குகளைத் தேடி அலைந்தனர். கடைசியில் அவற்றை யாரோ திருடி விட்டதாக முடிவு செய்து விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இது சங்கனின் வேலை என்பதை உணர்ந்த விஷ்ணு, தானும் ஒரு குழந்தையாக மாறி அவனிடம் விளையாடி, வேத ரிக்குகளைப் பற்றி விசாரித்தார். சங்கன், தான் ஒளித்து வைத்த இடத்திலிருந்து ரிக்குகளை எடுத்துக் கொடுத்தான்.

‘‘இனி நான் உங்கள் கரத்திலேயே இருப்பேன்!’’ என்று அடம்பிடித்த சங்கன், திருமாலின் கரத்தில் ஏறினான். மகாவிஷ்ணுவுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்க பெரும் விழா எடுக்க தேவர்கள் தீர்மானித்தனர். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பிரயாகை. தேவர்கள் அனைவரும் தீர்த்த வடிவில் அங்கு வந்து சேர்ந்தனர். இவர்களின் எண்ணிக்கை அறுபதுகோடியே பத்து லட்சம்! எனவே, இந்த இடத்தை ‘தீர்த்த ராஜன்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தமல்லவா?

பிரயாகையை, ‘வேள்விகளின் அரசன்!’ என்றும் கூறுகிறார்கள். ஒருமுறை பிரம்மதேவன் ஜீவராசிகளின் ஜனன-மரணப் பிணைப்பை அறுக்கும் பொருட்டு கர்மபூமியான பாரதத்தில் பெரும் வேள்வி ஒன்றை மேற்கொண்டான். இதைத் தொடர்ந்து மேலும் பல வேள்விகளை அங்கு செய்த பிரம்மன், அனைத்துக்கும் சிகரமாக அசுவமேத யாகமும் செய்தான். அத்தகு பெருமை வாய்ந்த திருவிடமே பிரயாகை! இந்த நகரின் அமைப்பு அறுகோண வடிவானது. நாற்புறமும் மேடாக ஒரு வேதி (மேடை) போல் அமைந்துள்ளது. திரிவேணிக்கு அருகே சந்திரனும் வேள்வி செய்ததுடன், அங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கம் பிற்காலத்தில் ‘சோமேசுவர நாதர்’ என்று பெயர் பெற்றது. தவிர, பிரயா கையில் சிரேஷ்டர்களான ரிஷிகள் பலரும் கணக்கற்ற யாகங்கள் செய் துள்ளனர். சூரிய குல திலகமான அரசன் ரகு, வேள்விகள் செய்தே வரலாறு படைத்தவன். பேரரசனான அவன், வேள்வியின் இறுதியில் அனைத்தையும் தானம் செய்துவிட்டு மண்பாண்டங்களைக் கொண்டு ஜீவனம் நடத்தினான். இவனது வேள்வியால் ரகு வம்சத்துக்குக் காலத்தால் அழியாத புகழ் சேர்ந்தது.

பாரதப் போரில் வெற்றி கண்ட தர்மர், தங்கள் பாவங்களுக்குப் பிராயச் சித்தமாக பிரயாகையில் அசுவமேதம், ராஜசூயம் போன்ற பெரும் யாகங்கள் புரிந்து தர்மராஜாவாக ஆனார்.

7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கன்யாகுப்ஜ மன்னரான ஹர்ஷவர்த்தனரது பேரரசில் பிரயாகை நகரும் உட்பட்டிருந்தது. இங்கு ஹர்ஷரால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை பெருந்திருவிழா நடத்தப்பட்டது. இதைக் குறித்து அவரது காலத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங் தனது பயணக் குறிப்பில் விவரித்திருக்கிறார். தனக்குக் கப்பம் கட்டும் மன்னர்கள் இருபது பேர் தனக்கு இரு புறமும் சூழ, ஹர்ஷச் சக்ரவர்த்தி பிரயாகை நகருக்குள் செல்வாராம். இவரது சாம்ராஜ்யப் பரப்பை அவருடன் செல்லும் மன்னர்களை வைத்து அறியலாம். இந்தத் திருவிழாவில் முதல் நாள் புத்தருடைய தங்க விக்கிரக மும், இரண்டாம் நாள் சூரிய பகவானின் பஞ்சலோக விக்கிரகமும், மூன்றாம் நாள் நவரத்ன கவசம் அணிந்த சிவபெருமானின் வெள்ளி விக்கிரகமும் ஊர்வலமாக எடுத்து வரப்படுமாம்.

இதன் பின் அடுத்து வரும் 75 நாட்களுக்கு, சக்ர வர்த்தி 5 வருடங்களாகச் சேமித்துள்ள நிதியை மத பேத மின்றி வைதிகர்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் தானம் செய்வார்களாம் . ஹர்ஷவர்த்தனரது விலை உயர்ந்த பட்டாடைகளும், ஆபரணங்களும், வீரக் கழல்களும்கூட உரிய நபர் களுக்கு தானம் வழங்கப்பட்டதாம். பிரயாகை நகரம், ஹர்ஷவர்த்தனரது அறப்பணிகளுக்கு மையமாகத் திகழ்ந்தது.

இனி பிரயாகையின் முக்கிய இடங்களை தரிசிப்போம். காஞ்சி மகா பெரியவாளின் திட்டத்தால் உருப்பெற்ற ஸ்ரீசங்கர விமான மண்டபம் கங்கைக் கரையில் உள்ளது. திரிவேணியிலிருந்து பார்த்தால் இந்த மண்டபம் கனகம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. மண்டபத்தின் மூன்று அடுக்குகளையும் நாம் வலம் வரும்போது மூவுலக தெய்வங்களும் அங்கிருந்து அருள் பாலிக்கின்றனர்.

முதல் அடுக்குக் கருவறையில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி நடு நாயகமாக கொலுவிருக்க, 51 சக்தி பீடங்களையும் இது நமது நினைவுக்குக் கொண்டு வருகிறது. இரண்டாவது அடுக்கு கருவறையில் திருப்பதி வேங்கடாசலபதி. இங்கு 108 திவ்ய தேசங்களை நினை வூட்டுவது போல் மகாவிஷ்ணு, சாளக்கிராமச் சிலைகளாக சேவை சாதிக்கிறார். மூன்றாவது அடுக்கில் சகஸ்ரலிங்கமாக இறைவன் காட்சி அளிக்கிறார். இவரைச் சுற்றி 108 சிவத் தலங்களை கண் முன்னே நிறுத்தும் லிங்கங்களைக் கண்டு மகிழலாம். (நர்மதை நதியில் இக்கடையேனால் கண்டெடுக்கப்பட்டு, இந்த மண்டபத்துக்குச் சமர்ப்பிக் கப்பட்ட பாண லிங்கங்கள் இவை.)

திரிவேணிக்கு அருகில் பெரிய கோட்டை ஒன்று தென்படுகிறது. ஒரு முறை இங்கு வந்த சக்ரவர்த்தி அக்பர், திரிவேணியின் அழகில் மயங்கி, அடிக்கடி அங்கு வந்து தங்குவதற்காக இந்தக் கோட்டையைக் கட்டினார் என்கிறார்கள். ‘ஆண்டவன் குடிகொண்ட இடம்’, ‘ஆண்டவன் குடி யேற்றிய இடம்’ என்றெல்லாம் பொருள்படுமாறு முறையே அல்லாஹ்-ஆபாத், இலாஹீ-ஆபாத் எனும் பெயர்களை அவர் பிரயாகைக்குச் சூட்டினார். அவை மருவி இன்று அலஹாபாத் எனப்படுகிறது. அக்பர் கட்டிய கோட்டை தற்போது ராணுவப் பாதுகாப்பில் உள்ளது.

திரிவேணியில் புனித நீராட ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கில் யாத்ரீகர்கள் வருகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரயாகையின் ‘கும்பமேளா’ உலகப் புகழ் பெற்றது. திரிவேணிக்கு தாராகஞ்ச் என்னுமிடத்தில் சந்நிதி உண்டு. நாகபாசம் எனும் பகுதியில் சர்ப்பராஜன் வாசுகியை தரிசனம் செய்யலாம். இவர், பிரயாகையின் காவல் தெய்வம்.

சங்கமாதவர், சக்ரமாதவர், கதாமாதவர், பத்மமாதவர், அனந்தமாதவர், பிந்துமாதவர், மனோகர்மாதவர், அஸிமாதவர், சங்கஷ்ட்ஹர் மாதவர், ஆதிவேணி மாதவர்,

ஒரு திருத்தம்...

36 -வது பீடத்தைப் பற்றி 13-01-06 சக்தி விகடன் இதழில் வெளிவந்த தேவியின் புகைப்படத்துக்குக் கீழே ‘காத்யாயினி’ என்று அச்சாகியுள்ளது. இதை ‘பத்ரகாளி சாவித்ரி’ என்று திருத்தி வாசிக்க வேண்டு கிறோம்.

ஆதிமாதவர், ஸ்ரீவேணிமாதவர் எனும் 12 மாதவர்கள் இந்த நகரை அலங்கரிக்கின்றனர். அக்பரது கோட்டைக்கு அருகில் ஒரு கோயிலில் சயன ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். வெள்ளப் பெருக்கின்போது இந்தக் கோயில் மூழ்கி விடுமாம். இதன் மறுகரையில் உள்ள ஸோமேச லிங்கமும், ஆனந்த பவனை அடுத்துள்ள பரத்வாஜேசுவர் ஆலயமும் பக்தர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டியவை.

சக்தி பீடங்களாகக் கருதப்படும் இரண்டு தேவி ஆலயங்கள் பிரயாகையில் இருக்கின்றன. ஒன்று தாராகன்ஞ் அடுத்திருக்கும் ‘அலோபிபாஹ்’ என்ற இடத்தில் உள்ள அலோபி மாதா கோயில். இவளது உக்கிரத்தை தணித்தவர் ஆதிசங்கரர். சதுரமான குண்டம் ஒன்றின் அடியில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு தேவிக்கு விக்கிரகம் எதுவும் இல்லை.

மற்றொரு தேவி ஆலயம் மீராபூர் பகுதியில் இருக்கிறது. இந்த தேவியின் பெயர் லலிதா. இவளு டன் லட்சுமியும் சரஸ்வதியும் கருவறையில் தரிசனம் அளிக்கிறார்கள். ‘இந்தக் கோயில் எழுப்பப்பட்டு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்’ என்பது சிலரது அபிப்பிராயம். இந்த இரண்டு சக்தி கோயில் களையும் உப சக்திபீடங்களாகக் கருதலாம். மகா சக்திபீடமான பிரயாகையில் திரிவேணி இருந்தும், அங்கு பீடேஸ்வரியான லலிதாம்பிகைக்குக் கோயில் கிடையாது. எனவே மீராபூர் லலிதாம்பாளை கண்ணார தரிசித்து விடைபெறுவோம்.

ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம்: ஆதி

பல்லவி

லலிதா தேவியாய் பலர் மகிழ பிரயாகையில்
லாவண்ய மாயமர்ந்த ஸகல லோகேஸ்வரி

(லலி)

அனுபல்லவி

அலை பாயு மனதை யடக்கவல்ல நின்னெழிற்கு
அலையாழி மகளும் கலைமாதும் நிகராவரோ

துரிதகாலம்

எல்லையில்லா காந்தியுடன் விளங்கி
தில்லையம்பலத் தானிதயங் கவர்ந்து
இல்லை மற்றோர் தெய்வமென புகழ்ந்து
எல்லையில்லா ஆனந்தமுடன் பக்தருவக்க

(லலி)

சரணம்

கல்லாலடி யமர்ந்து நால்வர்க்கருள் செய்து
கல்லாலடித் தோனையுங் கருணையுடன் காத்து
அல்லும் பகலும் தொண்டர்க்காய் தொல்லைகள் பல ஏற்று
சொல்லுக் கெட்டாதானாய் நிற்கும் நீல கண்டர் கை பிடித்து

துரிதகாலம்

சொல்லும் பொருளுமென அவனில் கலந்து
நல்லோருள்ளத்தில் பேரொளியாய் புகுந்து
கல்லாராயினும் கண முன்னை நினைந்துருகிடில்
பொல்லா பிணியறுத்தானந்த மளித்திடும்

(லலி)