Published:Updated:

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும்
திருமணம்!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

பு ம்ஸுவனத்துக்கு ஜோதிடத் தின் பரிந்துரைப்படி முகூர்த்தம் நிச்சயிக்க வேண்டும். வளர்பிறை சிறந்தது. தவிர்க்க முடியாத இக்கட்டான சூழ்நிலை என்றால், தேய்பிறையை எடுத்துக் கொள்ளலாம்.

சந்திர பலம், மனோபலத்தை அளிக்கும். காலத்தின் பங்கை அலட்சியப்படுத்தக் கூடாது. தொண்ணூறு நாட்கள் தாண்டி, நூற்றியிருபது நாட்களுக்குள் பும்ஸுவனம் செய்ய வேண்டும். சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டால், நூற்றைம்பது நாட்களுக்கு மேல் நூற்றெண்பது நாட்களுக்குள் செய்ய வேண்டும். எதிர்பாராத விதமாக அதையும் தவறவிட நேர்ந்தால், கடைசியாக இருநூற்றுப் பத்து நாட்களுக்கு மேல் இருநூற்று நாற்பது நாட்களுக்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டும்!

கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளுக்கும் சேர்த்துச் செய்யப்படுவது பும்ஸுவனம். எனவே, இதை விட்டுவிட முடியாது என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. பும்ஸுவனம், சீமந்தம் இவை இல்லாமல் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையை மடியில் மறைத்து வைத்து, இவற்றை நிறைவேற்றிய பிறகு ஜாதகர்மா செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

கர்ப்பத்தில் இருக்கும்போது பும்ஸுவனம், சீமந்தம் இவை இரண்டும் நடந்தேறிய குழந்தை, ஜாதகர்மாவுக்குத் தகுதியுடையவனாக ஆகிறான். தர்மசாஸ்திரத்தின் கட்டளை இது.

ஜாதகர்மாவுக்கு அடிப்படைத் தகுதி, அவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே இந்த இரு சம்ஸ்காரங்களைப் பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் குழந்தையைப் பொறுத்த சம்ஸ்காரமாக தர்மசாஸ்திரம் நினைக்கிறது.

காலையில் தம்பதி மங்கள ஸ்நானம் பண்ணி நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும். வேதம் ஓதுபவர்களை வரவழைத்து கலசத்தில் (சிறிய குடம்) வருணனை வழிபட்டு கலச ஜலத்தால் அவளுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். வருண தேவனின் அருளால் அவளது ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அவளுக்குக் கிடைத்துவிடும். அவளுக்கும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக அவளின் இடது மணிக்கட்டில் காப்பு கட்ட வேண்டும். கர்ப்பத்தைப் பாதுகாக்கும் கடவுளுக்கு தாதா என்று பெயர். அவரை வேண்டி, வேள்வியில் அவருக்கு உணவாக நெய் அளிக்க வேண்டும்.

உடலுக்கும் புலன்களுக்கும் வலிமையை அளிப்பவன் இந்திரன். கர்ப்பத்தில் குழந்தை வெளிவரும் வரை தேவையான தண்ணீர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். ‘முன்னீர்(பனி) குடத்தை’ உடைத்து குழந்தை வெளிவர வேண்டும். தண்ணீரின் தேவதையான வருண வழிபாடு கர்ப்பத்தைக் காக்கும்.

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

அவள் உண்ணும் உணவின் சாரம், தொப்பூழ்க் கொடி வழியாக கர்ப்பத்தை வளர்க்க வேண்டும். அவள் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தையின் மன இயல்பை நிர்ணயிப்பது அவளின் மன மகிழ்ச்சிதான். கர்ப்பவதியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது அவளின் மன நிறைவுக்காக ஏற்பட்டது. அவள், விரும்பியதை அளவுக்கு அதிகமாக ஆசையால் உட்கொண்டாலும் அவளது ஆரோக்கியத்தை அது பாதிக்காது. மனநிறைவு அதை ஈடுகட்டிவிடும்.

பும்ஸுவனத்தில் அவளுக்காக இனிப்பு வகைகளைத் தயார் செய்து வைக்க வேண்டும். அறுசுவைகளில் அவளுக்குப் பிடித்ததை வழங்க வேண்டும். மசக்கைக்காக அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தாயாரிடமும் தாய்வீட்டாரிடமும் திறந்த மனதோடு பழகும் இயல்பு அவளுக்கு இருப்பதால், விரும்பியதைக் கேட்டு வாங்கும் அளவுக்குத் துணிவு இருக்கும்.

கர்ப்பவதியை பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொள்ளும் சம்பிரதாயம் அவளின் மன மகிழ்ச்சிக்காகவே. கர்ப்பம் தரித்த பிறகு கணவனுடனான சந்திப்பைத் தவிர்க்க இது உதவும். அவள் விரும்பிய காட்சிகள், கேட்டுக் குதூகலம் அடையும் உரையாடல்கள், நட்பு வட்டத்தோடு தனது உறவைப் புதுப்பித்தல், தாத்தா- பாட்டி- மாமன்- மாமி ஆகியோரது பாசத்தை அனுபவித்து மகிழ்தல், பிடித்தமான ஆடை- ஆபரணங்களை அணிதல், மூத்தவர்களின் உரையாடல் இவை பிரசவத்தைப் பற்றிய அவளது பயத்தை அகற்றி அவள் மனதை லேசாக்கிவிடும்.

மற்ற குழந்தைகளின் நடமாட்டத்தைப் பார்க்கும்போது, தனக்கும் ஒரு புது வரவு வரப் போகிறது என்ற மகிழ்ச்சியை அவளுக்குத் தூண்டி விடும். ஐந்தாவது மாதம் பிறந்த வீட்டில் வளைகாப்பு என்ற மங்கள நிகழ்ச்சியை அமர்க்களமாகக் கொண்டாட வேண்டும்.

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

அவளது சிறு வயதில் பரிச்சயமான குழந்தைகள், பெரியோர்கள், தோழிகள் அத்தனை பேரையும் ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பாக வளைகாப்பு அமையும். ஒப்புக்காக ஒன்று இரண்டு என்றில்லாமல் கை நிறைய வளையல்கள் அணிய வேண்டும். தங்கத்திலும் வெள்ளியிலும் வளையல்கள் இருக்க வேண்டும். அதோடு சேர்த்து கண்ணாடி வளையல்களும் அணிய வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களுக்கும் வளையல்கள் வழங்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களும் அது ஆண் குழந்தையாக இருந்தாலும் வளையல் அணிய வேண்டும்.

மூத்த மாதர்கள் அப்பம், கொழுக்கட்டை ஆகியவற்றை அவள் மடியில் கட்டுவார்கள். தப்பான பார்வையால் விளையும் வினையை அகற்ற, விளக்கை ஏற்றி இறக்கிச் சுற்ற வேண்டும். குழந்தைகளுக்கு அன்னம் அளிக்க வேண்டும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் குதூகலத்துடன் கலந்திருக்கும் சூழல் அவளது மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கிவிடும். இத்தனை பேரின் அரவணைப்பு தனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை, பிரசவத்தில் இருக்கும் சிரமத்தை நினைக்க விடாமல் செய்துவிடும். பயம், அதிர்ச்சி போன்றவை அவளை பாதிக்கக் கூடாது. அவள் மனம் சோர்வடைவது, குழந்தையின் மனதைப் பாதிக்கும். தேர்த்திருவிழா, கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். திடீர் மகிழ்ச்சி, எதிர்பாராமல் ஏற்படும் திடீர் துயரம் அவளை பாதிக்க அனுமதிக்கக் கூடாது.

குழந்தையை எக்ஸ்ரே எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். விஞ்ஞானம் நம்பிக்கைக்கு உகந்ததாக இருந்தாலும் குழந்தையின் நலன் கருதி இது தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும். அவள் கண்கள் கூசும் அளவு ஒளிப் பிழம்பைச் செலுத்தக் கூடாது. காதைப் பிளக்கும் சத்தமும் அவள் செவியில் விழக் கூடாது.

தொலைக்காட்சியில் நகைச்சுவை, காதல் காட்சிகளை மட்டுமே அவள் பார்த்து ரசிக்கலாம். மற்ற உணர்வுகளுக்கு அவள் இடம் தரக் கூடாது. நகைச்சுவையில் மனம் விரிவடையும். காதலில் பூரிப்படையும். மற்ற உணர்வுகள் மனதைச் சுருங்க வைத்து அலைக்கழிக்கும்.

மனசுக்கு ஓய்வு வேண்டும். உடலுக்கு ஓய்வு தேவையில்லை. உடல் உறுப்புகள் அன்றாட அலுவல்களில் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இயற்கையான பிரசவத்துக்கு அது உதவும்.

பும்ஸுவனத்துக்குப் பிறகு- கர்ப்பம் நிச்சயமானதும் பிறந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும். அது அவளது நான்காவது மாதம். ஐந்தாவது மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி. அது பிறந்த வீட்டாரின் நிகழ்ச்சி. ஆறாம் மாதம் சீமந்தம். அது புகுந்த வீட்டில் நிகழ வேண்டும். நிகழ்ச்சி முடிந்தவுடன் பிறந்த வீட்டுக்கு அவளை அழைத்து வர வேண்டும். குழந்தையை ஈன்றெடுத்து குழந்தைக்கு ஆறு மாதம் ஆன பிறகு குழந்தையோடு சீரும் சிறப்புமாக புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். மணமகளின் இந்த தொடர் நிகழ்ச்சி கர்ப்ப காலத்தில் தம்பதியின் சந்திப்பைத் தவிர்க்க உதவுகிறது. கர்ப்பமும் செழிக்க வேண்டும். தம்பதியின் மனமும் நோகக் கூடாது என்கிற கோணத்தில் தம்பதியின் சந்திப்பை மறக்கச் செய்கிறது பண்டைய சம்பிரதாயம்.

புதுத் தகவல்கள், புது நிகழ்ச்சிகள் அவளுக்கு உகந்ததல்ல. பழக்கப்பட்ட தகவல்களும் நிகழ்ச்சிகளுமே அவள் மனதுக்கு ஊக்கமளிக்கும்.

நொடிக்கு நொடி, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிய அளவு கடந்த கண்காணிப்பு தேவை இல்லை. ஆணா, பெண்ணா, எடை என்ன, மாதத்துக்குப் பொருத்தமான வளர்ச்சி இருக்கிறதா என்பது போன்ற தகவல்கள் பிறருக்குத் தேவையாக இருக்கலாம். ஆனால், அவள் மனம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஆயுர்வேதத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். கர்ப்பம் தரித்தவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற உபதேசம் ஆயுர்வேதத்தில் இருக்கிறது. அந்த முறை பாதுகாப்பானது. அது இயற்கைப் பிரசவத்தை நடத்தித் தரும்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பது தற்காலச் சூழலில் வரவேற்கப்பட்டாலும் தாய்க்கும் சேய்க்கும் அது நல்லதல்ல. என்னதான் விஞ்ஞானம் அதை உயர்வாகச் சித்திரித்தாலும் பிற்காலத்தில் தாயின் உடல் நலன் பாதிக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

பிரசவம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. வீட்டுச் சூழல் சுகப் பிரசவத்துக்கு உதவியது. மகப்பேறு மருத்துவமனைகள் பெருகுவதற்கு, மன மாறுதல்தான் காரணம்.

குழந்தை, வீட்டில் பிறக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். இனப் பெருக்கத்துக்கு பிற உயிரினங்களும் கூடு கட்டிச் செயல்படுவதைப் பார்க்கிறோம். வீடு, இனப் பெருக்கத்துக்குத் தேவை என்று முகூர்த்த சாஸ்திரம் சொல்லும்.

வயிற்றில் இருக்கும் குழந்தையை எக்ஸ்ரே எடுத்துத் தெரிந்து கொள்கிறோம். வளரும் குழந்தையை அது பாதிக்காது என்று சொல்ல முடியாது. பண்டைய நாட்களில் போட்டோ எடுப்பதை கர்ப்பிணிகள் விரும்ப மாட்டார்கள். உடலுக்கும் உள்ளத்துக்கும் சோர்வு தரும் செயல்களை அவள் செய்யக் கூடாது என்பது தர்மசாஸ்திரத்தின் கருத்து. உடல் வளர்ச்சியோடு இணைந்து உள்ள வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றில் கூடுதல், குறைவு ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சி குன்றிவிடும். பும்ஸுவனம் அவளது ஆரோக்கியத்தோடு நில்லாமல் உள்ளே வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும்.

இரு இதயம் உடையவள் (தௌர் ஹ்ருதயம்) என்று ஆயுர்வேதம் கர்ப்பிணியைக் குறிப்பிடும். இவள் இதயம் குழந்தையின் இதயத் துடிப்பை நிர்ணயிக்கிறது.

அவளது மனத் தூய்மை குழந்தையிலும் பிரதிபலிக்கும். இளம் வயதில் இருந்து தாயாக மாறும் நிகழ்ச்சி அது. தற்காலச் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நாட்டம் குறைந்து காணப்பட்டாலும் மனோதத்துவ ரீதியாக பயன் அளிக்கக் கூடிய இந்தச் சடங்கு அவசியம் தேவை.

மருந்தைவிட... பெரியோர்களின் நல்லுரைகளைவிட அவளது மன அமைதிக்கு இந்தச் சடங்கு பயன்படும். சரியான வேளையில் பும்ஸுவனம் நடத்த முடியவில்லை என்றாலும் காலம் கடந்தாவது நடத்த வேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்துவதில் இருந்தே இந்த சம்ஸ்காரத்தின் உயர்வை அறியலாம்.