Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
முன்ஜென்ம வினைகளில் இருந்து விடுபட என்ன வழி?
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

ஆலயங்களில் கோபுரக் கலசங்கள் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன. எதன் அடிப்படையில் இவை அமைக் கப்படுகின்றன?

- ஐ.எஸ்.சீனிவாசன், சென்னை-82

கோபுரக் கலசம் மட்டும் அல்ல; ஆலயங் களின் அமைப்புகளே எல்லா இடங்களிலும் மாறு படும். கஜ பிருஷ்டம் என்று ஓர் உருவ அமைப்பு உண்டு. கோபுரம் என்று உண்டு. கோபுர வாசல் என்று இருக்கும். ஒன்றில் துவஜஸ்தம்பம் இருக்கும். ஒன்றில் தீபஸ்தம்பம் என்று இருக்கும். பிராகாரம் இல்லாத கோயில் உண்டு. இவற்றை எல்லாம் ஆகம சாஸ்திரம் விரிவாகச் சொல்லும்.

கோபுரக் கலசத்தின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது, உள்ளே இருக்கும் ஸ்வாமியின் பிம்பம்தான். எத்தனை அங்குல மூர்த்திக்கு எத்தனை கலசம் என்று திட்டவட்டமான சட்ட திட்டம் உண்டு. அதை அறிய ஆகம சாஸ்திரம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி - பதில்

முன் ஜென்மவினைத் தாக்குதல்களில் இருந்து மனிதன் விடுபட ஏதேனும் வழி உள்ளதா?

_ பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்

ஒருவர் தனது வீட்டில் நிறைய பசு மாடுகளை வளர்த்து வந்தார். பால் கிடைக்குமா என்று எங்கேயோ ராஜஸ்தானில் ஒட்டகத்தைத் தேடிக் கொண்டு போனாராம். அது மாதிரி அல்லவா இருக்கிறது நீங்கள் கேட் பது!

நமது சாஸ்திரங் களின் வேலையே முன் ஜென்ம வினைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொல்வ துதான். ஏதேனும் வழி உண்டா என்று கேட்டால், என்ன சொல்வது?

நம் ஊரில் பிறந்தவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை இருக்கிறது. அவரவர் சிந்தனைக்குத் தகுந்த விதமா கவே முன் ஜென்ம வினையைத் தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கின்றன நமது சாஸ் திரங்களில்.

வேதம் சொல்கிற வழிக்கு ‘மீமாம்ஸா’ என்று பெயர். அதன்படி வினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமானால், யாகம் செய்ய வேண்டும்.

வேதாங்கம் என்று ஒரு முறை இருக்கிறது. அதன்படி சந்நியாசம் வாங்கிக் கொண்டு போகலாம். யோகாப்பியாசம் செய்தும் வினையைத் தீர்த்துக் கொண்டு மோட்சத்தை அடையலாம். இப்படி முன் ஜென்ம வினையைத் தீர்த்துக் கொண்டு மோட்சம் அடைந்து நிரந்தர சந் தோஷத்தை அடைய வழி சொல்பவைதான் அனைத்து சாஸ்திரங்களும்.

இனிப்பு ஒன்றுதான். ஆனால், எத்தனை தினுசான பண்டங்கள் இருக்கின்றன. அது நமது ரசனை, ஈடுபாடு. அதே போல அவரவருக்குப் பிடித்த மாதிரி பல வழிகளைச் சொல்கிறது சாஸ்திரம். வழி வேறானாலும் இலக்கு ஒன்றுதான்.

வீடுகளில் அன்னதானம் நடத்தும் போது, மற்றவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாமா?

_ கே.நீலா, சென்னை-90

அவரவர் சம்பாதித்து, என்ன முடியுமோ, அதை வைத்து அன்னதானம் செய்வது உயர்வானது. ‘நான் பெரிதாகத்தான் செய்யப் போகிறேன். பலரிடம் வாங்கிச் செய்வேன்!’ என்று சொல்வது அவ்வளவு உசிதம் அல்ல.

‘எனக்கு ஏகப்பட்ட பணிகள் இருக்கின்றன. சொத்தும் தேவைக்கு மேலே இருக்கிறது. அதனால் தானம் நடத்துபவரிடம் பணத்தைக் கொடுத்து முடித்து விடலாம்!’ என்பது சரியல்ல. இத்தகைய அன்னதானத்தில் பிடிப்பு இருக்காது. ‘செக்’கைக் கொடுத்து விடுவோம். அங்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருப்போம்.

பழைய காலத்தில் எல்லாம், விருந்தோம்பல் என்று அவரவர் வீட்டிலேயேதான் அன்னதானம் செய்தார்கள். அப்போதுதான், ‘என் பொருளைத் தருகிறேன்!’ என்கிற திருப்தி, ‘நான் போட்டேன்!’ என்கிற நிறைவு, ‘என்னால் இவர் சந்தோஷப்பட்டார்!’ என்கிற அனுக்கிரகம்... இத்தனையும் நேரடியாகக் கிடைக்கும்.

கோயிலில் வழங்கப்படும் குங்குமப் பிரசாதத்தை விதவைப் பெண்கள் பெற்றுக் கொள்ளலாமா? அதை அவர்கள், வீட்டிலுள்ள மற்றவர்களிடம் இட்டுக் கொள்ளக் கொடுக்கலாமா?

- எம்.சாவித்திரி, சென்னை-94

கேள்வி - பதில்

பிரசாதம் என்று எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளலாம். வாங்கிக் கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்பது குருக்களின் வேலை அல்ல. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவர் பிரசாதம் கொடுக்கிறார். சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ம வினையால் அவர் கணவனை இழந்தார்; குங்குமப் பிரசாதம் வாங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அல்ல! கைம்பெண் குங்குமம் இட்டுக் கொள்வதில்லை என்கிற சம்பிரதாயத்தை நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அதனால், அவர் பெற்றுக் கொண்ட பிரசாதத்தைப் பிறருக்குக் கொடுக்கலாம். கணவன் பார்த்து ரசிக்க வேண்டிய அழகை, கணவன் அல்லாத பிறர் பார்க்க வேண்டாம் என்கிற உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடாக அந்தப் பெண், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறார். குங்குமம் இட்டுக் கொள்வதை அவர் தவிர்க்கிறார் என்று எடுத்துக் கொள்கிறோம்.

‘ஓர் உயிரைக் கொன்று சாப்பிடக் கூடாது!’ என்று எண்ணும் தீவிர சைவர் கள்கூட, வியாதி-வெக்கை என்று வந்து விட்டால் டாக்டர்கள் எழுதித் தரும் எந்த மருந்தையும் சாப்பிடுகிறார்கள். உதாரணமாக சாதாரண கேப்ஸ்யூல், ரத்த அபி விருத்தி மருந்துகள், ஏன் பற்பசை, சாதாரணச் சர்க்கரையில்கூட வெண்மைக்காக அசைவ வஸ்துக்கள் சேர்க்கப் படுகின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றை எல்லாம் சாப்பிடுபவர்கள் ‘தீவிர சைவர்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளலாமா?

_ ஜி.நீலகண்டன், பெங்களூர்-3.

கேள்வி - பதில்

சாதாரண சைவம், சுமாரான சைவம், தீவிர சைவம் என்றெல்லாம் வகைகள் கிடை யாது! ஏதோ ஒரு குறிக்கோளோடு, ஏதோ ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்பிக் கொண்டு, குறிப் பிட்ட சித்தாந்தத்தின் மீது ஈடுபாட்டோடு நாம் இருக்கிறோம். எந்தச் சித்தாந்தமானாலும், நம்மையே அழிக்கிற மாதிரி ஓர் இடையூறு வந்தால் நாம் அந்த சித்தாந்தத்தைப் பின்பற்றத் தேவையில்லை!

என் உடல் திடமாக இருக்க வேண்டும். செயல் பாடு தெளிவாக இருக்க வேண்டும். புலன்களெல்லாம் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நான் சைவத்தை நடைமுறைப்படுத்த முடியும். அது வீர சைவமாக இருக்கட்டும், வீரமில்லாத சைவமாக இருக்கட்டும். எனக்கு அடிப்படைத் தேவை உடல்.

சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம். எதை அடைய முயற்சிக்கிறோமோ, அதை அடைவதற்கு உடல் முக்கியம். ஏதோ ஒன்றை அடைகிறோம் என்று நினைத்துக் கொண்டு உடலையே அழிப்பது தவறு. ஆரோக்கியத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசையாக விரும்பிச் சாப்பிடக் கூடாதே தவிர, மருந்தாகச் சாப்பிடுவதில் தவறே இல்லை! அதைச் சாப்பிட்டால்தான் அவரால் வீர சைவத்தைக் கடைப்பிடிக்க முடியும். அல்லாமல் செத்துப் போய்விட்டால், எப்படி வீர சைவத்தைக் காப்பாற்ற முடியும்?

தர்மசாஸ்திரம் எதற்கு வந்திருக்கிறது? பகவானுக் காக சட்ட-திட்டம் இல்லை; நமக்காக! தர்மசாஸ்திரத்துக்காக நாம் வாழவில்லை; நம்மை நல்ல முறையில் வாழ்விப்பதற்காகவே தர்மசாஸ்திரமும் கடவுளும்! கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது என்று சொல்கிற சாஸ்திரம் - சின்னக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளி, வயதானவர்கள் சாப்பிடலாம் என்றும் சேர்த்தே சொல்கிறது. அவர்களை வைத்துத்தானே அனுஷ்டானங்களை நிறைவேற்ற வேண்டும்? அவர்களே இல்லாமல் போய்விட்டால் எப்படி அனுஷ்டானம் செய்வது? அவர்கள் இல்லாமல் போவதை தர்மசாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை சிகிச்சையாக எடுத்துக் கொள்ளும் ஒருவர், அமாவாசையாக இருந்தாலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். சரீரத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்த மிருகத் திலிருந்து மருந்து வந்திருந்தாலும், குணமாகும் வரை அதைச் சாப்பிடுங்கள். அது சைவம்தான்!

நான் இருக்கும் மும்பையில் பூக்களின் விலை அதிகம்; கிடைப்பதும் அரிது. அதனால் மூன்று, நான்கு நாட்களுக்கு உரியதை மொத்தமாக முன்கூட்டியே வாங்கி ஃப்ரிஜ்ஜில் பாதுகாத்து வைத்துப் பிறகு ஸ்வாமிக்கு சார்த்துகிறேன். சூழ்நிலையின் காரணமாக இப்படி மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது தவறா?

_ லலிதா ராமன், கிழக்கு டோம்பிவிலி, தானே மாவட்டம்

கேள்வி - பதில்

சாஸ்திரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், புஷ்பங்களில் ஆராதனைக்கு உரியது, அல்லாதது என்று வித்தியாசம் சொல்லப்பட்டிருக்கிறது. சில புஷ்பங்கள் கீழே விழுந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். சிலவற்றை மரத்திலிருந்து பறிக்க வேண்டும். பாரிஜாத புஷ்பத்தை உலுக்கி எடுக்க வேண்டும். செம்பருத்தி, தாமரை ஆகியவற்றைப் பறிக்க வேண்டும். கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது. ‘அன்று பூத்த புஷ்பங்களை அன்றே சார்த்த வேண்டும்; அடுத்த நாள் சார்த்தக் கூடாது!’ என்று சட்டமே உண்டு. இந்தச் சட்ட- திட்டங் களைப் பார்க்கும்போது அந்தக் காலத்தில் விஸ்தாரமான இடங்களில் வசித்து, நிறைய பூச்செடிகளை வளர்த்துக் கொண்டு தினப்படி பூஜை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது.

இப்போது நாம் புஷ்பத்தைப் பார்க்கும் நிலையில் இல்லை. தரை யையே பார்க்க முடியாத இடத்துக்கு நமது வீட்டைப் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். உலகம் அப்படி ஆகவில்லை; நாமாக அப்படிச் செய்து கொண்டோம். ஆகாயத்தில் வீடு கட்டிக் கொண்டால், செடி வளர்க்க முடியாது. உண்மைதான்! இந்த இடத்துக்கு வந்தது உங்கள் விருப்பம். புஷ்பம் இல்லாத இடத்துக்கு வந்து... புஷ்பம் கிடைக்காத சூழலை உருவாக்கி... எங்கிருந்தோ அதைக் கொண்டு வரச் சொல்லி... நான்கு நாட்களுக்கு வைத்திருந்து... இவை எல்லாமே நாமாகச் செய்து கொண்டவை.

இப்படி வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த தர்மசாஸ்திரம் சில விஷயங்களைச் சொல்கிறது. துளசியையும் வில்வத்தையும் 4 நாட்கள் வைக்கலாம். ஃப்ரிஜ் இல்லாமல் காய்ந்து பொடிப்பொடி ஆனாலும் அவற்றைப் போடலாம் என்கிறது. தாமரைப் பூவை 2 நாள் வைத்திருக்கலாம். நவீன காரணங்களைச் சொல்லி சாஸ்திரத்துக்குப் புறம்பாகப் போகாமல், அது சொல்லியிருக்கும் மாற்று ஏற்பாடுகளைப் பின்பற்றலாமே!

மழைக்காக வருண ஜபம் செய்கிறோம். கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை நிறுத்த என்ன ஜபம் செய்ய வேண்டும்?

_ லீலா, கும்பகோணம்-1

கேள்வி - பதில்

எந்த ஒன்று அதிகமானாலும் அதைக் குறைப்பதற்கும், ஏதாவது ஒன்று குறைந்து விட்டால் அதை நிவர்த்தி செய்வதற்கும் வழி உண்டு.

எப்போது ‘மழை வேண்டாம்!’ என்று நினைக்கிறோம்? தேவைக்கு அதிகமாகப் பெய்து நம்மை அழிக்கத் தயாராகும்போது. அழிவுக்குக் காரணமான அளவுக்கு மழை பெய்தால், அதை நிறுத்தவும் வழி சொல்ல வேண்டுமே... அப்போதுதானே அது முழுமையடையும்? ஆயுர்வேதத்தில் ஒன்று உண்டு. பேதி ஆவதற்கு கடுக்காய் கொடுப்பார்கள். போகத் தொடங்கிய பேதி போய்க் கொண்டே இருக்கிறது. அவன் உடல் நிலை பாதிக்கிற அளவு போகிறது. ‘கொஞ்சம் மோரைக் குடி. நின்றுவிடும்’ என்று மாற்று ஏற்பாட்டையும் ஆயுர்வேதம் சொல்கிறது.

எத்தனை விதமான மழை இருக்கிறது? ஆலங் கட்டி மழை, இடி இடித்து மழை, இடி இல்லாத மழை, அடித்து ஊற்றுகிற மழை, விட்டு விட்டுப் பெய்யும் மழை, புயல் காற்றோடு சேர்ந்த மழை... இப்படி எத்தனை தினுசு இருக்கிறதோ அத்தனையையும் சொல்லி இதில் ஏதாவது ஒரு மழையாவது எனக்கு வேண்டும் என்று யாகம் செய்யச் சொல்கிறது வேதம். ‘அந்த யாகம் செய்தும் மழை வரவில்லை என்றால் அடுத்த நாள் மறுபடி அந்த யாகத்தை செய்!’ என்கிறது.

‘மழை வரும்வரை செய்’ என்கிறது. ஏன் அப்படி? வியாதி வந்தால் ஒரு முறை மருந்து சாப்பிட்டுவிட்டு நிறுத்தி விடுகிறோமா? வியாதி தீர்கிறவரை அல்லவா சாப்பிடுகிறோம்? மழையை வரவழைக்கவும், நிறுத்தவும் யாகம் செய்யும்போது பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து செய் யத்தான் வேண்டும்.

கேள்வி - பதில்