ஆலயம் தேடுவோம்! |
உள்ளாவூர் அகஸ்தீஸ்வரர் ஆலயம் |
|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பி.சுவாமிநாதன்
|


ஆ லயங்களில் பல வகை உண்டு என்று ஆகம சாஸ்திரம் சொல்கிறது. கோபுரத்தில் இத்தனை நிலைகள், இத்தனை கலசங்கள், இத்தனை சுற்றுப் பிராகாரங்கள் என்று எத்தனையோ பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர் நம் வேத வல்லுநர்கள். ஆனால், இன்றைக்கு இருக்கிற ஆலயங்களில் இரண்டே இரண்டு வகைதான் உள்ளன. ஒன்று, வருமானம் பெறும் வளமான கோயில்கள்; மற்றொன்று வருமானத்துக்கே வழி இல்லாத பரிதாபக் கோயில்கள்! பழநி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பெரிய ஸ்தலங்கள் வருடம் முழுவதும் ஏதாவது திருவிழாக்கள், சிறப்பு வைபவங்கள் என்று கோலாகலமாக இருக்கும். இந்த ஆலயங்களுக்கு உள்ளூர் உட்பட வெளியூர்களில் இருந்தும் மக்கள் பெரும் திரளாக அவ்வப்போது வந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள். இவை வருமானம் பெறும் வளமான கோயில்கள்! பக்தர்கள் அதிகம் கூடுவதால் அரசாங்கமும் அதிக கவனம் எடுத்து இந்த வகைக் கோயில்களின் நலனுக்குத் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டே இருக்கும். வருமானத்துக்கே வழி இல்லாத மற்றொரு வகைக் கோயில்கள் பற்றிச் சொன்னோமே... அது போன்ற கோயில்களின் நிலைமைதான் பரிதாபம். பக்தர்கள் பலரும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் இத்தகைய ஆலயங்களைப் பார்க்க நேர்ந்திருக்கலாம். இங்குள்ள கடவுள்களுக்கு அபிஷேகம் செய்ய, அர்ச்சனை செய்ய, ஆலயத்தைப் பராமரிக்க என்று எதற்குமே வசதி இருக்காது. அந்த ஆலய அர்ச்சகராகப் பார்த்து ஏதாவது நாள், கிழமைகளில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வருவார். அவ்வளவே! அவருடைய வசதிக்கு அதுதான் செய்ய முடியும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நமது கலாசாரத்தைப் பரப்பிய மன்னர்கள் பாடுபட்டுக் கட்டிய பல கோயில்கள், இன்றைக்குப் பாழடைந்த நிலையில் உள்ளன. அர்ச்சகருக்கு அபிஷேகப் பொருட் கள் தந்தால்தானே அபிஷேகம் செய்ய முடியும்? இப்படி ஒரு கோயில் இங்கே இருக்கிறது என்று தெரிந்தால்தானே பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்? இப்படிப்பட்ட கோயில்களைப் பற்றிய தகவல்கள் சக்தி விகடனில் இனி தொடர்ந்து வெளிவரும். இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான வழிகள், முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவையும் அதில் இடம் பெறும். இத்தகைய ஆலயங்களுக்குச் செல்வதற்கு முன் பக்தர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுச் சென் றால், தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளுக்கு வசதியாக இருக்கும்.
|

இந்த ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் நாம் முதலில் தரிசிக்கப் போவது ஸ்ரீமத் அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வர ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் அமைந்திருப்பது செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்தில் உள்ளாவூர் என்ற கிராமத்தில். சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தில் நடந்த ‘நவராத்திரி சந்தனாலங்கார கைங்கர்யம்’ பற்றிய ஒரு சிறு நோட்டீஸை நம்மிடம் காண்பித்தார் ஆலய அர்ச்சகரான ராஜப்பா ஐயர். 1941-ஆம் ஆண்டில் ‘ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி பக்தகோடிகள்’ எடுத்து நடத்திய நவராத்திரி வைபவம் பற்றி அந்த நோட்டீஸ் குறிப்பிட்டது. இனி, இந்த ஆலயம் பற்றி ராஜப்பா ஐயர் சொல்வதைக் கேட்போம்:
|

‘‘பல நூறு வருடங்களுக்கு முன் அகத்திய முனிவரால் இந்த ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. அதனால்தான் இந்த ஈஸ்வரனுக்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். ‘அகம்’ என்றால் உள்ளம் என்பது பொருள். அகத்தியர் இங்கு வந்ததை ஒட்டியே இந்த ஊருக்கு உள்ளாவூர் என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். சுமார் முப்பது வருடம் முன்புவரை சிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற வைபவங்கள் இங்கு சிறப்பாக நடந்துள்ளன. இப்போது எந்த வைபவமும் நடைபெறுவதில்லை. ஓர் அர்ச்சகர் என்ற முறையில் இதைச் சொல்வதற்கே எனக்குச் சங்கடமாக இருக்கிறது’’ என்றார் கலங்கிய கண்களுடன். சிறிது நேர அமைதிக்குப் பின் அவர் தொடர்ந்தார்: ‘‘திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையாரைப் போல் சிறப்பு வாய்ந்தவர் இந்த அகஸ்தீஸ்வரர். ஆனால், யாருமே கண்டுகொள்ளாமல் போய்விட்டதால் இதன் பெருமையும் வெளியே தெரியாமல் போய்விட்டது. என்றைக்காவது அபிஷேகத்துக்குத் தண்ணீருடன் உள்ளே போனால், பெரிய பாம்பு ஒன்று லிங்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும். பாம்புகள் புழங்கும் இடமாக ஆகிவிட்டது இந்த ஆலயம். இப்படி நான் பல தடவை பார்த்திருக்கிறேன். பாம்புகள் அடிக்கடி சுற்றிக் கொள்வதாலோ என்னவோ, லிங்கப் பகுதியும் ஆவுடையார் பகுதியும் வழுவழுப்பாக இருக்கிறது. அகிலாண்டேஸ்வரியும் கொள்ளை அழகு. இந்த அம்மனை திரிபுரசுந்தரி என்றும் சொல்வார்கள்.’’ இனி, ஆலய தரிசனம் செய்வோமா?
|

வெளியே முகப்பில் செல்வ விநாயகர் சந்நிதி. தவிர நந்தி பகவான், பலிபீடம். ஆலயத்தினுள் வரசித்தி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகர், சூரிய பகவான், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோருக்கு விக்கிரகங்கள் உண்டு. நந்தியம் பெருமான்தான் பாவம்... அகஸ்தீஸ்வரரை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியவர் தனித்து விடப்பட்டிருக்கிறார். அதாவது நந்தியம்பெருமானுக்கு முன்புறமாக ஒரு சுவர் எழுப்பியிருக்கிறார்கள். ‘‘பாம்பு கள் அடிக்கடி படையெடுத்து நந்தியம்பெருமான் இருக்கும் வயல் காட்டுப் பகுதி வழியாக கோயிலுக்குள் வந்து விடுவதால்தான் சுவர் எழுப்பிவிட்டோம்!’’ என்கிறார்கள் ஊர்க் காரர்கள். ஆலயத்துக்கு ஓர் அழகான குளம் இருக்கிறது. நல்ல தூய்மையான தண்ணீர். ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் குளம் மற்றும் கோயில் இருக்கும் பகுதியைச் சுற்றி விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கின்றன. ஆலயத்தின் பெரும்பான்மையான பகுதியில் வைக்கோல் போர் வைத்திருக்கிறார்கள். புராதனமான இந்த ஆலயத்தின் அழகையும் அமைதியையும் பாதுகாக்க உடனடித் தேவை வலுவான ஒரு சுற்றுச்சுவர்.
|

ஆலயம், தற்போது உத்தரமேரூரில் உள்ள தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலயத்துக்கென மானியமாகப் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மனிதர்களால் வழங்கப்பட்ட விவசாய நிலம், புறம்போக்கு நிலம் ஆகியவை இருந்தும் அவை எதுவும் இந்த ஆலயத்துக்குப் பொருளாதார ரீதியாக உதவவில்லை என்பது பரிதாபமான உண்மை. உள்ளாவூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர் மட்டும் வருடத்தில் சித்திரை மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் கோயிலுக்கு வந்து காவடி எடுத்து விழா கொண்டாடுகிறார்களாம். அன்று மட்டும் ஊர்க்காரர்கள் கோயிலுக்கு வருவார்களாம். பக்தர்கள் எவரும் வராததாலும் கோயிலின் அன்றாட பூஜை மற்றும் பராமரிப்புக்கு வழியில்லாததாலும் பெரும்பாலும் கோயில் மூடப்பட்டே இருக்குமாம்.
|

ஆலயம் பழையபடி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான பக்தர்களின் விருப்பம். இறைவன் அருளால் அதற்கான முயற்சிகள் சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட்டால் அது, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள எல்லா பக்தர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
|

|
