Published:Updated:

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

Published:Updated:
மகான் சரிதம்
சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பதஞ்சலி

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

‘‘அகங்காரம் மிக்கவனுக்கு குருவின்
போதனைகள்கூடப் பயனற்றவை.’’

- ஷீர்டி சாயிபாபா

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

ணிவு என்பது, பக்தியின் முதல் படியாகும்.

பணிவுடையோன் இதயத்தில் அகங்காரம் அகன்று விடுவதால், அங்கு ஆண்டவன் அமர்ந்து ஆட்சி புரியத் தொடங்குகிறான்.

உள்ளம் முழுவதும் ‘நான்’, ‘நான்’ என்ற அகந்தை நிரம்பி இருந்தால், அங்கு ‘அவன்’ வந்து அமர இடம் ஏது?

பணிவும் பொறுமையும் உடையோரைத் தேடி ஆண்டவனே வருவதுண்டு. அது மட்டுமல்ல, அத்தகையோருக்கு நல்ல வழியைக் காட்டி, நெறிப்படுத்த அவர்களை நாடி அவதார புருஷர்களும், குரு மகான்களும் வருவர்.

பாபாவும் அவரின் மூன்று நண்பர்களும் கடவுளைத் தேடிக் காட்டுக்குள் சென்றனர். பாபாவின் நண்பர்கள் அகந்தையும் அவசரப் போக்கும் கொண்டிருந்தனர்.

எனவே, விறகுவெட்டி போன்று தோற்றம் அளித்தவன் அளித்த உணவையும் அவனது உபசரிப்பையும் உதாசீனப்படுத்தினர்.

ஆனால், பாபா அவனது அன்பான உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். உணவையும் உவப்புடன் பெற்றுக் கொண்டார்.

பாபாவின் பணிவுக்கும் பொறுமைக்கும் உடனடியாக பலன் கிடைத்தது. சற்றும் எதிர்பாராத விதமாக அவர் முன் ஞானமே வடிவாக, பூரண சந்திரனைப் போன்று பொலிவுடன் ‘குரு பிரான்’ காட்சி தந்தார்.

மற்ற மூவரும் ஏதோ வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தனர். பாபாவோ, எதிரே தோன்றிய குருவைப் பணிந்தார்.

அவரிடம் தங்களுக்குள் நடந்த விவாதங்களையும், தாங்கள் கடவுளைத் தேடிச் சென்றதையும் விளக்கமாகவும், வினயத்துடனும் தெரிவித்தார்.

அவரது பக்குவமான நடத்தையினால் மகிழ்ச்சி அடைந்த குரு, பாபாவையும் அவர் நண்பர்களையும் கருணை பொழியும் கண்களால் பார்த்தார். தன்னுடன் வந்தால், அவர்களுக்குத் தேவையானதைக் காட்டுவதாக உறுதி அளித்தார். ஆனால், அந்த முயற்சியில் வெற்றி பெற முழு நம்பிக்கை அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

கும்பிடப் போன தெய்வம் குரு வடிவில் குறுக்கே வந்திருப்பதை பாபா உணர்ந்து கொண்டார்.

தேடி வந்த நல்வாய்ப்பை நழுவ விடாமல் சட்டெனப் பற்றிக் கொண்டார். குருவின் திருவடிகளைப் பணிந்து அவரைத் தன் வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். செருக்கு மிக்க மற்ற மூவரும் அவநம்பிக்கையுடனும், அலட்சியத்துடனும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

தன்னை நம்பிய பாபாவை தன்னுடன் அழைத்துச் சென்றார் குரு. அவருக்கு வெகு விரைவில் ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான வழிமுறையைக் கையாண்டார் அந்த குரு.

பாபாவை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்று, கிணற்றின் அருகில் இருந்த ஒரு மரத்தில், அவரை கயிற்றால் கட்டித் தலைகீழாகத் தொங்க விட்டார்.

பாபாவின் தலை, தண்ணீர் மட்டத்துக்கு மூன்றடி உயரத்தில் இருக்குமாறு செய்துவிட்டு அவர் எங்கோ போய்விட்டார்.

மூன்றடிக்குக் கீழே கிணற்று நீர். பற்றிக்கொள்ள எந்த விதமான ஆதாரமும் கிடையாது. கால்கள் இரண்டையும் இறுக்கும் தாம்புக் கயிறு. பாபாவின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

ஆனால், பாபா மனம் தளரவில்லை. தலைகீழாகத் தொங்கியபடி தியானத்தில் மூழ்கினார். ஒருவிதப் பரவச நிலை அவரை ஆட்கொண்டது.

சுமார் ஐந்து மணி நேரம் கழித்து வந்தார் குரு. பாபாவின் நிலை குறித்து விசாரித்தார். தான் பேரானந்தத்தில் மூழ்கி இருப்பதாக பாபா கூறினார்.

பாபாவின் பதிலால் மிகவும் திருப்தியடைந்த குரு, அவரை தன் அருமைச் சீடனாக மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

பாபா தன் குருவைத் தவிர மற்ற அனைவரையும், அனைத்தையும் மறந்து முற்றிலும் குருவின் நினைவாகவே வாழ்ந்து வரலானார். தனது நேரம் அனைத்தையும் குருவுக்காகவே செலவு செய்தார்.

பசி, தாகம் ஆகியவற்றைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஒரு விறகுவெட்டியின் கோலத்தில் வந்து தன்னை ஆட்கொண்ட குருவின் சேவையிலேயே தனது வாழ்நாட்களைச் செலவிட்டார்.

புற உலகை அறவே மறந்து எப்போதும் தியானத்தில் ஈடுபட்டிருந்த குருவுக்கு, பாபா உணவு ஊட்டிவிட்டார். துணிகளை மாற்றினார். குருவின் உடல் கழிவுகளை எந்தவித அருவருப்பும் இன்றி அகற்றினார். குருவின் உடலைச் சுத்தப்படுத்தினார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டார்.

ஒன்றல்ல, இரண்டல்ல... பன்னிரண்டு ஆண்டுகள் பாபா தம் குருவுக்கு இத்தகைய அரிய பணிவிடைகள் புரிந்தார். குருவின் அன்பையும் ஆசியையும் பூரணமாகப் பெற்ற பாபாவால் அவரிடமிருந்து எந்த வித உபதேசத்தையும் பெற முடியவில்லை. எப்படியும் அவரிடமிருந்து உபதேசம் பெற வேண்டும் என்ற உந்துதல் பாபாவுக்கு இருந்தது.

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

ஒரு நாள், பாபா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குருவை அணு கினார். தனக்கு உபதேசம் நல்குமாறு யாசித்தார்.

குரு தம் அருள் பொழியும் கண்களால் பாபாவை ஊடுருவிப் பார்த்தார். பாபா தன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதை அவர் உணர்ந்து கொண்டார்.

அவர், பாபாவை மொட்டை அடித்துக் கொண்டு வரச் சொன்னார். பிறகு தட்சிணையாக இரண்டு பைசாக்கள் தருமாறு கேட்டார்.

பாபாவிடம் ஏது காசு? திகைத்தார்! உப தேசம் நல்குவதற்கு காசு களை தட்சிணையாகக் கேட்ட குருவைப் பரிதாபமாகப் பார்த்தார்.

பாபாவின் குரு, ஒரு மந்தகாசப் புன்னகையை வெளிப்படுத்தினார். தான் கேட்ட தட்சிணை வெறும் நாணயங்களான பைசாக்கள் அல்ல என்றும், அவை ‘நிஷ்டா’ என்று கூறப்படும் முழுமையான நம்பிக்கை மற்றும் ‘சபூரி’ என்று சொல்லப்படும் மகிழ்ச்சியோடு கூடிய பொறுமை என்றும் அற்புதமான, ஆழமான ஆன்மிக விளக்கத்தை அளித்தார்.

தாய் ஆமை, தனது சிறிய குட்டிகள் அருகில் இருந்தாலும், வெகு தொலைவில் இருந்தாலும் அவற்றைத் தனது அன்புப் பார்வையாலும், அருள் மிகுந்த நினைப்பாலும் பேணி வளர்க்கும். அதைப் போல் தாமும் பாபாவை அவர் எங்கிருந்தாலும் பாதுகாப்பதாக உறுதி கூறினார்.

குரு கேட்ட இரண்டு ஆன்மிக பைசாக்களைத் தருவதில் பாபாவுக்கு எந்த விதச் சிரமமும் இருக்கவில்லை. எனவே, குருவுக்கு அவர் கேட்ட தட்சிணையை ஆனந்தத்துடன் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

குருவுக்குப் பொறுமையுடன் பணிவிடை செய்து, அவரை முழுமையாக நம்பினால் பாவங்களும் துன்பங்களும் ஆபத்துகளும் அச்சங்களும் அறவே அகன்று, வெற்றியும் அளவில்லா ஆனந்தமும் கிடைக்கும் என்பதை பாபா அனுபவத்தில் உணர்ந்து கொண்டார்.

குருவிடம் தான் கற்ற தட்சிணை தத்துவத்தை பாபா தன் அடியவர்களிடம் சோதித்துப் பார்க்க ஆரம்பித்தார்.

இதுதான் பாபா தட்சிணை கேட்டதன் காரணமாகும். பாபா தன் குருவிடம் மந்திர உபதேசம் எதுவும் பெறவில்லை என்றாலும் அதற்கு அவசியம் எதுவும் இருக்கவில்லை என்பதே உண்மை.

 

வாய் மொழியாகச் சொன்னால்தான் உபதேசமா?

குருவுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிவிடைகள் செய்து வந்தபோது அவரது வாழ்க்கை முறையையும், அவரது தியானம், யோக சாதனைகள் ஆகியவற்றையும் அருகில் இருந்து பார்க்கும் அரிய பேறு பாபாவுக்குக் கிட்டியது.

அந்த நெருக்கம் அவருக்குள் இருந்த ஆன்மிகச் சுடரின் திரியைத் தூண்டி விட்டுப் பேரொளி வீசிப் பிரகாசிக்கச் செய்தது. குரு வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருக்கு ஓர் உபதேச விளக்கமாக அமைந்தது.

குருவின் உணர்வு அலைகள் அவர் மீது பட்டு அவரை ஆன்மிகக் கடலில் நீராட்டிப் புனிதப்படுத்தின. பன்னிரண்டு ஆண்டுகளில் பாபா ஆன்மிகப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுத் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய தகுதியை அடைந்துவிட்டார்.

இதற்காக அவர் பெற்ற பயிற்சிகள் அவரைப் புடம் போட்ட பொன்னாக மாற்றின.

ஒரு முறை பசி தாங்க முடியாத ஓர் அடியவரைக் கடிந்து கொண்ட பாபா, தான் பன்னிரண்டு ஆண்டுகள் வெறும் வேப்பிலையைத் தின்றே உயிர் வாழ்ந்ததாகக் கூறினார். பாபா எத்தகைய பயிற்சி பெற்றிருந்தார் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

பாபா, தன் குருவைப் பற்றி அவ்வப்போது சில தகவல்களைச் சிறிது சிறிதாக மட்டும் சொல்வதுண்டு.

குருவின் பெயராக அவர் கூறியது அடியவர்களுக்குத் தெளிவாக விளங்காமலேயே போனது. சிலர் அவர், ‘வெங்கூஸா’ என்று சொன்னதாகவும் வேறு சிலர் ‘ரோஷன் ஷா’ என்று கூறியதாகவும் அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு கருதினர்.

‘வெங்கூஸா’ என்பது இந்துப் பெயர்.

‘ரோஷன் ஷா’ என்பது இஸ்லாமியப் பெயர்.

இதனால் பாபாவின் குரு இந்துவா அல்லது முஸ்லிமா என்பது தெரியவில்லை. இது குறித்த குழப்பம் பக்தர்களிடையே உண்டு.

அது மட்டுமல்ல, பாபாவின் மதத்தைப் பற்றியும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சாயிபாபா ஒரு பெரும் மகான் என்று அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். தயக்கம் ஏதுமின்றி ஒப்புக் கொண்டுமுள்ளனர்.

ஆனால், விடை தெரியாத கேள்வி ஒன்று அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

அது _

சாயிபாபா இந்துவா... முஸ்லிமா?

மகத்துவமா, மருத்துவமா?

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

பா பா, பக்தர்களின் உள்ளத்தைப் பண்படுத்தினார்; உடல் நோய்களையும் குணப்படுத்தினார்.

அடியவர்களின் உடலும் உள்ளமும் ஒருசேர சீராக இருந்தால்தான் அவர்களால் ஆன்மிக முன்னேற்றம் அடைய முடியும் என்பதால் தன்னை நாடி வருவோரின் பிணி தீர்க்கும் பணியையும் செய்து வந்தார்.

ஆனால், அவர் நோயைக் குணப்படுத்திய விதம் வித்தியாசமானது.

ஒரு முறை காகா மகாஜனி என்பவர் கடுமையான வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். அந்த நேரத்தில் அவர் மசூதிக்கு முன் தாழ்வாரம் கட்டும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது வயிற்றுப் போக்கு, வேலைக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. ஆனால், அவர் பாபாவிடம் தனது பிரச்னையைத் தெரிவிக்கவில்லை.

‘பாபா தானாகவே அதை அறிந்து கண்டிப்பாகக் குணப்படுத்தி விடுவார்’ என்று அவர் நம்பினார்.

வேலையின்போது, திடீ ரென்று பாபா பெருங்குரலில் கூச்சலிட்டார். அனைவரும் அங்குமிங்கும் கண்டபடி ஓடத் தொடங்கினர். அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு பையைப் போட்டு விட்டு ஓடி விட்டார்.

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

அந்தப் பையில் நிலக் கடலைப் பருப்பு இருந்தது. பாபா தன் கைநிறைய நிலக் கடலையை எடுத்தார். அவற்றைத் தேய்த்து, ஊதித் தோலை நீக்கினார். சுத்தம் செய்யப்பட்ட அந்தக் கடலையை அவர் காகாவிடம் தந்து சாப்பிடச் சொன்னார். தானும் கொஞ்சம் சாப்பிட்டார்.

காகாவைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறிது குடித்தார்; காகாவையும் குடிக்கச் சொன்னார்.

பிறகு, “உனது வயிற்றுப்போக்கு சரியாகி விட்டது. நீ போய் உன் வேலையைத் தொடர்ந்து கவனிக்கலாம்” என்று உறுதிபடக் கூறினார்.

காகா மகாஜனியின் வயிற்றுப்போக்கு உடனடியாக நின்று விட்டது. அவர் மீண்டும் தெம்புடன் வேலையில் ஈடுபட்டார்.

சாதாரணமாக, வயிற்றுக் கோளாறு இருந்தால், கடலை போன்றவற்றைத் தின்றால் நோய் இன்னும் அதிகமாகி விடும். விளைவும் விபரீதமாகி விடும்.

ஆனால், நோயை அதிகரிக்கச் செய்யும் பொருளையே அதற்கு மருந்தாகத் தந்து குணப்படுத்திய பாபாவின் அற்புத சக்தியை அனைவரும் வியந்து போற்றினர்.

பாபா கூச்சலிட்டது, நோயை விரட்டவே என்றும், அவர் ஊதி பறக்கச் செய்தது நோய்க் கிருமிகளையே என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர்!

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism