Published:Updated:

சுகி.சிவம் பக்கம்

சுகி.சிவம் பக்கம்

சுகி.சிவம் பக்கம்

சுகி.சிவம் பக்கம்

Published:Updated:
உங்களுக்கு ஒரு செய்தி
துறவியைத் துப்பறிந்த ராஜா!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சுகி.சிவம்

சுகி.சிவம் பக்கம்

நி ஜமான ஞானியை, சந்நியாசியை இன்று அடையாளம் காண்பதும் புரிந்து கொள்வதும் கொஞ்சம் கஷ்டமே. அதனால்தான் போலியான ஞானிகளும் சந்நியாசிகளும் இன்று ஜாம்ஜாமென்று ஜமாய்க்கிறார்கள். பெரிய பெரிய போஸ்டர்கள், கட்டவுட்கள், பேனர்கள் என்று தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஜகன்மோகன சாமியார்கள் பின்னாடி ஜனங்கள் ஞான வாசம் போகிறார்கள்.

போலிகள் மீதான பயத்தால் உண்மையான ஞானிகளிடம் பழகும்போது, எங்கே நாம் ஏமாந்து விடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வால் விலகி வேறு நின்று விடுகிறோம். எத்தனை பெரிய இழப்பு! பொய்யான சாமியாரிடம் பொருளையும் நேரத்தையும் வாழ்க்கையையும்கூட வெட்கமில்லாமல் விட்டு விடுகிறோம். உண்மை எது? பொய் எது என்று உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலை மிக மிக அவசியம். கூர்ந்து நோக்கும் சிலருக்கே இது வாய்க்கிறது. ஞானியைக் கண்டறியும் ஞானமே இன்றைய அவசரத் தேவை.

ஒரு ராஜா தனது தேசத்தில் உள்ள உண்மைத் துறவியைக் கண்டறிந்து அவரை வணங்க விரும்பினார். அவரோடு சில காலம் உடனிருந்து ஞானம் பெற விரும்பினார். ஒற்றர்களை அனுப்பி நாடெங்கும் உள்ள துறவிகளைப் பற்றித் தகவல் திரட்டினார்.

முடிவில் பலரும் கொண்டாடிய, பல ஒற்றர் களும் ஒப்புக்கொண்ட ஒரு மகானைத் தேர்வு செய்தார். அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து வணங்குவது என்று புறப்பட்டார். ஆனால், பற்றற்ற அந்தத் துறவி தன்னை ஒப்புக் கொள்வாரா? ஆடம்பரமான அரண்மனைக்கு அந்த எளிமையான துறவி வருவாரா? அவமதித்து வர மறுப்பாரா என்று தயங்கியபடியே அவரை நெருங்கினார். வணங்கினார். தம்முடன் அரண்மனைக்கு வந்து சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எந்த விதத் தயக்கமோ, மறுப்போ இன்றி, ‘‘இதோ வருகிறேன்!’’ என்று புறப்பட்டு விட்டார் துறவி. அரசருக்கு அதிர்ச்சி. ‘ஏமாந்து விட்டாயே!’ என்று எச்சரிக்கை உணர்வு ஏளனம் செய்தது. வர மறுப்பார். தாம் வற்புறுத்தி அழைக்க வேண்டி வரும் என்ற கற்பனை தவிடுபொடியானதால் தடுமாற்றம். ‘இவன் ஒரு போலித் துறவி. நாம்தான் கவனமாக எடை போடவில்லை’ என்று உள்ளூர வருத்தம். என்றாலும், வெளிக்காட்டாமல் துறவியுடன் அரண்மனைக்குப் புறப்பட்டார்.

நிர்வாணமாக இருந்த துறவி; எளிமையாகக் காட்டிக் கொள்பவர்; அதனால், அரண் மனைக்கு நடந்து வருவார். தாமும் அவரோடு நடக்க வேண்டி வரும் என்றெல்லாம் தம்மைத் தயார்ப்படுத்தி வைத்திருந்த அரசருக்கு அடுத்த இடி இறங்கியது.

‘‘எங்கே நம்முடைய தேர்? ஆடம்பரமான அரண்மனைக்கு அரசரோடு வரும்போது தேரில்தானே போக வேண்டும்? அதுதானே பொருத்தம்! எங்கே தேர்?’’ என்று குஷியாகக் கேட்டார் துறவி. ‘ஆஹா.. இவன் பெரிய ஏமாற்றுக்காரன். ராஜாவை வளைத்து விட்டோம் என்கிற நினைப்பில் ஆடுகிறான். ஆனால், இப்போது நாம் பின்வாங்கினால் அகௌரவம்’ என்று தேரில் சந்நியாசியுடன் புறப்பட்டார் அரசர். ஆனால், அவர் முகத்தில் ஏமாந்த சோகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது!

தங்க மயமான தேரில் படுகுஷியான நிர்வாணத் துறவி ஜாலியாகப் பயணம் செய்ய, பக்கத்தில் பேயறைந்த முகத்தோடு பயந்து உட்கார்ந்திருந்த மன்னரைக் கண்டு மக்கள் சிரித்தார்கள். அரண்மனைக்குள் இறங்கியதும் மன்னர் சுதாரித்துக் கொண்டார். சாமியாரைச் சோதிக்க முடிவு செய்தார். தங்கத் தாம்பாளத்தில் பட்டுத் துணிகளையும் நகைகளையும் கொடுத்தார். மறுப்பே சொல்லாமல் கன குஷியாக அவற்றை உடம்பில் அணிந்து கொண்டு சந்நியாசி ஆடினார்; பாடினார்.

‘திருட்டுப் பயல்... இந்த நகையோடு ஓடிவிடக் கூடும்!’ என்று சாமியாருக்குக் காவல் போட்டார் ராஜா. ஆனால், ஓடும் முயற்சி எதுவும் நடக்கவே இல்லை. குழம்பிப் போனார் ராஜா. மாறாக ‘‘அதைக் கொண்டா... இதைக் கொண்டா!’’ என்று உத்தரவு போட்டு விதவிதமாகச் சாப்பிட்டுக் கொண்டு விளையாட்டுத்தனமாக இருந்தார் சந்நியாசி. எப்போதும் மகிழ்ச்சிதான். ராஜாவோ இருந்த சந்தோஷமும் போய் மிகவும் துக்கமாகி விட்டார். தாம் ஏமாந்து விட்டோமோ என்று மிகவும் கவலைப்பட்டார்.

ஒரு நாள் உலாவப் போகலாம் என்று சொல்லி துறவியை அழைத்துக் கொண்டு, நகரில் இருந்து வெகு தொலைவு போனதும், ‘‘சுவாமி ஒரு சந்தேகம்... என் உள்ளத்தை அரிக்கிறது!’’ என்றார் ராஜா.

‘‘சந்தேகம்... அது இன்று வந்தது அல்லவே. நான் வந்த அன்றே உனக்கு வந்தது. அன்று முதல் கேட்க முடியாமல் தவிக்கிறாய். இப்போதாவது கேட்டு நிம்மதி அடை!’’ என்றார் துறவி.

‘‘நீங்கள் அரண்மனை போகங்களில் ஆனந்தமாக ஈடுபட்டீர்கள். ஓர் எளிய துறவி போலவே நடந்து கொள்ளவில்லையே. உண்மையான சந்நியாசிதானா நீங்கள் என்று என் மனம் வருந்துகிறது. எனக்கு இருக்கிற துறவுள்ளம் கூட உங்களுக்கு இல்லையே?!’’ என்றார் ராஜா.

அப்போதே நகைகளையும் பட்டையும் கழற்றி மூட்டையாக ராஜாவிடம் கொடுத்து நிர்வாணமாக நின்றார். ‘‘நான் காட்டுக்குப் போகிறேன். நீ வருகிறாயா?’’ என்றார் துறவி.

‘‘நான் எப்படி வர முடியும். நாடு, மக்கள், மனைவி, அரண்மனை இவற்றை எப்படி விட்டுவிட்டு வர முடியும்?’’ என்றார் அரசன்.

‘‘இதுதான் நமக்குள்ள வித்தியாசம். அரண்மனை போகங்கள் எல்லாவற்றுடன் நான் இருந்தேன். ஆனால், எதுவுமே என் சொந்தமல்ல என்ற எண்ணத்துடன் இருந்தேன். ஆனால், அவை அனைத்தும் உனக்குச் சொந்தமானவை என்கிற எண்ணத்தில் நீ இருக்கிறாய். உன்னால் அவற்றை விட முடியாது!’’ என்று காட்டை நோக்கி நடந்தார் துறவி.

அரசன் அவர் காலில் விழுந்து கதறினான். அவர் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

பொருளைத் துறப்பது துறவு அல்ல; பொருள் மீதுள்ள பற்றைத் துறப்பதே துறவு. அப்படிப்பட்ட ஞானிகளைக் கண்டால் விடாதீர்கள். விடாமல் பற்றுங்கள். விழிப்பு உணர்வு கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism