Published:Updated:

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

Published:Updated:
அர்த்தமுள்ள ஹோமங்கள்!
ஆயுஷ்ய ஹோமம் செய்வது எதற்கு?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ‘வித்யாவாரிதி' சுப்ரமணிய சாஸ்திரிகள்

அர்த்தமுள்ள ஹோமங்கள்!
அர்த்தமுள்ள ஹோமங்கள்!

யுஷ்ய ஹோமத்தின்போது ‘ஆயுஷ்ய சூக்தம்’ என்ற மந்திரங்களை பயன் படுத்த வேண்டும். ஓர் உயிரைக் கருவில் உருவாக்கச் செய்வது; அந்தக் கரு நல்ல முறையில் வளர உதவுவது; கருவில் வளர்ந்த குழந்தை உரிய சமயத்தில் பிரசவத்தின் மூலம் இந்த உலகைப் பார்க்கச் செய்வது; அந்தக் குழந்தைக்கு அழகையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் அளித்து நீண்ட காலம் வாழச் செய்வது... இப்படி எல்லாமே இறைவ னின் கையில்தான் இருக்கின்றன.

இவ்வளவையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, ஆயுளையும் பலமாக்கிக் கொள்ளவே ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. ஹோமத்தில் செலுத்தப்படும் திரவியங்களும், நமது பிரார்த்தனையும் இறைவனை மகிழ்ச்சி அடைய வைக்கும். அந்த மகிழ்ச்சியில் குழந்தையின் ஆயுளை அவர் விருத்தி செய்கிறார். இப்படி இறைவனைப் புகழ்ந்து நன்றி சொல்பவையாக ஆயுஷ்ய சூக்த மந்திரங்கள் இருக்கின்றன.

இதில் முதல் மந்திரத்தின் அர்த்தம், ‘பிரம்மத்தின் வடிவானவரும், யானைத் தோலை உடுத்தியவரும், பிநாகம் என்ற வில்லை ஏந்தியபடி இருப்பவரும், எல்லாக் காரியங்களையும் செய்ய வல்லவருமானவர் சிவபெருமான். அவர், பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எடுத்தார். அவ்வளவு சக்தி வாய்ந்த சிவன், எங்களுக்கு தீர்க்க ஆயுளை அளிக்கட்டும்!’ என்பதாகும். இதற்கான மந்திரத்தைச் சொல்லி சிவபெருமானுக்கு நெய்யாலும் அன்னத்தாலும் ஹோமம் செய்ய வேண்டும். ஒருவருக்கு நீண்ட ஆயுளைத் தர வல்லவர் அழிக்கும் கடவுளான சிவபெருமான்தான்! அதனால், ஆயுஷ்ய சூக்தத்தின் பெரும்பாலான மந்திரங்கள் அவரைப் புகழ்வதாகவே அமைந்திருக்கின்றன.

இரண்டாவது மந்திரத்தின் அர்த்தம், ‘அந்த பரமேஸ்வரன் தண்ணீரின் மத்தியிலிருந்து எழுந்து வந்து சூரியனைப் போன்ற வடிவில் பிரகாசிக்கிறார். அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார். ஜொலிக்கும் அழகை உடைய அவர் எங்களுக்கு உதவ வேண்டும். பயங்கரமான பாசக்கயிறு எங்களை அரைகுறை ஆயுளில் விடாமல், கயிற்றை விலக்கி எங்கள் ஆயுளை அவர் விருத்தி செய்ய வேண்டும். அதற்காக இந்த ஹோமத்தில் நாங்கள் அளிக்கும் திரவியங்களை அவர் ஏற்றுக் கொள்ளட்டும்!’ என்பதாகும். இந்த மந்திரத்தையும் சொல்லி நெய்யாலும் அன்னத்தாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

குழந்தை, கருவில் உருவாவதற்குக் காரணமான பரப்பிரம்மத்துக்கு நன்றி சொல்வது மூன்றாவது மந்திரம். கர்ப்பத்தில் குழந்தை தரித்த பிறகு நான்காவது மாதம்தான் அதன் எல்லா வடிவங்களும் தீர்மானிக்கப்பட்டு, முழுமை பெறுகிறது. சாத்வீகமான குணமும், அழகும் பொருந்திய நல்ல குழந்தையைக் கொடுப்பது கடவுளின் கிருபைதானே! அப்படி கடவுள் உருவாக்கிக் கொடுத்த குழந்தையை நல்ல முறையில் வளர்ப்போம் என உறுதி கூறுவதாக அமைந்திருக்கிறது இந்த மந்திரம். இதன் அர்த்தம், ‘அழகிய உருவத்தை உடையதும், தங்கம் போன்று தூய்மையானதும், பூஜிக்கத் தகுந்ததுமான இந்தக் கர்ப்பத்தை வைத்தது பிரகாசமான உருவமுள்ள பரப்பிரம்மமாகிய கடவுள்தான்! சூரிய ரூபமாக இருக் கும் அந்தக் கர்ப்பத்தை வளர்க்கிறோம்!’ என்பதாகும். இந்த மந்திரத்தைச் சொல்லி நெய்யினால் மட்டும் ஹோமம் செய்ய வேண்டும்.

குழந்தை வளர்ந்து பெரிதாகும்போது அதற்கு ஏராளமான செல்வம், அழகு, அறிவு, கல்வி ஞானம், மேனி மெருகு என எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியவர்கள் ஐஸ்வர்ய தேவதைகள். அவர்களைக் குளிரச் செய்வதுதான் நான்காவது மந்திரம். இதன் அர்த்தம், ‘ஸ்ரீ, லட்சுமி, ஒளபலா, அம்பிகா, கோரூ பினி, இந்திரசேனா என இப்படி ஆறு அழகிய உருவங்களைக் கொண்ட வித்யை, வேதத்துக்கே காரணமானவர். எங்கள் ஆயுளை வளர்க்கும் பொருட்டு அந்த தேவதையை திருப்தி செய்கிறோம்!’ என்பதாகும். இந்த மந்திரத்துக்கு நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும்.

பார்வதி- பரமேஸ்வரனை இந்த உலகத்துக்கு அம்மா- அப்பா என்பார்கள். அவர்கள் இருவரையும் திருப்தி செய்வதே இந்த ஹோமத்தில் முக்கியமான விஷயம். தட்சனின் மகளாக உலகத்தில் அவதரித்த பார்வதியை தாட்சாயிணி என்பார்கள். உலக மக்களின் ஆயுளைப் பராமரிப்பவர்கள் தாட்சாயிணி தேவதைகள். அவர்களுக்கு நன்றி செலுத்துவது ஐந்தாவது மந்திரம். இதன் அர்த்தம், ‘உலகத்தில் எல்லாச் செயல்களுக்கும் காரணமானவர்கள் தாட்சாயிணி தேவதைகள். அவர்கள் ஆயிரக்கணக்கான வடிவங்களிலும், வடிவமற்ற அரூபங்களாகவும், தங்கள் கணவருடனும், புத்திரர்களோடும் இருக்கிறார்கள். எங்களது ஆயுளைப் பராமரிக்கும் அந்த தேவதைகள் இந்த ஹோமத்தில் செலுத்தப்படும் திரவியங்களை ஏற்றுக் கொள்ளட்டும்!’ என்பதாகும். இந்த மந்திரத்தைச் சொல்லி நெய்யாலும் அன்னத்தாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

ஆறாவது மந்திரம் தேவ கணங்களைத் திருப்தி செய்வது. இதன் அர்த்தம், ‘எங்களது ஆயுளை அச்சுறுத்துகிற வீரர்கள் ஏராளம். அந்த கஷ்டங்களை பழைமையானவர்களும், பலவித உருவங்களை உடையவர்களுமான தேவ கணங்கள் அழிக்கட்டும். இந்த தேவ கணங் களுக்கு நெய்யால் ஹோமம் செய் கிறேன். அவர்கள் எங்களையும், எங்களது உறவினர் களையும், வம்சத்தில் வரும் வாரிசுகளையும் இம்சிக்க வேண்டாம்!’ என்பதாகும்.

ஏழாவது மந்திரம் திரும்பவும் பரமாத்மா வைத் திருப்தி செய்வதே ஆகும். இதன் அர்த்தம், ‘சிருஷ்டிக்கு முன்பு பரமாத்மா ஒருவ ராக இருந்தார். பிறகு அவரே உலகத்தின் வடிவமாக மாறினார். உலகத்தை ரட்சிக்கும் சகல தேவதைகளும் அவரிடமிருந்துதான் தோன்றினார்கள். பிரளயம் ஏற்பட்டு இந்த உலகம் அழியும்போது, உலகத்தில் இருக்கும் சகல பொருட்களும் அவரிடம் போய் ஒடுங்கிவிடும். அந்த பரமாத்மா எங்கள் ஆயுளை விருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஹோமத்தில் நெய்யையும், அன்னத்தையும் திரவியங்களாக அளிக்கிறேன்!’ என்பதே!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

எட்டாவது மந்திரம் இந்த உலகத்தைக் காத்து வரும் எல்லா தேவதைகள், ரிஷிகள், நம் முன்னோர்கள் என சகலருக்கும் சேர்த்து நன்றி செலுத்துவது. இதன் அர்த்தம், ‘எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும், பன்னிரண்டு ஆதித்யர்களையும், ஏழு மருத் கணங்களையும், சாத்ய புருஷர்களையும், ரிபுக்களையும், யட்சர்களையும், கந்தர்வர்களையும், எல்லா பித்ரு கணங்களையும், ப்ருகுக்களையும், சர்ப்ப தேவதைகளையும், எல்லா ஆங்கிரசர்களையும் உத்தேசித்து நெய்யால் ஹோமம் செய்து எங்களது ஆயுள் சாஸ்வதமாக இருக்கட்டும் என வேண்டிக் கொள்வோம்!’ என்பதாகும்.

பூமியின் துருவங்கள், தண்ணீர், சந்திரன், பூமி, வாயு, அக்னி, அதிகாலை நேரம், வெளிச்சம் ஆகியவையே எட்டு வசுக்கள். ஈஸ்வரன், பிநாகி, ஸ்தாணு, பவன், மிருகவ்யதன் உள்ளிட்டவர்கள் பதினோரு ருத்ரர்கள். வருணன், மித்ரன், விஷ்ணு, சவிதா போன்றவர்கள் பன்னிரண்டு ஆதித்யர்கள். இந்த எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள் மற்றும் பிரஜாபதி, வஷத்காரர் ஆகிய முப்பத்துமூன்று பேரும்தான் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கு அடிப்படை. சகல தேவகணங்களும் இவர்களிடமிருந்தே தோன்றின. அதனால் இவர்களை வணங்கினால் சகல தேவர்களையும் வணங்கிய பலன் உண்டு.

காஷ்யப முனிவருக்கும் அவர் மனைவி திதிக்கும் பிறந்தவர்கள் ஏழு மருத் கணங்கள். இந்திரனை அழிக்க தன் கருவில் நூறு ஆண்டுகள் வளரும் ஒரு பிள்ளையைச் சுமந்தார் திதி. ஒரு நாள் கருவில் புகுந்து பிள்ளையைத் தனது வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினான் இந்திரன். பிள்ளை அழ, ‘மருதா’ (அழக்கூடாது!) என உத்தரவிட்டார் திதி. அதனால் அவர்கள் மருத் கணங்கள் ஆயினர்.

சாத்ய புருஷர்கள் என்றால் நம3மீது வேண்டுதல்களை நிறைவேற்றி, நமக்கு மனநிறைவு தருபவர்கள். ரிபுக்கள் என்றால் எதிரிகள்... எதிரிகளையும் வேண்டுவதால் அவர்கள் நமக்குக் கெடுதல் செய்ய யோசிப்பார்கள்.

யட்சர்கள் கடவுள் பாதி... அசுரத் தன்மை பாதி என்ற கலவையில் உருவானவர்கள். இவர்கள் செல்வத்தின் அதிபதியான குபேரனின் ஆட்சியின் கீழ் வாழ்கிறவர்கள். இமயமலைக்கு அடியில் பாதாள லோகத்தில் வாழ்வதாகக் கருதப்படும் இவர்கள்தான், உலகிலுள்ள செல்வத்தின் காவலர்கள்.

கந்தர்வர்கள் காற்று, மலை, வனங்களின் அதிபதிகள். இறக்கைகள் கொண்ட பறக்கும் தேவர்கள். பித்ரு கணங்கள் என்றால், ஏற்கெனவே மறைந்து இறைவனை அடைந்திருக்கும் நம் முன்னோர்கள். ப்ருகுக்கள் என்றால் ப்ருகு முனிவரின் வழித் தோன்றல்கள்! சர்ப்ப தேவதைகள் என்றால் வழிபாட்டில் இருக்கும் சிறு தெய்வங்கள். ஆங்கிரசர்கள் என்றால் ரிஷிகள். இப்படி சகலமானவர்களையும் வணங்கிப் பணிவது நல்லது.

இது தவிர கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒருவருக்காக ஆயுஷ்ய ஹோமம் செய்யும்போது, அவர் சார்பில் மிருத சஞ்சீவினி சூக்தம் என்ற பெயரில் ரிக் வேதத்தில் உள்ள மந்திரத்தையும் சேர்த்து ஜெபம் செய்வது நல்ல பலன் தரும். நோயின் பிடியிலிருப்பவர் சார்பில் ஓர் அந்தணர் சொல்லும் இந்த மந்திரங்களின் சுருக்கம்... ‘இவருக்கு என்னவென்று தெரியாத நோய் வந்துள்ளது. இதிலிருந்து முக்தி கிடைக்கவும், சுகமான வாழ்க்கை அமையவும், ஆயுஷ்ய ஹோமம் செய்து நோயிலிருந்து விடுபட முயற்சிக்கிறோம். கோர ரூபமான நோய் தேவதை இவரைப் பிடித்திருக்கிறது என்றால்... இந்திர, அக்னி தேவர்களே! நீங்கள் இவரை இந்தக் கஷ்டத்திலிருந்து மீட்டு வருவீர்களாக. இவருக்கு ஆயுசு குறைந்திருந்தாலோ, சாவை நெருங்கியிருந்தாலோ, எமலோக வாசல் வரை சென்றிருந்தாலோகூட, மரண வாயிலிலிருந்து திரும்ப அழைத்து வந்து நூறு வயது மட்டும் நோயில்லாத வாழ்க்கை தருவீர்களாக! இந்திரன் இந்த ஹோமத்தினால் சந்தோஷம் அடைந்து, இவருக்கு எல்லா துக்கங்களிலிருந்தும் விமோசனம் அளித்து நூறு ஆண்டுகள் வாழ வைக்கட்டும். இப்படி புனர்ஜென்மம் அடைந்த இவர் ஆண்டுக்கு ஒரு முறை இந்திரன், அக்னி உட்பட சகல தேவதைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஹோம கர்மாவைச் செய்யட்டும்.

இவர் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார். இவரின் அவயவங்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன. இவரது சரீர இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் பூரண ஆரோக்கியத்துடன் விளங்கப் போகிறது!’ என்பதாகும்.

ஒரு குழந்தையின் முதல் பிறந்த நாளின்போது இந்த ஹோமத்தை வீட்டில்தான் செய்ய வேண்டும். மற்றபடி நோயிலிருந்து விடுதலை வேண்டும்போது திருக்கடையூர் சென்று செய்வது விசேஷம். ஒருவரது ஜாதகத்தில் சனி, லக்னாதிபதி, எட்டாவது இடத்தில் இருக்கும் கிரகங்கள் ஆகியவற்றின் அமைப்பு சரியில்லை எனும்போதும் இந்த ஹோமம் செய்யலாம்.

அடுத்ததாக சுயம்வர பார்வதி ஹோமத்தைப் பார்ப்போம்.

ஆயுள் தேவதை பிரார்த்தனை!

யுஷ்ய ஹோமம் செய்யும் அளவுக்கு வசதி இல்லாத வர்கள் ஆயுள் தேவதையை மனதில் தியானித்து, தினமும் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்வது நல்லது.

ஆயுர்தேஹி தனம்தேஹி வித்யாம்தேஹி மகேஸ்வரி
சமஸ்தம் அகிலான்தேஹி தேவிமே பரமேஸ்வரி

இதன் அர்த்தம், ‘தேவி! எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு. ஆயுள் மட்டும் போதுமா? அதனால், சுகமாக வாழத் தேவையான செல்வத்தையும் கொடு. வெறும் செல்வத்தைக் கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து நான் வீணாகிப் போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடு. அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடு’ என்பதாகும்.

தினசரி இந்தப் பிரார்த்தனையை மனப்பூர்வமாக செய்துவருபவர்கள் நூறு வயது வரை நலமுடன் வாழ சகல தேவ தைகளும் துணை செய்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism