Published:Updated:

எல்லை சாமிகள்!

எல்லை சாமிகள்!

எல்லை சாமிகள்!

எல்லை சாமிகள்!

Published:Updated:

 

 

மண் மணக்கும் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லை சாமிகள்!
 

- குள.சண்முகசுந்தரம்

கற்குவேல் ஐயனார்

எல்லை சாமிகள்!

பாண்டிய மன்னனிடம் மனித உருவில் கைகட்டி சேவகம் பார்த்த கற்குவேல் ஐயனாரின் மகத்துவம் குறித்துச் சொல்லும் ஸ்தல வரலாறு இது.

திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் தெற்கு நோக்கி ஒரு கிளைச் சாலை பிரிகிறது. அதில் எட்டு கி.மீ. தூரத்தில் உள்ளது தேரிக்குடியிருப்பு. சிவப்பு மணற் பரப்புடன் காணப்படும் இந்தக் கிராமத்தின் மேற்கு எல்லையில்தான் கற்குவேல் ஐயனாரின் ராஜாங்கம்.

முடியாட்சிக் காலத்தில் தேரிக்குடியிருப்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆட்சி செய்த மன்னன் அதிவீர ரணசூர பாண்டியன். இவருக்கு ஆலோசனை கூறிய மந்திரி கையனார். பெண் உருவிலிருந்த விஷ்ணு மீது சிவபெருமான் காதல் கொள்ள... அதன் விளைவாகப் பிறந்த தெய்வப் பிறவி இவர். மானுட உருவில் பாண்டியனுக்குச் சேவகம் செய்து வந்தார்.

பாண்டியன் கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு தடாகம். அதன் கரையில் இருந்த அபூர்வ சக்தி கொண்ட மாமரம் ஒன்று, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, ஒரு காய் மட்டுமே காய்க்கும். அது கனிந்து தடாகத்தில் விழும்போது அதை எடுத்து உண்பவர்களுக்கு அபூர்வ சக்திகள் பெருகும் என்பது ஐதீகம். அந்த மாங்கனியைத் தான் எடுத்துப் புசிப்பதற்காக, சிப்பாய்கள் சிலரைக் காவல் போட்டிருந்தார் மன்னர்.

தேரிக்குடியிருப்பில் ஆண்களின் கண்ணில் படாமல் விதவைப் பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். ஊர் அடங்கிக் கிடக்கும் நடுநிசிப் பொழுதில் தடாகத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துச் செல்வது அவளது வழக்கம். ஒரு நாள் அவள் தடாகத்தில் தண்ணீர் எடுத்தபோது, மரத்திலிருந்து விழுந்த அபூர்வ மாங்கனி அவளையும் அறியாமல் குடத்துக்குள் போனது.

எல்லை சாமிகள்!

பொழுது விடிந்தது. மரத்தில் மாங்கனியைத் தேடினார்கள் சிப்பாய்கள். அது அங்கே இல்லாதது கண்டு பதறினர். பயத்துடனே போய் விஷயத்தை மன்னரிடம் சொன்னார்கள். கடும்கோபம் கொண்ட மன்னர் தேரிக்குடியிருப்பில் இருந்த அத்தனை வீடுகளையும் சோதனையிடுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி சோதனை செய்ய வந்த சிப்பாய்கள், பத்தினித் தெய்வமாக வாழ்ந்த விதவையின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மந்திரி கையனார். அரண்மனைக்கு வந்த அவர், ‘‘அந்தப் பெண்ணின் பத்தினித் தன்மைக்கு பங்கம் விளைவித்து விடாதீர்கள்!’’ என்று பாண்டியனிடம் வேண்டினார்.

அதைச் செவிமடுக்காத மன்னன், அவள் வீட்டுக்குள்ளும் சென்று மாங்கனியைத் தேடுமாறு சிப்பாய்களிடம் சொன்னார். அப்படியே செய்த சிப்பாய்கள், குடத்து நீரிலிருந்து மாங்கனியைக் கண்டுபிடித்து எடுத்து வந்தார்கள். அந்த விதவைப் பெண்ணே மாங்கனியைத் திருடியதாக முடிவு செய்த பாண்டியன், அவளுக்கு மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவளை சுண்ணாம்புக் காளவாயில் வைத்து எரிக்குமாறு உத்தரவிட்டான். அப்போதும் குறுக்கிட்ட கையனார், ‘‘மன்னா, அவசரப்பட்டு அந்தப் பெண்ணைத் தண்டித்து விடாதீர்கள். தீர விசாரித்து நடவடிக்கை எடுங்கள்!’’ என்று மன்றாடினார்.

எல்லை சாமிகள்!

ஆனால், மன்னன் மறுத்து விட்டான். தண்டனையை உடனடியாக நிறைவேற்றும்படி கட்டளையிட்டான்.

அதுவரை பொறுமையாக இருந்த விதவைப் பெண் பொங்கி எழுந்து கோட்டை வாசலில் மண்ணை அள்ளித் தூற்றி, ‘‘நின்று நிலைத்து நீதி கேட்காத இந்த பூமி தீ காற்றுக்கும், தீ மழைக்கும் இரையாகக் கடவது!’’ என்று சாபமிட்டாள். சாபம் உடனே பலித்தது. தேரிக்குடியிருப்பு கோட்டையும் அதைச் சுற்றியிருந்த குடிகளும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டு பஸ்பமாகின. தப்பியோடிய கையனார் தன் தெய்வ சக்தியால் எதிரே தென்பட்ட கற்குவா என்கிற மரத்தைப் பிளந்து அதற்குள் ஐக்கியமானார்.

காலச் சக்கரம் சுழன்றது. மறுபடியும் அந்தப் பகுதியில் உயிர் வாழ்க்கை துவங்கியது. ஒரு நாள், கையனார் ஐக்கியமாகியிருந்த கற்குவா மரத்தை தேரிக்குடியிருப்புவாசிகளின் பொதி மாடுகள் கடக்க முயன்றபோது, அந்த மரத்தின் வேர் தட்டிக் கீழே விழுந்தன. அடுத்தடுத்த நாட்களும் இந்தச் சம்பவம் தொடரவே... ஊர்க்காரர்கள் சிலர், மரத்தின் வேர்களை வெட்டினர். அப்போது அந்த வேரிலிருந்து செங்குருதி பீய்ச்சியடித்தது. இதனால் மிரண்டுபோன ஊர்க்காரர்கள் அந்த மரத்துக்கு ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்தனர்.

அப்போது மரத்துக்குள் இருந்து அசரீரியாக ஒலித்து தனது பூர்வீகத்தை ஊருக்கு உணர்த்தினார் கையனார். அன்றிலிருந்து ஊர் மக்கள் அந்த இடத்தைக் கோயிலாக நினைத்து வழிபட ஆரம்பித்தனர். கற்குவா மரத்துக்குள் கையனார் அடக்கமாகி இருந்ததால், அவருக்கு ‘கற்குவேல் கையனார்’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே கற்குவேல் ஐயனாராக மருவியது.

எல்லை சாமிகள்!

கிழக்குப் பார்த்த சந்நிதியில் பூரணம், பொற்கமலம் தேவியருடன் அமர்ந்திருக்கிறார் கற்குவேல் ஐயனார். கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் உதிரமாடன், மாலையம்மன், ஐவர்ராஜா, நாகரிகப் பிணமாலை சூடும் பெருமாள், வன்னியராஜா, வன்னிச்சி, இருளப்பன், முன்னடிசாமி, முன்னடிதேவி, சுடலைமாடன், சொல்கேளா வீரன், கள்ளர்சாமி, பேச்சியம்மன், துப்பாக்கிமாடன்... என எண்ணிலடங்கா துணை தெய்வங்களும் குடிகொண்டிருக்கின்றனர்.

ஐயனாருக்குக் கோயில் எழுப்பிய பிறகு ஒரு முறை கருவறைக்குள் புகுந்த ஒருவன் ஐயனார் மற்றும் தேவியருக்குப் போட்டிருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முற்பட்டான். அப்போதே அவன் கண்களைக் குருடாக்கினார் ஐயனார். கண் தெரியாமல் தட்டுத் தடுமாறி வெளியே வந்த கொள்ளையன், மேற்குத் திசையில் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். ஐயனார், துணை தெய்வமான வன்னியராஜாவை அழைத்து, கொள்ளையனை சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டார். வன்னியராஜா அதன்படியே செய்தார்.

இந்தச் சம்பவத்தைக் கோயில் பூசாரியின் கனவில் தோன்றிக் கூறினார் ஐயனார். உடன், கோயிலின் மேற்குத் திசை நோக்கி ஓடிய கோயில் பூசாரிகள் வழியில் தலை துண்டாகிக் கிடந்த கொள்ளையனைக் கண்டு, ஐயனாரின் மகிமையை எண்ணி மெய்சிலிர்த்தார்கள். இருந்தபோதும் கொள்ளையன் மீது இரக்கப்பட்டு, அவனை மறுபடியும் உயிர்ப்பிக்க ஐயனாரை வேண்டினர் பூசாரி கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ஐயனார், கொள்ளையனுக்கு மறுபடியும் உயிர்ப்பிச்சை கொடுத்தார்.

இந்தச் சம்பவத்திலிருந்து தேரிக்குடியிருப்பு மண்ணில் சிறு துரும்புகூட திருடு போவது கிடையாதாம். ஐயனாரால் உயிரெழுப்பப்பட்ட அந்தக் கொள்ளையனுக்கும் பிற்காலத்தில் கோயிலுக்கு எதிரே சிலை வைத்து ‘கள்ளர் சாமி’ என்று வழிபட ஆரம்பித்தனர்.

கார்த்திகை மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் இந்தத் திருத்தலத்தில் கள்ளர் வெட்டு திருவிழா திமிலோகப்படுகிறது. இந்தத் திருவிழாவின்போது லட்சம் பேருக்கு மேல் கோயிலில் கூடுகிறார்கள். கார்த்திகை 28-ல் பச்சரிசி மாவினால் ஐயனாருக்கும் தேவியருக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அடுத்த நாள் சந்தன அலங்காரம் செய்து ஐயனாருக்குச் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நிறைவு நாளான கார்த்திகை 30-ல் கோயிலுக்கு மேற்கே ஆழ்வார்த்திருநகரி அருகேயுள்ள திருக்கோலூர் செல்லும் கோயில் பூசாரிகள், அங்கே தாமிரபரணி ஆற்றில் இருந்து பதினோரு கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து ஐயனாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அபிஷேகத்துக்குப் பிறகு கோயிலின் தென்புறம் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஐயனார் வரலாற்றை வில்லுப்பாட்டாக இசைக்கிறார்கள்.

இந்த வைபவம் முடிந்ததும் வன்னியராஜா, கள்ளர் சாமி, தளவாய் மாடன், உதிரமாடன் உள்ளிட்ட பதினைந்து தெய்வங்களின் பூசாரிகள், அருளோடு புறப்பட்டுச் சென்று கோயில் வாசலில் போட்டிருக்கும் திருவிழாக் கடைகளில் குத்துமதிப்பாகச் சில பொருட்களை அள்ளிக் கொண்டு திரும்புவர். அந்தப் பொருட்களில் மூன்று கை அள்ளி வில்லுப்பாட்டுப் பாடியவர்களுக்குப் போடுவர். இதை ‘எடுப்பெடுத்தல்’ என்கிறார்கள்.

எல்லை சாமிகள்!

இதைத் தொடர்ந்து செவ்விளநீர் ஒன்றைத் தட்டில் வைத்து ஐயனார் சந்நிதியில் பூஜை செய்கிறார்கள். அதே நேரத்தில் கள்ளர் சாமியாடியைக் கயிற்றால் கட்டி வைக்கிறார்கள். பூஜை முடிந்து இளநீருடன், கயிறால் கட்டப்பட்ட கள்ளர் சாமியாடியையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு மேற்கேயுள்ள தேரிமேட்டுப் பகுதிக்குச் செல்வர். அங்கு, கொள்ளையனை வன்னியராஜா சிரச்சேதம் செய்ததாகச் சொல்லப்படும் இடத்தில் கள்ளர் சாமியாடியைப் படுக்க வைத்து அவர் நெற்றியில் இளநீரை வைப்பர். வன்னியராஜா சாமியாடி அருள் வந்து அரிவாளால், ஒரே வெட்டில் இளநீரை இரண்டு துண்டாக வெட்டுவார். அப்போது இளநீர் அந்த செம்மணல் பூமியில் சிந்தி, அந்த இடத்தைச் சுற்றிலும் குருதி கொட்டியது போன்றதொரு தோற்றம் தென்படும். அங்கிருந்து மணல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். வயலில் போட்டால் விளைச்சல் செழிக்கும். இரண்டு துண்டாக விழும் இளநீர் துண்டுகளை எடுப்பவர்கள் சகல சௌபாக்கியத்துடன் இருக்கலாம். இந்த நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வருவதால் புனித மண் எடுக்கவும், இளநீர்த் துண்டுகள் எடுக்கவும் கள்ளர் வெட்டு திருவிழாவில் அடிபிடி சண்டையே நடக்கும். அந்தக் காலத்தில் சாமியாடியின் நெற்றியில் இளநீரை வைத்து வெட்டும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்போது கள்ளர் சாமியாடியைக் கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து நீளமாக ஆள் படுத்திருப்பது போல் விரித்து வைத்து அதன்மீது இளநீரை வைத்து வெட்டும் வழக்கம் தொடர்கிறது.

கள்ளர் வெட்டு முடிந்ததும் ஐயனார் வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். இதன் பிறகு அசைவ கடவுள்களுக்குக் கடா வெட்டு பூஜை களை கட்டுகிறது. அத்துடன் கள்ளர் வெட்டு திருவிழா நிறைவுக்கு வரும். இந்தத் திருவிழாவைத் தவிர பங்குனி உத்திரத்தன்று ஒரு நாள் திருவிழாவும் இங்கு நடக்கிறது.

புதன்கிழமையும் சனிக்கிழமையும்தான் கற்குவேல் ஐயனார் கோயிலில் விசேஷமான நாட்கள். மனமுருக வேண்டிவந்தால் எந்தக் குறையையும் நீக்கி விடுவார் கற்குவேல் ஐயனார். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பேச்சியம்மனுக்கு மரத்தொட்டில் கட்டி, மரப்பாச்சி வாங்கிப் போட்டால் அடுத்த வருடமே வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்கும். பில்லி, சூன்யம், பேய் பிடித்தவர்களை வன்னியராஜா சந்நிதியில் நிறுத்திப் புளிய விளாறால் விளாசினால் பேய்த் தொல்லை நீங்கும்.

இது போன்ற நம்பிக்கைகள் பொய்த்துப் போகவில்லை என்பதால் எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருந்தாலும் கற்குவேல் ஐயனாரைத் தேடிவரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism