Published:Updated:

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

Published:Updated:
இது புது உலகம்!
விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னாடுடையான்

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

லகில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டுமானால், பொருள் தேவை. ஆனால், அதற்கும் மேலே முக்கியமான ஒன்று உண்டு. அதுதான் நோயின்மை. அது இல்லாவிட்டால் வீடு, நாடு மட்டுமல்ல... உலகமே சந்தோஷமாக இயங்க முடியாது!

நோயற்ற ஆரோக்கியமான வாழ்வே உண்மையான செல்வம். ‘நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும்’ என கவியரசு கண்ணதாசனும் இதையே கூறினார். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!’ என்ற வாக்கும் இதை வலியுறுத்துகிறது. ஏதாவது ஒரு நோய் மனிதனைத் தாக்கிக் கொண்டுதான் இருக்கும். அதில் இருந்து விடுபட வேண்டுமானால், முறையான மருத்துவம் தேவை. நோய் நீக்கி ஆரோக்கியத்தை வழங்கும் இப்படிப்பட்ட மருத்துவ உலகின் முதல்வர்தான் சட்டை முனி.

‘சேணியர் குலத்தில் பிறந்தவர் சட்டை முனி’ என்பார்கள். வீட்டு நிர்வாகத்தைத் தாயார் கவனித்துக் கொண்டார். தந்தையார் பொருள் சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், சட்டை முனியின் மனம் குடும்பத்தில் ஒட்டவில்லை. அவர் உலகத்தைப் பார்த்தார். அவர் உள்ளம் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்தியது.

‘என்ன மக்கள் இவர்கள்! எங்கு பார்த்தாலும் தொல்லை. அனைத்துக்கும் ஆலாய் பறந்து அமைதியைத் தொலைத்து விட்டு நிற்கிறார்கள். குற்றங்கள் பெருகிப் பரவுகின்றன. பல வழிகளிலும் பாதிப்புகள் வருகின்றன. படித்தவர்களும் படாத பாடுபடுகிறார்கள். படிக்காதவர்களின் நிலையும் அதேதான். பேச்சு... பேச்சு... பேச்சு... பேச்சே வாழ்க்கையாகப் போய் விட்டது! கூச்சலும் குழப்பமும் கும்மாளம் போடுகின்றன. பேச்சுக்கும் செயலுக்கும் வெகு தூரம். உலகம் முழுவதும் கலக மயமாக இருக்கிறது. இவர்களுடன் நாம் சேரக் கூடாது!’ என்று தீர்மானித்த சட்டை முனி எதிலும், யாருடனும் ஒட்டாமல் பற்றற்று இருந்தார்.

சட்டை முனியின் தூய்மையான எண்ணமும் போன பிறவிப் புண்ணியமும் அவர் முன்னால் கொங்கணரைக் கொண்டு வந்து நிறுத்தின. கொங்கணரின் கால்களில் விழுந்தார் சட்டை முனி. ‘‘குருதேவா! உலகம் முழுவதும் வினை மயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வேதனை. பதைக்கிறது நெஞ்சம். உடலும் உயிரும் வாழ வேண்டும். தகுந்த வழியைக் காட்டி அருள் செய்யுங்கள் ஸ்வாமி!’’ என வேண்டினார் சட்டை முனி.

அவரை ஊன்றிப் பார்த்தார் கொங்கணர். ‘இது தகுந்த பாத்திரம்தான். இதற்கு உதவி செய்யலாம்!’ என அவர் உள்ளம் சொன்னது. மந்திர உபதேசம் செய்தார். ‘‘சட்டை முனி! உன் உள்ளத்தில் நான் விதையைப் போட்டு விட்டேன். அதைப் பயிராக்கி வளர்த்து விளைச்சல் பெற வேண்டியது உனது பொறுப்பு. நேரத்தை வீணாக்காதே! நீ நினைக்கும்போதெல்லாம் நான் உன் எதிரில் இருப்பேன். வருகிறேன்!’’ என்ற கொங்கணர் மறைந்தார்.

கள்ளமற்ற உள்ளத்தில் விழுந்த உபதேசத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார் சட்டை முனி. ஆசை, பாசம் என்னும் களைகள் வளராமல் பார்த்துக் கொண்டார். பண்பு என்னும் தண்ணீரைப் பாய்ச்சி சத்தியம் என்னும் ஞானப் பயிரை வளர்த்து அறுவடை செய்தார்.. அந்த ஞான அறுவடையின் விளைவாக சிவபெருமானின் திருவடிகளைக் காணும் பாக்கியம் பெற்றார்.

‘‘யானையின் தோலைப் போர்த்தியவர் சிவபெருமான். அவரது திருவடிகளை தரிசித்த நானும், அகம்பாவம் எனும் யானை என்னை நெருங்காதபடி, யானையின் தோலையே சட்டையாகப் போர்த்திக் கொள்வேன்!’’ என்று யானைத் தோலை சட்டையாகப் போர்த்திக் கொண்டார். உடம்பின் மீது இருந்த பற்றுதலும் போய் விட்டது. உடம்பு என்னும் சட்டையை லட்சியம் செய்யாத அவரை, ‘சட்டை முனி’ என அழைத்தது உலகம்.

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

ஞானச் செல்வமும் தகுதியும் வளர்ந்தன சட்டை முனிக்கு. பழுத்த மரத்தை நாடிப் பறவைகள் தாமே வருவதைப் போல, சட்டை முனியைத் தேடி அறிஞர்கள் பலர் வந்தார்கள். அவர், தான் அடைந்த அனுபவங்களை எல்லாம் சொல்லி அவர்களும் உயர வழிகாட்டினார்.

ஒரு நாள்... சட்டை முனியைத் தேடி ரோமசர் வந்தார். ‘‘மருத்துவத்தில் எனக்கு உள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும்!’’ என விண்ணப்பித்தார் ரோமசர்.

சட்டை முனி மறுக்கவில்லை. தான் அறிந்ததை எல்லாம் சொல்லி, ரோமசரின் சந்தேகங்களைப் போக்கினார்.

சட்டை முனியைப் பொறுத்தவரை மூன்று விஷயங்கள் முக்கியம். தரமான மருந்து, திறமைசாலியான மருத்துவர், நேரப்படி மருந்து சாப்பிட்டு பத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நோயாளி- இந்த மூன்றும் ஒன்றுபட்டால், எந்த வியாதியாக இருந்தாலும் போய்விடும். ஒன்று பிசகினாலும் சரி; மருந்துக்கும் சக்தி இருக்காது. மருத்துவருக்கும் மதிப்பு இருக்காது. நோய் மேலும் மேலும் வளரும். இதைப் பல விதமான உதாரணங்களுடன் விளக்கிக் காட்டியவர் இவரைப் போல யாரும் இல்லை.

அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் சரி... தன்னுடைய மருத்துவத்தில் எந்த விதமான வேறுபாடும் காட்ட மாட்டார் சட்டை முனி. யாராக இருந்தாலும் பத்தியத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவார் சட்டை முனி.

சட்டை முனியின் வார்த்தை களைக் கேட்டு உருப்பட்டவர்கள் சிலர். சட்டை முனியின் வார்த்தைகளோடு அவரையும் சேர்த்தே ஒதுக்கினார் கள் பலர். பார்த்தார் சட்டை முனி. உருப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சாதகம் (பயிற்சி) செய்யும் சாதகர்களின் சங்கடங்களை நீக்க, மருத்துவ நூல்களை இயற்றித் தந்தார். மற்றவர்கள் மீது சட்டை முனிக்குக் கருணை இல்லையா? அதற்காகவும் செய்யக் கூடாதா? என நினைக்க வேண்டாம். உண்மை அதுவல்ல. ‘சொன்னாலும் கேட்க மாட்டார்கள். சுயமாகவும் அறிய முயற்சி செய்ய மாட்டார்கள்’ என்ற எண்ணத்தாலேயே தன்னை ஒதுக்கியவர்களிடம் இருந்து தானும் ஒதுங்கி நின்றார் அவர்.

சட்டை முனி இன்று இல்லை. ஆனால், அவர் அருளிய பற்பல நூல்கள் இன்றும் நம்மிடையே உள்ளன. அருமையான மனிதப் பிறவி கிடைத்ததன் பலனாக சட்டை முனியின் ஒன்று அல்லது இரண்டு உபதேசங்களையாவது பார்ப்போம், வாருங்கள்!

கற்றவர்கள் வாய் ஜாலம் பேசிக் கடை விரிப்பார் கள். தெளிவில்லாத மனம் படைத்த அவர்கள், நல் லதை எண்ணாமல், செய்யாமல் தீய வழிகளில் போய், ஏராளமாகச் சம்பாதித்துச் சேர்த்து வைப் பார்கள். அடுத்தவர்களுக்குக் கொடுக்கவும் மனம் இல்லை; தான் அனுபவிக்கவும் மனம் இல்லை. ஏழைகளைப் போல இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் மூச்சு நின்றுவிடும். என்ன பலன்?

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்!
கூடு விட்டிங்காவிதான் போன பின்னர்
யாரே அனுபவிப்பார்? பாவிகாள்! அந்தப் பணம்.. .

என்று தமிழ்ப் பாடல் எடுத்துச் சொல்லி யும் கேட்பார் இல்லை. என்ன படித்தாலும் சரி; நல்லது அனுபவத்தில் வராதவரை படிப்பினால் பயன் இல்லை. துயரம்தான் விளையும். மயான வைராக்கியமாகி விடும். என்ன பலன்?

து(இ)யங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு!

சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே!

என்கிறார் சட்டை முனி. மயான வைராக்கியமே இங்கு ‘சுடுகாட்டில் அறிவது போல்’ என்று குறிப் பிடப்படுகிறது.

சுடுகாட்டுக்குப் போய் அங்கு நடப்பவற்றையும் அங்கு இருக்கும் மண்டையோடு- எலும்புகள் முதலானவற்றையும் பார்த்தவுடன், ‘ப்ச்..! அவ்வளோ தாம்ப்பா! வாழ்க்கையாவது ஒண்ணாவது? எவ்ளோ பெரிய ஆளெல்லாம் எலும்பாக் கெடக்கான் பார்! நம்மளும் ஒரு நாள் இப்பிடித்தான். இங்கதான்!’ என்று விரக்தியாகப் பேசும்... நினைக்கும் மனம்.

ஆனால், சுடுகாட்டை விட்டு வெளியில் வந்தவுடன், ‘‘போனது போச்சு! என்ன பண்றது? பத்து பேருக்கும் காபி சொல்லு! துட்டக் குடுத்துடு!’’ என்று சொல்லி அடுத்தவன் பையில் கை வைக்கத் தொடங்கிவிடும். சுடுகாட்டில் எழுந்த விரக்தி அங்கேயே சமாதியாகிவிடும். தொடர்ந்து வராது.

அதுபோல, படித்ததெல்லாம் தொடர்ந்து நடை முறைக்கு வந்து அனுபவத்தில் வராவிட்டால், அவையெல்லாம் மயான வைராக்கியம் போல; அது வாழ்க்கைக்கு உதவாது. வாழ்நாள் வீழ்நாளாகி விடும் என எச்சரிக்கை செய்கிறார் சட்டை முனி.

சட்டை முனி எழுதிய பாடல் கள் எல்லாம் எளிமையான தமிழில் தான் உள்ளன. உட்பொருள் புரியா விட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்தால், சித்த புருஷர்களே நமக்குள் நின்று உட்பொருளை உணர்த்துவார்கள். அவசரம் மிகுந்த இந்தக் காலத்தில் அவற்றைப் படித்து, சற்றாவது அமைதி காண வேண்டியது நமது பொறுப்பு. பிறவிக் கடமையும் கூட. சட்டை முனிவர் சீர்காழியில் ஸித்தி அடைந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism