Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
ராமபிரான் மாமிசம் சாப்பிட்டாரா?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தேவாரப் பாடல்களை தெய்வத்தின் முன்னால்தான் சொல்ல வேண்டுமா, சும்மா இருந்தாலும் சொல்லலாமா?

-தி. கௌசலா தேவி, சுவிட்சர்லாந்து

தெய்வத்தின் முன்னால் சொல்வது, தெய்வம் இல்லாதபோது சொல்வது என்கிற வேறுபாடு ஏன் வந்தது தெரியுமா? தெய்வத்தை நம் மனதில் இருத்தி மனதிலேயே வழிபடும் பக்குவம் நமக்கு இன்னும் வராததால்தான்!

பரீட்சைக்குப் படிக்கிறான். புத்தகத்தில் இருந்த தெல்லாம் மனதுக்குள் வந்துவிட்டது. புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுகிறான். அதற்காகப் புத்தகமே வேண்டாம் என்று சொல்ல முடியுமா?

உருவமில்லாத இறைவனை மனதிலேயே வழிபடும் தன்மை உங்களுக்கு வந்துவிட்டதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி வந்துவிட்டது உறுதியானால், கடவுள் படம் இல்லாமல் சொல்லலாம். அதற்கு முந்தைய படியில் இருப்பவரானால், படத்தின் முன்னாலேயே சொல்லுங்கள்!

கேள்வி - பதில்

நாக வழிபாட்டுக்குக் காரணம் பயமா? பக்தியா? அல்லது இரண்டையும் தாண்டிய வேறு ஏதாவது காரணமா?

_ ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

பயத்தில் வழிபடுவது என்கிற கொள்கையே பாரதத்தில் பிறந்தவர்களுக்கு இல்லை. பக்தியில் வழிபடுவது மட்டுமே நம் நாட்டினருக்குத் தெரியும். பயம் இருந்தால், அதைப் போக்க வழிபடுவோமே தவிர, ‘பயம் இருக்கிறது; அதனால் கும்பிடுகிறேன்’ என்பது இங்கே இல்லை. பயத்தில் வழிபாடு வருகிற பட்சத்தில், பயம் போனால் வழிபாடும் போய்விடும். பக்தியில் வழிபாடு வந்தால்தான் நிலைக்கும். நடுவில் போகக் கூடிய வழிபாட்டை வேதமும் சொல்லாது; சாஸ்திரமும் சொல்லாது; சம்பிரதாயமும் சொல்லாது.

பலர் பயத்தினால் நமஸ்காரம் செய்கிறார்களே என்றால், அங்கே நம் அசட்டுத்தனம்தான் வெளிப்படுகிறது. அதைக் கொண்டுபோய் பூஜையில் வைக்காதீர்கள்.

கேள்வி - பதில்

சாதாரணப் பாமரனுக்காக நாகம் என்று வைத்து அதை வழிபடுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தக் கல்லில் இருக்கும் நாகத்தை மட்டும் பார்க்காதீர்கள். வேதத்திலேயே சர்ப்பத்தைப் பற்றிச் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தின் தேவதையே சர்ப்பம்தான். சர்ப்பத்தைச் சொல்லும் வேத மந்திரம் என்னென்ன சர்ப்பங்களை எல்லாம் சொல்கிறது தெரியுமா? பூமியில் இருக்கும் சர்ப்பம்; அந்தரட்சத்தில் (இடைவெளியில்) இருக்கும் சர்ப்பம்; வாயுமண்டலத்தையும் தாண்டி விண்வெளியில் கிரகங்களுக்கு இடையில் நழுவிப் போகக் கூடியதான சர்ப்பம்... இப்படி நிறைய சர்ப்பங்களைச் சொல்லி அதை எல்லாம் நாகமாக வழிபடுகிறோம். நமது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு வரும் சாதா ரண விஷப் பாம்பில்லை அது.

ஒரு கோயிலுக்குப் போகிறோம் என்றால், சுவாமியைப் பார்த்து பயப்படவா செய்கிறோம்? ‘அந்தக் கோயிலுக்குப் போனேன். அங்கே நரசிம்மர், ஹிரண்யகசிபுவைக் கிழித்துக் கொண்டிருக்கிறார். பயந்துபோய் ஓடி வந்துவிட்டேன்’ என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? அசுரனை வதம் செய்யும் கோலத்தோடு கோபமும் குரோதமும் ததும்பும் அம்பாளின் முகத்தைப் பார்த்தால் பயமா வருகிறது? பக்திதானே வருகிறது... பயப்படுத்தும் உருவமாக இருந்தாலும் பயப்படுவதில்லையே நாம்? தெருமுனையில் வித்தைக்காரன் முன்னால் ‘ஆடு பாம்பே... ஆடு பாம்பே’ என்று நிற்கும் பாம்பைப் பார்த்து வேண்டுமானால் ‘எங்கே நம் மீது விழுந்துவிடுமோ!’ என்று பயப்படலாம். இது சர்ப்ப தேவதை. வேதம் சொன்ன நாகம் அது.

ஒன்று கவனித்துப் பாருங்கள்... அம்மன் தலையில் சர்ப்பம் இருக்கும். பரமேஸ்வரன் கழுத்தில் சர்ப்பம் இருக்கும். விக்னேஸ்வரர் இடுப்பில் சர்ப்பத்தைச் சுற்றிக் கட்டியிருப்பார். முருகனை விட்டுப் பிரியாமல் எப் போதும் கூடவே இருக்கும் ஒரு சர்ப்பம். பரம்பொருளான விஷ்ணு, ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவே, பக்தியால் மட்டுமே வழிபடுகி றோம் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

ராமபிரான் மாமிசம் சாப்பிட்டதாக ஸ்ரீமத் ராமாயணத்தில் வருகிறது. அதே போல அகஸ்திய முனிவர் சிராத்தத்தில் மாமிசம் பயன்படுத்தியதாக வாதாபி, வில்வலன் கதையில் வருகிறது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மீன் சாப்பிட்டதாக அவர் வரலாற்றில் காண்கிறோம். இது போன்ற தகவல்கள் ஆன்மிக நாட்டத்துக்கு முரண்பாடாகத் தெரிகிறதே?

_ தேதியூர் பாலு, சென்னை-11

கேள்வி - பதில்

யார் யார் எங்கெங்கே மாமிசம் சாப்பிட்டார் கள் என்கிற உங்கள் ஆராய்ச்சி உசத்தியாகத்தான் இருக்கிறது. யார் யாரிடம் என்னென்ன குறை இருக்கிறது? அதைக் களைவது எப்படி என்கிற உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. ஆனால், அப்படி அல்ல விஷயம். ஆன்மிகத்துக்கும் அசைவத்துக்கும் சம்பந்தமே இல்லை. தன் ஆன்மாவை அறிந்து கொள்ள மனதுக்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம், மாமிசம் சாப்பிடுவதால் கெட்டுப் போகாது. தினப்படி மாமிசம் சாப்பிட்டுப் பழகியவர் இருப்பாரே, உயிர் வாழ வேறு வழி இல்லாததால், மாமிசம் சாப்பிடுகிறாரே... அவர்களுக்கெல்லாம் ஆன்மிக நாட்டமே வரக் கூடாதா? நியாயமாகப் பார்க்கப் போனால் மனிதப் படைப்பில் தாவரங்களை மட்டுமே சாப்பிடுவதற்கான உடல் அமைப்புதான் இருக்கிறது. அது வேறு விஷயம்.

ஆனால் ராமர் சாப்பிட்டார், பரம ஹம்ஸர் சாப்பிட்டார். அதனால் நாமும் சாப்பிடலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆதிசங்கரரைப் பற்றி ஒன்று சொல்வார் கள். ஒரு முறை ஆதிசங்கரர் தன் வழியில் போய்க் கொண்டிருந்தார். இவரிடம் ஏதாவது குறை கண்டு இவரை சந்தியில் நிறுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவரை ஒருவன் பின்தொடர்ந்தான். ஆதிசங்கரருக்கு தாக மாக இருந்தது. அங்கே இருந்த ஒரு தாழ்த்தப் பட்டவர் குடிசைக்குள் புகுந்து தண்ணீர் எடுத்துக் குடித்தார். ‘இதை வைத்தே சங்கராச்சார்யாரைக் கிழித்து விடலாம்’ என்று சந்தோஷப் பட்டான் அவன். மறுபடியும் ஆதிசங்கரருக்கு தாகம். பக்கத்தில் இருந்த கொல்லன் பட்டறையில் இரும்பைக் காய்ச்சி வைத்திருந்தார்கள். அதை எடுத்துக் குடித்து விட்டார்.

அவர் இதையும் குடிப்பார்; அதையும் குடிப்பார் என்று அப்போதுதான் புரிந்தது அவனுக்கு. மகானுக்கு இது இரண்டும் ஒன்று!

அது மாதிரி, ராமர் இல்லை நாம். அவர் சாப்பிடாமலும் இருப்பார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாமிசமும் சாப்பிடுவார். பதினாலு வருஷம் காட்டுக்குள் இரு என்று சொன்ன பிறகு அவருக்கு யார் அரிசி சப்ளை செய்வது? அவர் தரத்தையும் நம் தரத்தையும் ஒப்பிட்டுப் பேசலாமா?

வில்வலன், வாதாபி என்று இரண்டு அசுரர்கள். ரிஷிகளைக் கொன்று சாப்பிடு வது அவர்களின் வேலை. அவர்களை எப்படி அழிப்பது? அவர்கள் வழியிலேயே சென்றார் அகஸ்தியர். வழக்கமாக அந்த அசுரர்கள் ரிஷிகளை அழைப்பார்கள். வாதாபி ஆடாக உருமாறுவான். அவனை வெட்டிக் கறி சமைத்து ரிஷிக்குப் படைப்பான் வில்வலன். ரிஷி சாப்பிட்ட பிறகு, ‘வாதாபி... வெளியே வா!’ என்று வில்வலன் கூப்பிடுவான். ரிஷியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவருவான் வாதாபி. இப்படி அவர்கள் கொன்ற ரிஷிகள் அநேகம் பேர். இதனால் வாதாபியின் மாமிசத்தைச் சாப்பிட்ட அகஸ்தியர், அவன் வெளியே வராதபடி ஜீரணம் செய்துவிட்டார். வில்வலனையும் கொன்றார். ரெண்டு துஷ்டர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக அகஸ்தியர் மாமிசம் சாப்பிட்டார். வயிற்றை நிரப்புவதற்காகச் சாதாரணர்கள் மாமிசம் சாப்பிடுவதோடு அதை ஒப்பிடக் கூடாது!

கோயில் கோபுரம் ஐந்து நிலை, ஏழு நிலைகள் கொண்டது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் என்ன? நிலைகளில் சுதைச் சிற்பங்கள் வைப்பது ஏன்? எத்தனையோ கோயில்கள், கோபுரம் கூட இல்லாமல் இருக்கின்றனவே... அப்படி இருக்கலாமா?

_ எஸ். நடராஜன், சென்னை-34

நிலை என்பது அடுக்கு. இன்னின்ன சிற்பங்களை அங்கே வைக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். வெவ்வேறு வகையான கோயில் உண்டு. சுவரே இல்லாத கோயிலும் உண்டு. கூரை இல்லாத கோயில் உண்டு. நமக்காகத்தான் கோயில். கோயிலுக்காக நாம் இல்லை. நமக்கு எவ்வளவு வசதி இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி கோயில் கட்டி வழிபடலாம் என்று நமக்காக இறங்கி வந்திருக்கிறது ஆகம சாஸ்திரம்.

கோயில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மரத்தடியில் ஒரு பிள்ளையாரை வைத்தால் அது கோயில்தானே... எல்லாமே ஆகம சாஸ்திரப்படிதான் அமைந்திருக்கின்றன.

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

எனது ஓட்டலில் பல ஸ்வாமி படங்களும், ஏழு அங்குல விநாயகர் சிலையும் வைத்து தினமும் பூஜை செய்கிறேன். அதன் பின், திரை போட்டு வைக்காவிட்டால் செல்வம் தங்காது என்கிறார்களே? அப்படியா?!

_ ஆர். ரங்கநாத அய்யர், சிங்காரப்பேட்டை

திரை போடுவது எதற்கு? சுவாமிக்கு நிவேதனம் செய்யும்போதும் சில அலங்காரங்கள் செய்யும்போதும் பார்க்கக் கூடாது. அதற்குத்தான் திரை. பிம்பத்தின் சாந்நித்யத்துக்கும் திரைக்கும் சம்பந்தம் இல்லை. நல்லது-கெட்டது என்பதை திரையை வைத்து எடை போடக் கூடாது. பக்தர்களுக்காக வந்ததுதான் திரை. சில கோயில்களில் திரை இல்லை என்பதால், கதவைச் சாத்திவிடுவார்கள். இதெல்லாமே தரிசனம் செய்ய வருபவர்களுக்குச் சரியான தரிசனம் கொடுப்பதற்கான ஏற்பாடுதான்.

மற்றபடி, எல்லா இடத்திலும் வியா பித்திருக்கும் கடவுளை திரை போட்டு மறைத்துவிட முடியாது. அதனால், திரை போடுவதால் நன்மை- தீமை என்று எதுவும் கிடையாது.

‘வில்வம் மகாலட்சுமிக்கு உகந்தது’ என்று சௌபாக்ய சஞ்சீவினியும், ‘வில்வ மரத்தைத் தனது உறைவிடமாக ஸ்ரீதேவி கொள்கிறாள். அதுவே அவள் வடிவம். வில்வம் லட்சுமி தேவியின் கரங்களில் இருந்தே தோன்றியது’ என்று வாமன புராணமும் கூறுகின்றன. ‘வில்வமே அவள் வடிவம்’ என்று காளிகா புராணம் கூறுகிறது. இப்படிப்பட்ட வில்வ மரத்தை வீட்டுக்கு அருகில் வளர்க்கலாமா?

-ஆர்.வடமலைராஜ், மதுரை-14

கேள்வி - பதில்

பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானுக்கு உகந்த விஷயங்களில் வித்தியாசமே இல்லை. சில காரணங்களுக்காக சில இடங்களில் சில விஷயங்களுக்கு விசேஷம் ஏறும். துளசி, விஷ்ணுவுக்குப் பிரீதி. ஏனென்றால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. இப்படிக் கதைகளை வைத்துக் கொண்டு இன்னாருக்கு இன்னது உகந்தது என்பது பிற்பாடு வழக்கத்துக்கு வந்தது. வில்வத்தில் மூணு கண்போல் தெரிவதால் அது சிவனுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். உத்தான ஏகாதசி முடிந்து கொஞ்ச நாள் பகவான் துளசி இலை மேலேயே உட்கார்ந்திருக்கிறார். பிருந்தாவன துவாதசி என்று சொல்லி துளசி பூஜை செய்வார்கள். எனவே, இந்தப் பொருட்கள் தவிர மற்றவை எல்லாம் விசேஷமில்லை என்பது சரியல்ல.

ஒருவன் புலிக்கு பயந்து வில்வ மரத்தின்மீது ஏறி விட்டான். புலி போகவில்லை. தூங்காமல் இருப்பதற்காக ஒரு கொம்பைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அதிலிருந்து ஒரு வில்வ இலை தவறிக் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தது. அவனுக்கு மோட்சம் கிடைத்தது. வில்வத்தின் பெருமைக்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.

லட்சுமி இல்லாத இடமே கிடையாது. சுறுசுறுப்பே ஒரு லட்சுமிதான். எங்கே களை இருக்கிறதோ, அங்கே லட்சுமி இருக்கிறாள். எனவே, உங்கள் வீட்டில் வில்வத்தைத் தாராளமாக வளர்க்கலாம்.

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான
எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:
‘கேள்வி பதில்', சக்தி விகடன்,
புதிய எண்: 34 (பழைய எண்:161),
கிரீம்ஸ் ரோடு, (அப்போலோ மருத்துவமனை அருகில்),
சென்னை-600 006.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism