Published:Updated:

தேவாரத் திருவுலா! - திருவையாறு

தேவாரத் திருவுலா! - திருவையாறு

ஈசனின் திருத்தலங்கள்!
தேவாரத் திருவுலா!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- டாக்டர் சுதா சேஷய்யன்

திருவையாறு

தேவாரத் திருவுலா! - திருவையாறு
கோயில் விமானம்

மூ ன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் யாகசாலை. சற்றே தள்ளி, உயர் மாடத்தில் சைவ நால்வர் சந்நிதி. பக்கத்திலேயே சிறிய காப்பிடத்துக்குள் சிங்கார மயில்கள். கோயிலில் வளர்க்கப்படும் மயில்கள். தத்தித் தத்தி நடந்து, கொடிமரத்தை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரும்பி நம்மையும் பார்க்கிற அந்த அழகுக்கு ஈரேழு பதினாலு லோகமும்கூடப் பெறுமானம் இல்லை!

வலம் நிறைவு செய்து, கொடிமரம் அடைகிறோம். சில படிகள் ஏறினால், விசாலமான ஒரு மண்டபம். சொல்லப் போனால், மூன்றாம் பிராகாரத்தின் தெற்கிலிருந்து வடக்குவரை அகன்று கிடக்கிறது இந்த மகா மண்டபம். மண்டபத்தின் அந்தந்தப் பகுதிகள், அங்கங்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கேற்ப பெயர் பெறுகின்றன.

மண்டபத்தின் தொடக்கத்தில் அதிகார நந்தி. மூலவர் சந்நிதி நோக்கிப் போகும் மையப் பாதையில், தூண்களுக்கு மேலே இரு புறமும் உற்சவ கால வண்ண ஓவியங்கள். ஏழூர் பெருவிழாவையும் ஆலயப் பெருவிழாவையும் சித்திரிக்கும் ஓவியங்கள்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
இரண்டாம் பிராகாரம் உட்புறம்

மண்டபத்தின் வடக்குப் பகுதியில் ஒரு மேடை. சுவாமி புறப்பாட்டு மேடை. இதுவே திருவோலக்க மண்டபம். உற்சவ காலத்தில், அலங்காரத்தோடு சுவாமி இங்குதான் தரிசனம் கொடுப்பாராம். நேர் எதிரே (மண்டபத்தின் தெற்குப் பக்கம்) திருவோலக்க வாயில். சுவாமி உலா புறப்பட்டுச் செல்லும் வழி. இந்த வாயிலுக்கு ஒரு பக்கத்தில் இன்னொரு சிறிய மேடை. இங்குதான் சைவ, ஆன்மிகச் சொற்பொழிவுகளும் திருமுறை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதலால், இதுவே பிரசங்க மண்டபம். வாயிலுக்கு இன்னொரு புறம் வாகனங்கள் வரிசையிட்டு நிற்கின்றன. இது வாகன மண்டபம். மகா மண்டபத்தில் உள்வாயிலுக்கு அருகில், வலப் பக்கத்தில் இருக்கும் பகுதியில் நிற்கிறோம்.

திருச்சந்நிதி. ஒரு பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள். நாள்தோறும் காலையில் இங்கு பூஜை உண்டு. சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்துக் கொள்வதாகக் கணக்கு. எப்படி?

பண்டைய காலத்தில் ஐயாறப்பரை இருபத்துநான்கு ஆதிசைவப் பெருமக்கள் பூஜித்து வந்தனர். இந்த ஆதிசைவப் பெருமக்கள் அனைவரும் தங்கள் முறை வரும்போது பூசை செய்வார்கள். இவர்களுள் ஒருவர் காசி யாத்திரை சென்றார். நெடுநாட்களாகியும் திரும்பி வரவில்லை. இதற்கிடையில், அவருக்குச் சொந்தமான காணி மற்றும் பல்வேறு சொத்துகளை மற்ற ஆதிசைவப் பெருமக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். காசிக்குப் போனவரின் மனைவியும் குழந்தைகளும் வேறு கதியின்றி ஐயாறப்பரிடம் முறையிட்டனர்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
இரண்டாம் பிராகாரம்

பார்த்தார் பரமசிவனார். வயோதிக வேடம் பூண்டார். காசிக்குப் போன ஆதிசைவர் கோலத்தில் இல்லம் புகுந்தார். இறைவனை அவர் பூஜிக்கும் முறை வந்தது. பூஜைகள் புரிந்து ஆலய மடத்தில் தங்கியிருந்தார். சென்றவர் வந்துவிட்டார் என்று எண்ணிய மற்றவர்கள், மெள்ள மெள்ள அவருடைய சொத்துகளிலிருந்து விலகினர். இந்த நிலையில் காசிக்குச் சென்றிருந்த வேதியர், வாடி உழன்று நிஜமாகவே ஊர் வந்து சேர்ந்தார்.

ஏற்கெனவேதான் திரும்பி வந்துவிட்டாரே! இவர் யார் புதிதாக? ஊர்க்காரர்களுக்குச் சந்தேகம். இப்போது வந்தவருக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கோ மொத்தமாகக் குழப்பம். யார் உண்மை?

ஊர் மன்றம் இரண்டு பேரையும் விசாரணைக்கு அழைத்தது. இரண்டு பேரும், தத்தமது ஆவணங்களைக் காட்டினர். கையெழுத்து ஒப்பீடும் நடந்தது. இரண்டாமவருடைய ஆவணங்களே உண்மை என்பதை ஊர் தெரிந்து கொண்டது. முன்னால் வந்த ஏமாற்றுக்காரன் யார்? அனைவரும் சுற்றித் தேடும்போதே _ ரிஷபாரூடராக, பரமேஸ்வரி பக்கத்தில் இருக்கக் காட்சி கொடுத்தார் பரமேஸ்வரர்.

சில நாள்கள் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியை ‘ஐயாறு அதனில் சைவனாகினாய்’ என்பார் மாணிக்கவாசகர். தன்னைத் தானே வழிபடுவதாகத்தான் இரண்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. உண்மை வேதியர் காசியிலிருந்து திரும்பி வந்தபோதும், வேஷக்கார வேதியர் திருவோலக்க மண்டபத்தில் ஐயாறப்பருக்குப் பூஜை செய்து கொண்டிருந்தாராம். அதனால் தினமும் அதே முறை தொடர்கிறது.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
சைவ நால்வர்

உள்வாயில் தாண்டி நுழைகிறோம். வாயிலின் ஒரு பக்கத்தில், மனைவியுடன் காட்சி தரும் நந்திகேஸ்வரர். சற்றே தள்ளி, சைவ சந்தானக் குரவர்கள் நால்வர். நேரே பார்க்க... அடடா! உள்ளே பஞ்சநதேஸ்வரர் தரிசனம் தருகிறார். நமக்கு இன்னும் இரண்டாம் பிராகார வலம் மீதமிருக்கிறதே! மூலவரை இங்கிருந்து வணங்கிக் கொண்டே, இரண்டாம் பிராகாரத்தில் வலம் தொடங்குகிறோம்.

மூலவர் சந்நிதிக்கு எதிரே இருக்கும் பகுதியைக் கடந்து வலத்தைத் தொடர்ந்தால், இரண்டாம் பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையை அடைந்து விடுகிறோம். இங்கு சோமாஸ்கந்தர் மண்டபம். சோமாஸ்கந்தருக்கான கிழக்கு நோக்கிய தனிக்கோயில். சோழர்கால கலை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மண்டபம். அடுத்து, சட்டநாதர் சந்நிதி. அதற்கும் அடுத்து பிராணதார்த்திஹரர் சந்நிதி.

இதை ஒட்டினாற்போல இருக்கிறது முக்தி மண்டபம். ஆதிவிநாயகரும் பஞ்சபூத லிங்கங்களும் சப்தமாதாக்களும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இதற்கு ஜப்பேச (செப்பேசர்) மண்டபம் என்றும் பெயருண்டு. நவக்கிரகங்களும்கூட இங்கு உள்ளனர். எல்லோரும் சூரியனைப் பார்த்தபடி இருக்கின்றனர். கோரதபசி எனும் முனிவர் இங்கு ஜபம் செய்து, ஸித்தி பெற்றார். எனவே, இது ஜப்பேச மண்டபம் ஆயிற்று என்று சொல்பவர்களும் உண்டு. அதனால் இந்த ஊர், ஜப்பியேச்வரம் என்று பெயர் பெற்றது (ஜெப்பேசன் என்கிற நந்திகேஸ்வரர் இங்கு ஜபம் செய்ததைக் கடந்த இதழில் பார்த்தோம்!).

தேவாரத் திருவுலா! - திருவையாறு
சோமாஸ்கந்தர்

இந்த ஜப்பேச முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வது மிகச் சிறப்பானது என்று தலபுராணம் குறிக்கிறது. உள் பிராகாரத்தின் கோஷ்டத்தில் இருக்கிறாரே தட்சிணாமூர்த்தி, அவருக்கு நேராக இந்த முக்தி மண்டபம், இரண்டாம் பிராகாரத்தில் அமைகிறது. இங்கு பஞ்சாட்சர ஜபம் செய்தால், ஒரு முறை ஜபிப்பது ஒரு லட்சம் மடங்கு பெருகுமாம். தேவேந்திரன் இங்கு அமர்ந்து, தட்சிணாமூர்த்தியை எண்ணி ஜபம் செய்தான். அப்போது அவனுக்கு அசுரர்களுடன் போரிடும் சக்தியை, சப்தமாதாக்களின் மூலமாக வழங்கினாராம் தென்முகக் கடவுள். அந்த நன்றியின் வெளிப்பாடாக தேவேந்திரனே இந்த மண்டபத்தில் சப்தமாதாக்களைப் பிரதிஷ்டை செய்தானாம்.

ஜெப்பேசனின் தந்தையான சிலாத முனிவர், அகத்தியர் ஆகியோர் இங்கு ஜபம் செய்தனர். மகாவிஷ்ணுவும் ஜபம் செய்தார். (மகாவிஷ்ணு திருவீழிமிழலைக்குப் போனார். அங்கு சிவனை வழிபட்டு, சிவனிடமிருந்து சக்ராயுதம் பெற்றார். அது சிவன், ஜலந்தராசுரனைப் பிளந்த சக்கரம். அதுவே சுதர்சனச் சக்கரமாக விஷ்ணுவிடம் உள்ளது. திருவீழிமிழலைக்குப் போகும் வழியில், திருவையாறு வந்த விஷ்ணு ஜப்பேச மண்டபத்தில் அமர்ந்து, எதிரில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டார். பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். இதனால், தட்சிணாமூர்த்தி ‘ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி’ ஆனார். விஷ்ணுவும் பஞ்சாட்சர சகஸ்ரநாமம் இயற்றினார்.)

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ நடராஜர்

ராமலிங்க வள்ளலார், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் போன்றோரும் இங்கு அமர்ந்து பல நாட்கள் ஜபம் செய்துள்ளனராம். தியாகய்யர் இங்கு அமர்ந்து தன்னுடைய பல கீர்த்தனங்களை இயற்றியதாகத் தெரிகிறது.

இரண்டாம் பிராகாரத்தை உள்ளூர்வாசி ஒருவர், ‘இது திருமாலப்பத்திப் பிராகாரம்’ என்றார். அப்படியென்றால்?

நம்மூர் கோயில் பிராகாரங்களில், நாம் வலம் வரும்போது நமக்கு இடப்புறம் மண்டபம் அல்லது மாளிகை போன்ற அமைப்புகளைப் பார்க்கிறோம், இல்லையா? இந்த மாதிரியான அமைப்புக்கு ‘திருமாளிகை திருச்சுற்று’ அல்லது ‘திருமாளிகைப்பத்தி’ என்று பெயர். காலப்போக்கில் இதுவே, ‘திருமாலப்பத்தி’ ஆகிவிட்டது.

இந்தப் பிராகாரத்தின் சுற்றமைப்பு சற்றே வித்தியாசமானது. வரிசையாக மாளிகை மாட அமைப்பில் இருக்கிறது. அதற்கு மேலேயும் இன்னொரு தளம். தரைத்தளம் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள். புராணக் கதையும் வரலாற்று நிகழ்வுகளும் பல நிறங்களில் காவியம் பேசுகின்றன. மேல்தளம் முழுக்க வனப்பு மிக்க சிற்பங்கள்.

பிராகாரத்தில் ஜப்பேச மண்டபத்துக்கு அருகில், மூன்று வட்டங்களுக்கு நடுவில் ஒரு பள்ளம். இதை நந்தியின் குளம்புத்தடம் என்று காட்டுகிறார்கள்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ தனுசு சுப்ரமணியர்-வள்ளி-தெய்வானை

சோழர்களில் சிறப்புற்று விளங்கிய கரிகாலர் இந்தப் பக்கம் வந்தபோது, அவருடைய தேர் தரைக்குள் புதைந்தது. தோண்டிப் பார்த்தால், சிவலிங்கமும் மற்ற மூர்த்தங்களும் கிடைத்தன. ஒரு முனிவரும் இருந்தார். அந்த நியமேச முனிவர் திருக்கோயிலைத் திருப்பணி செய்து கட்டும்படி கரிகாலரிடம் சொன்னார். திருப்பணிக்குப் பொருள்? அரசரிடம் பொருள் குறைந்தது. அரசரின் வருத்தம் போக்கிய முனிவர், எங்கு நந்தியின் குளம்புத்தடம் உள்ளதோ, அதன் அடியில் புதையல் கிடைக்கும் என்றார். பொன்னும் பொருளும் அங்கு ஏராளம் இருந்தன. அவ்வளவு ஏன், கோயில் கட்டுவதற்குத் தேவையான கருங்கற்களும்கூட அங்கு இருந்தனவாம். கோயிலை எடுப்பித்த கரிகாலர் கும்பாபிஷேகமும் செய்து, பற்பல உபயங்களும் செய்து வைத்தார். இப்படியரு செவிவழிக் கதை நிலவுகிறது.

மேற்குத் திருச்சுற்றில் ஸித்திவிநாயகர், சந்திரசேகரர், விசுவநாதர், பாலதண்டபாணி ஆகியோரின் சந்நிதிகள். அடுத்து சுப்ரமணியர்.

வித்தியாசமான சுப்ரமணியர். கையில் வில்லும் அம்பும் ஏந்தியவர். வள்ளி- தெய்வானை சமேதர். நின்ற திருக்கோலத்தவர். வேலவன் கோட்டம் என்கிற சந்நிதியில் கோயில் கொண்டு அருளும் இந்த தனுசு சுப்ரமணியரை அருணகிரியார் பாடுகிறார்:

சிகர பூதர நீறு செய்வேலவ
திமிர மோகர வீர திவாகர
திருவையாறுறை தேவக்ருபாகரப் பெருமானே!’

என்று திருப்புகழைப் பாடித் துதிக்க ராமாவதார காலத்தில் ஒரு சம்பவம். ராமர் அயோத்தியில் போய் ஆட்சியை ஸ்தாபித்துவிட, சிருங்கிபேரபுரத் தில் (குகனுடைய ஊர்), குகனுக்குப் பிரிவாற்றாமை தாங்கவில்லை. ராமரைக் காண வேண்டும் என்று முருகரிடம் குகன் பிரார்த்திக்க... முருகர் கோதண்ட பிரானாகவும், வள்ளி சீதையாகவும், தெய்வயானை லட்சுமணராகவும் காட்சி கொடுத்தனராம். வில்லேந்தி நிற்கும் சுப்ரமணியரின் சிரிப்பில் சொக்கிப் போய் வலம் தொடர... செல்வ விநாயகர் தரிசனம் தருகிறார்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ லட்சுமி-ஸ்ரீ சரஸ்வதி

அடுத்து இருப்பவர் அழகு கொஞ்சும் ஆவுடை விநாயகர். ஆவுடையார் மீது வீற்றிருக்கும் விநாயகர். காசி விஸ்வநாதரையும் வணங்கி வழிபட்டு, வடக்குச் சுற்றில் திரும்பினால், இன்னுமொரு திவ்விய தரி சனம். துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளியிருக்கும் சந்நிதி. கல்வியும் செல்வமும் வீரமும் ஒருங்கே பெற மூவரையும் தொழுது திரும்ப... எதிரில் தீர்த்தக் கிணறு. இதன் தண் ணீரை தினமும்

தேவாரத் திருவுலா! - திருவையாறு
நந்தி குளம்புத் தடம்

பக்தியோடு பருகித் தலையிலும் தெளித்துக் கொண்டால், குடும்ப ஒற்றுமை தழைக்குமாம். விஷ்ணு துர்க்கையை வழிபட்டுத் தொடர்ந்தால் தனி மண்டபத்தில் இருக்கும் சண்டேஸ்வரரை தரிசிக்கலாம்.

தாண்டி வந்தால், அகப்பேய்ச் சித்தருக்கு ஒரு சந்நிதி! ஜ்வர ஹரேஸ்வரருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. தொடர்ந்து நடராஜர் மண்டபத்தில் நடராஜர், கால பைரவர், அஷ்ட பைரவர். சப்தஸ்தான சிவ லிங்கங்கள்.

இரண்டாம் பிராகாரம் வலம் வந்து சந்நிதி வாயிலில் நிற்கிறோம். துவார விநாயகரையும் துவார முருகரையும் தரிசித்துவிட்டு உள்ளே செல்ல... முக மண்டபம், அர்த்த மண்டபமும் தாண்டி... உள்ளே... ‘மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வாயிரமன்னி ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் - செல்வாய செல்வம் தரும் திருவையாறு அகலாத செம்பொற்சோதி!’

மூலவர் பஞ்சநதேஸ்வரர். சுயம்புமூர்த்தி. கிழக்கு நோக்கிய சிவலிங்கத் திருமேனி. பரவசம் தரும் ப்ருத்வி (மண்-பூமி) லிங்கம். ப்ருத்விலிங்கம் என்பதால், இவருக்கு (லிங்க பாணத் துக்கு) அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம். கூம்பிய பாணம் கொண்ட தீண்டாத் திருமேனி. பாணத்துக்குப் புனுகுச் சட்டம் சார்த்தப்படும்.

ஐயாற்றீஸ்வரர், செம்பொற்சோதி, ஜெப்பேசர், கயிலாயநாதர், பிராணதார்த்திஹரர், மகாதேவ பண்டாரகர், பஞ்சநதேஸ்வரர் என்று திருநாமங்கள் கொண்ட இவருக்குக் கவசம் அணி விக்கப்பட்டிருக்கிறது. பெரிய கவசத்தில் பசுவின் உருவமும் அதன்மீது திரிசூல வடிவமும் உள்ளன. எனவே, இவருக்கு ‘திரிசூலி’ என்றும் ஒரு திருநாமம் உண்டு. அழகெல்லாம் ஒன்றிணைந்த ஐயாறப்பரின் அருள் தரிசனம் நெஞ்சமெல்லாம் நிறைகிறது. உடலும் உள்ளமும் குளிர ஐயாறனைப் பணிகிறோம்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி

மூலவர் சந்நிதி விட்டு வெளி வந்தால்... ஆமாம்! இன்னும் உள் பிராகாரத்தை வலம் வரவில்லையே!

ஐயாறப்பரின் உள் பிராகாரத்தை வலம் வர இயலாது. இந்தப் பிராகாரத்துக்கு தட்சிணாமூர்த்திப் பிராகாரம் என்று பெயர். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி யாக விளங்குகிறார். ஐயாறப்பரோ, ஜடாபாரத்தோடு (சடை முடி) இருப்பதாக ஐதீகம். எனவே, இந்தப் பிராகாரத்தில் நுழைந்து வலம் வருதல் கூடாது, ஜடா பாரத்தைத் தாண்டக் கூடாது என்பது இந்த ஊர் மரபு. கூடவே, மகாலட்சுமியும் இங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தவத்தையும் கலைக்கலாகாது.

ஐயாறப்பர் கோயிலின் தட்சிணா மூர்த்தி, ஞான ரூபத்தின் அருள் வெளிப்பாடாகத் திகழ்பவர். நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் கபாலம்; இடது மேல் கரத்தில் சூலம்; வலது கீழ்க்கரத்தில் அபய ஹஸ்தம்; இடது கீழ்க்கரத்தில் சிவஞான நூல். பாதத்தின் அடியில் ஆமை. தியானத்துக்கும் ஞானத்துக்கும் புலனடக்கம் இன்றியமையாதது என்பதைச் சொல்லாமல் சொல்லும் மௌன குரு!

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

சிவலிங்கத் திருமேனிக்கும் ஓர் ஐதீகம் உண்டு. சிவபெருமான், எல்லாத் திசைகளிலும் தன் முகம் திருப்பிப் பார்க்கிறார் என்பது கருத்து. ஆனால், இங்கே, சுயம்பு மூர்த்தியாக அவர் எழுந்தருளியபோது, மாடுகள் அவரைச் சுற்றி ஓடினவாம். கால்களால் அவர் சிரசில் இடறினவாம். இதனால் அவர் திருமேனி திசைமாறி அமைந்துவிட, ஒரு முகம் மட்டுமே கொண்டவராக அவர் எழுந்தருளி உள்ளார். சிரசில் இருந்து ஜடாபாரம் பிரிந்து விரிந்து கிடக்கிறதாம். அந்த ஜடாபாரத்தைத் தாண்டக் கூடாது என்றுதான் உள் பிராகார வலம் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தள்ளி நின்று தட்சிணாமூர்த்தியை மானசீகமாக வணங்கியபடியே பிராகாரத்தை விட்டு வெளியே வருகிறோம். இப்படியே இரண்டாம் பிராகாரத்துக்குச் செல்லும் வழி உண்டு. அங்கு சந்தானக் குரவர்கள் நால்வருக்குமான சந்நிதி இருக்கிறது. திரும்பி அப்படியே வெளியே வந்து, உள் கோபுரம் தாண்டி வருகிறோம். ஒரு பக்கம் மயில் மண்டபம். அதற்கு எதிர்ப்புறம் நூற்றுக்கால் மண்டபம். சற்றே உயரமாக அமைந்துள்ள இதனில் ஞான தண்டாயுதபாணியின் கோயில் உள்ளது. வணங்கி மண்டபம் விட்டு வெளி வந்து, வடக்கு முகமாக நடைபோட... அருள்மிகு அறம் வளர்த்த நாயகி கோயில்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
பஞ்சபூத லிங்கம்

அம்பாள் கோயிலுக்கு நேரடியாக வரும் வண்ணம் தனிக் கோபுரமும் தனி வாயிலும் உள்ளன. கிழக்குப் பார்த்த கோயில். ஒரு பக்கம் அலங்கார (உற்சவ) மண்டபம்; மற்றொரு புறம் நவராத்திரி மண்டபம். கொடிமரம். பலிபீடம். நந்தி தாண்டி உள்ளே போனால் பிராகாரம். விசாலமான பிராகாரத்தில் அழகான துண்கள். கொஞ்சும் சிற்பங்கள். வலம் வரும்போது, உற்சவ திரிபுரசுந்தரி அம்பாளையும் சரபேஸ்வரரையும் சூரியனையும் விநாயகரையும் முருகரையும் தொழுது பணிந்து, அம்பாள் மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம்.

அம்பாள் சந்நிதியிலும் முக மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகள் உள்ளன. கருவறையுள் நின்ற திருக்கோலத்தில் அன்னை தர்ம ஸம்வர்த்தனி. அறம் வளர்த்த நாயகி. திரிபுர சுந்தரி. தருமாம்பிகை.

அம்பாள் இங்கே விஷ்ணு ஸ்வரூபினி. நான்கு திருக்கரங்கள். மேல் கரங்களில் சங்கு, சக்கரம். வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தம். இடக் கீழ்க்கரம் தொடையைத் தொட்டு ஊன்றியபடி... மஹாவிஷ்ணு ஊன்றியிருப்பாரே, அதேபோல! ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்பார் அப்பர் பெருமான்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
ஸ்ரீ ஜ்வர ஹரேஸ்வரர்

கருணை பொழியும் அம்பாளின் வதனத்தைக் கண்ணார தரிசிக்கிறோம். ‘நன்னு கன்ன தல்லி நாபாக்கியமா நாராயணி தர்மாம்பிகே’ என்று தியாகய்யர் உருகினாரே... அந்த அம்பாளிடத்தில் மனமுருகிப் பிரார்த்தித்தால் கேட்பதை நடத்திக் கொடுப்பாள்.

அம்பாள், விஷ்ணு ஸ்வரூபம் என்பதால், வித்தியாசமான ஒரு சம்பிரதாயத்தையும் இங்கு காணலாம். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகாலட்சுமி வந்து தர்மஸம்வர்த்தனி சந்நிதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். விஷ்ணுவைச் சந்திக்க லட்சுமி வருகிறாராம். அம்பிகையைத் தொழுது வெளியில் வருகிறோம்.

நீரில் நின்று தவம் செய்த ஜெப்பேசனுக்கு இறையனார் நீர் அபிஷேகம் செய்து, அவரை நந்திகேஸ்வரர் ஆக்கினார்; சிவகணங்களுக்குத் தலைவராக்கினார். திருக்கயிலாயத்தின் முதல் திருவாயிலைக் காத்தருளும் பணியையும் தந்தார். இறையனாரே, அவருக்குப் பஞ்சாட்சர உபதேசமும் செய்து வைத்தார். காவல் தலைமையால் அதிகார நந்தி என்றும் இறையுபதேசம் பெற்றதால் சைவ ஆசாரியர்களுள் முதல் குரு என்றும் ஜெப்பேசன் பெருமை பெறுகிறார்.

சொந்த மகன் போல இவ்வளவு செய்தாரே இறையனார், மகனுக்கு மணம் முடிக்க வேண்டாமா? அதையும் செய்து வைத்தார். அம்மையும் அப்பனும் மகனுக்குப் பெண் தேடினார்கள். நல்ல பெண் கிடைத்தாள். வியாக்ரபாதரின் புத்திரியும் உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம்பிரகாசையைப் பெண் கேட்டு, பங்குனி மாதப் புனர்பூச நட்சத்திரத்தன்று திருமழபாடியில் வைத்துத் திருமணம் நடத்தினார்கள். திருமண வைபவமும் அதைத் தொடரும் நன்றியறிவிப்பு விழாவும் திருவையாறில் பிரசித்தம்.

தேவாரத் திருவுலா! - திருவையாறு
காவிரி படித்துறை

கல்யாணத்துக்குப் பொருள்கள் வேண்டாமா? மகன் திருமணம் குறித்து பக்கத்து ஊர் பிரான்களுக்குச் செய்தி சொன்னார் போலிருக்கிறது. கொண்டு வந்து கொட்டி விட்டார்கள். மலர்கள் கூடை கூடையாக கொடுத்த ஊர், திருப்பூந்துருத்தி ஆனது. பழங்கள் கொடுத்த ஊர், திருப்பழனம் என ஆனது. நெய்யும் பாலும் கொடுத்தது, திருநெய்த்தானம் ஆனது. சோறு கொடுத்த ஊர், திருச்சோற்றுத்துறை. அணிகலன்கள், ஆபரணங்கள்? அவை தந்த ஊர் கண்டியூர். வேதியர்கள் வந்து நின்றார்கள் திருவேதிக்குடியிலிருந்து.

குடும்பத்தோடு மழபாடிக்கு எழுந்தருளிய ஐயாறப்பர், மகன் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார். பின்னர் சித்திரை மாதத்தில் இந்த ஏழூர்களுக்கும் புது மாப்பிள்ளையையும் பெண்ணையும் அழைத்துப் போய் அங்குள்ள ஈசர்களிடம் அறிமுகப்படுத்தி, ஆசீர்வாதம் பெற்று அழைத்து வந்தார்கள். திருமண விழாவின் தொடர்ச்சியாக சித்திரையில் நடைபெறும் விழாவே ஏழூர்ப் பெருவிழா. சித்திரை மாதம், ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதனுடைய நிறைவு நாளில், அதாவது, பௌர்ணமிக்கு அடுத்த நாளில் காலையில் புறப்படுவார்கள். நந்தியும் சுயம்பிரகாசையும் (சுயாம்பிகை என்றும் அழைக்கலாம்.) ஒரு வெட்டிவேர் பல்லக்கில் வருவார்கள். பின்னாலேயே ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கில் வருவார்கள். காலை ஆறு மணி சுமாருக்குப் புறப்பட்டு, வரிசையாகத் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) என்று போவார்கள்.

ஒவ்வோர் ஊரிலும் அந்தந்த ஊர் பெருமானும் பெருமாட்டியும் ஐயாறப்பரையும் அம்மையையும் ஊர் எல்லையிலேயே காத்திருந்து, எதிர்கொண்டு அழைத்து, உபசரித்து, பின்னர் தாங்களும் தங்களுடைய பல்லக்கில் புறப்படுகிறார்கள். கூடவே, அடுத்த ஊருக்கும் அதைத் தொடர்ந்தும் வருகிறார்கள்.

கடைசி ஊரான திருநெய்த்தானத்திலிருந்து, எல்லா பல்லக்குகளும் சேர்ந்து மறு நாள் மதிய வேளைக்குத் திருவையாறு வரும். விடிய விடிய நடைபெறும் இந்த வைபவம்.

ஐயாறப்பர் கோயிலுக்கு வந்த பின்னர், பூஜைகள் முடிந்து, மண்டபத்தில் சிறிது நேரம் தங்கிவிட்டு அந்தந்த ஊர் பல்லக்குகள் அந்தந்த ஊருக்குத் திரும்பும். அந்தப் பகுதியின் கலாசார விழாவாக மட்டுமின்றி, மக்கள் கூடும் குடும்ப விழாவாகவும் சப்தஸ்தானத் திருவிழா நடைபெறுகிறது.

(இன்னும் வரும்)
படங்கள்: இரா.ரவிவர்மன்

பூலோக கயிலாயம்!

தி ருவையாறு திருத்தலத்துக்கு பூலோக கயிலாயம் என்று பெயர். அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி காட்டுவதற்கு முன்னரே இந்தப் பெருமை திருவையாற்றுக்கு வந்துவிட்டது.

அஸ்தினாபுர மன்னர் சுரதருக்குக் குழந்தைகள் இல்லை. கயிலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி கூறப்பட்டது. எவ்வாறு கயிலை செல்வது என்று யோசித்தபடியே தீர்த்த யாத்திரை புறப்பட்ட மன்னர், துர்வாசரைக் காண திருவையாறு வந்தார். துர்வாசரிடம் கயிலைப் பாதையைக் கேட்க, துர்வாசர் சிவனாரிடம் முறையிட்டார். மெய்யன்பர்களுக்கு உதவும்பொருட்டு, கயிலையை இந்தத் தலத்துக்கே எடுத்து வரும்படி ரிஷபதேவருக்கு உத்தரவிட்டார் சிவனார்.

திருக்கயிலையைத் தூக்கி வந்த ரிஷபதேவர், மலையை இரண்டாகப் பிளந்து, ஐயாறப்பருக்குத் தென்புறம் ஒரு பகுதியையும் வடபுறம் மற்றொரு பகுதியையும் வைத்தார். இந்த ரகசியம் தெரிந்த சோழ மாதரசிகள் வடகயிலாயமும் தென்கயிலாயமும் எடுப்பித்தனர்.

காவிரிக்குக் கல்யாணம்!

ந்திக்கு மட்டுமா திருமணம் செய்து வைத்தார் ஐயாறப்பர். காவிரிக்கும் இங்கு கல்யாணம் நடந்தது.

சமுத்திரராஜன் காவிரியை மணம்புரிய விரும்பினான். அகத்தியரிடம் கூற, அகத்தியர் காவிரிப் பெண்ணை அழைத்து வரச் செய்தார். பஞ்சநதம் வந்த அந்தப் பெண், அங்கிருந்து நகர மாட்டேன் என்று அடம் பிடித்தாள். திருமணத்துக்குக் காவிரியைச் சம்மதிக்க வைக்க அவளிடம் பேசினார் ஐயாறப்பர். தான் போகும் வழியெல்லாம் மக்களின் பாவம் நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்தாள் காவிரி. அதை ஏற்றுக் கொண்ட ஐயாறப்பர், அவளைத் திருவெண்காட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அறம் வளர்த்த நாயகியும் அகத்தியரும் உடன் சென்று, அங்கு சமுத்திரராஜனுக்கும் காவிரிக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தார்கள்.

காவிரிக்குப் பிரியமான பஞ்சநதம் வந்த சமுத்திரராஜன், தன் ஒரு பாகத்தை இங்கு வைத்துக் காவிரியுடன் கலந்திருக்கிறார். எனவே, இந்தத் தலத்தின் தீர்த்தங்களில், சமுத்திரத் தீர்த்தமும் இருப்பதாக ஐதீகம்!