Published:Updated:

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!

கோவிந்தா...கோவிந்தா
வைகுண்ட ஏகாதசி வந்த கதை!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- குமாரவாடி ராமானுஜாசாரியார்

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!

வை குண்ட ஏகாதசி _ நம்மாழ்வார் பரமபதம் அடைந்த திரு நாளாகும்.

வைணவத்தின் தலைநகர் _ திருவரங்கம் பெரிய கோயில். இங்கு ஆண்டுதோறும் இருபது நாட்கள் ‘அத்யயன உற்சவம்’ நடை பெறுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை செவிமடுக்கவே திருமங்கை ஆழ்வாரால் இந்த அத்யயன உற்சவம் ஏற்படுத்தப்பட்டது.

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வார், ஆழ்வார்களுள் தலைவராக விளங்கினார். நம்மாழ்வாரது நான்கு மறை நூல்களுக்கு ஆறு அங்கமாக, தமிழில் ஆறு நூல்களை இயற்றி வேத-வேதாங்க நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தினார் திருமங்கையாழ்வார்.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன் வேதப் பயிற்சிக்கு ‘அத்யயன காலம்’ என்றும் ஓய்வு காலத்துக்கு ‘அநத்யாயன காலம்’ என்றும் வடமொழியில் வழங்கி வந்துள்ளனர். வேத நெறியையட்டி தென்மொழி மறைவாணர்களும் வேதப்பயிற்சி, விடுமுறை (ஓய்வு கால) வழக்கங்களைப் பின்பற்றலாயினர்.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னர் திருவரங்கம் பெரிய கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று வடமொழியில் மறைகளை செவிமடுத்து, பரமபத வாயில் திறப்பு விழாவை நடத்தி வந்ததாகவும் நாளடைவில் அந்த வழக்கம் நலிவுற்றதாகவும், அதை ஈடு செய்ய தமிழ் வேதங்களை அரங்கன் செவிமடுக்க... இப்போதைய ‘அரையர் சேவை’ ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

திருமங்கை மன்னன் காலத்துக்குப் பின் இந்த அத்யயனத் திருவிழா வழக்கொழிந்து போனது; நாலாயிரமும் இடைக் காலத்தில் மறைந்து போனது. பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவிலில் தோன்றிய நாதமுனிகள் பெரும் தவமியற்றி, யோக நெறியில் நின்று நம்மாழ்வாரிடமிருந்து மறைந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பெற்று, பாடல்களுக்கு இசையமைத்து, தாளம் வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாடெங்கும் பரவச் செய்தார். வைணவர்கள் அறிய வேண்டிய முக்கிய மந்திரங்களை மனதில் கொண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தை முறைப்படுத்தி, தொகுத்து அளித்தார்.

நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இவருக்கு ஐந்து சிஷ்யர்கள். அவர்களில் ஒப்பற்ற சிஷ்யராகவும், உலகப் புகழ்பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜரோடு இணைந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்கனோடு இணைந்து அனுபவிக்கும் வகையில் இந்த ‘அத்யயன’ உற்சவத்தை திருவரங்கத்தில் மீண்டும் அமைத்தனர். அப்போது திருமங்கையாழ்வாரை நினைவுகூர்ந்து சிறப்பிக்க அவரது திருநெடுந்தாண்டகத்தை முதன்மைப்படுத்தினர்.

வைகுண்ட ஏகாதசி வந்த கதை!
வைகுண்ட ஏகாதசி வந்த கதை!

திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ் வார் திருவாய்மொழிப் பாடல் களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் மட்டுமே விழா எடுத்தனர். அதற்காக திருமங்கையாழ்வார் நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து விழா கொண்டாடினார்.

பின்னர் திருவரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்தனர்.

திருவிழாவின்போது அவர்களது பாடல்களை ‘அரையர் சேவை’யாக நடத்தினர். ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகரைக் குறிக்கும். ‘அத்யயன உற்சவம்’ என்பது ‘முத்தமிழ் விழா’ என்றால் மிகையல்ல.

இப்போது - திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப் பத்து எனவும் கொண்டாடப்படுகிறது.

பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக அமைகிறது. ‘வைகுண்ட ஏகாதசி’ தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி ஓதி இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சியை, நிகழ்த்திக் காட்டுவர். ஆக, திருவரங்கத்தில் திவ்வியப் பிரபந்த அத்யயனத் திருவிழாவின் நடுநாயக நாளாக அமைவதே வைகுண்ட ஏகாதசி எனலாம்.

தாம் வைகுந்தம் புகுந்த செய்தியை ‘சூழ்விசும்பணி முகில்’ எனும் பதிகத்தில் -

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்த தமர் என்று எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

என்று ‘திருவாய்மொழி’யாக்கி உள்ளார். ஆகவே, அதற்கு அடிப்படையான ஏகாதசி நாளை, உலகம் வைகுந்த ஏகாதசியாகக் கொண்டாடுகிறது.

அந்நியர் படையெடுப்புக் காலத்தில் திருப்பதியிலும், யாரும் அறியா வண்ணம் பத்து ஆண்டு காலம் இருந்திருக்கிறார் திருவரங்கன். அந்த வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு திருப்பதியிலும் அத்யயன உற் சவம் நடத்தப்படுகிறது. ஸ்ரீவைணவத் தலங்கள் அனைத்திலுமே அத்யயன உற்சவமும், ஸ்ரீவைகுண்ட ஏகாதசித் திருநாளும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்பெறுகிறது.