Published:Updated:

சேந்தனார் அளித்த களி உணவு!

சேந்தனார் அளித்த களி உணவு!

கட்டுரை
சேந்தனார் அளித்த களி உணவு!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

சேந்தனார் அளித்த களி உணவு!

த்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி. சோழ மன்னர் கண்டராதித்தர் சிவபூஜை செய்துகொண்டிருந்தார். தீபாராதனை முடிந்ததும் அருகிலிருக்கும் தன் அரசி செம்பியன் மாதேவியை அழைத்தார்.

‘‘தேவி! பூஜையின் நிறைவில் தினமும் ஒலிக்கும் தில்லைச் சிற்றம்பலவனின் திருப்பாதச் சலங்கை ஒலி இன்று ஏன் கேட்கவில்லை? வழிபாட்டில் ஏதாவது குறை ஏற்பட்டுள்ளதோ என்று என் சிந்தை கலங்குகிறது!’’

‘‘வருந்தாதீர்கள் சுவாமி! வழிபாட்டிலோ, தில்லை அம்பலவன் மீது தாங்கள் கொண்டுள்ள பக்தியிலோ எந்தக் குறையும் இல்லை. இன்று ஒலிக்காவிட்டால் என்ன... நாளை நிச்சயம் கேட்கும்! கவலை வேண்டாம்.’’

‘‘அப்படியில்லை தேவி! இன்று ஏதோ நடந்துள்ளதாக என் மனம் சொல்கிறது!’’

கண்டராதித்த சோழர் அன்றிரவு உணவு கொள்ளாமல் உறக்கமும் வராத நிலையில் வேதனைப்பட்டார். அப்போது அசரீரி ஒன்று கேட்கிறது: ‘‘சிவஞானச் செல்வரே... வருந்த வேண்டாம்! இன்று சேந்தனது இல்லத்தில் களி உண்ணச் சென்றிருந்தோம். எனவே, உமது வழிபாட்டில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் சேந்தனை நீ காண்பாய்!’’

சேந்தனார் அளித்த களி உணவு!

‘ஆஹா... ஆஹா... என்ன அற்புதம்! சேந்தன் இல்லத்தில் களி உண்ணச் சென்றாரோ எம் இறைவன். சேந்தனது அன்பே தூய அன்பு. அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனான சேந்தனை இப்போதே கண்டு வணங்க வேண்டும்! ம்... ம்... இந்த நள்ளிரவில் எங்கு சென்று அவரைத் தேடுவது? யார் இந்த சேந்தன்? பொழுது விடியும்வரை காத்திருக்க வேண்டுமே... என் செய்வது?’

சேந்தனார் அளித்த களி உணவு!

தில்லை வனத்தில் பரம ஏழையாக வாழ்ந்து வந்தார் சேந்தன். இரண்டு நாட்களாகப் பெய்த மழையில் விறகு விற்கச் செல்ல முடியாமல், உணவுக்கு வழியில்லாதிருந்த அவர் வீட்டுக்கு வறியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னமிட்டுப் பிறகு உண்ணும் வழக்கம் கொண்டிருந்தவர் சேந்தனார். வறியவரைக் கண்டதும் என்ன செய்வதென்று வருந்திய அவர் மனைவி, இருந்த சிறிதளவு அரிசி நொய்யில் களி தயாரித்து, கொல்லையில் இருந்த கீரையால் குழம்பு தயாரித்து, அந்த வறியவருக்கு அளித்தார். அவரும் திருப்தியாக உண்டு, மீதிக் களியைத் தனது ஆடையில் கட்டிக் கொண்டு கிளம்பினார்.

மறு நாள் காலையில் சிதம்பரம் கோயிலில் நடராஜரின் கனகசபையைத் திறந்த தீட்சிதர்கள், நடராஜப் பெருமான் திருமேனியிலும், ஆடையிலும் களி உணவு சிந்தியிருக்கக் கண்டு, ‘ஏதோ அபசாரம் நடந்து விட்டது!’ என்று பயந்தார்கள்.

தில்லையம்பலவன் தேர்த்திருவிழாவைக் கண்டுகளிக்க சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த சோழ மன்னர் கண்டராதித்தரிடம், நடராஜர் சந்நிதியில் களி சிந்தியிருந்த விவரத்தை தில்லை தீட்சிதர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட மன்னன், ‘‘ஆஹா... களி உண்ட களிப்பின் அழகை கனகசபையிலும் காட்டி விட்டான் அந்த ஆடல் வல்லான்!’’ என்று பேரானந்தம் அடைந்தார். முதல் நாள் இரவு அசரீரியாக ஒலித்ததை தீட்சிதர்களிடம் கூறினார். ‘சேந்தனைக் காண வேண்டும்!’ என்ற ஆவல் அரசனுக்கு மேலும் அதிகரித்தது.

அன்று தில்லை அம்பலவன் திருத்தேர் புறப்பட்டு வீதியில் வரும்போது ஓரிடத்தில் சக்கரம் பூமியில் இறங்கியது. யானை, குதிரைப் படைகளின் உதவியுடன் பள்ளத்தில் இருந்து தேரை மேலே கொண்டு வர முயன்றனர். ஆனால், தேர் அசைந்து கொடுக்கவில்லை. செய்வதறியாமல் அனைவரும் திகைத்தபோது வானில் இருந்து ஓர் ஒலி கேட்டது: ‘‘சேந்தா! தேர் நடக்கப் பல்லாண்டு பாடு!’’

தேரை இழுக்கும் கூட்டத்துள் ஒருவராக நின்றிருந்த சேந்தனார், மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் என்று தொடங்கி திருப்பல்லாண்டு பாடல்களைப் பாடினார். மீண்டும் மக்கள் தேரை இழுக்க, வீதியில் தேர் வலம் வந்தது. அனைவரும் சேந்தனாரைப் பார்த்து வியந்து போற்றினர். கண்டராதித்த சோழர் சேந்தனாரைக் கட்டித் தழுவினார்.

‘‘அவிழ்ந்த சடை இறையனார்க்குக் களி அமுது ஊட்டிய அன்பிற் சிறந்த சேந்தனார் அவர்களே! உங்கள் அன்புக்கு முன் நான் எம்மாத்திரம்?!’’ என்றார்.

சேந்தனார் அளித்த களி உணவு!

‘‘அரசே! தங்கள் தகப்பனார் பராந்தக சோழர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந் தார். தாங்களோ, தில்லைச் சிற்றம்பலவன் திருப் பாதச் சலங்கை ஒலியைத் தினமும் கேட்கும் சிவ ஞானச் சிகாமணியாயிற்றே!’’ என்று அவரைப் பாராட்டினார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் மிகப் பெரிய வணிகராக விளங்கிய திருவெண்காடர் என்பவரின் தலைமைக் கணக்கர் இந்த சேந்தனார். தம் புதல்வர் மருதவாணரால் காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே என்று உலகின் நிலையாமையை உணர்த்தப் பெற்றார் திருவெண்காடர். துறவு மேற்கொண்ட அவரை ‘பட்டினத்தார்’ என்று மக்கள் அழைக்கலாயினர். தம் சொத்துகள் அனைத்தையுமே பொதுமக்கள் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்குமாறு தம் கணக்கர் சேந்தனாரிடம் தெரிவித்தார். அவ்வாறே சேந்தனாரும் பறை அறிவித்தார். ‘அரசாங்க அனுமதி இல்லாமல் அவ்வாறு செய்வது குற்றம்!’ என்று கூறி சேந்தனாரைக் கைது செய்து சிறை யில் அடைத்து, அவரது சொத்துகளையும் பறிமுதல் செய்ய ஆணையிட்டார் அமைச்சர். சேந்தனார் அடைந்த துன்பத்தை பட்டினத்தாரிடம் பொதுமக்கள் அறிவித்தனர். அவர் திருவெண்காட்டு எம்பெருமானிடம் வேண்டி அவனருளால் சேந்தனாரின் கைவிலங்கு முறிந்ததுடன் சிறையிலிருந்து விடுதலையும் பெற்றார்.

தம் குருநாதர் பட்டினத்தாரின் ஆணைப்படி தில்லையின் எல்லையில் வசித்து வந்த சேந்தனாரது வீட்டுக்கு நடராஜப் பெருமான் வறியராக வந்து, களி உண்டு, அவரது சிவ பக்தியை உலகம் அறியும்படி செய்தார். திருவீழி மிழலை, திருவாவடுதுறை ஆகிய தலங்களில் சிவபெருமானைத் திருவிசைப்பாவால் பாடித் துதித்த சேந்தனார், திருவிடைக்கழி வந்தார். அங்கு குரா மரத்தின் நிழலில் விளங்கும் சுப்ரமண்யப் பெருமானை திருவிசைப்பாவில் பாடி, திருமடம் அமைத்து வாழ்ந்து வரும்போது ஒரு தைப்பூச நன்னாளில் சோமாஸ்கந்த மூர்த்தியாக இறைவ னின் திருவருட்காட்சியுடன் சிவனருளில் கலந் தார்.

பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திரு முறையில் சேந்தனார் பாடிய திருவிசைப்பா, திருப் பல்லாண்டு ஆகியவை சேர்க்கப் பெற்றுள்ளன. திருக்கோயில்களில் பஞ்ச புராணம் பாடும்போது மூவர் தேவாரமான 8,250 பாடல்களில் ஒரு பாடலும், சேந்தனாரின் திருப்பல்லாண்டு 13 பாடல்களில் ஒன்றும் பாடப்படுவதிலிருந்து திருப் பல்லாண்டின் பெருமையை உணரலாம்.

சேந்தனார் வீட்டில் நடராஜப் பெருமான் களி உண்டு மகிழ்ந்ததைக் கொண்டாடவே மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் நமது இல்லத்தில் களி நிவேதனம் செய்து, உண்டு மகிழ்கிறோம்.

படங்கள்: ப்ரீத்தி கார்த்திக், விபா