Published:Updated:

இங்கே நிம்மதி!

இங்கே நிம்மதி!

அன்பு... அரவணைப்பு
இங்கே நிம்மதி!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- மாதா அமிர்தானந்தமயிதேவி

இங்கே நிம்மதி!

டர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், ‘‘மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?’’ என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார்.

காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது. ‘எப்படியும் இந்த வழியாகத்தானே வந்தாக வேண்டும்... பார்த்துக் கொள்ளலாம்!’ எனக் காத் திருந்தார் துறவி.

சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனைத் தன் தோளில் சுமந்தபடி அந்த ஆசாமி வந்தார். அவரை வழிமறித்த துறவி, ‘‘ஆ... ஊவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து என் தியானத்தைக் கலைத்து விட்டீர்களே!’’ என்று கோபத்தோடு கேட்டார்.

அவர் பயந்து நடுங்கி விட்டார். பணிவுடன் துறவியைக் கும்பிட்டு, ‘‘மன்னியுங்கள் சுவாமி! தாங்கள் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை’’ என்றார்.

இங்கே நிம்மதி!

ஆனாலும், துறவி சமாதானமாகவில்லை. ‘‘என்ன? உனக்குக் கண் தெரியாதா?’’ என்று மீண் டும் கோபத்தில் பொங்கியபடி கேட்டார்.

அந்த மனிதர் நிதானமாக, ‘‘இல்லை சுவாமி! என் மகன் மாலையில் தன் நண்பர்களோடு விளையாட காட்டுப் பக்கம் வந்தான். அவனுடன் வந்த எல்லோரும் திரும்பி விட்டார்கள். அவன் மட்டும் வரவில்லை. ஏதாவது குளத்தில் விழுந்திருப்பானோ... கொடிய விலங்குகளிடம் மாட் டிக் கொண்டிருப்பானோ என்ற பயத்தில் அவனைத் தேடி ஓடினேன். என் நினைப்பெல்லாம் அவன் மீதே இருந்ததால், நான் உங்களைக் கவனிக்கவில்லை!’’ என்று சொல்லி மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டார்.

ஆனாலும் துறவி விடுவதாக இல்லை. ‘‘என்ன காரணமாக இருந்தாலும் சரி... இறைவனை நினைத்து மனமுருக தியானத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு நீங்கள் தொல்லை கொடுத்தது தவறு!’’ என்றார்.

அந்த கிராமத்து ஆசாமி இப்போது துறவியைப் பார்த்தார். பின், ஆரம்பித்தார்: ‘‘தியானத்தில் மூழ்கியிருந்த உங்களுக்கு நான் ஓடியது, கத்தியது எல்லாமே தெரிந்தது. அதனால் உங்கள் தியானம் கலைந்தது என்கிறீர்கள். ஆனால், மகனைத் தேடி ஓடிய நான் கண்முன்னே இருந்த உங்களைக் கவனிக்கவில்லை. எனக்கு என் மகன் மீது பற்று இருந்தது. அதனால் வேறு எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. சாதாரணச் சத்தங்களே உங்கள் மாபெரும் தியானத்தைக் கலைத்து விட்டது என்றால், என் குழந்தையிடம் எனக்குள்ள பற்றுகூட உங்களுக்கு இறைவன் மீது இல்லையே... இது என்ன தியானம்! பொறுமையும் ஈடுபாடும் இல்லாத இந்த தியானத்தால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?’’ _ அப்பாவியான அந்தக் கிராமத்து ஆசாமி கேட்ட விதம் துறவியை அசைத்துப் பார்த்தது.

துறவிக்குத் தனது தவறு உறைத்தது. தனக்கு ஞானத்தை அளித்த அந்தக் கிராமத்து ஆசாமியை வணங்கி அங்கிருந்து கிளம்பினார்.

எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமை யான ஈடுபாடு காட்ட வேண்டும். அப்படி மூழ்கு பவர்கள்தான் ஜெயிக்கிறார்கள். இறை பக்தியிலும் அப்படித்தான்! மனதை ஒருமுகப்படுத்தி பக்தியில் மூழ்க வேண்டும்.

சிலர் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ் வொரு தெய்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... தெய்வம் எதுவாக இருப்பினும் தெய்விக சக்தி ஒன்றுதான்! ‘தேங்காய்’ என்பார்கள் தமிழில். ‘கோக்கனட்’ என்பார்கள் ஆங்கிலத்தில். ‘நாரியல்’ என்பார்கள் இந்தியில். எப்படிச் சொன்னாலும் அதன் பொருள் மாறுவ தில்லை. ஒவ்வொருவரும் அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, இறைவனை விதவிதமான வடி வங்களில் புரிந்து கொள்கின்றனர். பல பெயர்களைக் கொடுக்கின்றனர்.

ஆனால், எங்கும் நிறைந்த பரம்பொருள் எல்லாப் பெயர்களுக்கும் அப்பாற்பட்டவர். தன் பெயரைச் சொல்லி அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்க்கும் நபரல்ல அவர்! கூப்பிட்டால் வருவதற்கு, அவர் உங்களை விட்டு வெகு தொலைவில் இல்லை. அவர் உங்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் குடியிருக் கிறார். உங்கள் இதயத்தின் மொழிகளை அவர் அறிந்திருக்கிறார். அவரது பெயர்களைச் சொல்லி அழைப்பது ஆனந்தமான அனுபவம். எந்த நாமமும் அவரது நாமமே!

கொஞ்சம் ஆழத்துக்குப் பள்ளம் தோண் டிப் பார்த்து, தண்ணீர் கிடைக்காத விரக்தியில் பல இடங்களில் மாறி மாறித் தோண்டிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்போதும் அது கிடைக்காது. ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டுபவர்கள் தங்கள் இலக்கில் ஜெயிக்கிறார்கள்.

தண்ணீர் ஊற்றாவிட்டால், செடிகளின் கிளைகள்தான் வாடி வதங்கும். ஆனால், அதற்காக நாம் தண்ணீரைக் கொண்டு போய் அந்த கிளைகளில் ஊற்றினால் வாட்டம் தணிந்து விடுவதில்லை. வேருக்குத் தண்ணீர் ஊற்றினால் அது எல்லா பாகங்களுக்கும் சென்று கிளைகளின் வாட்டத்தைக் குறைத்துச் செழிக்க வைக்கிறது.

இறைவன் அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறார். உங்கள் உற வினர்கள், நண்பர்கள், முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்கள், விரோதம் பாராட்டும் எதிரிகள், பசுக்கள், நாய்கள்... என சகல ஜீவராசிகளிடமும் நீங்கள் அன்பு செலுத்துங்கள். அப்படிச் செலுத்தும் அன்பு இறைவனைச் சென்றடைகிறது. ஏனென்றால், இறைவன் உங்கள் இதயத்தில் இருப்பது போலவே, எல்லா ஜீவராசிகளின் இதயங்களிலும் வாழ்கிறார்.

இங்கே நிம்மதி!

இறைவன் ஏன் இப்படி இதயங்களில் வாசம் புரிய ஆரம்பித்தார் என்பதற்குச் சுவாரஸ்யமான உவமைக் கதை ஒன்று உள்ளது. தான் வசிப்பதற்கான ஓர் இருப்பிடத்தை நிர்மாணிக்க இறைவன் திருவுளம் கொண்டார். அதற்காக பிரபஞ்சத்தைப் படைத்தார். மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள்... இப்படி எல்லாம் நிறைந்த அழகான பூமியைப் படைத்தார். அதில் அவர் இன்பமாக வாழ்ந்தார். எல்லாம் நன்றாகத்தான் இருந் தன.

ஆனால், ஒரு நாள் இறைவன் ஒரு தவறு செய்து விட்டார். அவர் மனிதனைப் படைத்தார். அன்றிலிருந்து தொல்லை ஆரம்பமானது. எந்த நேரமும் மனிதர்கள் இறைவனிடம் ஏதாவது புகார் செய்தபடி இருந்தனர். இறைவன் உண்ணும்போதும், உறங்கும்போதும் அவரது அரண்மனைக் கதவை மனிதர்கள் தட்டியபடி இருந்தனர்.

ஓயாத புகார்களால் இறைவனின் மன நிம்மதி போய் விட்டது. ஒரு பிரச்னையைத் தீர்த்தால் அடுத்த நிமிடமே இன்னொரு பிரச்னை புதிதாக முளைத்தது. ஒரு மனிதனுக்குத் தீர்வாக அமைந்தது, மற்றொரு மனிதனுக்குப் பிரச்னையாக மாறியது. ஒரு மனிதன், தனது பயிர்கள் செழிக்க மழை வேண்டும் என்று கேட்டான். இன்னொருவன், ‘‘இறைவா! என் வீடு ஒழுகுகிறது. கால்நடைகள் அவதிப்படுகின்றன. மழையை நிறுத்து!’’ என மன்றாடினான். இறைவன் என்ன செய்தாலும் மக்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. எல்லாமே பிரச்னைகளாக மாறின.

கடவுளால் தாங்க முடியவில்லை. தனது ஆலோ சகர்களைக் கூப்பிட்டார்: ‘‘என்னால் இவர்களது தொந்தரவைத் தாங்க முடியவில்லை. மனிதர்கள் தொட முடியாத ஓர் இடத்தைச் சொல்லுங்கள். நான் போய் அங்கு ஒளிந்து கொள்கிறேன். அப்போதுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்!’’ என்றார்.

‘‘பனி மூடிய இமயமலையின் உயரமான சிகரங்களுக்குச் சென்று விடுங்கள்...’’ என ஆலோசனை கூறினார் ஒருவர்.

‘‘என்றாவது ஒரு நாள் அந்த சிகரங்களின் உயரத்தை அளக்க மனிதன் அங்கு வருவான்!’’ என்று அதை நிராகரித்தார் இறைவன்.

‘‘கடலின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுங்கள்!’’ என்றார் இன்னொருவர்.

அதையும் இறைவன் மறுத்தார். ‘‘மனிதர்கள் வருங் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டு பிடிப்பார்கள். அதன் உதவி யோடு அவர்கள் அங்கும் வந்து விடுவார்கள்!’’ என்றார் இறைவன்.

‘‘அப்படியானால் நிலாவுக்குச் சென்று விடுங்கள். அது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அங்கு மனிதர்கள் தேடிப் பிடித்து வந்து தொல்லை கொடுக்க வாய்ப்பே இல்லை!’’ என்று வேறொருவர் யோசனை சொன்னார்.

அதையும் நிராகரித்து விட்டார் இறைவன். ‘‘நண்பர்களே! உங்களால் வருங்காலத்தைப் பார்க்க முடியாது. என்னால் முடியும். எனக்குத் தெரியும். வருங்கால மனிதர்கள் அறிவியல் அறிவில் மேம்பட்டு இருப்பார்கள். அவர்கள் ராக்கெட் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடிப்பார்கள். அதன் பிறகு நிலவுக்கும் எளிதாக வந்து விடுவார்கள்!’’ என்றார் இறைவன்.

இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாக, மூத்த ஆலோசகர் எழுந்தார். ‘‘இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன், தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவே, உங்களுக்குத் தொந்தரவு இருக்காது!’’ என்றார்.

அதை இறைவன் முகம் மலர ஏற்றார்.

உங்கள் ஒவ்வொருவரின் இதயத்தின் அடி ஆழத்திலும் இறைவன் குடியிருக்கும் கோயில் இருக்கிறது. தூய்மையான பேரன்பு, கருணை, கள்ளங்கபடமற்ற குணம் ஆகிய வடிவங் களில் அவர் இருக்கிறார்.

ஆனால், அந்தக் கோயிலை தற்பெருமை, சுயநலம், அகங்கார எண்ணம் போன்ற பல பூட்டுகள் மூடி வைத்திருக்கின்றன. மனதுக் குள் இருந்து கொண்டு என்ன யோசித்தாலும் வராத ஏதோ ஒரு பழைய நினைவு போல பலர் இறைவனையும் பூட்டி வைத்திருக்கிறார்கள். அந்தப் பூட்டுகளை அகற்றுங்கள். இறை வனின் பல வடிவங்களை உங்கள் குணங்களில் காட்டுங்கள்.

(தொடரும்)
படங்கள்: சு.குமரேசன்