Published:Updated:

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

மீண்டும் உங்களுக்காக...
வேதங்களும் வாழ்க்கையும்
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணம்

(தொடர்ச்சி)

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

தா ய்மை அடைந்து... சேயைப் பெற்று இருவர், மூவராக மாற வேண்டியது இயற்கையின் நியதி. அது அறம். குடும்பம் என்ற சொல்லுக்கு அப்போது பெருமை ஏற்படும். குடும்பத்தில் முழுமையான ஆனந்தத்தைச் சந்திக்கலாம். இணைப்பில் கிடைக்கும் ஆனந்தம் இருவரின் பற்றுதலோடு தென்படுவது. பற்றற்ற நிலையில் அனுபவத்தில் தோன்றுவது ஆன்மிக ஆனந்தம். மகிழ்ச்சியில் வித்தியாசம் இல்லை. பற்றோடு இருப்பது, பற்றற்று இருப்பது என்பது மட்டுமே வித்தியாசம்!

குடும்பச் சூழலில் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்து, பிறகு இயற்கையின் செயல்பாட்டால் பரிணாம வளர்ச்சியில் முதுமையை எட்டிப் பார்க்கும் தருணத்தில் தானாகவே பற்று அகன்று, பற்றற்ற ஆன்மிக ஆனந்தத்தில் கொண்டு சேர்த்து விடுவது குடும்ப வாழ்க்கை.

சிறு வயதில் கல்வி கற்று, இளமையில் இல்லறம் ஏற்று, சுவைத்து மகிழ்ந்த பிறகு ஆன்மிகத்தை அடைவது சிறந்தது. ரிணானித்ரீணி அபாக்ருத்ய மனோமோக்ஷே நிவேசயேத் என்று வேதம் கூறும். துறவறத்தில் நிலைத்து நிற்க, இல்லறத்தின் அடித்தளம் வேண்டும்.

நவரசங்கள், அதாவது ஒன்பது சுவைகள் இல்லறம் அளித்த வரப்பிரசாதம். இல்லறம் ஒன்பது சுவைகளையும் சுவைக்க வைத்து, மகிழ்விக்கும். வாழ்க்கையின் குறிக்கோள்களில் இதுவும் ஒன்று. அதை இழப்பது என்பது, பிறப்பால் கிடைத்த உரிமையை தாரை வார்ப்பதாகிவிடும்.

பிறப்புரிமைகளை வரிசைப்படுத்தி பரிணாம வளர்ச்சிக்கு உகந்தவாறு அந்தந்தக் காலங்களில் ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராசனம் என்கிற வரிசையில் சம்ஸ்காரம் மூலம் செம்மைப்படுத்தி, அறத்தின் பங்கைச் செயல்படச் செய்து முழு ஆனந்தத்துக்கு அவனுக்கு வழிகாட்டுவது வேதம். உண்மையான வாழ்க்கை சாந்தி கல்யாணத்தில் ஆரம்பமாகிறது. அறத்தையும் மகிழ்ச்சியையும் அடைய இல்லறம் வேண்டும் என்கிறது வேதம். கற்ற கல்வியைச் செயல்படுத்தும் தகுதியை இல்லறம் அளிக்கிறது.

ஒருத்தியை மனமாரக் கைப்பிடித்த பிறகுதான் அவனது அறம் ஆரம்பம் ஆகிறது. ஸ்த்ரீ மூலம் ஹிதர்ம:

மனைவியின் உடன்பாடு அலாதியானது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் கணவனிடம், மனைவியாகவும் தாயாகவும் சேவகியாகவும் ஆலோசகராகவும் அதிகாரியாகவும் நண்பனாகவும் குடும்பத்தில் செயல்பட்டு மகிழ்ச்சியான சூழலை நிலை நிறுத்துவாள் (கார்யேஷ§ மந்த்ரீ கரணேஷ§ தாஸீ...).

புராணத்தில் தென்படும் ரிஷிகளின் பத்தினிகள் அத்தனை பேரும் பல விதங்களில் ரிஷிகளுக்கு உதவியவர்கள். அதனால் அவர்கள் ரிஷிகளுக்கும் மேலாகப் போற்றப்பட்டார்கள். இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தின் சுவையைச் சுவைக்க அவர்களின் மனைவியரது அறம் உதவியது.

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

இல்லறத்திலிருந்து துறவறம் செல்ல விரும்பிய யாக்ஞவல்கியரைத் தனது பரிந்துரையால் இல்லறத்தில் இருந்து கொண்டே துறவற இன்பத்தை அடைய உதவினாள். ‘கைப்பிடித்தவளைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்!’ என்ற வேதத்தின் கட்டளை, இல்லறத்தில் வாழ்வது அறம் என்று அவனுக்குப் புரிய வைக்கிறது. அறத்தோடு இணைந்த ஆனந்தம், சாந்தி கல்யாணத்தில் தென்படும்.

சிங்காரம், ஹாஸ்யம், கருணம், ரௌத்ரம், வீரம், பயானகம், பீபஸ்தம், அற்புதம், சாந்தம் என்கிற வரிசையில் நவரசங்கள் உண்டு. காதல், நகை, கருணை, குரோதம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகிய இந்த ஒன்பதும் நமக்கு மகிழ்ச்சி அளிப்பவை.

மேடையில் ‘துஷ்யந்தன் - சகுந்தலை’ காதல் காட்சியைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். நடிப்பவர்களிடம் உண்மையான காதல் அரும்பவில்லை. காதலிப்பவர்கள் போல் நடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆனந்தம் இல்லை. சரியாக நடிக்க வேண்டுமே, வசனம் பேச வேண்டுமே என்ற கவலையில் அவர்களுக்கு ஆனந்தம் இருக்காது. நாம் அதை உண்மை என்று நினைத்து அதில் ஒன்றுவதால், மனம் ஆனந்தத்தைத் தழுவுகிறது.

ஹரிச்சந்திரனின் மயான காண்டத்தில் சந்திரமதியின் புலம்பலைப் பார்த்து நாம் உண்மையில் கலங்கவில்லை. மகிழ்ச்சி அடைகிறோம். கண்ணீர் பெருகுகிறது நமக்கு. ஆனால், சோகத்தால் அல்ல; ஆனந்தத்தால். அங்கே நாம் சங்கடப்படவில்லை. துயரத்தைச் சந்தித்திருந்தால் இரண்டாவது தடவை அதே மயான காண்டத்தைப் பார்க்கப் போவோமா? ‘நன்றாக இருக்கிறது. இன்னொரு தடவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது’ என்கிறோம்.

மனித உடல்கள் சிதறிக் கிடக்க, ஓநாயும் நரியும் ஊளையிட நடுநிசியில் காணப்படும் அருவருப்பான யுத்த களமும், கண்ணன் வாயில் பதினான்கு உலகங்களையும் பார்த்த யசோதையின் அற்புதமும், வசிஷ்டரிடம் தோல்வியுற்று மனம் மாறிய விஸ்வாமித்திரனின் தவக்கோலத்தில் இருக்கும் சாந்தமும், கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு யுத்த களத்தில் திரியும் பீமனின் குரோதமும், ஒரு பாணம் படிப்படியாகப் பல மடங்கு பாணங்களாகப் பெருகி ராவணனின் பத்துத் தலைகளையும் ஒரே சமயத்தில் வீழ்த்திய ராமனின் வீரமும், எட்டுக் கைகளில் ஆயுதங்களை ஏந்தி கண் சிவக்க _ உதடுகள் துடிக்க சிம்ம வாகனத்தில் அரக்கர்களை ஒழிக்கத் தோன்றிய அம்பா ளின் பயங்கரமான தோற்றமும் எல்லா ரசிகர்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கிறது. இப்படித்தான் குடும்பத்தில் ஏற்படும் நவரசங் களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

சாந்தி கல்யாணத்தில் உடலோடு ஒன்றிய மனம் ஆனந்தத்தை அனுபவிக்கிறது. குடும்பத் தில் ஏற்படும் பல விதச் சுவைகளும் அவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்குமே தவிர, துன்பத்தை விளைவிக்காது. பேரக் குழந்தையின் போக்கிரித்தனம் தாத்தாவுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பார் பவபூதி.

அடுத்த வீட்டுக் குழந்தை அம்மணமாக, அழுக்காக, மூக்கொழுக... தனது வீட்டுக்கு வந்தால் அருவருப்படைகிறான். அதை அதன் வீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறான். இதே கோலத்தில் இருக்கும் தன் குழந்தையை, வாரி எடுத்து அணைத்து முத்தம் இடுகிறான். அங்கு அவனுக்கு அருவருப்பு இல்லை. ஆனந்தம் இருக்கிறது. மனம் ஒன்றினால் வெளித் தோற்றம் மறைந்துவிடும். ஆனந்தம் பொங்கிவிடும்.

துயரத்துக்கும் ஆனந்தத்துக்கும் மனமே காரணம். வெளியுலகத்தை மறந்து, மனம் சாந்தி கல்யாணத்தில் முழு ஆனந்தத்தை அனுபவிக்கிறது (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:).

அறிவுரைகள், அதட்டல், மிரட்டல், கெஞ்சல், உதவி, பரிசளிப்பு, போற்றுதல் - ஆகியவை, ஒருவனிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், வேதம் சொல்லும் சம்ஸ்காரம் மன மாற்றத்தை ஏற்படுத்தும். ‘மனதில் இருக்கும் சந்தேகங்கள் அகன்று விட்டன. தெளிவாக இருக்கிறேன். உன் கட்டளையை நிறைவேற்றுகிறேன்’ என்ற அர்ஜுனனின் சொல், மனமாற்றத்துக்குப் பிறகு வந்தது. அவனுக்கு, அவனது சம்ஸ்காரம் துணை புரிந்தது. சம்ஸ்காரத்தோடு செயல்படும் சாந்தி கல்யாணம் மனதைத் தூய்மையாக்கி, இல்லறத்தில் சந்திக்க நேரும் விரும்பத் தகாத சந்தர்ப்பங்களை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை உண்டுபண்ணும்.

மாமியாருக்கு மருமகளைப் பிடிக்காது; அவள் பெற்ற குழந்தையைப் பிடிக்கும். மருமகளுக்கு மாமியாரைப் பிடிக்காது; அவள் பெற்றுத் தந்த தன் கணவனைப் பிடிக்கும். மாமியாரின் இனிமையான நல்லுரைகளுக்கு எதிரிடையான விளக்கம் காணுவாள் மருமகள். தன் தாயாரின் எதிரிடையான பரிந்துரைக்கு நல்ல விளக்கம் காணுவாள். இப்படி மாறுபட்ட மனோநிலை தலை தூக்காமல் செய்ய, சம்ஸ்காரத்தைப் பரிந்துரைக்கிறது தர்ம சாஸ்திரம்.

இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள் என்று அறிவுப் புலன்கள் இரண்டாகவே படைப்பில் தோன்றியிருக்கின்றன. இரண்டு கைகள், இரண்டு கால்கள் என செயலுறுப்புகளும் இரண்டாகவே இருக்கின்றன. செயல்பாட்டால் அவை ஒன்றாகி விடுகின்றன.

ஆண்- பெண் இரண்டாக இருந்தாலும் அவர்கள் செயல்பாட்டால் ஒன்றாகிவிட வேண்டும் என்பது சாஸ்திரத்தின் கருத்து.

உள்ளம் ஒன்றாக ஆவதற்கு உடலுறவு பரிந்துரைக்கப்பட்டது. சாந்தி கல்யாணத்தின் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்குக் கருவியாக இந்த மிருகத்தனத்தைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர். படைக்கப்பட்ட அத்தனை பொருட்களிலும் நன்மை- தீமை கலந்திருக்கும். தீமையை அகற்றி நன்மையை மிளிரச் செய்யும் செயலுக்கு சம்ஸ்காரம் என்று பெயர். அதிகமானால், அமுதமும் விஷம் என்பார்கள். குறைந்தாலும் கெடுதல்தான். இரு வகைகளிலும் ஏற்படும் கெடுதல்களை அகற்ற வேண்டும். இல்லறத்திலேயே மூழ்கியிருப்பதும் கெடுதல்; இல்லறமே வேண்டாம் என்று விலக்கி வைப்பதும் கெடுதல். ஒன்று அதிகம்; மற்றொன்று குறை. சிற்றின்பமே வாழ்க்கை என்றும் இருக்கக் கூடாது. திருமணமே வேண்டாம் என்று குறையை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. ‘இல்லறம் சங்கடம் அல்ல; சந்தோஷம்தான்!’ என்று புரிய வைக்கிறது தர்ம சாஸ்திரம். சங்கடம் என்று ஒதுங்குவதோ, சந்தோஷம் என்று அதிலேயே மூழ்குவதோ இல்லாமல் நடுநிலையில் ஈடுபட்டு எல்லாவற்றையும் சமமாக பாவித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம், சாந்தி கல்யாணத்தில் கிடைக்கும்.

(இன்னும் ஆராய்வோம்...)