Published:Updated:

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

மீண்டும் உங்களுக்காக...
அர்த்தமுள்ள இந்து மதம்!
 

காலத்தால் அழியாத ஆன்மிக் காவியம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- கவியரசு கண்ணதாசன்

பூர்வ ஜென்மம்

(தொடர்ச்சி)

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

ந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தையை இரண்டு மாதம் தங்குகிற நாற்றங் காலாகவும், தாயாரை, பத்து மாதம் வளர்க் கிற விளைநிலமாகவும், இரண்டையும் உடை யவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்ட வரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டவனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பிறவிகளுக்கும் உண்மையான அம்மை யப்பன் ஆகிறான் என்றும் அருளியிருக் கின்றார்கள்.

இந்துக்கள், கடவுளை 'அம்மையே... அப்பா!' என்றும், 'எந்தையாய் எம்பிரான்' மற்றும் யாவருக்கும் 'தந்தை தாய் தம்பிரான்' என்றும்; கிறிஸ்தவர்கள் 'நாமெல்லாம் பர மண்டலத்திலிருக்கிற பிதாவின் குழந்தைகளே' என்றும், இஸ்லாமியர்கள் 'கடவுளே மனிதர்களைப் படைத்தார்' என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களை, கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.

மூன்றாவது கேள்வி: 'உனக்கு ஒரு பெயரிடப் பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகிற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா? அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா? எப்பொழுது இடப்பட்டது? யாரால் இடப்பட்டது?' என்று கேட்போம். 'நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்தான் பெயரிட்டிருக்கிறார்கள்' என்றுதான் (நாம் எழுதியிருக்கிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.

ஆனால், உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளே ஆவார். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாரின் உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னரேயே அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கை யிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில் பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம் துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப் பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம்- துன்பம் அனுபவிக்கிற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.

இந்த அரிய பெரிய பேருண்மையை முதன் முறை யாகக் கேட்கிற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நமக்கு மூளைக் கோளாறாக இருக்கலாமோ என்று கூடச் சில ஆத்திரக்காரர்கள் நினைக்கக் கூடும். நாம் இதன் உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகிறோம்.

திருவள்ளுவர்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப் பார்த்தபின், அதைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்ட மாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.

பெயர்களைக் குறித்துக் கிறிஸ்தவ வேத நூலில் பிரசங்கி ஆகமம், அதிகாரம் 6, வசனம் 10-ல் 'இருக்கிறவன் எவனும் தோன்று முன்னமே பெயரிடப் பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறது' என்றும், ரேகை சாஸ்திரத்தைக் குறித்து யோகோபு ஆகமம், அதிகாரம் 37, வசனம் 7-ல், 'தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்தரித்துப் போடுகிறார்' என்றும் கூறியிருக்கிறது.

உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை 'ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி' என்று கண்டிருந்தது. ஐந்து+ஒன்று=ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.

ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவ அன்பருக்கு, 'சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம்' என்று கண்டிருந்தது, 'ச' என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து 'சூ'; ஒன்பதாவது எழுத்து 'சை'; அவரது தந்தை இட்ட பெயரும் 'சூசை' என்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் சூசை என்பதாகும்.

ஓர் இந்துவைப் போல் மாறுவேஷம் போட்டுக் கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு 'அப்துல் ரஹ்மான்' என்ற பெயர் கூறப் பெற்றிருக்கிறது. ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, 'முழத்தில் பாதி இவன் நாமம்' என்றிருந்து. அவரது பெயர் 'ஜான்' என்பதாகும். கோவையில் கௌமார மடத்தை நிறுவிய தலைவருக்கு 'இராமக் குட்டி' என்றும், பின் துறவு பூண்டு 'இராமானந்தர்' ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கைரேகைகள் சம்பந்தமாக, 'சப்தரிஷி நாடி' யின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்கள் வெளியிட்டிருக் கிறார்கள்.

தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கௌசிகர் நாடி, சீவக\சிந்தாமணி, அநாகத வேதம் முதலிய பிற ரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன. கடவுள் கொடுத்திருக்கும் அவ்விதத் தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுய அறிவு கொண்டு முன் பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளைத் தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், ரேகை சாஸ்திர ஏடுகளில் காணப் பெறுகின்றன. கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

துரை ஆதீனகர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும், மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில்தான் இருக் கின்றன.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே- என்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.

‘முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை. முதல் இடை கடை நமது வசத்திலில்லை’

என்றான் மகாகவி பாரதி.

எந்தத் தாயின் வயிற்றில், எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதை யும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.

பின்னாளில், நாம் வைத்துக் கொள்கிற புனைபெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாக, என் பெற் றோர் எனக்கிட்ட பெயர் முத் தையா. இது வைத்தீசுவரன் கோயில் சுவாமியின் பெயர். அந்த சுவாமி எங்கள் குலதெய் வம்.

என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.

என் பெயரை மாற்றி ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய போது 'கண்ணதாசன்' என்ற பெயர் எனக்கேன் தோன்றிற்று?

அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக் கொள்ள விரும்பினேன்.

உண்மைதான். காலத்தால் அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாகி விட்டது.

கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை! நானும் எட்டாவது குழந்தை.

கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.

சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக் கூடும்.

பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக் கூடும்.

நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தர்.

உதாரணமாக, 'எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல் வேலி ஜில்லாவில் சிங்கப்பட்டி ஜமீன் தாராகப் பிறந்திருக்கிறார்!' என்று 'அநாகத வேதம்' என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.

அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப் பிடப் பெற்று, அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக் குணமாகி விட்டதாம்.

'ஒவ்வோர் உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை- தீமைகளை அனுபவிக்கிறது!' என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

பதவீம் பூர்வ புண்ணியானாம் என்பது வடமொழி சுலோகம்.

மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்பது தமிழ் மூதுரை.

முற்பிறப்பின் கரும வினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

அலகாபாத்தில் செல்வந்தர் மகனாகப் பிறந்தவர் பரத கண்டத்தின் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும் திருவாரூரிலும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானதும் அவர்களுடைய திறமையினாலா? முயற்சியினாலா?

எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை- தமிழகத்தின் தலைவனாகி, ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டி நூற்றுக்குத் தொண்ணூறு பேரைப் படிக்க வைத்தது எப்படி முடிந்தது?

(வளரும்)