Published:Updated:

எல்லை சாமிகள்!

எல்லை சாமிகள்!

 

 

மண் மணக்கும் தொடர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
 

- குள.சண்முகசுந்தரம்


வெண்டிமுத்து கருப்பு

 
எல்லை சாமிகள்!
வெண்டிமுத்து கருப்பு கோயில்

துரை மாவட்டம் உசிலம்பட்டிக்குக் கிழக்கே பத்து கி.மீ. தூரம் பயணித்தால் வான்முட்ட நிற்கும் புத்தூர் மலை வரும். இந்த மலைக்குக் கீழ்ப்புறம் இருக்கிறது

எல்லை சாமிகள்!
வெண்டிமுத்து கருப்பு

வி.கள்ளபட்டி. இந்த ஊரின் கிழக்கு எல்லையில் வயிறு நிறைய நீரை நிரப்பிக் கொண்டு நிற்கிறது கரிசல்குளம் கண்மாய். இதைச் சுற்றி பன்னிரண்டு கிராமங்கள். இதன் ஜீவா தாரமே இந்தக் கண்மாய்தான். முன்னொரு காலத்தில் வெண்டிமுத்து என்பவர், தான் வசித்து வந்த செட்டி நாட்டுப் பகுதியில் மலையாளக் கருப்புசாமி ஒன்றைக் காவல் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்தார். வெண்டிமுத்துவின் மரணத்துக்குப் பின் அவரின் வாரிசுகள் கருப்புவைக் கவனிக்கவில்லை.

தனக்குரிய பூஜை-புனஸ்காரங்கள் நடக்காததால் உக்கிரமடைந்த கருப்பு, வெண்டிமுத்துவின் வாரிசுகள் வளர்த்து வந்த கால்நடைகள் மீது தன் கோபத்தை இறக்கியது. விளைவு _ ஆடு-மாடு, கோழி, குஞ்சு உட்பட சகல ஜீவராசிகளும் திடீர் திடீரென செத்து மடிந்தன. திகிலடைந்த வெண்டிமுத்துவின் வாரிசுகள் சாமியாடியை அழைத்துக் குறி கேட்டனர். மலையாளக் கருப்பின் உக்கிரம்தான் காரணம் என்று குறி சொன்னார் சாமியாடி. இதனால் கருப்பு மீது காட்டமான வெண்டிமுத்துவின் வாரிசுகள், மலையாளக் கருப்பை மாந்திரீகத்தால் அடக்கி சங்கிலியால் கட்டிப் போட்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன் முழு பலத்தையும் திரட்டி, கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளிக் கிளம்பிய கருப்பு, அங்கிருந்து மேற்கு நோக்கி நடந்தது. வி.கள்ளபட்டி எல்லையிலிருந்த கரிசல்குளம் கண்மாய்க்கரையின் அமைதிச் சூழல் கருப்புக்குப் பிடித்துப் போக, அங்கேயே நிலை கொண்டது கருப்பு. அந்தச் சமயத்தில் கரிசல்குளம் கண்மாய் உடைப்பெடுத்து வெள்ளமாகப் பாய்ந்தது. உடனே வி.கள்ளபட்டி கிராமமே திரண்டு வந்து கண்மாய்க்குக் கரை வெட்டியது. அங்கேயும் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தது கருப்பு. பகலில் ஊரே கூடி கண்மாய்க்குக் கரை வெட்டிப் போட்டுப் போக... இரவில் கரையை அழித்து தண்ணீரை வெளியேற்றி சேட்டை பண்ணியது கருப்பு.

கண்மாய்க் கரையை அழிப்பவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காக ஊர்க்காரர்கள் ஒரு நாள் இரவில் கண்மாய்க்கரையில் காவல் இருந்தனர். வழக்கம் போல கரையை அழிக்க வந்த கருப்பு கையும் களவுமாகப் பிடிபட்டது. அப்போது ஊர்ப் பெரியவர்களிடம் தன் பூர்வீகத்தைச் சொல்லிய கருப்பு, ‘‘எனக்கு இந்த இடம் ஒப்புது. இனி இங்குதான் தங்குவேன். ஒடைச்சுக்கிட்டுப் போற கண்மாயைக் காக்கணும்னா இப்பவே எனக்கு கருங்கிடா வெட்டி பொங்கல் வை. கண்மாய் உடையாம நிப்பாட்டிடுறேன்!’’ என்றதாம்.

எல்லை சாமிகள்!
கன்னிகை தொட்டில்

அப்போதே மூன்று கருங்கிடாக்களை வெட்டி கருப்புக்கு உதிரம் காட்டியதோடு பொங்கலும் வைத்தனர் கிராம மக்கள். அடுத்த சில நாழிகைக்குள்ளாக கண்மாயின் உடைப்பு அடைபட்டது. அன்றிலிருந்து கரிசல்குளம் கண்மாயைக் கருப்பே காவல் காப்பதாக மக்களுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாத விதத்தில் இதுவரை ஒரு தடவைகூட கண்மாயை உடையவிட்டது இல்லையாம் கருப்பு.

வெண்டிமுத்துவால் வணங்கி வழிபடப்பட்ட சாமி என்பதால் இந்தக் கருப்புக்கு வெண்டிமுத்து கருப்பு என்ற பெயரே நிலைத்தது. கரிசல்குளம் கண்மாயின் கிழக்குக்கரையின் மத்தியில் சின்னதாக ஒரு மண்டபம். அங்குதான் மீசையை முறுக்கிவிட்டபடி நிற்கிறார் கருப்பு. வலக் கையில் அரிவாள், இடக் கையில் நாட்டுத் துப்பாக்கி, காலுக்கடியில் கர்ஜிக்கும் சிங்கம், தலையில் மலையாளக் கருப்புக்கே உரித்தான கொண்டை சகிதம் ஏழடி உயரத்தில் மிரட்டுகிற தோரணையில் நிற்கிறார் வெண்டிமுத்து கருப்பு. பொண்ணுக்குக் கல்யாணம் பேசப் போகிறவர்கள், வீடுகட்ட பூமி பூஜை போடப் போகிறவர்கள், விவசாயத்துக்கு விதை வைக்கப் போகிறவர்கள் _ இப்படிப் பலரும் கருப்பின் வாசலுக்கு வந்து விளக்குப் போட்டு விபூதி அள்ளிப் பூசிக் கொண்டு, ‘‘கருப்பையா, சகுனம் சொல்லுய்யா!’’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கௌளி(பல்லி)யாக குரல் கொடுத்து வழிகாட்டுகிறார் வெண்டிமுத்து.

திருடர்கள், கொள்ளையர்கள், அநியாயமாகப் போகிறவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நிற்கிறார் வெண்டிமுத்து கருப்பு. ‘‘இன்னாரு.. என்னைய மோசம் பண்ணிட்டான் வெண்டிமுத்தய்யா... அந்தாள நீதான் கேட்டுக்கணும்!’’ என்று யாராவது தன் வாசலுக்கு வந்து குற்றச்சாட்டு படித்தால், அன்று இரவே மோசம் பண்ணிய நபரின் கனவில் துப்பாக்கியும் கையுமாகப் போய் மிரட்டி விடுவார் வெண்டிமுத்து. அதைப் புரிந்து, அந்த நபர் தன் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். தவறினால் அந்த நபரின் வீட்டுக் கால்நடைகளைக் காவு வாங்கிவிடும். அப்போதும் புரிந்து கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்ட நபரின் கையை-காலை முடக்கிப்போட்டு, இம்சைப்படுத்தும். அப்போதும் திருந்தவில்லை என்றால், அந்த நபரின் உயிரையே காவு வாங்குமளவுக்குத் துடியான தெய்வம் வெண்டிமுத்து கருப்பு.

கருப்பு நிற்கும் அந்த குட்டி மண்டபத்தையட்டி ஆலமரம் ஒன்று குடைபோல் கவிழ்ந்து நிற்கிறது. நீண்ட நாட்களாகப் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் கருப்புவின் வாசலுக்கு வந்து, தங்களின் முந்தானைத் தலைப்பைக் கிழித்து அதை ஆலமரத்தில் தொட்டிலாகக் கட்டிவிட்டுப் போனால் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் விட வைக்கிறார் கருப்பு.

வெண்டிமுத்து கருப்பருக்கு பூஜை வைக்க நாள், கிழமையெல்லாம் பார்ப்பது கிடையாது. தங்களுக்கு தோதுப்பட்ட நாளில் கருப்புவின் வாசலுக்கு வந்து பூஜை வைத்து வணங்குகிறார்கள். மாசி மாதத்தில் மூன்று நாட்கள் களறித் திருவிழா இங்கு களை கட்டுகிறது. அப் போது வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து குவிவார்கள். தவிர, கருப்பரின் எல்லைக்கு உட்பட்ட பன்னிரண்டு கிராமங்களும் ஒன்று கூடி குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை பெரிய களறி திருவிழா எடுக்கிறார்கள். அப்போது கருப்பர் சந்நிதியில் லட்சம் பேர் வரை கூடுவார்கள். ‘அப்படியரு திருவிழா கூடி ஐம்பது வருஷமாச்சு’ என்று ஏங்குகிறார்கள் கிராமத்து ஜனங்கள்!

(இன்னும் வரும்)
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி