Published:Updated:

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

இது புது உலகம்!
விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை! - 31
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- தென்னாடுடையான்

காகபுசுண்டர்

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

தொடர்ச்சி...

ல்லா விதமான ஆசைகளையும் விலக்கிய விஸ்வம், ராமர் மீது உள்ள ஆசையை மட் டும் விலக்காமல் அவரை தரிசிப்பதற்காகப் பல இடங்களிலும் திரிந்தார். கடைசியில் மேரு மலையை அடைந்தார். அங்கு ஒரு மலைமுகட்டில் லோமச முனிவர் அமர்ந்து இருந்தார்.

அவர் திருவடிகளில் விழுந்து வணங்கிய விஸ்வம், ‘‘உத்தம முனிவரே! இறைவனுக்கு உருவம் இல்லை; உருவம் உண்டு என்று இரண்டு விதமாகச் சொல் கிறார்கள். உலகம் முழுவதும் இறைவன் பரந்து, விரிந்து இருக்கிறான் என்பதை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. உருவம் கொண்ட வடிவிலேயே தெய்வத்தை வழிபட என் உள்ளம் விரும்புகிறது. பிரம்மஞானம் கைவரப் பெற்றவர் நீங்கள். உருவ வழிபாட்டில் ஈடுபட விரும்பும் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்!’’ என்று வேண்டினார்.

விஸ்வத்தின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட லோமசர், ‘விஸ்வம்! பிரம் மத்துக்குப் பிறவியோ, குணமோ, விருப்பு-வெறுப்போ, பெயரோ கிடையாது. பிரம்மத்துக்குச் சமமாக எதுவும் இல்லை. அது புலன்களுக்கு அப்பாற் பட்டது. தூய்மையானது. அழிவில்லாதது. எல்லையில்லாதது. ஆனந்த மயமானது. உருவம் இல்லாதது. அனுபவத்தில் மட்டுமே அறியக் கூடியது. உண்மையான அப்படிப்பட்ட பிரம்மமே நீ. நீயேதான் பிரம்மம்! உனக்கும் அதற்கும் வேற்றுமை இல்லை. வேதங்கள் அப்படித்தான் சொல்கின்றன!’’ என்றார்.

விஸ்வத்தின் உள்ளம் லோமசரின் வார்த்தைகளை ஏற்க மறுத்தது. ‘‘குருதேவா! தாங்கள் சொல்வது உண்மைதான். உலகத்தையும் அதில் இருக்கும் பொருட்களையும் ஊன்றிப் புரிந்து உணர்ந்தால், எல்லாமே பிரம்மம்தான் என்பது தெரியும். ஆனால், மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைப் பார்த்து, குழந்தை பயப்படும். தாயாரோ, ‘அது யானை இல்லப்பா. மரம்!’ என்று சொல்லி ஆறுதல் அளிப்பாள். அந்த மர யானை பொம்மையை, யானையாகப் பார்த்தால் மரம் தெரியாது; மரமாகப் பார்த்தால் யானை தெரியாது.

அது போல உலகத்தை அதன் போக்கிலேயே பார்த்தால், பிரம்மம் தெரியாது. பிரம்மமாகப் பார்த் தால் உலகம் தெரியாது. உலகம் பிரம்ம மயம்தான். ஆனால், ராம பக்தியில் மூழ்கிக் கிடக்கும் என் மனம் ராம தரிசனம் செய்ய ஆசைப்படுகிறது. ராம தரிசனத்துக்கு வழி சொல்லுங்கள்!’’ என்று உருவ வழிபாட்டை வேண்டினார் விஸ்வம்.

ஆனால், விஸ்வத்தின் வார்த்தைகளை லோமசர் ஏற்கவில்லை. பல விதத்திலும் பிரம்மத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, ‘‘பிரம்மம்தான் உயர்ந்தது. உருவ வழிபாடு, சாரம் இல்லாதது. ஆகவே, பிரம் மத்தை உணர முயற்சி செய்!’’ என்றார்.

விஸ்வம் அதை ஒப்புக் கொள்ளவில்லை. தான் சொன்னதையே வலியுறுத்தி வாதம் செய்தார். அவர் பேசப் பேச லோமசரின் உடலில் மாறுதல்கள் தென்பட்டன. உடல் துடித்து ஆடத் தொடங்கியது. உதடுகள் துடித்தன. கண்கள் கலங்க ஆரம்பித்தன. பிரம்மம்தான் உயர்ந்தது என்பதை நிலைநிறுத்த, கடுமையான வாதத்தில் இறங்கினார் லோமசர்.

ஆனால், விஸ்வமோ தன்னிலை இழக்கவில்லை. கோபப்படவில்லை. அமைதியாக சிந்திக்கத் தொடங்கினார். ‘பிரம்மமும் ஜீவராசிகளும் ஒன்று தான் என்கிறார். லோமசர் வாக்குப்படி அவரும் பிரம்மம்தானே? அப்படியென்றால் அவருக்கு ஏன் கோபம் வருகிறது? பிரம்மத்துக்குக் கோபம் கிடையாது என்றால், பிரம்ம மான உயிருக்கும் கோபம் இருக்கக் கூடாதே! ஜீவராசிகள் வேறு, கடவுள் வேறு என்ற எண்ணம் இல்லாவிட்டால் தெய்வபக்தி எப் படிச் சாத்தியம்?

எல்லாம் ஒன்றுதான் என்றால், பிரம்மஞானிகளிடம் தவறு செய்தால் அடுத்த தலைமுறை உருப்படுமா? ஆத்ம ஞானம் பெற்றவனுக்குக் காரியங்கள் உண்டா? அடுத்தவன் மனைவியைத் தொடுபவன் நல்ல கதி அடைவானா? கெட்டவர்களுடன் சேர்ந்தால் நல்ல அறிவு கிடைக்குமா? தெய்வத்தை இகழ்பவன் சந்தோஷ மாக வாழ முடியுமா? தர்மநெறி அறியாதவன் தரணி ஆள முடியுமா? கோள் சொல்வதைவிடக் கொடிய பாவம் உண்டா? வேதங்களும் இதிகாச புராணங்க ளும் போற்றித் துதிக்கும் ஹரி பக்திக்குச் சமமானது வேறு ஏதாவது இருக்கிறதா?’

_ விஸ்வத்தின் உள்ளத்தில் அலை மோதிய எண் ணங்கள் இவை. அனைத்தும் ஒன்று; எல்லாமே பிரம்மம்தான் என்றால், ஜீவராசிகளுக்கு இவ்வளவு பிரச்னைகள் ஏன் வர வேண்டும்?

பிரம்மத்துக்குப் பிரச்னையோ, கவலையோ கிடை யாது. ஆனால், ஜீவராசிகளுக்கு அவை இருக்கின்றன! இவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை அளிக்கக் கூடியது ஹரி பக்தி மட்டுமே.

இவ்வாறு உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை அலசிய விஸ்வம், ‘‘உருவ வழிபாடுதான் சிறந்தது!’’ என்று சொல்லி நிலைநிறுத்தினார்.

விஸ்வத்தின் வார்த்தைகள் லோமசரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன: ‘‘அறிவில் தெளிவு இல்லாதவனே! நான் என்ன சொல்லியும் நீ கேட்க வில்லை. மிக உயர்ந்த உபதேசங்களை அலட்சியம் செய்து விட்டாய். நான் சொன்னவற்றை நம்ப மாட்டேன் என்கிறாய். காக்கையைப் போல, எல்லா வற்றுக்கும் நீ பயப்படுகிறாய். தன்னை அழைத்து உணவு போடுபவர்களைக்கூட, காக்கை நம்பாது. பயந்து ஒதுங்கிப் போகும். அப்படிப்பட்ட காக்கைக்கும் உனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உனக்குப் பிடிவாதம் அதிகமாகி விட்டது. நீ காக்கையாகப் போகக் கடவது!’’ என்று சாபமிட்டார்.

முனிவரின் சாபம் அல்லவா? உடனே பலித்தது.விஸ்வம், காக்கையாக மாறினார். அப்போதும் அவர் உள்ளத்தில் பயமோ அல்லது, ‘ஐயோ! நான் இப்படி காக்கையாக மாறிவிட்டேனே!’ என்ற எண்ணமோ தோன்றவில்லை. விஸ்வத்தின் உள்ளம் ராமரையே தியானித்து இருந்தது. சாபம் தந்த லோமசரை வணங்கிவிட்டு, ராம தியானத்துடன் விண்ணில் பறந்தார் விஸ்வம்.

‘முனிவரின் உள்ளத்தில் ராமர் இருந்து அடியே னைச் சோதனை செய்திருக்கிறார். ராமரின் அடிமையான என்னை ராமர் என்ன வேண்டு மானாலும் செய்யலாம். ஆகையால் இதில், முனிவர் மீது எந்தத் தவறும் இல்லை. எல்லாம் ராமர் விருப்பம்’ என்ற எண்ணத்துடனேயே பறந்தார் விஸ்வம்.

விஸ்வத்தின் ராம பக்தி லோமச முனிவரின் உள்ளத்தில் மாறுதலை ஏற்படுத்தியது. கோபம் தணிந்தது. ‘‘விஸ்வம்! இங்கு வா!’’ என்று கூப்பிட்டு ஆறுதல் கூறினார். ராம மந்திரம் உபதேசம் செய்து, தியான வழிமுறைகளையும் காட்டினார். கொஞ்ச காலம் தன் கூடவே விஸ்வத்தை வைத்துக் கொண்டு, அவருக்கு ராமரின் வரலாற்றை விரிவாகச் சொன்னார். லோமசர் சொன்ன அனைத்தையும் கேட்டு அதன்படியே நடந்தார் விஸ்வம்.

ஒரு நாள் லோமசர்,‘‘விஸ்வம்! உத்தமமான ராமனு டைய சரிதத்தை சிவபெருமானிடம் இருந்து தெரிந்து கொண்டேன் நான். நீ உண்மையான ராம பக்தன் என்பதால் அதை உனக்குச் சொன்னேன்!’’ என்றார்.

லோமசரை வணங்கினார் விஸ்வம். அவர் தலை மீது தன் கரங்களை வைத்து வாழ்த்திய லோமசர், ‘‘சீடனே! எப்போதும் உன் உள்ளத்தில் ஆழ்ந்த ராம பக்தி இருக்கட்டும். உனக்குக் கர்வம் இருக்காது. ராமனுக்குப் பிரியமானவன் நீ. நல்ல குணங்கள், ஞானம், வைராக்கியம் முதலானவை உன்னிடத்தில் மேலும் மேலும் அதி கரிக்கும். விரும்பிய உருவத்தை எடுக்கும் சக்தியும் உனக்குக் கிடைக்கும். நீ விரும்பினால் மட்டுமே மரணம் உன்னை நெருங்கும். நீ வசிக்கும் இடத்தைச் சுற்றி நீண்ட தூரம் (36 கி.மீ) மாயை, மோகம் முத லானவை நெருங்காது. காலம், குணம், செயல், இயல்பு, குறை ஆகியவற்றால் உண்டாகும் துயரங்கள் உன்னை நெருங்காது. நீ எதை விரும்பினாலும் ராமன் அருளால் அது உடனே நிறைவேறும்!’’ என்றார்.

அப்போது ஆகாயத்தில் ஓர் அசரீரி ஒலித்தது.

(வியக்க வைப்பார்கள்...)