Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
கோயிலில் இருந்து வீடு திரும்பியதும் கால் கழுவக் கூடாதா?
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

‘விநாயகருக்கும் முருகனுக்கும் ஏன் புத்திரர்கள் இல்லை?’ என்கிற ஒரு கேள்விக்கு 1-11-05 சக்தி விகடன் இதழில் தாங்கள் பதில் சொல்லி இருந்தீர்கள். படித்தேன். அதில், விநாயகருக்குக் குழந்தை கிடையாது என்கிற தங்களது பதிலை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், வட தேசத்தில் விநாயகரின் புதல்வியாக தேவிஸ்ரீ சந்தோஷி மாதாவை வழிபடுகின்றனர். சென்னை, விருகம்பாக்கத்தில்கூட சந்தோஷிமாதா ஆலயம் உள்ளதாம். அடியேனும் சந்தோஷி மாதா அருள் பெற்ற பக்தன். ஆதலால், தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

- எஸ். செல்வகுமார், செய்துங்கநல்லூர்

மகன், மகள் என்பதெல்லாம் நம்பிக்கையில் நாமாக உருவாக்கிக் கொண்டவை. அவை புராண வரலாறுகள் இல்லை. காலப்போக்கில் நாம் அவற்றை புராண மாக மாற்றிக் கொண்டு விட்டோம். பரமேஸ்வரனுக்கு நேரடியாகப் பிறந்த பிள்ளை அல்ல கணபதி. முருகனும் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த அம்சம்தான். நம்மைப் போல் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி, பிள்ளை பெறுபவர் அல்ல பகவான்.

நித்திய பிரம்மச்சாரிதான் விநாயகர். அவருக்குப் பிறந்தவர்தான் சந்தோஷி மாதா என்று நீங்கள் நம்புவீர்களானால், அது உங்கள் இஷ்டம். அந்தந்த ஊர்களில் ஏற்பட்ட நம்பிக்கைதான் இப்படிப்பட்ட கதைகளை உருவாக்குகிறது. நூறு வருடங்களுக்கு முன்னால் சந்தோஷி மாதாவே கிடையாது. தற்போதுதான் சந்தோஷி மாதா வழி பாடெல்லாம்.

சபரி கிரீஸ்வரரை வணங்குகிறோம். அவர் பரமேஸ்வரனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்று ஒரு கதை உண்டு. அதுவும் புராணத்தில் இல்லை. கதையாகச் சொல்லப்பட்டு... பிற்பாடு புத்தகத்தில் ஏறியவற்றையெல்லாம் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது!

ராமாயணம் இருக்கிறது; உலகம் பூராவும் ஒன்று. மகாபாரதம் இருக்கிறது; எல்லா இடங்களிலும் ஒன்று. நீங்கள் சொல்லும் சந்தோஷி மாதா உலகம் பூராவும் இல்லை. ஒரு சாராருக்குத்தான் சந்தோஷி. இதனால் சந்தோஷி மாதாவைக் கும்பிடக் கூடாது என்பதில்லை. ஏதோ குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும். அது சந்தோஷி மாதாவாகவும் இருக்கலாம். அதை பிள்ளையாரின் மகள் என்று நீங்கள் நம்புவதிலும் தப்பில்லை. ஆனால், அதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்க உங்களுக்கு உரிமை இல்லை. ஒரு சாராரின் நம்பிக்கையைப் பொதுமைப்படுத்தக் கூடாது.

சூரியனின் பிள்ளை சனி என்பார்கள். சூரியனுக்கு எப்படி பிள்ளை பிறக்க முடியும்? சூரியனின் சாரம் சனி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இதெல்லாம் உருவகப்படுத்திய விஷயங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்: ந புத்தி பேதாம் ஜனயேத் அஞ்ஞானாம் கர்ம சங்கினாம். அதாவது, ஆராயாமலே ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்பவனை, அவனுக்கு அதில் திருப்தியும் இருக்கும்போது இது சாஸ்திரப்படி தவறு என்று விளக்கிச் சொல்லி அவனை திசை திருப்பாதே. அவன் நம்பிக்கையே அவனுக்கு பலன் கொடுக்கும். உங்கள் நம்பிக்கை சந்தோஷி மாதாவாக இருந்துவிட்டுப் போகட்டும். விநாயகர் பிரம்மச்சாரி என்று நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! அவர்களிடம் போய் அவர் கல்யாணமானவர் என்று விளக்க வேண்டுமா?

ஸித்தி, புத்தி என்று இரண்டு மனைவிகள் அவருக்கு இருப்பதாகச் சொல்வார்கள். ஸித்தி என்பது வெற்றி; புத்தி என்பது ஞானம். ஒருவன் இந்த இரண்டும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அதேபோல பிரம்மச்சாரியான ஐயப்பனுக்கும் பூரணை, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள் இருப்பதாகக் கதை உண்டு. அவற்றுக்கு முழுமை என்று பெயர். அவர் குடும்பம் நடத்துவதாகச் சொல்லலாமோ...

கேள்வி - பதில்

கோயிலுக்குச் சென்று வந்தவுடன் கால் கழுவக் கூடாது என்கிறார்களே, ஏன்?

- துரை. குருவாயூர் கண்ணன், சிவகங்கை.

கோயில் என்பது கடவுள் இருக்கும் இடம். நமது பக்தியைச் செலுத்தக் கோயிலுக்குச் செல்கிறோம். இந்த உலகத்தில் பரிசுத்தமான ஓர் இடம் என்றால் அது அன்றும் இன்றும் கோயில்தான்! அந்த இடத்துக்குப் போய் அவரை தரிசனம் செய்து திரும்பும்போது கால் கழுவக் கூடாது. நாம் முழுக்கவே சுத்தம் ஆன பிறகு, காலை மட்டும் தனியே சுத்தம் செய்வானேன்? எங்கேயெல்லாம் கால் கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கேயெல்லாம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். புது வேஷ்டி கட்டியிருந்தால், வெளியில் நடந்துவிட்டு வந்தால் கால் கழுவ வேண்டும்.

கல்யாணத்தில் பரதேசிக் கோலத்தில் கோயிலுக்குப் போகிறான் மணமகன். பகவானைக் கும்பிடுகிறான். திரும்பி வந்தவுடன் அப்படியே ஊஞ்சலில் உட்கார்கிறான். கால் கழுவுவதில்லை. அதன் பிறகு காலில் நலுங்கு அது இது எல்லாம் வைத்த பிறகு, கழுவ வேண்டுமே என்று கழுவுகிறான்.

பகவானின் தரிசனம் முடித்து வரும்போது நம் உடலில் எந்த அசுத்தமும் இருப்பதில்லை என்ப தால், எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சுத்தப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை. தேர் இழுக்கிறோம். அங்கே ஒரு வித்தியாசமும் இல்லை. அங்கே ஒருவருக்கு ஏதோ தீட்டு இருக்கிறது என்றால் கவலையே இல்லை... தேர் வடத்தைத் தொட்ட உடனேயே எல்லாத் தீட்டும் போய் விடுகிறது. கோயிலில் இருந்து திரும்பும்போது மழை வந்துவிட்டது. சேற்றில் கால் வைத்துவிட்டீர்கள் என்றால் அப்போது கால் கழுவலாம்.

கேரளாவில் மட்டும் ஏன் ஏவல், பில்லி-சூன்யம் போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன?

_ ஆர்.ராதா, நெல்லை-11

ஏவல், பில்லி என்பதெல்லாம் கேரளா வில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் உண்டு. அதை நம்பி, கேரளாவுக்குப் போகிறவர்கள் அதிகம் என்பதுதான் உண்மை. எல்லா இடங்களிலும் நம்புபவர்களும் இருக்கிறார்கள்; நம்பாதவர்களும் உண்டு. ‘ஏவல், பில்லி என்பது வாஸ்தவம்தானா?’ என்று கேட்டால் அதன் பதில் வேறு. இதெல்லாம் வெறும் நம்பிக்கை சம்பந்தப் பட்ட விஷயங்கள். நீங்களாக கேரளாவின் மேல் பில்லி சூன்ய முத்திரை குத்தி அவர் களை ஏற்றி விடாதீர்கள்.

நல்ல திறமையோடு, கடமை உணர்வோடு வாழ்க்கை நடத்துபவருக்கு எந்த பில்லியும் ஏவலும் கிடையாது. மனத் தடுமாற்றத்தோடு தெளிவில்லாத நிலையினால் ஏற்படும் சங்கடம், என்ன காரணம் என்று தெரியாமல் நமக்கு ஒரு பிரச்னை வரும்போது ஏவல், பில்லி என்கிறோம். வேறொரு காரணம் தெரிந்து விட்டால், ஏவலை விட்டுவிடுவோம். ஏவல், பில்லி வளர்வதற்கு நாம்தான் காரணம். மனதின் பலவீனம், சிந்தனையின் சுணக்கம், காரணம் கண்டுபிடிக்கத் தெரியாமை - இவைதான் பில்லி சூன்யத்தைச் சொல் லும். மற்றபடி ஏவல், கூவல் எல்லாம் பேத்தல். பலவீனமானவர்களை ஏமாற்றும் வியாபாரிகளின் வேலை அது.

கேள்வி - பதில்

நாம் ஸ்வாமி படங்களுக்கு சார்த்தும் புஷ்பங்கள் மாலை நேரத்தில் வாடி விடுகின்றன. வாடிய புஷ்பங்களை உடனே அகற்றி விடலாமா அல்லது மறுநாள் காலையில் புஷ்பம் சார்த்தும்போதுதான் அகற்ற வேண்டுமா?

_ உத்தரா, சென்னை-93.

காலை, மாலை இரு வேளைகளிலும் புஷ்பம் சார்த்தி வணங்குவது உண்டே! நீங்கள் காலையில் மட்டும் மாலை போடுகிறீர்கள் போலிருக்கிறது. அது சாயந்தர நேரத்தில் வாடத்தான் செய்யும். அது அதன் சுபாவம். மாலையில் பூஜை வேண்டாம் என்று நீங்கள் வைத்திருப்பதால் காலையில் போட்ட மாலை அப்படியே இருக்கலாம். மறு நாள் பூஜையின்போதுதான் மாற்ற வேண்டும்.

பூஜையைப் பற்றி ஒரு விளக்கம் உண்டு. இந்த உடல் இருக்கிறதே, அது கோயில். உள்ளே உட்கார்ந்திருக்கிற உயிர் இருக்கிறதே, அது கடவுள். அஞ்ஞானம் என்பதான நிர்மால்யத்தை வெளியிலே தள்ளி பூஜையை ஆரம்பி என்பார்கள். அஞ்ஞானம் என்பது நிர்மால்யம். நேற்றுப் போட்டது நிர்மால்யம். அதை அகற்றிவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ‘நான் ஏற்கெனவே நாலு நாளைக்கு முன்னால் அகற்றி விட்டேன்’ என்று சொல்லக் கூடாது. தேகோ தேவாலய ப்ரோக்த: ஜீவோ தேவ ஸநாதன: தெஜேயத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேன பூஜயேத் என்பது ஸ்லோகம்.

கோயிலில் பூஜைக்கு முன் கதவைத் திறப்பதற்கே ஒரு மந்திரம் உண்டு. அதைச் சொல்லிக் கதவைத் திறந்து, முந்தைய நாளின் நிர்மால்யத்தை அகற்ற வேண்டும். அதன் பிறகுதான் ஜலமே விடவேண்டும் என்று விதி உண்டு என்கிறபோது, முதல் நாள் எப்படி அகற்ற முடியும்?

கேரளாவில் நிர்மால்ய தரிசனம் என்பது பிரசித்தம். முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது பூக்களை அகற்றுங்கள். முடியுமானால், மாலை வேளையிலும் பூஜை செய்ய முயலுங்கள். அப்போது வாடிய பூக்களை மாலையிலேயே அகற்றலாம்.

கேள்வி - பதில்

அடியேன் வீட்டில் சிறிது நீர் நிரப்பிய பாத்திரத்தில் சாளக்கிராமம் வைத்து, அன்றாடம் நீரை மாற்றி சிறிது துளசி இலைகளை இட்டு வழிபடுகிறேன். மாற்றிய தீர்த்தத்தை உட்கொள்கிறேன். இதனால் சாளக்கிராமத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் மகிழ்ந்து அருள்வார் என்று சிலர் கூறியதால் இப்படிச் செய்கிறேன். நீரில் மூழ்க வைக்காமல் சாதாரண நிலையிலேயே வழிபடவும் என்று சிலர் கூறுகின்றனர். என்ன செய்வது?

_ பா.சீனிவாசன், குணசீலம்

வழிபடுவதற்கு என்று விதிமுறைகள் உண்டு. நாம் நினைக்கிற மாதிரி வணங்கலாம் என்றால், யாரையும் எதுவும் கேட்கத் தேவையில்லை. முறைப்படி என்று வந்துவிட்டால், முதலில் நாம் வணங்கும் ஸ்வாமியை மனதில் இருத்த வேண்டும். பிறகு ‘சாளக்கிராமத்தில் இரு’ என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு ஸ்நானம் பண்ணி வைக்க வேண்டும். துடைக்க வேண்டும். சிறிது பத்ரம் சார்த்த வேண்டும். சந்தனம் பூச வேண்டும். நைவேத்தியம், தீபாராதனை, பிரதட்சணம், நமஸ்காரம் இப்படி நடைமுறைகள் இருக்கின்றன.

இதில், சாளக்கிராமத்தை நீரில் மூழ்க வைப்பது என்பது எங்கிருந்து வந்தது? குளித்து, உடுத்தி, சிறிது ஜலத்தை உட்கொண்ட பிறகு அந்த ஜலத்தைக் கொட்டுவது எந்த வகையான உபசாரத்திலும் சேராது. மூழ்கிய பகவான் நல்லது செய்வார் என்று தீர்க்கமாக நம்பினால், அப்படியே நடக்கக் கூடும். ஆனால், இப்போதோ உங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எனவே, சட்டதிட்டப்படி நீரில் மூழ்க வைக்காமலே வணங்குங்கள்.

கேள்வி - பதில்

கணவரின் ஜாதகத்தை எங்கே எடுத்துச் சென்றாலும் அவருக்கு பித்ரு சாபம், பிரம்மச்சாரி தோஷம் - சாபம் என்று சொல்கிறார்கள். அதற்குப் பரிகாரமும் சொல்கிறார்கள். ஹோமம் செய்ய வேண்டும் என்றும் கயாவுக்குச் சென்று சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் வசதி இல்லாதவர்கள். என்ன செய்வது?

- சித்ரா, சென்னை-4

பித்ரு சாபம், பிரம்மச்சாரி சாபம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வதாகச் சொல்கிறீர்கள். பித்ரு சாபத்துக்கு என்ன காரணம்? கிரந்தம் பித்ரு சாபத்தைச் சொல்கிறது. அது சரிதானா? ஜோதிடத்தை ஆழமாகக் கற்று அதைப் பார்க்க வேண்டிய முறையில் பார்த்துத்தான் சொல்லியிருப்பார்களா... எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

அப்படி ஒரு சாபம் இருந்தால், அதை விலக்கப் பொருளாதாரம் எங்குமே இடையூறாக இருக்காது. தர்மசாஸ்திரம், பொருளாதாரத்தின் அடிப் படையில் பரிகாரம் வைக்கவில்லை. காசே இல்லாதவருக்கும் பரிகாரம் வைத்திருக்கிறது. அதனால் கயாவுக்குச் சென்று பரிகாரம் செய்தால்தான் துன்பம் விலகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘என் வீடுதான் கயை. சாப்பிடுபவர்தான் கதாதரன்’ என்று சங்கல்பம் சொல்லி இங்கேயே சிராத்தம் செய்கிறோமே, அதனாலும் பலன் உண்டு. ‘அங்கே போக வசதி இல்லை என்றால், இங்கே போ... முடியவில்லையா, இதைச் செய்!’ என்று அந்த ஜோதிடர் உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். உங்களால் போக முடியாத இடத்துக்குப் போனால்தான் பரிகாரம் என்று சொன்னால் அது ஜோதிடமே அல்ல!

‘ஒரு பசு மாட்டை தானமாகக் கொடு’ என்று ஓர் இடத்தில் தர்ம சாஸ்திரம் சொல்லும். ‘என்னால் முடியவில்லையே...’ என்றால் ‘பசுவின் விலையைக் கொடு’ என்று சொல்லும். ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை...’. ‘பாதி விலை கொடு’. ‘அதுவும் என்னால் ஆகாதே...’. ‘அப்படியானால் கால் பங்கு விலையைக் கொடு. இது மிகவும் குறைச்சல். இதைக் கொடுத்தாலும் மாட்டையே தானம் செய்த பலன் உண்டு’ என்று தர்மசாஸ்திரம் சொல்லும்.

இப்போதெல்லாம் நிறைய ஜோதிடர்கள் இருக்கிறார்கள். நிறைய ஜோதிடம் சொல்கிறார்கள். கற்றுக் கொண்டுதான் சொல்கிறார்களா... தெரியாது! சரியாகப் பார்த்து உண்மையைத்தான் சொல்கிறார்களா... தெரியாது! உங்களுக்கோ பேதலிக்கக் கூடிய மனசு போலிருக்கிறது. பயத்திலேயே, வேறு ஏதாவது கெடுதி நடக்கும்போது இவர் சொல்வது சரி போலத் தோன்றுகிறது, அவ்வளவுதான்!

நவக்கிரகத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் சுற்றலாமா? செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சுற்றக் கூடாது என்று விதி ஏதும் இருக்கிறதா?

- புருஷோத்தமன், இ.மெயில்

சாமி கும்பிட கிழமை கிடையாது. நமக்கு சௌகரியப்படும்போதெல்லாம் வழிபடலாம். வேறு வேலை இல்லை. காலையில் இருந்து மாலை வரை கோயிலிலேயே இருக்க முடியுமா... நாள் முழுக்க நமஸ்காரம் பண்ணுங்கள். காலை வேளைகளில் பிரதட்சணம் பண்ணுங்கள். பகவானுக்கு சண்டே அண்ட் கவர்ன்மென்ட் ஹாலிடேஸ் எல்லாம் கிடையாது. அதனால் நாள், கிழமை எதுவும் பார்க்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் ஆராதனம் செய்யலாம்.

_ பதில்கள் தொடரும்...