மண் மணக்கும் தொடர்
எல்லை சாமிகள்! -30
 

- குள.சண்முகசுந்தரம்

அங்காள பரமேஸ்வரி

எல்லை சாமிகள்!

தேனி மாவட்டம் வருச நாடு பகுதியில், ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் வைகை நதி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து ராமநாதபுரம் கடலில் கலக்கிறது. ஐந்து மாவட்டங்களைத் தழுவிச் செல்லும் இந்த வைகை, மூன்று கி.மீ தூரத்துக்கு மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இப்படித் தென்னோடிய நதியாக வைகை பாயும் பகுதியில், அதன் கரையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்திருக்கிறாள் அங்காள பரமேஸ்வரி அம்மன்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்குத் தெற்கில் சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது ஏனாதிசெங்கோட்டை கிரா மம். இதன் தெற்கு எல்லையில் இருபத்தோரு பந்தி (உப தெய்வங்கள்), அறுபத்தோரு சேனைகளுடன் அரசாட்சி செய்கிறாள் அங்காள பரமேஸ்வரி.

எல்லை சாமிகள்!

முன்னொரு காலத்தில் வட மாநில அயோத்தி நகரைச் சேர்ந்த வேடன் ஒருவன் காசி, ராமேஸ்வரம் ஸ்தலங்களுக்குப் புறப்பட்டான். தன் இஷ்ட தெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மனையும் உடன் எடுத்துச் சென்றான்.

ராமேஸ்வரம் நோக்கி அவன் வரும்போது, ஏனாதிசெங்கோட்டைக்குப் பக்கத்தில் கோட்டை என்னுமிடத்தில் ஒரு நந்தவனம் தென்பட்டது. அங்கிருந்த குருந்த மரத்தடியில் அம்மனை இறக்கி வைத்து காய்- கனிகளைப் படைத்து பூஜித்தான் வேடன். அந்த இடத்தின் அமைதியும் அழகும் அம்மனுக்கு பிடித்துப் போனது. எனவே, ‘‘நான் இங்கேயே இருக்கிறேன். நீ மட்டும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடிவிட்டு வா!’’ என்று வேடனுக்கு அசரீரியாகக் கட்டளையிட்டாள் அம்மன். அதன்படி அம்மனை அங்கேயே விட்டுவிட்டு வேடன் மட்டும் ராமேஸ்வரம் சென்றான்.

எல்லை சாமிகள்!

அம்மன் நீண்ட நாட்கள் காத்திருந்தும் ராமேஸ்வரம் சென்ற வேடன் திரும்பி வரவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் வைகையில் வந்த வெள்ளத்தில் மூழ்கி, அம்மன் மண்ணுக்குள் புதையுண்டு போனாள்.

ஏனாதிசெங்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ளது மறவனேந்தல் கிராமம். இங்கு வசித்த ஒரு யாதவப் பெண்மணி, தினமும் ஏனாதிசெங்கோட்டை கிராமத்தைக் கடந்து பக்கத்து ஊருக்குப் பால் கொண்டு போவது வழக்கம். ஒரு நாள், ஆற்றுக்குள் புதையுண்டு கிடந்த அம்மனின் சிரசின் மீது அந்தப் பெண்ணின் கால்பட்டு, கையில் இருந்த பால் சொம்பு தவறி கீழே விழுந்தது. பால் முழுதும் அந்த இடத்தில் கொட்டியது.

இதை ஒரு சாதாரண சம்பவமாகத்தான் நினைத்தாள் அவள். ஆனால், தினமும் அந்த இடத்தைக் கடக்கும்போது, அவள் கையில் இருந்த பால் சொம்பு, தவறிக் கீழே விழுந்து கொட்டிக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் காசியைச் சேர்ந்த அந்தணர் ஒருவர், பேச முடியாத தன் மகளுக்குப் பேசும் சக்தியைக் கொடுக்கும்படி தம் இஷ்ட தெய்வத்திடம் வேண்டினார். அப்போது, ‘‘நீ உன் மகளை ராமேஸ்வரத்துக்குக் கூட்டிச் செல். அங்கிருந்து திரும்பும் வழியில் அதிசயம் நடக்கும்!’’ என்று இஷ்ட தெய்வம் அருள்வாக்கு கொடுத்தது. அதன்படி அந்தணர், தன் மகளுடன் ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் புதையுண்டு கிடந்த நந்தவனத்துக்கு வந்து சேர்ந்தார்.

எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்!

அங்கு அமர்ந்து கட்டுச்சோற்றை அவர் பிரித்தபோது, வழக்கம் போல அந்த வழியே பால் கொண்டு வந்தாள் யாதவப் பெண். அன்றும் அம்மனின் சிரசில் அந்த பெண்ணின் கால் பட்டு பால் சொம்பு தவறி விழுந்தது.

இதைப் பார்த்ததும் பேச முடியாத அவரின் மகள், ‘‘அச்சச்சோ... பால் கொட்டிடுச்சே!’’ என்று தன்னையும் மீறிப் பேசினாள். இதைக் கண்டு அதிசயித்த அந்த அந்தணர் ஊரைக் கூட்டி, ‘‘இங்கு ஏதோ அபூர்வ சக்தி இருக்கிறது!’’ என்றார்.

உடனே பக்கத்து கிராம மக்கள் அங்கு திரண்டனர். மறவனேந்தல் கிராமத்தினர் அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அங்காள பரமேஸ்வரியின் வலப் புஜத்தில் எதிர்பாராமல் அவர்களது கடப்பாரை பட, ரத்தம் பீரிட்டது. அப்போதுதான் அங்கே அம்மன் புதையுண்டிருந்தது மக்களுக்குத் தெரிய வந்தது. பயபக்தியுடன் அம்மனை வெளியில் எடுத்த மக்கள், ஏனாதிசெங்கோட்டை கிராமத்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள வன்னி மரத்தடியில் அமர்த்தினர்.

இதன் பின் அந்த அந்தணர், அம்மனுக்கு ஆலயம் கட்டும் எண்ணத்துடன், ராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதியைச் சந்தித்தார். ‘‘குழந்தை பாக்கியம் இல்லாமல் தீராத வயிற்று வலியால் துடிக்கும் என் மகளின் பிணி நீக்கிப் பிள்ளை வரம் கொடுக்கட்டும் அந்த அம்மன். அதன் பிறகு அம்மனுக்கு நிழல் கொடுக்க நான் தயார்!’’ என்றாராம் மன்னர்.

அந்தணரும், ‘‘அப்படியே நடக்கும்!’’ என்று கூறித் திரும்பினார்.

விரைவிலேயே இளவரசியின் வயிற்று வலி தீர்ந்து சிசுவும் வளர ஆரம்பித்தது. ஆனால், அந்தணருக்குத் தான் கொடுத்த வாக்கைக் காலச் சுழற்சியில் மறந்தார் மன்னர். மகளைப் பார்ப்பதற்காக ஒரு நாள் குதிரை மீது ஏறிப் பயணம் கிளம்பினார் அவர். ஏனாதிசெங்கோட்டை எல்லையைக் கடக்க முயன்றபோது குதிரை தடுமாறிக் கீழே விழுந்து படுத்துக் கொண்டது. மன்னர், அங்கிருந்த ஊர்க் காவலாளியிடம் உதவி கேட்டார். உடனே காவலாளி அங்காள பரமேஸ்வரியின் காலடியிலிருந்து மண் எடுத்து வந்து குதிரையின் நெற்றியில் பூசினான். சட்டென்று குதிரை கம்பீரமாக எழுந்து நின்றது.

எல்லை சாமிகள்!

அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக, தான் கொடுத்த வாக்கு, மன்னருக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. உடனே ஆலயம் எழுப்ப ஆணையிட்டார். கோயிலும் எழும்பியது.

இந்த அங்காள பரமேஸ்வரிக்குத் துணையாக பாதாள ராக்கு, முத்து ராக்காச்சி, பத்ரகாளி, சந்தனகருப்பு, முத்து இருளாயி உள்ளிட்ட இருபத்தோரு பந்தி, அறுபத்தோரு சேனை தெய்வங்களுக்கும் இங்கு தனித்தனி சந்நிதிகள் வைத்திருக்கிறார்கள். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பத்து வருடங்களுக்கு முன் கிராம மக்கள் அனைவருமாகச் சேர்ந்து புதுப்பித்திருக்கிறார்கள். அப்போது அங்காள பரமேஸ்வரி, சந்தனகருப்பு, முத்து இருளாயி இந்த மூன்று தெய்வங்களுக்கும் தனிக் கோயில் எழுப்பி, அவை ஒவ்வொன்றையும் சுற்றி பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்!

அங்காள பரமேஸ்வரிக்கு சைவ பூஜை மட்டும்தான். சந்தனகருப்பு உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு அசைவ பூஜை உண்டு. மாசி மாத சிவராத்திரித் திருவிழாவின்போது அங்காள பரமேஸ்வரி வாசலில் ஜனத்திரள் கூடுகிறது. சிவராத்திரிக்கு இரண்டு நாள் முன்னதாக காப்புக் கட்டுடன் தொடங்கும் திருவிழா, எட்டு நாட்கள் நடக்கிறது. சிவராத்திரி அன்று பச்சை பாலை (நவதானியங்கள்) பரப்பி அம்மனுக்கு பூஜை. அதற்கு அடுத்த நாள் அதிகாலையில் அம்மன் பாரிவேட்டைக்குப் புறப்படுகிறாள். அப்போது, கோட்டைப் பகுதியில், தான் புதையுண்டிருந்த இடத்துக்குப் போய் பாரிவேட்டையாடி, மீண்டும் ஆலயத்துக்குத் திரும்புவாள். அன்று பொழுது விடிந்ததும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். அதற்கடுத்த நாட்களில் மற்ற தெய்வங்களுக்கு கடா வெட்டுடன் அசைவ பூஜை களைகட்டுகிறது.

சந்தனகருப்பின் பரிவார தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பத்ரகாளிக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ‘சூழையாட்டு பூஜை’ நடக்கிறது. யாதவ சமூக மக்களால் நடத்தப்படும் இந்த பூஜையில் சினை ஆட்டை காளியின் வாசலில் பலிகொடுக்கும் வழக்கம் உண்டு.

குழந்தை வரம், திருமணத் தடை நீக்குதல், உத்தி யோக வரம் இவற்றுக்கெல்லாம் அருமருந்தாகத் திகழும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குக் கடல் கடந்தும் பக்தர்கள் இருக்கிறார்கள். வெள்ளியும் செவ் வாயும் அம்மனை தரிசிக்க உகந்த நாட்கள்.

வைகையில் வெள்ளப் பெருக் கெடுத்து ஓடும் காலத்தில் கோயி லைச் சுற்றித் தண்ணீர் பெருகி விடுமாம். அதனால் தங்களது கிராமத்துக்கு ஆபத்து நேரக் கூடாது என்பதற்காக மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கைக் கட்டி, அதை அம்மன் கழுத்தில் கட்டுகிறார்கள். அம்மன் கழுத்தை அலங்கரிக்கும் அந்தக் கயிற்றைப் பின்னர் புதுப்பானை ஒன்றில் கட்டி, பூஜை செய்து பயபக்தியுடன் அதை வெள்ளத்தில் விடுகிறார்கள். அந்தப் பானை அடித்துச் செல்லப்படும் வேகத்திலேயே கோயிலைச் சூழ்ந்திருக்கும் வெள்ளமும் வடிந்து விடுமாம். இந்த வருட மழை வெள்ளத்தின்போதும் அந்த அதிசயத்தை நிகழ்த்தி, ஏனாதிசெங்கோட்டை மக்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறாள் அங்காள பரமேஸ்வரி.

(இன்னும் வரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு