Published:Updated:

குழந்தை வரம்... வேலைவாய்ப்பு... குறைகள் தீர்க்கும் சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்! #SaniPradosham

பிரதோஷம் என்பதற்கு "பாவங்களை போக்கக்கூடிய வேளை" என்று பொருள்.

சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்! #SaniPradosham
சனிப் பிரதோஷ அபிஷேகங்கள்! #SaniPradosham

பிரதோஷம் என்பதற்கு "பாவங்களை போக்கக்கூடிய வேளை" என்று பொருள். 

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் தோன்றியது. தேவர்கள் உட்பட அகிலம் முழுவதும் ஆலகாலத்தின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட சிவபெருமான், ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். சிவபெருமானின் கருணைக்கு நன்றி செலுத்த தேவர்கள் சென்றபோது, நஞ்சுண்ட பரமனின் மூச்சுக் காற்று பட்டு தேவர்கள் அனைவரும் மயங்கினர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக, நந்திதேவர் அந்த நச்சுக் காற்றை உள்வாங்கி தூய காற்றை வெளியிட்டார். இதனால் தேவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்தனர்.

வளர்பிறை, தேய்பிறை ஆகிய திரயோதசி திதிகளில் அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவது அனைத்து தோஷங்களையும் போக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும்.


சனிப் பிரதோஷத்தின் சிறப்புகள் 

சிவபெருமான் பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை உண்டு, தேவர்களைக் காப்பாற்றியது தேய்பிறை திரயோதசி கூடிய சனிக்கிழமை என்பதால், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று சிறப்பிக்கப்படுகிறது.  சனிப் பிரதோஷத்தில் விரதம் இருந்து ஈஸ்வரனை வழிபட்டால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம். சனி தோஷமும் விலகும். மற்ற பிரதோஷங்களைக் காட்டிலும் சனிப் பிரதோஷம் பன்மடங்கு பலன்களை அளிக்க வல்லது. அனைத்துத் தோஷங்களும் பாவங்களும்  நீங்கி இன்பமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.சனிப் பிரதோஷத்தின் போது கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

வழிபடும் முறை 

பிரதோஷ நாளன்று காலைக் கடன்களை முடித்துவிட்டு வீட்டிலுள்ள சுவாமி படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து, விளக்கேற்றி,பூஜை செய்து, சிவ நாமாவளிகளைப் படிக்கலாம்.

மாலையில் பிரதோஷ வேளையில் அருகிலிருக்கும் சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவன், பார்வதி நந்தி தேவருக்கு செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டும், சிவபுராணம் பாராயணம் செய்வதும் மிகுந்த பலனை அளிக்கும். அன்றைய நாளில் அவரவர் உடல் நிலைக்கேற்ப எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாம். மாலையில் பிரதோஷ வழிபாடு முடிந்து உணவருந்தி விரதத்தை முடிப்பது நல்லது.

நந்தி தேவரின் சிறப்புகள் 

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்கள் அபயம் வேண்டி சிவபெருமானை அணுகும் முன் நந்திதேவரை வழிபட்டனர்.அதனால் பிரதோஷ வேளையில், முதலில் நந்தி தேவரை வணங்கி அவரின் அருள் பெற வேண்டும். மேலும் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் நின்று சிவபெருமான் நடனம் புரிந்தார். எனவே நந்திதேவரை வழிபட்டுவிட்டு, அவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.

அருகம்புல் மாலையாலும், வில்வ இலைகளாலும் நந்தி தேவரை அலங்கரித்து, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. அரிசி,வெல்லம் கலந்த காப்பரிசியை நந்தி தேவருக்கு நைவேத்தியம் செய்யவேண்டும்.

பிரதோஷ பிரதட்சணம் செய்யும் முறை 

1. பிரதோஷ வேளையில் முதலில் நந்தி தேவரை வணங்க வேண்டும்.

2. பின்னர் நந்தி தேவரின் இருகொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை தரிசித்து வணங்கிட வேண்டும். 

3.அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று திரும்ப வேண்டும்.

4. திரும்பி வழக்கம் போல பிரதட்சணமாக சிவலிங்க சந்நிதியை வலம் வந்து, அபிஷேக நீர் விழும் தொட்டியை கடந்து விடாமல் , வந்த வழியே திரும்ப அப்பிரதட்சணமாக  சென்று மூலவரையும் நந்தி தேவரையும் வணங்க வேண்டும். இதை சோம சூத்ர பிரதட்சணம் என்றும் சொல்வார்கள்.

இதுபோல் மூன்று முறை செய்தால் பிரதோஷ பிரதட்சணம் பூர்த்தியாகி சிறந்த பலன் கிடைக்கும்.
குறிப்பாக, கடன் தொல்லை தீர பிரதோஷ வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது.

அபிஷேகப் பலன்கள் 

சிவராத்திரியன்றும், பிரதோஷ காலங்களிலும் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விசேஷமான ஒன்றாகும்.பால், நெய், தேன், சந்தனம், தயிர், நல்லெண்ணய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு.

1.  சிவபெருமானுக்குத் தயிரால் அபிஷேகம் செய்ய குழந்தை வரம் கிட்டும்.

2. சந்தனத்தால் அபிஷேகம் செய்ய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.

3. கடன் தொல்லைகள் தீர அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம்.

4. வேலை வாய்ப்பு அமைய  சிவனுக்கு விபூதி அபிஷேகம்.

5. சர்க்கரை அபிஷேகம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும்

6. குடும்ப நலன் காக்க ஐயனுக்கு இளநீரால் அபிஷேகம்.

7. மரண பயம் நீங்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்யலாம்.

8. ஆரோக்கியம் காக்க பாலால் அபிஷேகம் செய்யலாம்.

9. சகல ஐஸ்வர்யம் கிட்டப் பஞ்சாமிர்த அபிஷேகம்.

10. வாழ்வில் முக்தி கிட்ட நெய் அபிஷேகம்.

முறையான வழிபாட்டை முடித்து சிவபெருமானின்  இணையில்லா அருளைப் பெறுங்கள்.

-கி.சிந்தூரி.