Election bannerElection banner
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா). 'உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம். மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டு கிறது வேதம் (ஸ¨ர்யஆன்மாஜகத: தஸ்துஷ:ச).  

சூரியன், உலகை உணர்த்துகிறான்; இயங்க வைக்கிறான்; உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம் (லோகானாம் பிரளயோதயஸ்திதிவிபு:). 'அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான். மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான்’ என்கிறது வேதம் (யோஸெளதபன்று தேதி...). மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம் (விரிஞ்சிநாராயணசங்கராத்மனே). முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான். வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம் (வேதை:ஆசூன்ய: த்ரிபி: ஏதிசூர்ய:).

சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). நம் கண்களுக்குப் பார்க்கும் திறன் உண்டு. ஆனாலும், அவனது ஒளியின் துணையுடன்தான் பார்க்க இயலும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், கண் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது. பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம் (ஸ¨ர்யம் தெசஷூர்கசகது).

##~##
தோற்றம்- மறைவு இல்லாதவன் சூரியன். ஒளிப்பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிறபோது, 'சூரியன் தோன்றுகிறான்’ என்கிறோம். தென்படாதபோது, 'சூரியன் மறைந்துவிட்டான்’ என்கிறோம். ஆனால், அப்போது சூரியன், வெளிநாட்டில் தோன்றுகிறான். சூரியன், தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்; அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம். நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப் பட்டவையே! சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை. கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்; அதாவது வேளை என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷேண ஸ்மிருதம்காலவிசேஷணம்). சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது. ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்கவேண்டும் என்கிறது வேதம் (
ஸ¨ர்யஏகாகீசரதி
).

இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன். நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன. ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே! இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம். ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம் (தமஸித்ரவ்யாணிதீபஇவ). மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத் தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன. அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான். எதிர்காலத்திலும் தொடருவான்.

ஆக, முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி! 'முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்’ என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார் (வாசம்ந: ஸததாதுறைககிரண: த்ரைலோக்யதீபோரலி:).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு. அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.

மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப் படுத்துபவனே சூரியன்! சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும். சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும்; தாமரையை மலரச் செய்யும்; ஆம்பலை வாட வைக்கும். இலைகளைக் காயச் செய்யும்; ஈரத்தை உலரவைக்கும். வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றிவைக்கும். பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும்! கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும். மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான், சூரியன்.

அவனுடைய வெப்பம், குளிர்ச்சியை சந்தித்த சந்திர கிரணத் துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது. தட்பவெட்பங்கள்தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம் (அக்னீஷோமாத்மகம்ஜகத்). இடைவெளியை (ஆகாசத்தை) நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் (விச்வான்யயோ...). மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர் (வர்த்மாபுனர்ஜன்மனாம்). அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்! கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம் (த்வாமிமௌபுருஷெளலேகே...).

ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். சூரியன், ஒளிப்பிழம்பு.

அவனிடம் இருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம் (ஜ்யோதிரிதி நஷத்ரேஷீ). கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம். அதற்கு, சூரியனும் சந்திரனும் சாட்சி என்கிறது ஜோதிடம் (பிரத்யஷம் ஜ்யௌதிஷம் சாஸ்திரம் சந்திரார்க் கௌயத்ர ஸாக்ஷிணௌ). கிரகங்க ளின் கூட்டத்துக்கு சூரிய- சந்திரர்கள் அரசர்கள் என்கிறது ஜோதிடம். தேவர்களின் கூட்டத்துக்கு மன்னர்கள் என்கிறது வேதம். சூரியனும் சந்திரனும் இன்றி, வேள்வி இல்லை என்றும் தெரிவிக்கிறது அது (யதக்னீ ஷோமாவந்தரா தேவதா இஜ்யேதே)

வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி... என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன். கிரணம் மூலமாக நம்மில் ஊடுருவி, உடல் மற்றும் உள்ளத்தைப் பாங்குடன் ஒருசேர வளர்ப்பதில் சூரியனுக்குப் பங்கு உண்டு. இயற்கையின் செயல்பாடு, அவனது ஆணைக்கு உட்பட்டது. சூரியனைத் தவிர, மற்ற கிரகங்கள் 'ஜடங்கள்’; தானே செயல்படும் தகுதியற்றவை. சூரியனது இணைப்பில், அவை செயல்படும் தகுதியைப் பெறுகின்றன. நமது மனம், 'ஜடம்’; ஆன்மாவின் இணைப்பில் செயல் படும் (ஆன்மாமனஸாஸிம்யுஜ்யதே). கர்மவினை ஜடம்; சூரியனது இணைப்பில் செயல்படும். புத்தியின் செயல்பாடு கர்மவினைக்கு உட்பட்டது என்கிறது சாஸ்திரம் (புத்தி: கர்மானுஸாரிணீ). சூரியன், ஆன்மா; ஆகவே அவன் எதிலும் ஒட்டமாட்டான். அதன் தொடர்பில், மற்றவை செயல்படும். சூரியனது தொடர்பில் மற்ற கிரகங்கள், கர்மவினையை வெளிப்படுத்துகின்றன.

சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன் னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான். எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம். மன சஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு (சஞ்சலம்ஹிமன:பார்த்த). சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான், அவன்! 'ஹோரா’ என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம். இந்த இரண்டுபேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.

ஆன்மாவும் மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும். ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது. த்ரேக்காணம்,  ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும். ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப் படுத்த வைக்கிறது. சூரியனின் வெப்பம் ஏறும்போதும் இறங்கும்போதும், நாம் படாதபாடு படுகிறோம். நீரை உறிஞ்சுபவ னும் மழையைப் பொழியச் செய்பவனும் அவனே (ஆதித்யாத்ஜாயதெவிருஷ்டி:). இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில், இவனது பங்கு உண்டு.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை. பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும் சந்திரனையும் அப்படியே தோற்றிவைக்கிறார் கடவுள் என்கிறது வேதம் (சூர்யா சந்திரம ஸெள தாதா யதாபூர்வம கல்பயத்). இனப்பெருக்கத்துக்குக் காரணமான ராசிபுருஷனின் 5-ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம். தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந் தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு; சூரியனுக்கும் உண்டு. பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும். எனவே, அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும். ஆன்ம சம்பந்தம் இருப்பதால், திறமை வெளிப்படும். அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு. சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத் தைப் பெருக்குவான். அதனை நிபுண யோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால், அவனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான். செவ்வாயுடன் இணையும்போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம். சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவான். சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும். ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு. கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்! வசதி உலகவியலில் அடங் கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.  உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால்,  செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவான். அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.

நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது. பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவை யுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம்! ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும். சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல் களில் இருந்தும் விடுபடுவது எளிது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

மகான்கள் மனோபலம் மற்றும் ஆன்ம பலத்தால் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அந்த மனோபலத்தை சூரியனிடமிருந்து பெற வேண்டும். சந்திரன், சூரியனிடமிருந்து பலம் பெறுகிறான். தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படு கிறது. வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்கு சூரியனின் பங்கும்

உண்டு. ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது. நேரடி யாகவோ பரம்பரையாகவோ ஆன்ம காரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது. சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. கர்மவினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான். பலவாறான கர்மவினைகள்; எனவே, மாறுபட்ட கிரகங் களின் துணை அவனுக்குத் தேவை. பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம்; அதற்கு விதையின் தரம் காரணம். கண்ணுக்கு இலக்காகாத கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன்!

ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் சூரியனின் ஓடு பாதை, நடுநாயகமாக விளங்குகிறது. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி... இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன். 'ஸ¨ம் ஸ¨ர்யாயநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும். மித்ர - ரவி - ஸ¨ர்ய - பானு - கக - பூஷ - ஹிரண்யகர்ப - மரீசி - ஆதித்ய - ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம். மித்ராயநம: ரவயநம: ஸ¨ர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காயநம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவனது திருவுருவத்துக்கு அளிக்க வேண்டும். 'பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மேதிவாகர...’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.

- வழிபடுவோம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு