Published:Updated:

பக்தர்களுக்கு ஞானமளிக்கும் மயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியின் 100 - வது ஆண்டு விழா!

பக்தர்களுக்கு ஞானமளிக்கும்  மயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியின் 100 - வது  ஆண்டு விழா!
பக்தர்களுக்கு ஞானமளிக்கும் மயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியின் 100 - வது ஆண்டு விழா!

பக்தர்களுக்கு ஞானமளிக்கும் மயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியின் 100 - வது ஆண்டு விழா!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், 'பங்குனிப் பெருவிழா' ஆண்டுதோறும்  சென்னை மாநகர மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்கும் மிகப்பெரும் திருவிழா. 'மயிலையே கயிலை' என வாழும்  ஆன்மிகப் பெருமக்களுக்கு, அருளையும் ஆனந்தத்தையும் வாரிவழங்கும் ஆன்மிகத் திருக்கோயில் விழா. இங்கு குடிகொண்டிருக்கும் கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் உலகைக் காக்கும் அம்மைஅப்பனாக,  குறிப்பாக சென்னை மக்களின் கண்கண்ட கடவுளாக நாளும் காத்து வருகின்றனர். மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா நேற்று கோலாகலத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான, மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அதிகார நந்தியில் இறைவன் வீதி  உலா வரும் நிகழ்ச்சி  4 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சீறும் சிறப்புமாக நடைபெறுகின்றது.

ஞானம் தரும் அதிகார நந்தி

பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் காலை நடைபெறும்  இந்த அதிகாரநந்திக் காட்சி  வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ரிஷபத்தின் முகமும்  (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். 'அதிகார நந்தியின் சேவை' சரியாக காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. 

புள்ளினங்கள் பாடும் பூபாள வேளையில், வங்கக் கடற்கரையின் மென்காற்று வீச அதிகாரநந்தியின் மீதமர்ந்து அகிலத்தை ஆள வரும் சிவபெருமானின் திரு உலா காட்சியைக் 'காண கண்கோடி வேண்டு'மென அப்போதே  பாடி விட்டார் அமரர் பாபநாசம் சிவன்.
அதிகாரநந்தி ஆலயத்துக்கு வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. 

இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர், த.செ .குமாரசாமி பக்தர் என்பவர்.  வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமம்தான் இவரது சொந்த ஊர். பாரம்பர்ய மருத்துவத்திலும் சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பதிவு பெற்ற  ஏழாவது தலைமுறை வைத்தியராக திகழ்ந்தவர்.  

வைத்தியத்தின் மூலம் தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை ஆலயத் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த, இந்த வாகனத்தைக் கலையழகுடன் வெள்ளியில் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 -  ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த இறைப்பணி நிறைவடைந்தது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணி.  

இந்த அதிகார நந்திக்கு 100 -வது ஆண்டு இது!

இன்றளவும் குமாரசுவாமிபக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப் பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர்.

இவரை ஏன் 'அதிகார நந்தி' என்று அழைக்கிறார்கள்? இவர் எல்லோரையும் அதிகாரம் செய்பவரா? அதுதானில்லை... அகிலத்தையே காக்கும் ஈஸ்வரனை தானே சுமக்கும் அதிகாரம் பெற்றவர் என்பதே இதன் பொருள். 

நந்தியின் பெருமை!

சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

சிவாலயங்களில் கருவறைக்கு எதிரே இருக்கின்ற நந்தி பகவானை 'தர்ம விடை' என்றே  அழைக்கிறார்கள். அழிவே இல்லாமல் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நின்றது. 

ஈசன் சுவாசிக்கும் மூச்சுக்காற்று நந்தி தேவனுடையது. தர்மம்தான் இறையனாரின் சுவாசம். சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.  

நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.  

அதனால்தான் அவரது முகத்தில் அந்த கம்பீரம் அந்த ராஜஸம்... சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி!

- எஸ்.கதிரேசன்

அடுத்த கட்டுரைக்கு