Published:Updated:

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

பழநியில் தொடங்கியது  பங்குனி உத்திரத்  திருவிழா!
பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

பழநியில் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

பழநி முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர விழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியது. தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாகத் திகழ்வது திருஆவினன்குடி. பழனி மலைக்கோயிலின் நுழைவாயிலாக உள்ள இந்த கோயில்தான் மூன்றாம் படை வீடு. முருகனுக்கான அனைத்து விழாக்களும் இங்குதான் தொடங்கும். ஆண்டுதோறும் நடைபெறும் தைப் பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் புகழ்பெற்றவை. இந்த ஆண்டுக்கான தைப்பூசம் நிறைவடைந்த நிலையில், பங்குனி உத்திரத்துக்கான கொடியேற்று விழா இன்று தொடங்கியது.

பழனி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகரால் உருவாக்கப்பட்டது. நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை, சந்தனக் காப்பு மூலமாக குளிர்விக்கப்படும். அதிக வெப்பத்தால் சிலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இந்த ஏற்பாடு. நம்மைப்போலவே இறைவனையும் பாவித்து வழிபடுவது பக்தியின் உயர்ந்த நிலை. அந்த வகையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து முருகனைப் பாதுகாத்து, குளிர்விக்கவேண்டும் என்ற பக்தி மேலீட்டின் காரணமாக,  ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து நீரை எடுத்து அதை தீர்த்தக் காவடியாக கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்யும் விழா பங்குனி உத்திரவிழா. 

பழநியில், இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலை 8 மணிக்கு தந்த பல்லக்கில் முக்கிய வீதிகளில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி திருவுலா காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், வெள்ளை யானை, தங்கக் குதிரை, வெள்ளி  மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்கும். வரும் 8-ம் தேதி மாலை 6:30 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு திருமணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் முக்கிய வீதிகளில் திருவுலாக் காட்சியும் நடைபெறும். 9-ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளுதல், 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நடைபெறும். அன்று மாலை 4:20 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10-ம் தேதி இரவு தங்கக் குதிரை வாகனத்தில் திருவுலா, 11-ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி, 12-ம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவுபெற இருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறையும், திருக்கோயில் நிர்வாகமும்  செய்துள்ளன. 

- ஆர்.குமரேசன்

படங்கள் : வீ. சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு