Election bannerElection banner
Published:Updated:

ஸ்ரீகாளியை வணங்கினால் இனி, கவலை இல்லை!

ஆடியில் அம்மன் தரிசனம்!

ஸ்ரீகாளியை வணங்கினால் இனி, கவலை இல்லை!
##~##
ஸ்ரீ
கங்காதேவி சமேதராக ஸ்ரீசிவேந்திரர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி என அனைத்துத் தெய்வங்களும் ஒரே தலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கும் ஒப்பற்ற தலம், ஸ்ரீகாளி கோயில்.

அது மட்டுமா? நாயக்கர்கள் தஞ்சையை ஆட்சி செய்தபோது, ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலாகவும், பிறகு மராட்டியர்களது ஆட்சியில் ஸ்ரீசாரங்கபாணி கோயிலாகவும் திகழ்ந்தது இந்த ஆலயம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், வடக்கு வீதிக்கு அருகில் உள்ள இந்த ஆலயத்தை, ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயில், ஸ்ரீசாரங்கபாணி கோயில், ஸ்ரீசிவேந்திரர் கோயில், ஸ்ரீகாளி கோயில் என்றெல்லாம் அழைக்கின்றனர், பக்தர்கள்.

இங்கே, ஸ்ரீபகுளாமுகி எனும் திருநாமத்தில் காட்சி தந்தருள்கிறாள் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி. கிழக்குப் பார்த்த நிலையில், எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, மகிஷனைக் காலடியில் போட்டு வதம் செய்யும் கோலத்தில் திருக்காட்சி தருகிறாள், ஸ்ரீகாளிதேவி.

கம்பீரமான ராஜகோபுரத்துடன் கூடிய ஸ்ரீகாளிதேவியின் ஆலயம், நாயக்கர் மற்றும் மராட்டியர்களின் சிற்ப ஆர்வத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஸ்ரீகாளியை வணங்கினால் இனி, கவலை இல்லை!

ஆடி மாதம் வந்துவிட்டாலே, கோயில் களை கட்டத் துவங்கிவிடும். ஆடியின் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீகாளிதேவிக்கு அபிஷேகங்கள், சந்தனக்காப்பு, சிறப்புப் பூஜைகள் என அமர்க்களப்படுகின்றன.

ஆடி மாதத்தின் 4-வது செவ்வாய்க்கிழமையில், கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறும் (வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி திருவிளக்கு பூஜை). தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு மட்டுமின்றி, தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் பலரும் வந்து, இந்தப் பூஜையில் பங்கேற்கின்றனர்.

ஆலயத்தில் ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை, கோலாப்பூர் ஸ்ரீமகாலட்சுமி ஆகியோரும் சந்நிதி கொண்டுள்ளனர். அருகில், ஸ்ரீமார்த்தாண்ட பைரவர் காட்சி தருகிறார்.  

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால வேளையில் அம்மனை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால்... மனதில் குறைகள் இன்றி, நிம்மதியாக வாழ்வர்; மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

ஆடியில் அம்மனைத் தொழுவோம்; அவளடி பணிவோம். அருளும் பொருளும் அள்ளித் தந்து, நம்மை அரவணைத்துக் காப்பாள், ஸ்ரீகாளிதேவி.

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு