Election bannerElection banner
Published:Updated:

ஆடியில் அம்மன் தரிசனம்! - காலமெல்லாம் காப்பாள் ஸ்ரீகாமாட்சி!

ஆடியில் அம்மன் தரிசனம்! - காலமெல்லாம் காப்பாள் ஸ்ரீகாமாட்சி!

திருக்கயிலாயத்தில், சிவனாரின் திருக்கண்களை ஸ்ரீபரமேஸ்வரி பொத்தி விளையாட... அகில உலகமே இருளில் மூழ்கிய புராண நிகழ்வு பற்றித் தெரியும்தானே உங்களுக்கு? உலகே இருளடைந்து கருமையாகிவிட்டதால், ஈசனின் ஆணையால், ஸ்ரீகாளியாக அவதரித்தாள் அன்னை ஸ்ரீபரமேஸ்வரி.

ஆடியில் அம்மன் தரிசனம்! - காலமெல்லாம் காப்பாள் ஸ்ரீகாமாட்சி!

பிறகு, காத்யாயன முனிவரின் குழந்தையாக அவதரித்த உமையவள், உரிய வயது வந்ததும், காசியம்பதிக்குச் சென்றாள்; அங்கே பஞ்சப் பேயை அழித்தொழித்தாள்; ஆகவே, ஸ்ரீஅன்னபூரணி எனும் திருநாமம் கொண்டாள்.

அதையடுத்து, காஞ்சியம்பதிக்கு வந்தவள், கம்பா நதிக்கரையில், மணலால் அழகிய சிவலிங்கம் அமைத்துப் பூஜை செய்தாள். பக்தர்களையே சோதனைக்கு உள்ளாக்கிப் பார்க்கிற ஈசன், மனைவியை மட்டும் சும்மா விடுவாரா, என்ன? திடீரென ஆற்றில் வெள்ளம் வரச் செய்தார்! வெள்ளம் கரைபுரண்டு வந்து, மணல் லிங்கத்தைத் தொடும் வேளையில், அப்படியே அணைத்துக்கொண்டு அரண்போல் இருந்தாள், தேவி. இதில் மகிழ்ந்த ஈசன், தேவிக்கு வரம் தந்தருளினார்; சிவனாருடன் இரண்டறக் கலந் தாள், உமையவள். தனது கருமை நிறத்தில் இருந்து தோலுரித்ததால் கௌரி என்றும், கௌசிகி என்றும் திருநாமங்களைப் பெற்றாள்.

ஆடியில் அம்மன் தரிசனம்! - காலமெல்லாம் காப்பாள் ஸ்ரீகாமாட்சி!

காஞ்சியில், சிறிய கோரைப் பற்களுடன், ஆனால் சாந்தமும் கருணையும் கொண்ட திரு முகத்துடன், பத்மாசனத்தில் அமர்ந்தபடி, ஸ்ரீஆதி காமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாளாக அருள்கிறாள், தேவி. பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள இவளின் கோயில், கேட்டதையெல்லாம் தரும் கற்பக விருட்சத் தலம் எனப் போற்றப்படுகிறது.

சற்றே தொலைவில் இருந்து  தரிசித் தால், ஸ்ரீகாமாட்சியாகத் தரிசனம் தருகிற தேவியை அருகில் வந்து தரிசிக்கும்போது, பிறையும் கபாலமும் பாம்பும் கொண்டு, சதுர்புஜங்களுடன் அவள் திருக்காட்சி தரும் அழகே அழகு! அமர்ந்த கோலத்தில் இருந்தபடி, காஞ்சியம்பதியை மட்டுமின்றி, அகில உலகையும் காத்தருள்கிறாள் தேவி. அம்பிகையின் உற்ஸவ மூர்த்தம் நின்ற திருக்கோலம்!

ஆடியில் அம்மன் தரிசனம்! - காலமெல்லாம் காப்பாள் ஸ்ரீகாமாட்சி!

பல்லவ மன்னரால் எழுப்பப்பட்ட இந்தக் கோயிலில் சிற்ப நுட்பங்களுக்கும் குறைவில்லை. பிராகாரத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீகமடேஸ்வரர், ஸ்ரீஅன்ன பூரணி, ஸ்ரீபைரவர் மற்றும் வேம்பு மர நிழலில் சாஸ்தாவும் நாகரும் என சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் அற்புதத் தலம் இது!

நவராத்திரி விழா, ஐப்பசியில் அபி ஷேகம், சித்ரா பௌர்ணமியில் சிறப்பு வழிபாடுகள் என வருடந்தோறும் விழாக் களுக்குக் குறையில்லாத கோயிலில், ஆடி மாதம் வந்துவிட்டால், காஞ்சிபுரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டத்துக்காரர் கள், அம்மனைத் தரிசிக்க ஓடோடி வருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஊஞ்சல் வழிபாடு பிரசித்தம். இதில் கலந்துகொண்டு அம்பிகையைத் தரிசித்தால், தோஷங்களால் தடைப்பட்ட திருமணம், தடைகள் நீங்கி இனிதே நடந்தேறும் என சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

- அ.ராமநாதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு