Published:Updated:

அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?

அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?
அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?

அற்புத நிகழ்வான 60-ம் கல்யாணத்தை எப்படிக் கொண்டாட வேண்டும்?

ல்யாணம், நம் இல்லத்தில் உள்ளவர்கள்  மட்டும் அல்லாமல்  நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம். ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக,  தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து  திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள்.    

இந்த நிகழ்வானது 60  வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? ஒரு  மனிதரின் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம் இவையனைத்தும் அவருடைய 60-வது வயது நிறைவு பெற்றதற்கு அடுத்த நாள் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் 60  வருடங்கள்  ஆன பிறகுதான் வரும். அதாவது 120 -வது வயதில்தான். நடைமுறையில் இது சாத்தியம் இல்லை.

ஒருவர் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காக பணத்தை சம்பாதிக்கக் கடுமையாக உழைக்கிறார். மேலும் சம்பாதித்த பணத்தை எப்படி சேமிப்பது, தன் குடும்பத்துக்கு எப்படி ஆக்கப்பூர்வமான முறையில் சேமிப்பது, பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை எப்படி சிறப்பாக அமைத்துக்கொடுப்பது என்கிற சிந்தனையிலேயே காலத்தைக் கடத்திவிடுகிறார்.  

இப்படி 60  வயது வரை தனது கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகு, சாதாரண வாழ்க்கையில் இருந்து  விடுபட்டு முழுமையாக தன்னை ஆன்மிகச்  செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளும் வயதாக இந்த 61-ம் வயது பார்க்கப்படுகிறது. 

தங்களின் நலனுக்காக உழைத்த தாய்-தந்தையரின் மனம் மகிழும் வண்ணமாகவும் நன்றி பாராட்டும் விதமாகவும் அவர்களது பிள்ளைகள்

எல்லாம் சேர்ந்து, இந்த மணவிழாவை நிகழ்த்துவார்கள். 

பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம், கோயில்களிலேயே நடத்தப்படுகிறது.பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன .மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத்  தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64  எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.    

பூஜை முடிந்ததும், கலசங்களில்   பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில்  விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது. 

மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறலாம்.

மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு  சேலை, ஜாக்கெட், மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர். இத்திருமண  நிகழ்வைக் காண்பது என்பது சொர்க்கத்தைக் காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்துகொள்வார்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில் உள்ள சிவாலயத்தில்தான்  அறுபதாம் கல்யாணம் அதிக அளவில் நடைபெறுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும்  இடங்களுக்கு அருகாமையில் உள்ள  ஆலயங்களில் செய்துகொள்ளலாம்.

அறுபதாம் கல்யாணம் செய்வதென்பது,ஒரு  மனிதன், தான் இதுவரை தனக்கு  அளிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய மன நிறைவுக்காகவும், இதுநாள்வரையிலும் யாருக்கும்  ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.

தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறை வழிபாட்டிலும் ஆன்மிகச் சாதனைகளிலும்   தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்ளும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது. 

- இரா.செந்தில்குமார் 

அடுத்த கட்டுரைக்கு