Published:Updated:

மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா... தெய்வீகத் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா... தெய்வீகத் திருவிழா!
மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா... தெய்வீகத் திருவிழா!

மயிலை கபாலீஸ்வரர் அறுபத்துமூவர் உலா... தெய்வீகத் திருவிழா!

சென்னைவாசிகளுக்கு பண்டிகைகள் அநேகம் உண்டு. ஆனால், திருவிழாக்கள் என்று பார்த்தால், அந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படும் ஆடி மாத அம்மன் விழாக்களைத்தான்  சொல்லமுடியும். வேறு பெரிதாகச் சொல்லக்கூடிய திருவிழாக்கள் எதுவும் இல்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக மயிலை ஶ்ரீகபாலீஸ்வரர்  அறுபத்துமூவர் உலா திருவிழாஅமைந்துவிட்டது. 

அறுபத்து மூவர் விழா, திருவாரூர் ஆழித்தேர், மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணம், காஞ்சி கருடசேவை, குலசேகரப்பட்டினம் தசராப் பெருவிழா, பழநி பங்குனித் தேரோட்டம், திருப்பதி பிரம்மோத்ஸவம் முதலான பல விழாக்களின் வரிசையில், கம்பீரமாக இடம்பிடிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த விழா நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது.

ஞானசம்பந்த பெருமானின் சிறப்பு
வாத்திய இசையுடன்  ஊர்வலம் தொடங்கிட, பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருக்கும் சிவனடியார்கள், ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புக்களை முழங்கியபடி பின்தொடர, தெற்குமாடவீதி வழியாக வந்த ஊர்வலம் மேற்குமாடவீதிக்கு வந்து, தெப்பக்குளத்தின் படித்துறையில் அமைந்திருக்கும் மண்டபத்துக்குச்  செல்லும்.
அங்கே, ஞானசம்பந்தரின் விக்கிரகத்தை சிவாச்சார்யர் ஒருவர் எடுத்து திருக்குளத்தில் நீராட்டுகிறார். பின்னர் ஒரு பீடத்தில் வைத்து ஞானசம்பந்தருக்கு விமரிசையாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. 

குன்றக்குடி ஆதீனம் சார்பில், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும் முத்துச்சிவிகையில் எழுந்தருளிய ஞானசம்பந்தர் கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டு மீண்டும் ஊர்வலமாகக்  குளக்கரை மண்டபத்துக்கு வருகிறார். அவரைத் தொடர்ந்து ஒரு சிவாச்சார்யர் மஞ்சள் துணியால் மூடப்பட்ட பானையை எடுத்து வருகிறார். அதனுள்ளேதான் பூம்பாவையின் அஸ்தி இருப்பதாக ஐதீகம். மண்டபத்தை அடைந்ததும் ஓதுவார் ஒருவர் தம்மை ஞானசம்பந்தராக பாவனை செய்துகொண்டு பூம்பாவையை உயிர்த்தெழச் செய்ய பதிகம் பாடுகிறார். 

அன்னதானப்பந்தல்கள்
பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த பல்லக்கின் திரை விலக, அதனுள் சர்வாலங்காரத்துடன் பூம்பாவையின் விக்கிரகம் காட்சி தருகிறது. அப்போது பக்தர்களின் சந்தோஷ ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. ஞானசம்பந்தப் பெருமானின் புகழ் பாடியபடி பக்தர்கள் பின்தொடர, ஞானசம்பந்தர், சிவநேசர், பூம்பாவை ஆகியோர் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
இத்துடன் அங்கம்பூம்பாவை நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதன் பிறகுதான் அறுபத்துமூவர் திருவிழா தொடங்குகிறது. அட்டிட்டல் விழா என்று சம்பந்தப் பெருமான் பாடியது சற்றும் மிகையல்ல என்று நிரூபிப்பதுபோல், பத்தடிக்கு ஒன்றாக அன்னதானப் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெறும். 
கோயிலைச் சுற்றிதான் என்று இல்லாமல், கிழக்கே திருவல்லிக்கேணி, வடக்கே ராயப்பேட்டை,தெற்கே மந்தைவெளி, மேற்கே தேனாம்பேட்டை என்று பல இடங்களில் அன்னதானமும், பானகம், நீர்மோர், குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட் என இன்னதுதான் என்று இல்லாமல் பலவகையான தானங்கள் நடைபெறுகின்றன.

விநாயகப்பெருமான் தீபாரதனை நிகழ்ச்சி!
முதலில் கோயிலுக்கு முன்பாக உள்ள மண்டபத்துக்கு வருகிறார், விநாயகப் பெருமான். அவருக்கு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அறுபத்துமூவர் விழா என்பது 'சித்தமெல்லாம் சிவமே' நிறைந்திருக்க, சிவத்தொண்டிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதன்பொருட்டு பல சோதனைகளுக்கு ஆட்பட்டு, நிறைவில் சிவபெருமானின் அருள் பெற்ற சிவத்தொண்டர் களுக்கான விழா அல்லவா?
தொடர்ந்து, வெள்ளி விமானத்தில் பல்வகை வாத்தியங்கள் முழங்க, மண்டபத்துக்கு விஜயம் செய்கிறார் ஸ்ரீகபாலீஸ்வரர். கபாலீஸ்வரரைத் தொடர்ந்து கற்பகாம்பிகையும் முருகப்பெருமானும் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர்.
தொடர்ந்து சமயக் குரவர்கள் நால்வரும் தனித்தனி பல்லக்குகளிலும், நாயன்மார்கள் ஒவ்வொரு பல்லக்குக்கும் மூவர் அல்லது நால்வராக அவரவர் திருப்பெயர்களுடன் எழுந்தருளி, கபாலீஸ்வரை வலம் வந்து தீபாராதனையை ஏற்று, முன்னே செல்கின்றனர். 
அதேநேரத்தில் கோலவிழிஅம்மன், வாலீஸ்வரர் போன்ற கோயில்களில் இருந்தும் தெய்வ மூர்த்தங்கள் விழாவில் பங்கேற்க விஜயம் செய்கின்றனர்.

கிராமதேவதை வழிபாடு
கிராமதேவதை என்பதால், கோலவிழி அம்மனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் தொடங்குவதற்கு முன்னதாக, கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது தொன்றுதொட்டு வரும் மரபு. 
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருளைப்பெறுவார்கள். 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு