Published:Updated:

கல்லறை திறந்தது, காரிருள் மறைந்தது... கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்தார்..! #Easter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்லறை திறந்தது, காரிருள் மறைந்தது... கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்தார்..! #Easter
கல்லறை திறந்தது, காரிருள் மறைந்தது... கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்தார்..! #Easter

கல்லறை திறந்தது, காரிருள் மறைந்தது... கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்தார்..! #Easter

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்' பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கி.பி. 29-ம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. இயேசுகிறிஸ்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற கிறிஸ்தவச் சபைகளால் `பாஸ்கா திருவிழிப்பு' என்ற பெயரில் நினைவுகூரும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது முன் இரவில் (நள்ளிரவுக்கு முன்) தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்விதமாக இந்த நிகழ்ச்சி அமையும். 

பாஸ்கா திருவிழிப்பு 

பாஸ்கா திருவிழிப்பு சடங்கானது ஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு என நான்காகப் பிரிக்கப்பட்டு நடைபெறும். இதில் ஒளி வழிபாட்டின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுக் கோவிலின் வெளியே ஓர் இடத்தில் தீ மூட்டப்பட்டு அதில் பாஸ்கா மெழுகுதிரி ஏற்றப்படும். உயரமான கனமான அந்த மெழுகுதிரியை மதகுரு கையில் தூக்கிக்கொண்டு ஆலயம் நோக்கி வருவார். அப்போது, `மகிமையுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி அக இருள் அகற்றி, அருள் ஒளி தருவதாக' என்ற முன்னுரையுடன் `கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பாடுவார். மேலும் அப்போது, `நெருப்புத் தூணின் வெளிச்சத்தால் பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே...' `சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து, கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்...' என்ற வரிகள் அடங்கிய புகழுரைப்பாடல் பாடப்படும். 

திருமுழுக்கு 

இதையடுத்து நடைபெறும் இறைவாக்கு வழிபாட்டின்போது, `உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக...' என்ற பாடல் பாடப்பட்டு இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து நடைபெறும் இறைவாக்கு வழிபாட்டை அடுத்து திருமுழுக்கு வழிபாடு நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் கிறிஸ்தவ மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரக்கூடிய ஒன்றே. இருந்தாலும், இந்தப் பாஸ்கா திருவிழிப்பின்போது நினைவுகூரப்படும் திருமுழுக்கு சற்று வித்தியாசமானது. இறைமக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மெழுகுதிரிகளைப் பிடித்திருக்க மதகுரு பாஸ்கா மெழுகுதிரியை தண்ணீர் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய பாத்திரத்தில் அமிழ்த்தி இறைவனை வேண்டி அந்த நீரை மந்திரிப்பார். அந்த நீரைக்கொண்டே மக்களுக்குத் திருமுழுக்கு எனப்படும் ஞானஸ்நானம் (Baptism) வழங்கப்படும். 

இதைத்தொடர்ந்து நடைபெறும் நற்கருணை வழிபாட்டின்போது, அப்பமும் ரசமும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்படும். இது கடவுளின் வல்லமையின் காரணமாக 'அப்பமும் ரசமும் இயேசுகிறிஸ்துவின் உடலும் ரத்தமுமாக மாற்றம் பெறுகின்றன' என்று கிறிஸ்தவர்கள் நம்பும் ஒரு சடங்காகும். இந்த நிகழ்வுடன் பாஸ்கா முப்பெரும் விழா நிறைவுபெறும். 

ஈஸ்டர் பாடல்கள் 

ஈஸ்டர் விழாவின்போது, 

`இரு விழிகள் மூடியபோது 

இதயமே அழுதது 

ஒரு கல்லறை திறந்தபோது 

உலகமே மகிழ்ந்தது...' 

`இருளினைப் போக்கும் கதிரவன் போல் 

சாவினை வென்றிங்கு உயிர்த்தெழுந்தார்...' 

`கல்லறை திறந்தது காரிருள் மறைந்தது 

கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா...' - என்பது போன்ற பாடல்கள் பாடப்படும். 

ஈஸ்டர் முட்டை 

ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்தகாலத்தைக் கொண்டாடும்விதமாக வழங்கப்படும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை ஈஸ்டர் முட்டைகள் என்று சொல்கிறார்கள். பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது. இதன் பின்னணியிலேயே தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றார்களாம். 

ஈஸ்டர் லில்லி 

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய அதிசய பூ ஈஸ்டர் லில்லி. இந்தப் பூ கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடியது. இந்தப் பூ பூத்த நாள் தொடங்கி 15 நாள்கள்வரை வாடாமல் அப்படியே இருக்குமாம். கிழங்கு வகையைச் சேர்ந்த இந்தப் பூ ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பூப்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வெள்ளை நிற லில்லி மலர் உயிர்த்தெழுதலின் சின்னமாகக் கருதப்படுவதாலும் அது ஈஸ்டர் சிறப்பு மலராகப் போற்றப்படுகிறது. 

ஒறுத்தல் 

சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கும் 40 நாள்கள் நோன்பு ஈஸ்டர் பண்டிகையுடன் முடிவுபெறும். தவக்காலம் என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதாவது உபவாசம், தர்ம காரியங்களில் ஈடுபடுதல். சிலுவைப்பாதை செய்தல் மற்றும் பல காரியங்களை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு செய்வார்கள். (உபவாசம் என்பது ஒருவர் சிறிதளவு உணவுண்டோ அல்லது உணவே இல்லாமலோ இருக்கக்கூடியது. இது அவர்கள் விரும்பியோ அல்லது அவசிய தேவைக்காகவோ இருக்கக்கூடிய ஒரு செயலாகும்). சிலர் தினமும் ஒருவேளை அல்லது இருவேளை சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பார்கள். 40 நாட்களும் சில பெண்கள் தலையில் பூ வைக்காமல் இருப்பார்கள். வேறு சிலர் சினிமா மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள். 

- எம்.மரிய பெல்சின் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு